ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

வேலூர் கலந்துரையாடல் - அறிமுகக் குறிப்புகள்

தங்களது பல வேலைகளுக்கிடையே இந்த கருத்தரங்கில் பங்கு கொள்ள வந்திருக்கும் சிறப்புப் பேச்சாளர்களையும், வேலூரின் முன்னேற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் பணி செய்து வரும் வேலூர் தகவல் தொழில் நுட்ப அமைப்பினரையும், தொழில் முனைவர்களையும், அரசு அதிகாரிகளையும் இந்தக் கருத்தரங்குக்கு வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

இந்தக் கருத்தரங்கின் நோக்கம், சிறு நகராகக் கருதப்படும் வேலூரில் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் செயல்படுவதற்கான சூழல்களைப் பற்றிய ஒரு ஆரோக்கியமான கருத்தாக்கத்தைத் தொடங்கி வைப்பது.  இது தொடர்பாக சில தகவல்களை முன் வைக்க விரும்புகிறேன்.

1. மாவட்ட நிர்வாகத்தின் சார்பாகவும், அரசியல் பிரநிதிகள், அமைச்சர்களின் முன் முயற்சிகளினாலும் வேலூரில் ஒரு ஐடி பார்க் அமைப்பதற்கான முன்முயற்சிகள் ஏற்கனவே தொடங்கி விட்டிருக்கின்றன.

2. வேலூர் இந்தியாவின் சிலிக்கன் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படும் பெங்களூருவுக்கும் இந்தியத் தகவல் தொழில் நுட்பத் துறை வளர்ச்சியில் கணிசமான பங்கு வகிக்கும் சென்னைக்கும் நடுவில் strategic ஆக அமைந்துள்ளது. சென்னை - பெங்களூர் நான்கு வழி நெடுஞ்சாலை, வேலூரிலிருந்து இந்த பெருநகரங்களுக்குப் போய் வருவதை இரண்டு மணி நேரங்களுக்குட்பட்ட பயணமாக குறுக்கியிருக்கிறது.

சென்னைக்கும் வேலூருக்கும் இடையேயான தூரம் நூற்றிச் சொச்சம் கிலோமீட்டர்களாக இருந்தாலும், வேலூர் சென்னையிலிருந்து கட்டமைப்பு வசதிகளைப் பொறுத்த வரை எந்த அளவு ஓடிப் பிடிக்க வேண்டியிருக்கிறது என்பது ஒரு முக்கியமான பொருள்.

இதைப் பற்றி வழிகாட்டப் போகிறவர் தகவல் தொழில் நுட்பத் துறையின் முன்னணி நிறுவனங்களில் பல ஆண்டுகள் அனுபவம் கொண்ட திரு A J பாலசுப்பிரமணியன். 1985ல் கிண்டி எஞ்சினியரிங் கல்லூரியில் பட்டம் பெற்று அடுத்த 12 ஆண்டுகளில் அப்பளைட் டாடா சிஸ்டம்ஸ் மற்றும் ஹார்ட் சாஃப்ட் மைக்ரோஸ் என்ற தொழில் நுட்ப நிறுவனங்களை உருவாக்கி நடத்தியுள்ளார். அதைத் தொடர்ந்து 2003ம் ஆண்டு வரை மென்பொருள் ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தில் மூத்த பொறுப்புகளில் இருந்துள்ளார். தற்போது கேர்வாயன்ட் டெக்னாலஜிஸ் என்ற 100% ஏற்றுமதி சார்ந்த நிறுவனத்தின் பொது மேலாளராக செயல்படுகிறார்.

3. வேலூரின் மகுடத்தில் கோகினூர் வைரமாக மின்னும் விஐடியில் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆரம்பிப்பதற்கான மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அதன் பொது மேலாளர் திரு பாலச்சந்திரன் இன்று நம்மிடையே தனது கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறார். திரு பாலச்சந்திரன் 20 ஆண்டுகளுக்கும் மேல் தகவல் தொழில் நுட்பத்துறையில் பணி புரிந்து வருகிறார். விஐடி டெக்னாலஜி இன்குபேஷன் மையத்தை ஆரம்பித்ததிலிருந்து (2003 ஆம் ஆண்டு) அதன் பொறுப்பாளராக இருந்து 20 புதிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு வழிகாட்டலும், உதவியும் செய்திருக்கிறார்.

