அரசியல் - politics லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரசியல் - politics லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 3 ஜூலை, 2012

வேலைக்கு தகுதியுள்ளவனாக தொடர என்ன செய்ய வேண்டும்?


ஸ்லாஷ்டாட்டை கேளுங்கள்:வேலைக்கு தகுதியுள்ளவனாக தொடர நான் என்ன செய்ய வேண்டும்?

"ஹாய், எனக்கு 40 வயதாகிறது. மிகப்பெரிய முதலீட்டு வங்கிகளில் ஒன்றில் நான் மூத்த மென்பொருள் உருவாக்குனராக வேலை பார்க்கிறேன். இதுவரை முழு நேர வேலைகள்தான் செய்து வந்திருக்கிறேன். கடந்த 5-6 ஆண்டுகளாக அலுவலக அரசியல், அவுட் சோர்சிங், பொருளாதாரச் சூழல் இவற்றின் காரணமாக நிலைமை மிகவும் மோசமாகி இருக்கிறது.

நிதித் துறை தத்தளித்துக் கொண்டிருக்கிறது, இன்னொரு சுற்று வேலை நீக்கங்களை நாம் சீக்கிரமே எதிர் கொள்ளப் போகிறோம். என் குடும்பமோ வளர்ந்து கொண்டிருக்கிறது, என் வாழ்க்கைத் துணை வேலைக்குப் போகவில்லை, எனக்கு இன்னமும் சொந்த வீடு இல்லை.

எனது பணி பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி பற்றி எனக்கு கவலையாக இருக்கிறது. 65 வயதானால்தான் மெடிக்கேர் கிடைக்கும் என்பதை வைத்துப் பார்க்கும் போது குறைந்தது இன்னும் 25 ஆண்டுகள் நான் வேலை செய்தாக வேண்டும். வரும் காலங்களில் வேலையில் ஒட்டிக் கொண்டிருப்பதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்கிறார் இல்கார்.

புதன், 27 ஜூன், 2012

அமெரிக்க சிறுமிக்கு ஐ-பேட் விற்க மறுப்பு


ஆப்பிள் விற்பனை முனையம் ஈரானைச் சேர்ந்த அமெரிக்க சிறுமிக்கு ஐ-பேட் விற்க மறுப்பு.

"அமெரிக்க வர்த்தகத் தடைகளை மீறுவதாக தோன்றுவதால் அவளுக்கு ஐ-பேட் விற்க முடியாது என்று ஆப்பிள் விற்பனை முனையத்தின் விற்பனையாளர் ஒரு இரானிய-அமெரிக்க சிறுமியிடம் சொன்னார். உள்ளூர் தொலைக்காட்சி நிலையத்தின் காமிரா குழுவினரை அழைத்துக் கொண்டு அவள் திரும்பி வந்த போது மீண்டும் அவளுக்கு விற்பனை மறுக்கப்பட்டது.

அவள் பார்சியில் பேசிக் கொண்டிருப்பதை ஆப்பிள் ஊழியர் கேட்டிருக்கிறார். அவரும் ஈரானிலிருந்து வந்தவராதலால் அந்த மொழியை புரிந்து கொண்டு அதன் அடிப்படையில் ஐ-பேட் விற்பதற்கு மறுத்திருக்கிறார்."

ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

வேலூர் கருத்தரங்கு பேச்சுகள்

இந்து நாளிதழில் செய்தி

வேலூரில் தகவல் தொழில் நிறுவனங்களுக்கான வாய்ப்புகள் என்ற கருத்தரங்கு கோட்டை மைதானத்தில் நடந்து வரும் நூலாறு 2010 புத்தகக் கண்காட்சியின் ஒரு பகுதியாக சிறப்பாகவும் செறிவாகவும் நடந்தது.

சென்னை கேர்வாயன்ட் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் பொது மேலாளர் திரு ஏ ஜே பாலசுப்ரமணியன் அமெரிக்காவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு போன்று, இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படும் பெங்களூரு போன்று தகவல் தொழில் நுட்ப சூழலை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்ட பிற நகரங்களைப் பற்றி விளக்கினார்.

மனிதத் திட்டமிடலில் ஒரு பூங்காவை உருவாக்கலாம், ஆனால் காடு ஒன்று இயற்கையாகத்தான் உருவாக முடியும்.

  • பெங்களூருவில் 1950-60களில் பாதுகாப்புத் துறை சார்ந்த பல ஆராய்ச்சி நிறுவனங்கள் அப்போதைய பிரதம மந்திரி நேருவினால் உருவாக்கப்பட்டன. 
  • 1980களில் டெக்ஸாஸ் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சி மையம் பெங்களூருவில் நிறுவப்பட்டது. 
இப்படி உருவான ஒரு தொழில் நுட்பச் சூழலில் பின்னர் ஒவ்வொரு நிறுவனங்களாகச் சேர்ந்து கொண்டார்கள். இவற்றுடன் பெங்களூருவின் கட்டமைப்புகளும் காலநிலைகளும் இளைஞர்களுக்கு விருப்பமாக அமைந்திருந்தன.

தகவல் தொழில் நுட்பத் துறைக்கான சூழல் உருவாக மூன்று காரணிகள் தேவை:

  1. மனிதவளம்
  2. கட்டமைப்பு
  3. வாழ்க்கைத் தரம்

பெங்களூருவில் ஆரம்பித்த இந்த வளர்ச்சியினால் அந்த நகரத்தின் வசதிகள் சிக்கலாகி வந்தன. வீட்டிலிருந்து அலுவலகத்துக்குப் போவதற்கு இரண்டு மூன்று மணி நேரங்கள் போக்குவரத்து நெரிசலில் செலவழிக்க வேண்டியிருக்கிறது. ஒரு கட்டத்தில் இந்த நிறுவனங்கள் பெங்களூருக்கு அருகில் இருந்த சென்னையை நோக்கி நகர ஆரம்பித்தார்கள்.

இப்போது சென்னையும் அத்தகைய நெருக்கடிகளை சந்திக்கிறது. வேலூரைப் பொறுத்த வரை வாழ்க்கைத் தரம் வாழ்க்கைச் செலவு இரண்டுமே ஆதாயமாக இருக்கின்றன. வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பல ஊர்களில் சென்று பணி புரிகிறார்கள்.

  • இது போன்று வேலூர் பகுதியிலிருந்து தகவல் தொழில் நுட்பத் துறையில் பணி புரிபவர்களின் கணக்கெடுப்பு செய்யப்பட வேண்டும்.
  • இந்தப் பகுதியில் இருக்கும் பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் தரவுத்தளம் தயாரிக்கப்பட வேண்டும்.
  • வேலூரில் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் வரும் போது வெளியூரிலிருந்து பல நிபுணர்கள் வல்லுனர்கள் வர வேண்டியிருக்கும். அவர்களை ஏற்றுக் கொள்ளும், அவர்களுக்கு சௌகரியமான வாழ்க்கைச்சூழல் இருக்க வேண்டும்.
  • குழந்தைகள் படிப்பதற்கு நல்ல கல்லூரிகள், பள்ளிகள் இருக்க வேண்டும்.
  • சென்னை, பெங்களூருவில் இயங்கும் நிறுவனங்களின் இரண்டாம் நிலை அலுவலகங்கள் இங்கு ஏற்படுத்தப்பட வாய்ப்புகள் இருக்கின்றன.
  • கருத்துக்களும் பேச்சுக்களும் செயல்திட்டமாக உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும். 
  • 15 முதல் 20 ஆண்டுகளுக்கான தொலைநோக்கில் திட்டம் வகுத்து தொலைநோக்குடன் செயல்பட்டால் சாத்தியமாகும்.

சிறிய அளவில் செயல்பட்டாலும்உலகத் தரத்தில் செயல்பட வேண்டும். உள்ளூர் வல்லமைகளைப் பயன்படுத்தி சிறப்படைய வேண்டும்.

வேலூர் விஐடி தொழில்நுட்ப நிறுவன உருவாக்க மையத்தின் பொது மேலாளர் திரு பாலச்சந்திரன் பேசும் போது கோயம்புத்தூரின் வளர்ச்சியைப் பற்றி விளக்கினார். லஷ்மி மெஷின் ஒர்க்ஸ் ஆரம்பித்த பிறகு அதைச் சார்ந்து பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக்குகள்  உருவாயின. அதிலிருந்து ஒரு தொழில் முனைவு கலாச்சாரம் ஏற்பட்டது. இது போன்று எந்த ஒரு தொழில் வளர்ச்சிக்கும் முனைவுதான் அடிப்படை.

ஏற்கனவே பிற நகரங்களில் செயல்பட்டு வரும் நிறுவனங்களுக்கு வேலூரில் செலவு குறைவு ஆதாயம் இருக்கிறது.

சென்னை, பெங்களூருவில் இயங்கும் நிறுவனங்களில் ஊழியர்கள் இழப்பு 12% முதல் 15% வரையாக இருக்கிறது. ஹனிவெல் நிறுவனம் சோதனை முயற்சியாக மதுரையில் 500 பொறியியல் பட்டதாரிகளுடன் ஆரம்பிக்கப்பட்ட அலுவலகத்தில், ஊழியர் இழப்பு வீதம் 5%த்தை விடக் குறைவாக இருக்கிறதாம்.
இது போன்று வேலூரிலும் சிறு நகர வாழ்க்கையில் நல்ல சம்பளமும் குடும்பத்துடன் வசிக்கும் வாய்ப்பும் இருந்தால் ஊழியர்கள் நிறைவுடனும் ஊக்கத்துடனும் பணி புரிவார்கள்.

பெரிய நிறுவனம் ஒன்று வேலூருக்கு வரும் போது அவர்களுக்கு soft landing என்ற குறைந்த செலவில் அலுவலகம் ஏற்படுத்தும் வசதி இருப்பது பெரிய ஆதாயமாக இருக்கும்.

விஐடியின் தொழில்நுட்ப உருவாக்க மையத்தை அப்படி தொடர்பு கொண்டு கிரான்ஸ்கி மோல்டிங் அண்ட் ஸ்டாம்பிங் என்ற ஜெர்மன் நிறுவனம், விஐடி மையத்தில் தனது பணிகளை செய்ய ஆரம்பித்து அப்போது பள்ளிகொண்டா அருகில் தனது தொழிற்சாலையை ஏற்படுத்தி செயல்படுத்த ஆரம்பித்து விட்டார்கள்.

அவர்களைப் போலவே டாக்ஸ் பிரெஸ்ஸோடெக்னிக் என்ற நிறுவனமும் விஐடி மையத்தில் செயல்பாடுகளை ஆரம்பித்து இப்போது தொழிற்சாலைக்கான நிலம் வாங்கி தயார் நிலையில் இருக்கிறார்கள். வீலன்ட் என்ற மூன்றாவது ஜெர்மன் நிறுவனம் தொழில் சாதக ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.

  • இது போன்று நிறுவனங்கள் soft landing ஆவதற்கான கட்டமைப்புகள் அரசாங்கத்தால் மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட வேண்டும்.
  • விஐடி மையம் அரசாங்கத் திட்டங்களின் மூலம் தொழில் முனைவோருக்குப் பண உதவி செய்து வருகிறது. இது வரை ஒரு கோடியே 20 லட்சம் வரை முதலீடு பெற்றுத் தரப்பட்டுள்ளது.
  • தகவல் தொழில்நுட்பத்தில் பணி புரியும் ஒவ்வொரு ஊழியரும் சுற்றுப் புறப் பகுதிகளில் 4 புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
சிறு நிறுவனங்களுக்கான சிறப்புப் பொருளாதார மண்டலத்தை உருவாக்கலாம். வேலூர் மாவட்டத்தைச் சார்ந்த தொழில் ஆதாயங்களைப் பயன்படுத்தி தொழில் வளத்தை உருவாக்க வேண்டும். ரிஸ்க் எடுக்கும் மனோபாவத்தை ஊக்குவிக்க வேண்டும். சமூகத்தில் அதற்கான அங்கீகாரம் கிடைக்க வேண்டும்.

அரசுத் திட்டங்களையும் பண உதவிகளையும் பயன்படுத்த விஐடி உதவி புரிகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் புது நிறுவன உதவி மையம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசு திட்டம் வகுத்துள்ளது. மொத்தம் 1000 மையங்கள் என்று இலக்கு ஏற்படுத்தப்பட்டு அது வரை சிறு எண்ணிக்கையிலேயே ஏற்படுத்தப்பட்டுள்ளன.

1 $ முதலீடு அரசாங்கத்துக்கு 4$ வருமானம் தருகிறது. வேலூர் நகராட்சி கூட ஒரு இன்குபேட்டர் ஏற்படுத்தலாம்.


மைக்ரோசாப்ட் இந்திய ஆராய்ச்சி மையத்தில் பன்மொழி அமைப்பு ஆராய்ச்சியின் தலைவராக பணிபுரியும் முனைவர் குமரன் மனிதவளம், கட்டமைப்பு, செயல்திறன் என்ற மூன்றும் அடிப்படைத் தேவைகள். ஆனால் இவற்றைத் தாண்டி நிறுவனங்களை வர வைக்க துணிந்து முயற்சி எடுக்கும் (ரிஸ்க் எடுக்கும்) மனோபாவம் உருவாக வேண்டும்.

கலிஃபோர்னியாவில் இருந்த அதே சூழல் போஸ்டனில் இருந்தாலும், கலிஃபோர்னியர்களின் ரிஸ்க் எடுக்கும் மனப்போக்குதான் சிலிக்கான் பள்ளத்தாக்கின் வெற்றிக்கு அடிப்படையாக இருந்தது. அதே போன்று வேலூருக்கு தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவனங்களை ஈர்ப்பதற்கு ஒரு சிறப்பு கவர்ச்சி ஒன்று அடையாளம் காணப்பட வேண்டும்.

15-20 ஆண்டுகளுக்கான நீண்ட காலத் திட்டம் தயாரித்து அதன் அடிப்படையில் செயல்பட்டால் வெற்றி அடையலாம்.

நாராயண்

தொடக்க நிலை நிறுவனங்கள் வெற்றி பெற தொழில் முனைவர்களின், சமூகத்தின் மனப்பாங்கு ஒரு முக்கிய காரணியாக இருக்கிறது. படிப்பை முடித்தவுடன் பன்னாட்டு நிறுவனத்தில் உயர் சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்து விட வேண்டும் என்று நினைக்காமல் சிறிய நிறுவனத்தில் பணி புரியும் மனப்போக்கு வேண்டும்.

சென்னையில் வாகன உற்பத்தித் துறை வளர்ந்ததற்கான முக்கிய ஒரு காரணி பெரிய நிறுவனங்களுக்கு ஆதரவாக நூற்றுக்கணக்கான சிறு நிறுவனங்கள் உருவாகி செயல்படுவதுதான். அதைப் போல வேலூரிலும் தகவல் தொழில் நுட்பத் துறையில் சிறு நிறுவனங்கள் வளர்வது தகுந்த சூழல் உருவாக உதவியாக இருக்கும்.

தொழில் முனைவர்களைப் பொறுத்த வரை, இணையம் மூலமாக cloud computing என்ற கோட்பாட்டின் மூலமாக சேவை வழங்குவதற்கு இருப்பிடம் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். சிறிய ஊர்களிலிருந்து கூட அவற்றை உருவாக்கி உலகமெங்கும் விற்பனை செய்யலாம்.

விஐடி வேலூரில் இருப்பது மிகவும் உதவியாக இருக்கிறது. செலவு குறைவாக இருப்பது இன்னொரு காரணம். இந்த ஊரில் இருக்கும் தேவைகளுக்கு சேவைகள் உருவாக்கி வழங்குவதை அடிப்படையாக கொண்டு செயல்படலாம்.

செந்தில்நாதன்

1. சிங்கப்பூரின் லீகுவான் யூ போன்று உறுதியான நேர்மையான தலைமையும் தனிநபர் முயற்சிகளும் வெற்றிக்கு அடிப்படையாக இருக்கின்றன. வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையும், ஈடுபாடும், முனைவும் இருந்தால்தான் வாய்ப்புகளைப் பயன்படுத்தி வெற்றி பெற முடியும்.

2. பெங்களூரு சென்னை நகரங்களின் நிழலில் அந்நகரங்களுக்கு மனித வளத்தை அளிக்கும் பகுதியாக விளங்குகிறது வேலூர் மாவட்டம்.

3. இன்னொரு பெங்களூரு சென்னையாக உருவாகாமல், வேலூரின் தனிச் சிறப்புகளைப் பயன்படுத்தி தகவல் தொழில் நுட்பச் சூழல் உருவாக்கப்பட வேண்டும்.

4. 500 சிறு நிறுவனங்களை வேலூருக்குக் கொண்டு வர வேண்டும் என்று இலக்கு அமைத்துச் செயல்படலாம்.

நாச்சியப்பா
ஆம்பூர் வர்த்தக மையத்தைப் போன்று ஒரு தகவல் தொழில் நுட்ப மையம் வேலூரில் உருவாக வேண்டும். இதன் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வும், நிறுவனங்களுக்கு வசதியும் கிடைக்கும். தொழில் முனைவர்கள் சந்தித்து உரையாட ஒரு பொது இடமும், தகவல் பரிமாறும் வசதியும் கிடைக்கும்.

தோல் துறை, கல்வி நிறுவனங்கள், வியாபாரிகள் இவர்களுக்குத் தேவையான மென்பொருள் சேவை வாய்ப்புகள் இந்த மாவட்டத்தில் இருக்கின்றன.

பாலாஜி கம்பியூட்டர்சைச் சேர்ந்த திரு குமரன் 

அரசுத் திட்டங்களைப் பயன்படுத்தவும், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும்படியான அரசு அமைப்புகள் ஏற்படுத்தவும் முன்முயற்சி தேவை என்று கருத்து தெரிவித்தார்.

வேலூரில் மனிதவளம், தொழில் முனைவு இருக்கிறது. அரசு அங்கீகாரமும், உதவிகளும், வழிகாட்டலும் தேவையாக இருக்கிறது.


விஐடி இது போன்று மென்பொருள் தகவல் மையம் ஒன்றை உருவாக்க முன்வரலாம். ஏற்கனவே 50-60 பிபிஓ நிறுவனங்கள் இந்த மாவட்டத்தில் செயல்பட்டு வருகின்றன.

வேலூர் கலந்துரையாடல் - அறிமுகக் குறிப்புகள்

தங்களது பல வேலைகளுக்கிடையே இந்த கருத்தரங்கில் பங்கு கொள்ள வந்திருக்கும் சிறப்புப் பேச்சாளர்களையும், வேலூரின் முன்னேற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் பணி செய்து வரும் வேலூர் தகவல் தொழில் நுட்ப அமைப்பினரையும், தொழில் முனைவர்களையும், அரசு அதிகாரிகளையும் இந்தக் கருத்தரங்குக்கு வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

இந்தக் கருத்தரங்கின் நோக்கம், சிறு நகராகக் கருதப்படும் வேலூரில் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் செயல்படுவதற்கான சூழல்களைப் பற்றிய ஒரு ஆரோக்கியமான கருத்தாக்கத்தைத் தொடங்கி வைப்பது.  இது தொடர்பாக சில தகவல்களை முன் வைக்க விரும்புகிறேன்.

1. மாவட்ட நிர்வாகத்தின் சார்பாகவும், அரசியல் பிரநிதிகள், அமைச்சர்களின் முன் முயற்சிகளினாலும் வேலூரில் ஒரு ஐடி பார்க் அமைப்பதற்கான முன்முயற்சிகள் ஏற்கனவே தொடங்கி விட்டிருக்கின்றன.

2. வேலூர் இந்தியாவின் சிலிக்கன் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படும் பெங்களூருவுக்கும் இந்தியத் தகவல் தொழில் நுட்பத் துறை வளர்ச்சியில் கணிசமான பங்கு வகிக்கும் சென்னைக்கும் நடுவில் strategic ஆக அமைந்துள்ளது. சென்னை - பெங்களூர் நான்கு வழி நெடுஞ்சாலை, வேலூரிலிருந்து இந்த பெருநகரங்களுக்குப் போய் வருவதை இரண்டு மணி நேரங்களுக்குட்பட்ட பயணமாக குறுக்கியிருக்கிறது.

சென்னைக்கும் வேலூருக்கும் இடையேயான தூரம் நூற்றிச் சொச்சம் கிலோமீட்டர்களாக இருந்தாலும், வேலூர் சென்னையிலிருந்து கட்டமைப்பு வசதிகளைப் பொறுத்த வரை எந்த அளவு ஓடிப் பிடிக்க வேண்டியிருக்கிறது என்பது ஒரு முக்கியமான பொருள்.

இதைப் பற்றி வழிகாட்டப் போகிறவர் தகவல் தொழில் நுட்பத் துறையின் முன்னணி நிறுவனங்களில் பல ஆண்டுகள் அனுபவம் கொண்ட திரு A J பாலசுப்பிரமணியன். 1985ல் கிண்டி எஞ்சினியரிங் கல்லூரியில் பட்டம் பெற்று அடுத்த 12 ஆண்டுகளில் அப்பளைட் டாடா சிஸ்டம்ஸ் மற்றும் ஹார்ட் சாஃப்ட் மைக்ரோஸ் என்ற தொழில் நுட்ப நிறுவனங்களை உருவாக்கி நடத்தியுள்ளார். அதைத் தொடர்ந்து 2003ம் ஆண்டு வரை மென்பொருள் ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தில் மூத்த பொறுப்புகளில் இருந்துள்ளார். தற்போது கேர்வாயன்ட் டெக்னாலஜிஸ் என்ற 100% ஏற்றுமதி சார்ந்த நிறுவனத்தின் பொது மேலாளராக செயல்படுகிறார்.

3. வேலூரின் மகுடத்தில் கோகினூர் வைரமாக மின்னும் விஐடியில் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆரம்பிப்பதற்கான மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அதன் பொது மேலாளர் திரு பாலச்சந்திரன் இன்று நம்மிடையே தனது கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறார். திரு பாலச்சந்திரன் 20 ஆண்டுகளுக்கும் மேல் தகவல் தொழில் நுட்பத்துறையில் பணி புரிந்து வருகிறார். விஐடி டெக்னாலஜி இன்குபேஷன் மையத்தை ஆரம்பித்ததிலிருந்து (2003 ஆம் ஆண்டு) அதன் பொறுப்பாளராக இருந்து 20 புதிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு வழிகாட்டலும், உதவியும் செய்திருக்கிறார்.

4. தகவல் தொழில் நுட்பம் என்பது வளர்ந்த நாடுகளின் தேவைகளுக்கு மட்டும் என்றில்லாமல், வளர்ந்து வரும் நாடுகளின் சூழலுக்கேற்ற, நமது தேவைகளை பூர்த்தி செய்யும் படி பயன்படுத்த பல முயற்சிகள் நடந்து வருகின்றன.

இதைப் பற்றி,  அமெரிக்காவில் பல ஆண்டுகள் பணி புரிந்து, இந்தியாவுக்கு மிகவும் தேவையான பன்மொழி கணினி அமைப்புகள் துறையில் நிபுணத்துவம் பெற்ற முனைவர் குமரன் பேச இருக்கிறார். முனைவர் குமரன் பெங்களூரு இந்தியன் இன்ஸ்டிடியூட்டில் ஆராய்ச்சி பட்டம் பெற்று, அமெரிக்காவில் பெல் கம்யூனிகேஷன், ஆரக்கிள் கார்பொரேஷன் போன்ற முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் பணி புரிந்திருக்கிறார். கடந்த 5 ஆண்டுகளாக மைக்ரோசாப்டின் இந்திய ஆராய்ச்சிப் பிரிவின் பொது மேலாளராக பணி புரிந்து வருகிறார்.

5. வேலூர் மாவட்ட தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் கூட்டமைப்பின் செயலர் திரு மோதிலால் தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறார்.

வேலூரில் புதிதாக தகவல் தொழில் நுட்ப நிறுவனம் ஒன்றை உருவாக்கி வரும் திரு நாராயண் தனது கருத்துக்களை சொல்ல வந்திருக்கிறார். சென்னையைச் சேர்ந்த திரு நாராயண், கடந்த 10 ஆண்டுகளில் விண்ஊஞ்சல், 360 டிகிரி இன்டர்ஆக்டிவ் என்று புதுமையான மென்பொருள் நிறுவனங்களை தொடங்கி நடத்திய பெருமை உடையவர்.

6. வேலூர் மாவட்டத்தில் தோல் பதனிடுதல், காலணி முதலான தோல் பொருட்கள் உற்பத்தி என்று ஆரம்பித்து பல்லாயிரக் கணக்கான கோடி அன்னியச் செலாவணி ஈட்டும் தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன. தோல் துறைக்கு மென்பொருள் சேவை அளிப்பதற்காக பிஎஸ்ஜி லெதர் லிங்க் என்ற நிறுவனத்தை ஆரம்பித்து கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் நான் இந்த கருத்தரங்களை தொகுத்தளிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளேன்.

இந்த மாவட்டத்திலும் அருகாமையிலுள்ள பிற மாவட்டங்களிலும் நூற்றுக்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் செயல்படுகின்றன. வேலூர் நகரிலும் டார்லிங் குழுமம் போன்ற வணிக நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

7. முத்தாய்ப்பாக வேலூர் நண்பர்களின் ஊர் பாசம். நூலாறு 2010 என்ற தலைப்பில் பிரம்மாண்டமான புத்தகக் கண்காட்சி ஒன்றை இந்த மாவட்ட மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் கொண்டு வர வேண்டும் என்று அரும் சாதனையைச் செய்து கொண்டிருக்கும் ஆழி அறக்கட்டளையின் திரு செந்தில்நாதன்,  இந்தக் கருத்தரங்கில் தமது பங்களிப்பை வளங்குவார்.

முதலில் பேச்சாளர்கள் தத்தமது ஆரம்ப உரையை 10 நிமிடங்களுக்குள் சுருக்கமாக வழங்குவார்கள். அதைத் தொடர்ந்து கேள்வி பதில் உருவில் விவாதம் தொடரும்.

இந்த விவாதம் ஒலி/ஒளி வடிவில் பதிவு செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த விவாதத்தின் விளைவாக ஒரு செயல்திட்டம் உருவாக்கி வெளியிடுவது என்பது நோக்கம்.

சனி, 14 ஆகஸ்ட், 2010

சென்னை பயனர் குழு - ஆகஸ்டு மாதக் கூட்டம்.

சென்னை லினக்சு குழுவின் மாதாந்திரக் கூட்டங்களில் பல ஆண்டுகளாகக் கலந்து கொண்டதில்லை. சனிக்கிழமை, நிறுவன வேலை நாளாக இருந்ததாலும், மற்ற பொறுப்புகளுக்கு இடையிலும் சனிக்கிழமை பிற்பகலில் கூட்டத்துக்குப் போவது நடக்காததாகவே போயிருந்தது. சமீபத்திய மாற்றங்களினால் இந்த அழுத்தங்கள் குறைந்து பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.

கூட்டத்துக்குப் போய்ச் சேருவது:

பேருந்தில் ஏறி ஐஐடிக்கு முன்பு இறங்கிய பிறகு விண்வெளி பொறியியல் துறை (aerospace engineering) வரை போய்ச் சேருவதற்கு அரை மணி நேரம் ஒதுக்கிக் கொள்ள வேண்டும். நுழைவாயிலிலிருந்து 'கஜேந்திரா சர்க்கிள இரண்டு கிலோமீட்டர் தூரம் இருக்கும் சார், அதோ நிற்கும் வேனில் ஏறினால் கொண்டு விட்டு விடுவார்கள்' என்று வாயிற் காவலர் வழி காட்டினார்.

வேன் வந்து புறப்படுவதற்குக் காத்திருக்க வேண்டும் அல்லது நடந்தே போக வேண்டும். வேனில் இரண்டு நிறுத்தங்களுக்குப் பிறகு யானை சிலைகள் வைக்கப்பட்ட ரவுண்டானாவில் இறங்க வேண்டும். அதுதான் கஜேந்திரா சர்க்கிள்.

(நினைவில் இருப்பது) வேன் வந்த பாதையைத் தவிர்த்து மூன்று சாலைகள் பிரிந்து போகின்றன. வலது புறம் திரும்ப வேண்டும். மின், மின்னணுவியல் (electrical department) துறை என்ற திசையில் நடந்து கொஞ்ச தூரத்துக்குப் பிறகு பயன்பாட்டு இயந்திரவியல் (applied mechanics) என்ற சாலையில் திரும்ப வேண்டும். பயன்பாட்டு இயந்திரவியல் கட்டிடத்துக்கு முன்பு இருக்கும் புதிய கட்டிடம் விண்வெளி பொறியியல் துறையுடையது. அந்தக் கட்டிடத்தின் முகப்பில் மட்டும்தான் பெயர் எழுதியிருந்தது பார்க்கக் கிடைத்தது.

போகும் போது 20 நிமிடங்கள் தாமதமாகி விட்டிருந்தது.

ராமன் லினக்சில் கோப்பு அனுமதிகள் குறித்து பேச ஆரம்பித்திருந்தார்.

-- பயனர்(u), குழு(g), பிறர்(o) என்று மூன்று பிரிவினருக்கு அனுமதிகள் மாற்றலாம்
-- படித்தல்(r), மாற்றுதல்(w), இயக்குதல்(x) என்று மூன்று வகை அனுமதிகளை கொடுக்கலாம் அல்லது நீக்கலாம்.

-- ls -l மூலம் ஒரு கோப்பின் அனுமதி விபரங்களை பார்க்கலாம்.
-- அனுமதி விபரங்கள் ஒவ்வொரு பிரிவினருக்கு மூன்று கட்டங்களாக ஒன்பது கட்டங்களில் காட்டப்படுகிறது (உதாரணம் : r-xrw-r--). முதல் மூன்று கட்டங்கள் பயனருக்கு உள்ள அனுமதிகள், அடுத்த மூன்று கட்டங்கள் குழுவிற்கான அனுமதிகள், கடைசி மூன்று கட்டங்கள் மற்றவர்களுக்கான அனுமதிகள்.

-- லினக்சில் எல்லாமே கோப்புகள்தான்
-- கோப்பு, அடைவு, கருவி என்று காட்டுவதற்கு அனுமதி விபரங்களுக்கு முந்தைய கட்டம் பயன்படுகிறது (- என்றால் சாதாரண கோப்பு, d என்றால் அடைவு, c என்றால் கேரக்டர் டிவைஸ், b என்றால் பிளாக் டிவைஸ், l என்றால் லிங்க்)

--chmod பயன்படுத்தி அனுமதிகளை மாற்றலாம். பயனர் பிரிவு (u, g, o), + (சேர்) / - (நீக்கு), அனுமதி வகை (rwx). (உதாரணம் : chmod u+rw கோப்பு)
--இன்னொரு முறையில் எண்கணக்கு மூலம் மாற்றலாம். r=4, w=2, x=1 என்ற கணக்கில் கூட்டி என்ன அனுமதிகள் என்று அமைக்கலாம். (உதாரணம் : chmod 666 கோப்பு)

ஸ்டிக்கி பிட்  மற்றும் இயக்கப்படும் கோப்பு உரிமையாளரின் (setuid) அனுமதிகளுடனேயே இயங்கும் உத்தி பற்றியும் விளக்கினார்.

என்னதான் மேனுவல் (man) பக்கங்களைப் படித்தாலும், எத்தனை புத்தகங்களை புரட்டினாலும், ஒருவர் உதாரணங்களுடன் விளக்கிச் சொல்லும் போது மனதில் இன்னும் ஆழமாக பதிந்து விடுகிறது. அந்த வகையில் மிகவும் பலனுள்ள அமர்வு.

சந்திரசேகர் பாபு - ரூபி கணிமொழி குறித்துப் பேசினார்.

பேர்ல், ஷெல் நிரல்கள், ஜாவா, பைதன் என்று பல மொழிகளில் பணி புரிந்த இவர் ரூபி மொழி, தான் அறிந்த மொழிகளில் இனிதானது என்று மிகச்சிறப்பாக விளக்கினார். 'பேர்ல், ஷெல் நிரல்களால் செய்யக் கூடிய பணிகளை ரூபியில் எப்படி சிறப்பாக செய்ய முடியும்' என்பது பேச்சின் குறிக்கோளாக இருந்தது.

மென்பொருள் இயல் பின்னணி இல்லாத என்னைப் போன்றவர்களுக்கும் புரியும்படி நிறைய எடுத்துக்காட்டுகள், அனுபவப் பகிர்வுகள், சரளமான பேச்சு, நட்பு தவளும் புன்னகை சேர்த்து நேரம் போவது தெரியாமல் விறுவிறுப்பாக இருந்தது இந்த அமர்வு.

  • ரூபி என்பது முழுக்க முழுக்க பொருள் சார்ந்த நிரல் மொழி (object oriented language). ரூபி மொழியில் எண்கள் (integer), சொற்றொடர்கள் (strings) கூட பொருட்களாகத்தான் கருதப்படுகின்றன.


  • நிரல் எழுதுவது அழகாக இருக்க வேண்டும், நிரலை பராமரிப்பது எளிமையாக இருக்க வேண்டும் என்பது ரூபியின் குறிக்கோள்.
  • ரூபியை வெறும் இணையப் பயன்பாட்டு நிரல்மொழியாக நினைக்க வேண்டாம். அது ஒரு பொதுப் பயன்பாட்டு நிரல்மொழி.

பேசும் போதே எடுத்துக்காட்டு செயலிகளாக ஷெல் நிரல், பேர்ல், ரூபி மூன்றிலும் எழுதி இயக்கிக் காட்டினார். இடையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கும் பொறுமையாக, தெளிவாக, எளிமையாக பதிலளித்தார். நேரம் கடந்து போனதை சுட்டிக் காட்டிய பிறகுதான் அவருக்கும் கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கும் அவ்வளவு நேரம் ஓடிப் போனது உறைத்தது.

சுகி வெங்கட், அவரது நிறுவனத்தில் உருவாக்கி கட்டற்ற மென்பொருளாக வெளியிட்டுள்ள மல்டி ஃப்ளோ பற்றிப் பேசினார்.

ஃபயர்ஃபாக்சின் சூல் (xul) சட்டகத்தில், ஜாவாஸ்கிரிப்டில் உருவாக்கப்பட்ட இந்த தொகுப்பியில் பன்மொழி இடைமுகம், கணிதக் குறியீடுகள் சேர்ப்பது என்று வசதிகள் இருக்கின்றன. ஒருவர் இத்தகைய படைப்பை உருவாக்கி கட்டற்ற மென்பொருளாக வெளியிட்டிருப்பது பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

அவர் கேட்டுக் கொண்டது போல பயனர்களாகவும், நிரலாளர்களாகவும் மற்றவர்களும் பங்கேற்று இதை மேம்படுத்த முடிந்தால் சிறப்பான ஒரு மென்பொருளாக உருப்பெறும் வாய்ப்புகளைக் கொண்டிருக்கிறது.

செப்டம்பர் மாதம் 18ம் தேதி நடத்த உத்தேசித்துள்ள மென்பொருள் சுதந்திர நாள் (software freedom day) முன் தயாரிப்புகளைக் குறித்து ஸ்ரீனி, தியாகராஜன், ராமன் அறிவித்தார்கள். 'யார் யார் எத்தனை கடைகள் அமைக்கப் போகிறார்கள், பணிகளைச் செய்வதற்கு தன்னார்வலர்கள்' என்று பட்டியல் தயாரித்தார்கள்.

'நிகழ்ச்சிக்கு முந்தைய மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத் தொடர்பு வேலைகளைப்' பற்றிக் கேட்ட என்னிடம் அந்தப் பொறுப்பைத் தந்தார்கள். அருண் SAG, ஸ்ரீனிவாசன், சுரேஷ், நாகராஜன், சத்யநாராயணன், அகிலன் ஆகியோர் இதில் சேர்ந்து கொண்டோம்.
  • சென்னையில் வெளியாகும் தமிழ் நாளிதழ்கள் (தினமணி, தினமலர், தினத்தந்தி, தினகரன்),
  • ஆங்கில நாளிதழ்கள் (தி இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ், டெக்கான் குரோனிக்கிள், டைம்ஸ் ஆஃப் இந்தியா),
  • கணினி பத்திரிகைகள் (தமிழ் கம்ப்யூட்டர், லினக்சு ஃபார் யூ),
  • தமிழ் பத்திரிகைகள் (ஆனந்த விகடன், குமுதம், குங்குமம்),
  • பண்பலை வானொலிகள் (சூரியன், மிர்ச்சி, ஆஹா, பிக், ரேடியோ சிட்டி)
    போன்ற எல்லா ஊடக நிறுவனங்களுக்கும் மின்னஞ்சல் மற்றும் தகவல்களை முன் கூட்டிய அனுப்பி வைப்பது

  • sfd2010.ilugc.in என்ற தளத்தில் நிகழ்வு பற்றிய விபரங்களை தொகுத்து அளித்தல்
  • டிவிட்டர், ஃபேஸ்புக், லிங்க்ட்இன் போன்ற இணைய தளங்களில் தகவலை பரப்புவது
  • வலைப்பதிவர்களில் விழிப்புணர்வு உருவாக்குவது
  • கல்லூரி, பள்ளிகளுக்கு விபரங்களை அனுப்புவது..
என்று பல வழிகளில் மென்பொருள் சுதந்திரம் குறித்த தகவலை பரப்பி நிகழ்ச்சிக்கு மக்களை வரவேற்க வேண்டும்.

இவற்றைத் தவிர
- தமிழக அரசின் எல்காட்
- c-dac
- nrcfoss
போன்ற மென்பொருள் தொடர்பான அரசு துறைகளை அதிகாரபூர்வமாக பங்கேற்க அழைக்கலாம்.

சிறப்பு விருந்தினர் என்று யாரையும் அழைக்காமல், கட்டற்ற மென்பொருளில் ஆர்வம் உடைய அதற்கான பணிகளை செய்த தலைவர்களையும் (இந்திய ஆட்சிப் பணி அலுவலர் திரு உமாசங்கர், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் போன்றவர்கள்) வருகை தர அழைக்கலாம்.

லினக்சு பயிற்சி நிறுவனங்கள், லினக்சு சேவை நிறுவனங்கள், கணினி விற்பனை நிறுவனங்கள் போன்றவற்றை அணுகி அவர்களின் பங்களிப்பையும் கேட்கலாம்.

வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010

மென்பொருள் வணிகத்துக்கு சாவு மணி

English Version

சென்னை லினக்சு பயனர் குழு என்ற மடற்குழு ஒன்று இயங்கி வருகிறது. "ILUG-C" என்ற மின்னஞ்சலில் உறுப்பினராக பதிவு செய்து கொண்டால் குழுவில் நடக்கும் மடற்பரிமாற்றங்கள் நமக்கும் வந்து சேரும்.

5 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மடற்குழுவில் உரையாடல்கள் கொஞ்சம் தூங்கி வடிந்து கொண்டு இருக்கும். எப்போதாவது வாரத்துக்கு ஒரு முறை, மாதத்துக்கு நான்கைந்து முறை மடல்கள்பரிமாறிக் கொள்ளப்படும். மாதா மாதம் நேரடி சந்திப்பு ஏற்பாடு செய்வார்கள். அதில் விரல் விட்டு எண்ணக் கூடிய எண்ணிக்கையில் சிலர் ஆர்வமாகக் கலந்து அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் பற்றி பேசிக் கொண்டிருப்பார்கள்.

இன்றைக்கு மடற்குழுவில் ஒரு நாளைக்கு சராசரியாக 20முதல் 30 மின்னஞ்சல்கள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன. பல்வேறு கல்லூரி மாணவர்கள் இறுதியாண்டு திட்டப்பணி, வேலை வாய்ப்புகள், தொழில் நுட்ப ஐயங்கள் குறித்து கேள்விகள் கேட்க பதில் சொல்லவும் நிறைய பேர் இருக்கிறார்கள்.

இன்று கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், வேலைவாய்ப்பு தளங்கள் எல்ல இடங்களிலும் லினக்சு, பிஎச்பி, மைஎஸ்கியூஎல் என்ற திறவூற்று மென்பொருட்கள் (open source software) வளமையான பெயர்களாகிப் போய் விட்டன. இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் கூட விளிம்பு நிலையில் வைக்கப்பட்டிருந்த இவை மைய நிலைக்கு வந்து விட்டதன் பின்னணி என்ன? என்னதான் நடந்தது? நடக்கிறது? இனிவரும் ஆண்டுகளில் என்னென்ன மாறப் போகிறது?

'தனிமனிதர்களால் என்ன சாதிக்க முடியும்? பெரிய நிறுவனங்கள், அரசாங்கங்கள் திட்டமிட்டு செயல்படும் போது தனி மனிதர்கள் அவற்றை அப்படியே ஏற்றுக் கொள்வதைத் தவிர என்ன செய்து விட முடியும்' என்று சலித்து விடாமல் ஒரு தனிமனிதர் ஆரம்பித்த இயக்கத்தின் விளைவுதான் மென்பொருள் துறையில் நாம் பார்க்கும் இந்தப் புரட்சி.

கல்லூரியில், வேலை பார்க்கும் இடத்தில், ஒருவர் கற்றுக் கொண்டதை, ஒருவர் உருவாக்கியதை மற்றவருடன் பகிர்ந்து கொண்டால், இரண்டு பேருக்கும் நன்மை. அறிவுச் செல்வம் மட்டும் பகிர்ந்து கொள்வதால் குறைவதில்லை. இரண்டு பேர் தத்தமது கருத்துக்களை, ஆக்கங்களை பகிர்ந்து கொண்டால் இரண்டு பேருக்கும் இரண்டும் கிடைத்திருக்கும். புதிய கருத்துக்களை பெற்றவர் அதன் அடிப்படையில் சிந்தித்து அடுத்தடுத்த மேம்பாடுகளை ஏற்படுத்த வாய்ப்புகள் ஏற்படும்.

பல நூற்றாண்டுகளாக அறிவியலில் முன்னேற்றங்கள் அப்படித்தான் ஏற்பட்டு வந்தன. ஒரு அறிவியலாளர் செய்த ஆராய்ச்சியின் முடிவுகளை அலசி ஆராய்ந்து மற்றவர்கள் ஏற்றுக் கொண்டு விட்ட பிறகு அடுத்து வருபவர் அந்த ஆய்வின் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு அடுத்தடுத்த மேம்பாடுகளை முயற்சிக்க முடியும். ஒவ்வொருவரும் தத்தமது கருத்துக்களை, ஆராய்ச்சி முடிவுகளை மூடி வைத்துக் கொண்டால் கடந்து நான்கு நூற்றாண்டுகளின் அறிவியல் முன்னேற்றம் சாத்தியமாகியிருக்காது.

கணினிகளின் தோற்றத்துடன் கணினிகளை இயக்கும் மென்பொருள் துறையும் உருவானது. மென்பொருள் நிரல் எழுதுவது மனிதர் படித்துப் புரிந்து கொள்ள முடியும் மொழியில், a முதல் z வரையிலான எழுத்துக்கள், 0 முதல் 9 வரையிலான எண்கள், சில குறியீடுகளைப் பயன்படுத்தி நடக்கிறது. C, C++, Java, C# என்று பல கணினி மொழிகளிலும் நிரலாளர் எழுதும் செயலிகளின் அடிப்படை வடிவம் source code அல்லது மூலநிரல் எனப்படும் இந்த உரை வடிவம்தான்.

கணினியில் இயக்கும் முன்பு இந்த மூலநிரலை கணினி புரிந்து கொள்ளும் இரும மொழிக்கு மாற்றி ஒரு binary அல்லது இருமம் உருவாக்க வேண்டும். இந்த இரும வடிவக் கோப்பில் இருக்கும் கட்டளைகளை கணினி மட்டும்தான் புரிந்து கொள்ள முடியும். மனிதர்கள் படித்துப் புரிந்து கொள்ள முடியாத ஒன்று இரும வடிவக் கோப்பு. செயலியில் ஏதாவது மாற்றம் அல்லது பிழை திருத்தம் செய்ய வேண்டுமானால் மூலநிரல் கோப்பில் மாற்றங்களை செய்து மீண்டும் தொகுத்து (compile) இரும வடிவ கோப்பை உருவாக்கி பயனருக்குக் கொடுக்க வேண்டும்.

நிரல் எழுதும் மென்பொருள் நிரலாளருக்கும் செயலியைப் பயன்படுத்தும் பயனருக்கும் நடுவில் இடைத்தரகராக ஒரு வணிக துறை உருவாக்கும் முயற்சி 1970களின் இறுதியில் ஆரம்பித்து 1980களில் பெருமளவு வெற்றி பெற்று விட்டிருந்தது. நிரலாளரிடமிருந்து மூலநிரலை எடுத்து, அதன் இரும வடிவை மட்டும் பயனருக்கு விற்கும் வணிக முறை நடைமுறைக்கு வந்தது. பயனர் கிடைத்த இருமத்தை இயக்கிப் பயன்படுத்தலாம், ஏதாவது மாற்றம் அல்லது திருத்தம் தேவைப்பட்டால் அவரால் எதுவும் செய்ய முடியாது. மூலநிரலை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நிறுவனம் மனம் வைத்தால் ஒழிய இவரது கதை கந்தல்தான்.

இந்தப் பின்னணியில், வணிக நிறுவனங்களின் கிடுக்கிப்பிடியில் சிறைபட்டுக் கிடந்த மென்பொருள் நிரல்களை விடுதலை செய்ய ஆரம்பித்த இயக்கம்தான் திறவூற்று மென்பொருள் இயக்கமும் அதன் விளைவான லினக்சு இயங்குதளம் சார்ந்த மென்பொருள்களும்.

1. ரிச்சர்ட் ஸ்டால்மேன் என்பவர் 1980களில் அமெரிக்காவின் எம்ஐடி கல்லூரியில் மென்பொருள் நிரலாளராக (software programmer) பணியாற்றி வந்தார். மேலே சொன்ன மென்பொருள் வணிகமயமாக்கலை அவர் தீவிரமாக எதிர்த்தார். அந்தக் காலத்தில் அடித்து வந்த அந்த ஆழிப்பேரலையில் அவரது குரல் எடுபடாமல் போய் விட்டது. ஆனால் அதற்காக ஓய்ந்து நின்று விடவில்லை.

1983ல் 70களில் பெரிதும் பயன்பட்டு வந்த யுனிக்சு இயங்குதளத்துக்கு முற்றிலும் திறவூற்று முறையில் ஒரு மாற்று இயங்குதளத்தை உருவாக்குவோம் என்று சூளுரைத்து GNU எனப்படும் குனு திட்டப்பணியை ஆரம்பித்தார், 1985ல் Free Software Foundation (பரிநிரல் அறக்கட்டளை) என்ற நிறுவனத்தையும் ஏற்படுத்தினார்.

'மென்பொருளை விடுதலை செய்வோம்' என்ற போர்க் குரலுடன் கடந்த 25 ஆண்டுகளாக தனது கொள்கையில் உறுதியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இப்போது நாம் பார்க்கும் திறவூற்று மென்பொருள் துறையின் அடித்தளத்தை ஏற்படுத்தி அதன் மூளையாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் ரிச்சர்ட் ஸ்டால்மேன்.

2. GNU GPL என்ற உரிம ஆவணத்தின்படி தனது மென்பொருள் ஆக்கங்களை வெளியிட்டதோடு மற்றவர்களையும் அதே உரிமத்தைப் பயன்படுத்தும் படி பிரச்சாரம் செய்கிறார் ஸ்டால்மேன். இந்த உரிமத்தின் கீழ் கிடைக்கும் மென்பொருட்கள் இரும வடிவக் கோப்பாக மட்டுமில்லாமல் கூடவே மூல நிரல் கோப்பும் சேர்த்து வருகின்றன.

வாங்குபவர் அதை எத்தனை நகல்கள் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம், தனக்குத் தேவையான படி, பிடித்தபடி மூலநிரலை மாற்றி செயலி உருவாக்கிக் கொள்ளலாம், நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம், அல்லது விலைக்குக் கூட விற்கலாம். ஒரே ஒரு நிபந்தனை: அடுத்தவர்களுக்கு இந்த மென்பொருளைக் கொடுக்கும் போதும் தனக்குக் கிடைத்த இந்த எல்லா உரிமைகளையும் அவர்களுக்கும் கொடுக்க வேண்டும்.

3. 1991ல் அப்போது 32 வயதான பின்லாந்து மென்பொருள் வல்லுனர் லினஸ் டோர்வால்ட்ஸ் என்பவர் தனது முதுகலைப் பட்டப்படிப்பை ஹெல்சிங்கி பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார். தனக்குப் புதிதாகக் கிடைத்த இன்டெல் 386 IBM பயனர் கணினியை இயக்குவதற்காக அவர் எழுதிப் பார்த்த இயங்குதளத்துக்கு செல்லமாக வைத்த பெயர் லினக்சு. அப்படி எழுதிய இயங்குதளத்தின் மூலநிரலை பூட்டி வைக்காமல் இணையத்தில் எல்லோரும் தகவிறக்கி பயன்படுத்தும் வண்ணம் வெளியிடும் போடும் பரிநிரல் அறக்கட்டளையின் GPL உரிமத்தின் கீழ் வெளியிட்டார்.

அதை யார் வேண்டுமானாலும் தகவிறக்கிப் பயன்படுத்திக் கொள்ளலாம், நகல் செய்து நண்பர்களுடம் பகிர்ந்து கொள்ளலாம், தமக்குத் தேவையான அல்லது விருப்பமான மாற்றங்களை செய்து பயன்படுத்தலாம், அல்லது மற்றவர்களுக்கு வினியோகிக்கலாம். தமக்குக் கிடைத்த உரிமைகளை மற்றவர்களுக்கும் கிடைக்கும்படி வினியோகிக்க வேண்டும் என்பது மட்டும்தான் ஒரே நிபந்தனை.

1991 ஆகஸ்டு 25ல் இதைக்குறித்து அவர் அனுப்பிய அறிவிப்பிற்குப் பிறகு மென்பொருள் துறையின் தலைவிதி மொத்தமாகவே திருப்பிப் போடப்பட்டு விட்டது என்று சொல்லலாம். அன்று முதல் இப்போது வரை லினக்சு இயங்குதளத்தின் kernel உருவாக்கத்தை வழிநடத்தி வருகிறார் லினஸ் தோர்வால்ட்ஸ்.

4. இந்த வரிசையில் அடுத்துக் குறிப்படப் பட வேண்டியது ரெட்ஹாட் என்னும் நிறுவனம்.

லினக்சு இயங்குதள kernel உடன், பரிநிரல் அறக்கட்டளையின் நிரல் தொகுப்புகளையும், மென்பொருள் கருவிகளையும் பொதிந்து பயனர்க்கு எளிதாக பயன்படும் வண்ணம் கொடுப்பவர்கள் லினக்சு தொகுப்பாளர்கள் (Linux distributions). மேலே சொன்ன எல்லா மென்பொருள் நிரலிகளின் உரிமத்தின் கீழ் யார் வேண்டுமானாலும் இதைச் செய்யலாம். இன்றைக்கு நூற்றுக்கணக்கான அத்தகைய தொகுப்புகள் கிடைக்கின்றன.

லினக்சை வணிக ரீதியாக வெற்றிகரமாக நிறுவனங்களுக்குக் கொண்டு சேர்ப்பதில் ஈடுபட்டு பெரு வெற்றி பெற்றவர்களில் முன்னோடி ரெட்ஹாட் நிறுவனம். 1994ல் ரெட்ஹாட் 1.0 என்று ஆரம்பித்த அவர்களது சேவை 15 ஆண்டுகளில் வேர் விட்டு தளைத்து வளர்ந்து கடந்த ஆண்டில் 2000 கோடி ரூபாய்க்கும் அதிகம் வருமானம் பார்த்த தொழிலாக மாறியிருக்கிறது.

5. லினக்சு முதலான திறவூற்று மென்பொருள்கள் தளைத்து வளர்வதற்கு செழிப்பான சூழலை உருவாக்கித் தந்தது இணையம். ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொள்ளாமலே இணையத்தின் மூலம் கூட்டாகப் பணியாற்றுவதுதான் திறவூற்று மென்பொருட்களின் வளர்ச்சிக்கு பணிமுறை. திறவூற்று மென்பொருளை பயன்படுத்த அதில் தமது வேலைவாய்ப்புகளை பெருக்கிக் கொள்ள விரும்பும் மாணவர்கள் இந்த இணையத்தளங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மூலநிரல் பட்டறை என்று பொருள்படும் இந்த இணையத் தளத்தில் 2 லட்சத்துக்கும் அதிகமான திறவூற்று மென்பொருள் திட்டங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 20 லட்சம் மென்பொருள் நிரலாளர்கள் பதிவு செய்துள்ளார்கள்.
கூட்டாகச் சேர்ந்து மென்பொருள் உருவாக்கத் தேவைப்படும் கருவிகளான மூலநிரல் மேலாண்மை, மடற்குழு, இணையத் தளத்துக்கான கட்டமைப்பு போன்றவற்றை இலவசமாக வழங்குகிறது sourceforge.net

திறவூற்று மென்பொருள் உலகத்தில் என்ன நடக்கிறது, இன்றைய சேதி என்ன, அதனால் என்ன விளைவுகள் ஏற்படும் என்று அலசி ஆராய்ந்து விவாதிப்பதற்காக உருவான தளம் இது. 1997ல் ராப் மால்டா என்ற அமெரிக்க மாணவரால் உருவாக்கப்பட்ட இந்தத் தளத்தில் சூடான சுவையான கருத்துச் செறிந்த விவாதங்களை படிக்கலாம்.

இந்திய லினக்சு பயனர் குழுவின் சென்னை பிரிவு.

5. 1998 ஜனவரியில் மைக்ரோசாப்டின் போட்டியால் மோசமாக பாதிக்கப்பட்ட நெட்ஸ்கேப் நிறுவனம் வையவிரிவுவலையை சாதித்துக் காட்டிய தனது நெட்ஸ்கேப் உலாவியின் மூலநிரலை திறவூற்றாக வெளியிட்டது. அந்த சாம்பலிலிருந்து உருவான மோசில்லா திட்டமும் அதன் குழந்தையான பயர்பாக்சு உலாவியும் திறவூற்று மென்பொருள் இயக்கத்தின் முன்னணி செயலிகளாக விளங்குகின்றன.

6. 2001ம் ஆண்டில் ஐபிஎம் நிறுவனம் திறவூற்று மென்பொருட்களை பிரபலப்படுத்துவதற்காக ஒரு ஆண்டில் 1 பில்லியன் டாலர் (நாலாயிரம் கோடி ரூபாய்) செலவழிப்பதாக அறிவித்து செய்து காட்டியது. சன் மைக்ரோசிஸ்டம்ஸ், எச்பி என்று மென்பொருள் துறையின் பெருந்தலைகளும் ஒவ்வொருவராக தமது திறவூற்று திட்டங்களை உருவாக்கி செயல்படுத்த வேண்டி வந்தது.

7. இப்போது திறவூற்று மென்பொருளாக என்னென்ன கிடைக்கின்றன?

  • இயங்குதளங்கள் - லினக்சு, ஓப்பன் சோலாரிசு, பிஎஸ்டி பதிப்புகள் (Linux, Open Solaris, BSD variants)
  • அலுவலக கருவிகள் - ஓப்பன் ஆபிசு, அபிவேர்டு, Kஆபிசு (Open Office, Abiword, KOffice)
  • உலாவிகள் - மோசில்லா பயர்பாக்சு, கூகுள் குரோம் (Mozilla Firefox, Google Chrome)
  • தரவுத்தளங்கள் - போஸ்ப்கிரெஸ்கியூஎல், மைஎஸ்கியூஎல் (PostgreSQL, MySQL, SQLite)
  • இணைய வழங்கி - அப்பச்சே (apache httpd0
  • படங்கள் வரைய - ஜிம்ப் (GIMP)
8. இன்னும் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான செயலிகள் திறவூற்று முறையில் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்படவும், தொடர்ந்து மேம்படுத்தப்படவும் செய்யப்படுகின்றன. அப்படி என்னென்ன கிடைக்கின்றன என்பதற்கு சிரமப்பட்டுத் தேடிக் கொண்டிருக்க வேண்டாம். ஏதாவது ஒரு லினக்சு பொதிக் குவியலின் அடர்தகடு ஒன்றை வாங்கி கணினியில் நிறுவிக் கொண்டால் போதும்

லினக்சு பொதிதொகுப்புகள் (Linux Distributions)
1. Fedora Linux (RedHad)
2. Debian
3. Open SuSe (Novell Suse)
4. Ubuntu (Debian based)
5. Slackware
6. Mandriva
7. PCLinux OS
8. CentOS
இன்னும் பல.

9. தமிழும் திறவூற்று மென்பொருட்களும்

உலகெங்கிலும் உள்ள பல நாடுகளையும் சேர்ந்த தன்னார்வலர்களால் இயக்கப்படும் திறவூற்று மென்பொருட்களில் பன்மொழி வசதிகள் இயல்பாகவே செய்யப்பட்டன. லினக்சின் மேசை சூழலான கேடிஈ நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் கிடைக்கிறது. தமிழ் மொழி 1990களின் இறுதியிலேயே அறிமுகப்படுத்தப்பட்டு இன்று வெளியாலும் எல்லா லினக்சு தொகுப்பு சேவைகளிலும் செயல்படுத்தப்படும்படியாக கிடைக்கிறது.

உலகெங்கிலும் பரவியிருக்கும் ஈழம், தமிழ்நாடு, சிங்கப்பூர் முதலான பகுதிகளைச் சார்ந்த தமிழர்களின் பணிக்கொடைகளால் திறவூற்று மென்பொருட்களில் தமிழ்மொழியும் தனக்குரிய இடத்தைப் பிடித்திருக்கிறது.

10. கட்டமைப்புகள் (சாலைகள், துறைமுகங்கள், ரயில்பாதைகள்) பொதுச்சொத்தாக இருக்கும் போது, தனிமனிதர்கள் அவற்றைப் பயன்படுத்தி சமூகத்துக்குப் பலனளிக்கும் வணிகமுயற்சிகளை மேற்கொள்ள முடியும். கட்டமைப்புகளையே கட்டிப் போட்டு விடக் கூடாது என்ற உயரிய நோக்கில் நடந்து கொண்டிருக்கும் இந்தப் புரட்சி தமிழ்நாட்டு மாணவர்களுக்கிடையேயும் இன்னும் பரவி வளமான எதிர்காலத்துக்கு வழி வகுக்கும் என்று நம்பிக்கையுடன் முன்னுரைக்கலாம்.

http://en.wikipedia.org/wiki/File:Rms_ifi_large.jpg
http://en.wikipedia.org/wiki/File:Linus_Torvalds.jpeg

மைக்ரோசாப்டு - முடிவின் ஆரம்பம் ? - 2

மைக்ரோசாப்டு யாஹூவை வாங்க முயற்சிப்பதை விட, SAP வாங்க முயற்சி செய்யலாம் என்று ஒரு கட்டுரை குறித்து ஸ்லாஷ் டாட்டில் விவாதம். 'கூகிள் மைக்ரோசாப்டுக்கு போட்டியே இல்லை. கூகிளின் பயன்பாடுகள் பெரிய நிறுவனங்களுக்குள் நுழையவே இல்லை. நிறுவன சந்தையில் மைக்ரோசாப்டின் பிடி இன்னும் உறுதியாக SAP உதவியாக இருக்கும்' என்று கருத்துக்கள்.

1990களின் ஆரம்பத்தில் மைக்ரோசாப்டு இன்றைய கூகிள் போலவும், ஐபிஎம் இன்றைய மைக்ரோசாப்டு போலவும் இருந்தன. மைக்ரோசாப்டுக்கு நிறுவனங்களுக்குள் பிடி கிடையாது. அவர்கள் தமது தொழிலை வளர்த்தது தனி பயனர்களுக்கு இயங்கு தளமும், அலுவலக பயன்பாடுகளையும் விற்பதன் மூலம்தான். அப்படி மனங்களைப் பிடித்து அதன் மூலம் தொழில் நிறுவனங்களுக்கான சந்தையில் நுழைந்து 1990களின் இறுதி ஆண்டுகளில் அந்தப் பிடியை இறுக்கிக் கொண்டார்கள்.

'கூகிளிடம் இணைய தேடு வசதியைத் தவிர பெரிதாக எதுவுமில்லை' என்கிறார்கள். 'கூகிள் பயன்பாடுகள் என்று இணையம் சார்ந்த பயன்பாடுகள் எதுவும் பெரிய நிறுவனங்களில் பயன்படுத்தப்படுவதில்லை' என்கிறார்கள்.

ஆனால் கூகிள் பயன்பாடுகள் மூலம் தமது மின்னஞ்சல் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் இரண்டு நிறுவனங்கள் எனக்கே தெரியும். புதிதாக இணைய மின்னஞ்சல் ஆரம்பிப்பவர்களுக்கு ஜிமெயில்தான் இயல்பாகக் கிடைக்கிறது. வீட்டில் அப்பாவுக்கு இணைய இணைப்பு வந்ததும், கணினி சேவை அளிப்பவர் ஒரு ஜிமெயில் கணக்குதான் ஆரம்பித்துக் கொடுத்திருக்கிறார்.

ஜிமெயிலில் ஒரு இணைப்பு வந்தால், அதை 'கூகிள் ஆவணங்கள் பயன்பாட்டில் திறக்கவா' என்று கேட்கிறது. இன்றைக்கு அந்தப் பயன்பாடுகள் அவ்வளவு சிறப்பாக இல்லா விட்டாலும், ஒரு நாளைக்கு ஒரு மேம்பாடு என்று நகர்ந்து கொண்டே இருந்தால் ஒவ்வொருவாராக பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஒரு நல்ல நாளில் அந்த எண்ணிக்கை தேவையான அளவைத் தாண்டி கிரிடிகல் மாஸ் பெற்று விடும்.

இதை மைக்ரோசாப்டு மேலாளர்கள் உணர்ந்திருக்கிறார்கள். அவர்கள் இப்படியான ஒரு நிலவரத்தின் மூலம் பலன் பெற்று வளர்ந்தவர்கள். இது போன்ற நடைமுறைகளை நன்றாகவே அடையாளம் கண்டு கொள்ள முடியும். கூகிள் அப்படி வளர்ந்து விடக் கூடாதே என்றுதான் முயற்சிக்கிறார்கள்.

நிறுவனச் சந்தை தனிநபர் சந்தைக்கு சில ஆண்டுகள் பின்தங்கி வரும். நிறுவனங்களில் பணி புரிபவர்கள் முடிவெடுப்பவர்கள் எல்லோருமே முதலில் தனிநபர்கள்தான். அவர்களின் மனதைக் கவர்ந்து விட்டால், இன்று இல்லா விட்டால் ஒரு நாள் நிறுவனத்தின் முடிவுகள் நமக்குச் சாதகமாகத் திரும்பி விடும்.

அதுதான் மைக்ரோசாப்டின் வெற்றிப் பாதை, அதில் கூகிள் இப்போது நடை போடுகிறது.

லினக்சா கொக்கா!

"நீங்கள் ஒவ்வொரு தடவை கூகிளை பயன்படுத்தும் போதும் லினக்சைப் பயன்படுத்துகிறீர்கள்." முற்றிலும் உண்மை.

கூகிள் பொறியிலாளர்களில் பலர் லினக்சுதான் தமது கணினியில் பயன்படுத்துகிறார்களாம். கூகிள் தேடலில் ஏதாவது தேடினால் விபரங்களைத் தேடித் தருவது லினக்சு வழங்கிகள்தான். ஆரம்பத்திலிருந்தே கோடிக் கணக்கான பயனர்களுக்கு சேவை செய்யத் தேவையான ஆற்றலும் வசதியும் லினக்சினால்தான் கிடைத்ததாம்.

கூகிள் பிளாகிலிருந்து

You'll often hear members of our open source team say, “Every time you use Google, you’re using Linux.” It’s absolutely true. Check a Google engineer’s workstation, and you’ll probably find it's running Linux. Do a search on Google.com, and a Linux server will return your results. Ever since Google got its start, Linux has given us the power and flexibility we need to serve millions of users around the world.

வியாழன், 12 ஆகஸ்ட், 2010

தமிழ் நாடு வழிகாட்டுகிறது.

தமிழ்நாடு அரசுப் பணி, பள்ளிகளில் பரிநிரல் மென்பொருள்களின் பயன்பாடு பரவலாக்கப்படுகிறது.

சுட்டி

சில மேற்கோள்கள்
  • லினக்சு கணினிகளைப் பயன்படுத்துவதில் செலவும் குறைவு நச்சு நிரல்கள் தொல்லையும் இல்லை.
  • 6500 பஞ்சாயத்துகளுக்கு இயங்குதள மென்பொருளும், இன்னும் 6,100 லினக்சு இயங்குதளம் நிறுவப்பட்ட கணினிகளும் அனுப்பப்பட்டு விட்டன.
  • பள்ளிகளுக்காக 20,000 கணினிகள் வாங்கப் போகிறோம்.
  • மைக்ரோசாப்டு ஒரு கணினிக்கு இயங்குதள விலையாக 7000 ரூபாய் கேட்டது. 300 ரூபாய்க்கு எல்லா மென்பொருளும் கிடைக்கும் போது ஏன் இவ்வளவு விலைக்கு இயங்கு தளத்தை மட்டும் நான் வாங்க வேண்டும்.
  • ஓப்பன் ஆபிஸ் பயன்பாட்டில் மைக்ரோசாப்டு ஆபிசு கோப்புகளையும் பயன்படுத்த முடியும், odt வடிவ கோப்புகளையும் பயன்படுத்தலாம். மைக்ரோசாப்டு ஆபிசில் odt கோப்புகளைப் பயன்படுத்த முடியாது. அப்படி இருக்க மட்டமான மைக்ரோசாப்டு ஆபிசுக்கு அதிகப் பணம் கொடுப்பது என்ன நியாயம்?
  • தமிழ் நாடு அரசு ஆண்டுக்கு 200 முதல் 500 கோடி ரூபாய் மென்பொருள் விலையில் மிச்சப்படுத்த முடியும்.
நம்மை நாமே பழித்துக் கொள்வதற்கிடையே இப்படியும் துணிச்சலான, அறிவார்ந்த ஆட்சி அலுவலர்கள் இருக்கிறார்கள் என்று பெருமைப் பட்டுக் கொள்ளலாம். 2002ம் ஆண்டு இவரை நான் சந்தித்த போது, அன்றைய அரசால் இலாகா ஒதுக்கப்படாமல் ஒதுக்கப்பட்டு வெறுத்துப் போய் இருந்தார். தான் வேறொரு மாநில சேவைப் பிரிவுக்கு மாற்றிப் போக வாய்ப்பு இருந்தாலும் தமிழகத்தை விட்டுப் போகப் போவதில்லை என்று உறுதியாகச் சொன்னார்.

திருவாரூர் ஆட்சியராக இருந்த போது இந்தியாவிலேயே முதல் மாவட்டமாக, மாவட்ட நிர்வாகத்தை கணினி மயமாக்கிய சாதனையை செய்து காட்டிய திரு உமாசங்கருக்கு தலைதாழ்த்தி வணக்கங்கள்.

விவாதத் தளத்தில் உற்சாகம்

சென்னையில் தமிழில் உரையாடலாம் இனி....

கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் விவாதங்கள், பிறண்டல்கள், குத்தல்களுக்குப் பிறகு இந்திய லினக்சு பயனர் குழுவின் - சென்னை அமைப்பில் தமிழில் எழுதிக் கொள்ள தனி மடற்குழு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

லினக்சு, கட்டற்ற மென்பொருட்கள் பற்றி தெரிந்து கொள்ள, அது தொடர்பான பணிகளில் ஈடுபட ஆர்வம் உள்ளவர்கள், இந்த மடற்குழுவில் சேர்ந்து கொள்ளலாம். மடல்கள் எல்லாமே தமிழில் இருக்கும்.
http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc.tamil

ஆமாச்சு என்று அழைக்கப்படும் ஸ்ரீராமதாஸ் தமிழ்நாட்டில், தமிழில் கருத்துப் பரிமாற்றம் செய்யப்படும் உரிமைக்காக பல இடங்களில் போராடி வந்திருக்கிறார். அவர் கட்டற்ற தமிழ்க கணிமை தொடர்பான பணிகளில் இறங்கி, சென்னை லினக்சு பயனர் மடற்குழுவில் பங்கேற்கும் போது தமிழில் அஞ்சல் அனுப்ப ஆரம்பித்தார்.
  • ஆங்கில மடற்குழுவில் தமிழா!!!
  • தமிழ் தெரியாத உறுப்பினர்கள் என்ன செய்வார்கள்????
  • வேண்டுமானால், தமிழ் [Tamil] என்று ஒரு முத்திரை குத்தி தமிழ் மடல்களை அனுப்புங்கள்
  • தமிழில் எழுதினால் கூடவே ஆங்கில மொழிபெயர்ப்பும் இருக்க வேண்டும்.
இப்படி பல எதிர்ப்புகள் எழுந்த வண்ணம் இருந்தன. எல்லாவற்றுக்கும் தகுந்த பதில்கள் சொல்லி தனது தமிழ் அஞ்சல்களைத் தொடர்ந்து அனுப்பியபடி இருந்தார்.
  • தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் இயங்கும் மடற்குழுவில் தமிழில் பேசுவது இயல்பானது, அதைத் தொடர்ந்து செய்ய வேண்டும்
  • 'ஆங்கிலத்தில் எழுதத் தயங்கும் உறுப்பினர்கள் என்ன செய்வார்கள்' என்று ஆங்கில மடல்களை தடுக்க முடியுமா? தமிழ் தெரியாதவர்கள் தமிழ் கற்றுக் கொள்ள வேண்டும்.
  • முத்திரை எல்லாம் குத்த முடியாது.
  • ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பது கூடுதல் பணிச்சுமையாகி விடும்.
மூன்று ஆண்டுகளில் ஏற்கனவே இரண்டு மூன்று முறை நீண்ட விவாதங்கள் ஏற்பட்டு ஓய்ந்தன.

இது தொடர்பான இன்னொரு குழாயடிச் சண்டை சமீபத்தில் மீண்டும் ஆரம்பித்தது.
  • [Tamil] என்று முத்திரை குத்திக் கொள்ளத் தயாராக இருப்பதாக சமாதானத்துக்கு வந்த தமிழ் தரப்புக்கு அப்போதும் தீர்வு கிடைக்கவில்லை.
  • 'தமிழுக்கு என்று தனியாக ஒரு மடல் குழு ஏற்படுத்திக் கொள்வோம்' என்பதும் நிராகரிக்கப்பட்டது.

  • 'தமிழில் எழுதினாலும் மடலின் தலைப்பு ஆங்கிலத்தில்தான் இருக்க வேண்டும், தமிழில் எழுதியவற்றுக்கு ஆங்கில மொழிபெயர்ப்பையும் சேர்த்தே அனுப்ப வேண்டும்' என்று விதி முறை ஏற்படுத்தினார்கள்.
  • "தமிழ் பேசுபவர்கள் மட்டும்தானா சென்னையில், மலையாளம், இந்தி, தெலுங்கு, மராட்டி பேசுபவர்களும் இருக்கிறோம். எல்லோரும் அவரவர் மொழியில் மடல் அனுப்ப ஆரம்பித்தால் நிலைமை என்ன ஆகும்?"

  • "நீங்கள் தமிழில் அனுப்பும் தகவல்கள் எங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கலாம், அவற்றை எப்படி விட்டுக் கொடுப்பது"
இப்படி ஆரம்பித்து,
  • "இந்தியாவில் நூற்றுக்கணக்கான மொழிகள் இருக்கின்றன. உலகத்தில் ஆயிரக்கணக்கான மொழிகள் இருக்கின்றன. இவை எல்லாவற்றுக்கும் மடற்குழுவில் அனுமதி அளித்தால் நிலைமை என்ன ஆகும்?"
என்று வாதித்து
  • அப்படி அவருக்கே தெரியாத மொழிகளில் தொடர்பே இல்லாத உரைத் தொகுப்பு ஒன்றை கூகுள் மொழிமாற்றியில் தயாரித்து, வரிசையாக பல மடல்களை குழுவுக்கு அனுப்பி அடாவடி செய்தார் ஒருவர்.
மடற்குழுவை நடத்த இடம் அளித்து, நிர்வகித்து வந்த பேராசிரியர் இந்தக் கட்டத்தில் தலையிட்டு, 'எந்தெந்த மொழியில் மடற்குழு வேண்டும் என்று கேட்கப்படுகிறதோ அந்தந்த மொழிகளில் தனி மடற்குழு அமைத்துத் தருகிறேன்' என்று அறிவித்தார்.

அதன்படி ilugc.tamil என்ற மடற்குழு ஏற்படுத்தப்பட்டு இன்று முதல் செயல்பட ஆரம்பித்து விட்டது.

ஆங்கிலத்தில் செயல்படும் மடற்குழுவின் 2300 உறுப்பினர் எண்ணிக்கையை விட அதிகமான பேர் தமிழ் குழுவில் பங்கேற்று பலன் பெறுவார்கள் என்பது நம்பிக்கை.
  • தமிழ் நாட்டில் பொறியியல் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை சில லட்சங்களுக்குக் குறையாதது.
  • தமிழ் பேசும் கணினி பணியாளர்களின் எண்ணிக்கை இன்னும் பல லட்சங்கள்.
  • கணினியில் கட்டற்ற மென்பொருட்கள் பயன்படுத்த விரும்பும் தமிழ் ஆர்வலர்கள்
என்ற பல்வேறு தரப்பினருக்கும் பேருதவியாக இருக்கக் கூடிய இந்த மடற்குழு சிறப்பாக செயல்பட்டால், முதல் ஆண்டில் 50,000 உறுப்பினர்கள் வரை பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.