4. தகவல் தொழில் நுட்பம் என்பது வளர்ந்த நாடுகளின் தேவைகளுக்கு மட்டும் என்றில்லாமல், வளர்ந்து வரும் நாடுகளின் சூழலுக்கேற்ற, நமது தேவைகளை பூர்த்தி செய்யும் படி பயன்படுத்த பல முயற்சிகள் நடந்து வருகின்றன.

இதைப் பற்றி,  அமெரிக்காவில் பல ஆண்டுகள் பணி புரிந்து, இந்தியாவுக்கு மிகவும் தேவையான பன்மொழி கணினி அமைப்புகள் துறையில் நிபுணத்துவம் பெற்ற முனைவர் குமரன் பேச இருக்கிறார். முனைவர் குமரன் பெங்களூரு இந்தியன் இன்ஸ்டிடியூட்டில் ஆராய்ச்சி பட்டம் பெற்று, அமெரிக்காவில் பெல் கம்யூனிகேஷன், ஆரக்கிள் கார்பொரேஷன் போன்ற முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் பணி புரிந்திருக்கிறார். கடந்த 5 ஆண்டுகளாக மைக்ரோசாப்டின் இந்திய ஆராய்ச்சிப் பிரிவின் பொது மேலாளராக பணி புரிந்து வருகிறார்.

5. வேலூர் மாவட்ட தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் கூட்டமைப்பின் செயலர் திரு மோதிலால் தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறார்.

வேலூரில் புதிதாக தகவல் தொழில் நுட்ப நிறுவனம் ஒன்றை உருவாக்கி வரும் திரு நாராயண் தனது கருத்துக்களை சொல்ல வந்திருக்கிறார். சென்னையைச் சேர்ந்த திரு நாராயண், கடந்த 10 ஆண்டுகளில் விண்ஊஞ்சல், 360 டிகிரி இன்டர்ஆக்டிவ் என்று புதுமையான மென்பொருள் நிறுவனங்களை தொடங்கி நடத்திய பெருமை உடையவர்.

6. வேலூர் மாவட்டத்தில் தோல் பதனிடுதல், காலணி முதலான தோல் பொருட்கள் உற்பத்தி என்று ஆரம்பித்து பல்லாயிரக் கணக்கான கோடி அன்னியச் செலாவணி ஈட்டும் தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன. தோல் துறைக்கு மென்பொருள் சேவை அளிப்பதற்காக பிஎஸ்ஜி லெதர் லிங்க் என்ற நிறுவனத்தை ஆரம்பித்து கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் நான் இந்த கருத்தரங்களை தொகுத்தளிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளேன்.

இந்த மாவட்டத்திலும் அருகாமையிலுள்ள பிற மாவட்டங்களிலும் நூற்றுக்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் செயல்படுகின்றன. வேலூர் நகரிலும் டார்லிங் குழுமம் போன்ற வணிக நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

7. முத்தாய்ப்பாக வேலூர் நண்பர்களின் ஊர் பாசம். நூலாறு 2010 என்ற தலைப்பில் பிரம்மாண்டமான புத்தகக் கண்காட்சி ஒன்றை இந்த மாவட்ட மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் கொண்டு வர வேண்டும் என்று அரும் சாதனையைச் செய்து கொண்டிருக்கும் ஆழி அறக்கட்டளையின் திரு செந்தில்நாதன்,  இந்தக் கருத்தரங்கில் தமது பங்களிப்பை வளங்குவார்.

முதலில் பேச்சாளர்கள் தத்தமது ஆரம்ப உரையை 10 நிமிடங்களுக்குள் சுருக்கமாக வழங்குவார்கள். அதைத் தொடர்ந்து கேள்வி பதில் உருவில் விவாதம் தொடரும்.

இந்த விவாதம் ஒலி/ஒளி வடிவில் பதிவு செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த விவாதத்தின் விளைவாக ஒரு செயல்திட்டம் உருவாக்கி வெளியிடுவது என்பது நோக்கம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக