கணினி நுட்பம், கட்டற்ற மென்பொருள், மென்பொருள் தொழில் முனைவு குறித்த கருத்துக்களும், விவாதங்களும்
ஞாயிறு, 3 ஜூலை, 2011
ஹேக்கர்களுக்கான விக்கிலீக்ஸ் தொடங்கப்பட்டது
ஸ்லாஷ்டாட் கட்டுரை
சனி, 28 ஆகஸ்ட், 2010
தமிழில் இணையப் பயன்பாடுகள்
- தமிழ்மணம், தமிழிஷ் இரண்டும் தமிழுக்காகவே இணையத்தில் உருவாகி பயன்படுத்தப்படுகின்றன.
- 1990களில் மன்றமையம் என்ற forumhub தமிழ் விவாதங்களுக்குப் பயன்பட்டது
- மதுரைத் திட்டம் என்று தமிழ் மின்னூல் திட்டம் web 2.0 நாட்களிலும் web 0.5 வடிவத்திலேயே செயல்பட்டு வருகிறது.
- யாஹூ, கூகுள் மடற்குழு சேவைகளைப் பயன்படுத்தி தமிழ் மடற்குழுக்கள் இயங்குகின்றன.
- தமிழ் நாளிதழ்கள், வார இதழ்கள், இணைய இதழ்கள் பல செயல்படுகின்றன.
- தமிழ் நூலகம் (சென்னை நூலகம்), புத்தக விற்பனைத் தளங்கள் சில இருக்கின்றன.
- கூகுளில் தமிழ் இணையத் தளங்களைத் தேடும் வசதி கிடைக்கிறது
- http://thevaaram.org/http://www.noolaham.netதமிழ் மரபு அறக்கட்டளையின் பணியும் கருதத் தக்கது.
ஆங்கிலத்தில் பயன்படும் ஆனால் தமிழில் இன்னமும் இல்லாத பயன்பாடுகள்
- அமேசான் போன்ற பொதுவான விற்பனைத் தளம்
- ஃபேஸ்புக் அல்லது லிங்க்ட்இன் அல்லது ஆர்குட் போன்று உறவுகளை வளர்க்க உதவும் பயன்பாடுகள். இப்போது இருப்பதை தமிழர்களும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். தமிழர் சமூகத்துக்குப் பொருத்தமாக உருவாக்கினால்?
- செய்தி விவாதத் தளங்கள் - slashdot.org போல
- திசை காட்டும் சேவைகள் - google maps போல?
- ஒருங்கிணைந்த தகவல் பரிமாற்றச் சேவை - google voice போல?
தமிழ் சமூக வளர்ச்சிக்கு என்று தனியாக உருவாக்கும் சாத்தியங்கள்
- ஐந்திணைகள் சார்ந்து நிலவரைபடம் உருவாக்குதல்
- தமிழக வரலாற்றைத் தொகுக்கும் ஒரு விக்கி பயன்பாடு. இதில் தமிழ் அறிந்தவர்கள் எளிதில் பயன்படுத்தும்படியான இடைமுகம் இருக்க வேண்டும்.
இன்னும் நமது கலாச்சாரத்தை மட்டும் சார்ந்த பயன்பாடுகள் நாம்தான் உருவாக்க வேண்டியிருக்கும். அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் அதற்கு ஆர்வமே இருக்காது.
வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010
கல்லூரி மாணவர்களுக்கான விக்கிப்பீடியா தகவல் பக்கங்கள் போட்டி
ரவிசங்கர் மின்னஞ்சலில் அனுப்பிய அறிவிப்பு
உ லகத் தமிழ் இணைய மாநாட்டையொட்டி தமிழ்நாடு அரசு - தமிழ் விக்கிப்பீடியா இணைந்து கல்லூரி மாணவர்களுக்கான "விக்கிப்பீடியா தகவல் பக்கங்கள்" என்ற போட்டியை நடத்துகிறது.
அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் அழைப்பு:
தமிழ் விக்கிப்பீடியா ( http://ta.wikipedia.org ) என்பது இணையத்தில் இயங்கும் தகவல் களஞ்சியத் திட்டம். இத்திட்டத்துக்கு ஏற்ற தகவல் பக்கங்களை எழுதும் போட்டியைத் தமிழக அரசு நடத்துகிறது.
கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம், விளையாட்டு, வேளாண்மை, சட்டம், கல்வியியல், இயக்குநர் மருத்துவம் (பிசியோதெரப்பி), சித்த மருத்துவம், பல் மருத்துவம், செவிலியர், கால்நடை மருத்துவம், பல தொழில்நுட்பப் பயிலகம் என அனைத்துத் துறைகளைச் சார்ந்த தமிழ்நாட்டில் உள்ள அரசு, தனியார், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் கல்லூரி மாணவ, மாணவியர்கள் இப்போட்டியில் பங்கேற்கலாம்.
விதிமுறைகள்:
தகவல் பக்கங்கள் ஆதாரங்களின் அடிப்படையில் நடுநிலைமையுடன் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு ஏற்றதாக அமைய வேண்டும்.
தகவல் பக்கங்களை ஒருங்குறி ( Unicode ) எழுத்துருவில் தமிழில் எழுத வேண்டும். சொற்களின் எண்ணிக்கை 250 முதல் 500 வரை அமைய வேண்டும்.
தகவல் பக்கங்களை ஏப்ரல் 30ம் தேதிக்குள் நிறைவு செய்து http: / / tamilint2010.tn.gov.in என்ற இணையதளத்தில் அனுப்ப வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட தகவல் பக்கங்கள் தமிழ் விக்கிப்பீடியாவில் சேர்க்கப்படும்.
பரிசுகள்
இப்போட்டியில் வெல்லும் அனைத்துத் துறை மாணவர்களுக்கும் மடிக்கணினி உள்ளிட்ட பல்வேறு மின்னணுக் கருவிகள் பரிசுகளாக வழங்கப்பட உள்ளன.
மேலும் விவரங்களுக்கு
மேலும் விவரங்களுக்கு, http: / / ta.wikipedia.org என்ற இணையதளத்தைப் பார்த்து வழிகாட்டு நெறிமுறைகளைத் தெரிந்து கொள்ளலாம்.
கேட்டதைக் காட்டும் மந்திரக்கண்ணாடி
நெட்கிராஃப்டின் கணக்குப்பபடி செப்டம்பர் 2009ல் இணையத்தில் 22 கோடி இணையத்தளங்கள் இருக்கின்றன. இந்த அலசலின் படி (குத்துமதிப்பான கணக்குத்தான்) ஒரு வலைத்தளத்தில் சராசரியாக 275 பக்கங்கள் இருக்கின்றன. இரண்டையும் இணைத்துப் பார்த்தால் 2009ம் ஆண்டு செப்டம்பரில் வையவிரிவு வலையில் சுமார் ஆறாயிரம் கோடி பக்கங்கள் இருக்கின்றன.
ஆழ்கடலில் மூழ்கி முத்தெடுப்பது போலத்தான் இந்த வலைப்பக்கங்களில் நீந்தி நமக்குத் தேவையான தகவலைப் பெற்றுக் கொள்வது. தேடுபொறிகள் அந்த வேலையை மிகவும் சுலபமாக்கியிருக்கின்றன. கூகுளிங் என்று வினைச் சொல்லாகி விட்ட கூகுளின் தேடு சேவை பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. கூகுள் என்ற நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டதே வைய விரிவு வலை தோன்றி 5 ஆண்டுகளுக்குப் பிறகுதான். தேடுதல் சேவை அளிப்பதையே முதன்மையாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம் கூகுள்.
கூகுளில் அப்படி என்ன சிறப்பு? அது ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்த தேடுபொறிகளை முந்தி முதலிடத்தை எப்படிப் பிடிக்க முடிந்தது?
B. யாஹூ, அல்டா விஸ்டா , எக்சைட் போன்ற தேடு பொறிகள் அப்போது முன்னணியில் இருந்தன.
யாஹூ இணையப் பக்கங்களை வகை பிரித்து தேடுபவர்களுக்குத் தேவைப்படும்படி கொடுக்கலாம் என்னும் அணுகுமுறையை வைத்திருந்தது. ஒரு இணையத் தளம் யாஹூவின் வகை தொகுப்பில் சேர வேண்டும் என்று விண்ணப்பித்தால், யாஹூவின் ஊழியர்கள், அந்தத் தளத்தைப் பார்த்து அது என்ன தலைப்பின் கீழ் பட்டியலிடப்பட வேண்டும் என்பதை உறுதிப் படுத்தி சேர்த்துக் கொள்வார்கள்.
யாஹூவில் போய் ஏதாவது சொல்லை தேடினால், முதலில் யாஹூவின் பட்டியல் அட்டவணையிலிருந்து சுட்டிகளைக் காண்பிப்பார்கள். 'நீங்கள் தேடுவது இதில் இல்லை என்றால் இணையப் பக்கங்களை தேடிப் பார்க்கவும்' என்று ஒரு தேர்வு இருக்கும். அதைக் கிளிக்கினால், இணையப் பக்கங்கள் தேடல் முடிவுகள் காண்பிக்கப்படும்.
1. யாஹூவின் அட்டவணையில் வகைப்படுத்தும் அணுகுமுறையில் தேடுபவர்களுக்கு பொருத்தமான, தேவையான பக்கங்களைக் காண்பிப்பது சிறப்பாக இருந்தாலும், தலை தெறிக்கும் வேகத்தில் வளர்ந்து கொண்டிருந்த இணையப் பக்கங்கள் அனைத்தையும் வகைப்படுத்துவது முடியாமல் போய் விட்டிருக்கும்.
2. அல்டாவிஸ்டா போன்ற இணையப் பக்கங்களை தேடும் சேவை அளிப்பவர்கள், ஒரு பக்கத்தில் குறிப்பிட்ட சொல் எத்தனை முறை பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதைப் பொறுத்து அந்த சொல்லைத் தேடுபவருக்கு காண்பிக்கும் வலைப்பக்கங்களை வரிசைப்படுத்தியிருந்தார்கள்.
ஊர்வான் (crawler) எனப்படும் கணினி பயன்பாடு இணையப் பக்கங்கள் ஒவ்வொன்றாகப் போய் அதன் உள்ளடக்கத்தையும், சொல் அட்டவணையையும் குறித்துக் கொள்ளும். கோடிக் கணக்கான வலைப் பக்கங்களை அப்படி அட்டவணைப் படுத்தி வைத்து விட்டால், ஒருவர் தேடும் போது, தேடும் சொல் பயன்படுத்தப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் பக்கங்களை காண்பிக்கலாம்.
அவர்களது பயன்பாடு இப்படி இருந்திருக்கலாம்:
இணையப் பக்கம் : http://masivakumar.blogspot.com/2009/10/blog-post_02.html
சொல் : வலைப்பதிவு
எண்ணிக்கை : 3
இணையப் பக்கம் : http://masivakumar.blogspot.com/2009/10/blog-post_02.html
சொல் : சாதி
எண்ணிக்கை : 12
இப்படி பல கோடிக் கணக்கான தரவுகளை வைத்துக் கொண்டு குறிப்பிட்ட சொல்லைத் தேடினால் அந்தச் சொல்லை பயன்படுத்தியிருக்கும் எண்ணிக்கையை வைத்து தளங்களை வரிசைப்படுத்திக் காண்பிக்கும் படி நிரல் எழுதியிருக்கலாம்.
இந்த முறையில் பல குறைகள் இருக்கின்றன. வலைப்பதிவு, வலைப்பதிவு, வலைப்பதிவு என்று ஒரே சொல்லையே திரும்பத் திரும்ப எழுதி பக்கத்தை நிரப்பி வலையில் போட்டு விட்டால், வலைப்பதிவு என்று தேடினால் இந்த வலைப்பக்கம்தான் முதலில் காண்பிக்கப்படும்.
இதை சரி செய்வதற்கு பல வழிகளை முயன்றிருப்பார்கள்.
3. அவற்றில் ஒன்றுதான் கலிஃபோர்னியாவின் ஸ்டேன்போர்டு பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி மாணவர்களாக சேர்ந்த லேரி பேஜூம், செர்ஜி பிரின்னும் முன்வைத்த கோட்பாடு.
ஒரு அறிவியலாளரின் மதிப்பின், ஒரு அளவீடு அவரது ஆராய்ச்சிகளின் முடிவுகள் மற்றவர்களால் எவ்வளவு பயன்படுத்தப்படுகிறது என்பதையும் பொறுத்திருக்கிறது. ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையை மேற்கோள் காட்டும் பிற கட்டுரைகளின் எண்ணிக்கையைப் பொறுத்து அதன் மதிப்பு அதிகம். 100 பிற ஆராய்ச்சிக் கட்டுரைகள் மேற்கோள் காட்டும் ஆராய்ச்சிக் கட்டுரையை விட 500 பிற ஆராய்ச்சிக் கட்டுரைகள் மேற்கோள் காட்டும் கட்டுரையின் மதிப்பு அதிகம்.
ஒரு அறிவியலாளரின் ஆராய்ச்சிக் கட்டுரையை யாருமே மேற்கோள் காட்டவில்லை என்றால் அதற்கு மதிப்பு குறைவு. அவரது கட்டுரை உண்மையிலேயே சிறப்பானதாக இருந்தால் துறையின் மற்ற ஆராய்ச்சியாளர்கள், அந்தக் கட்டுரையை தமது வேலைகளுக்கு அடிப்படையாக வைத்து தமது கட்டுரையில் மேற்கோள் காட்டுவாரகள்.
கூகுளின் கோட்பாட்டின் முதல் படி : ஒரு இணையப் பக்கத்தின் முக்கியத்துவம், எத்தனை மற்ற பக்கங்களிலிருந்து அதற்கு சுட்டிகள் தரப்பட்டிருக்கின்றன என்பதைப் பொறுத்தது.
மேலே சொன்ன அறிவியல் துறை எடுத்துக்காட்டில், குறிப்பிட்ட கட்டுரையின் முடிவுகளை ஐன்ஸ்டைன் தனது ஆராய்ச்சியில் பயன்படுத்தி தனது கட்டுரையில் சுட்டியிருந்தால் அந்த சுட்டியின் மதிப்பு அதிகம். ஒரு இளநிலை ஆராய்ச்சியாளரின் சுட்டியை விட, பேர் பெற்ற ஏற்கனவே தனது மதிப்பை நிரூபித்துக் காட்டியிருப்பவரின் சுட்டிக்கு மதிப்பு அதிகம்.
கூகுளின் கோட்பாட்டின் இரண்டாவது படி : எல்லா சுட்டிகளும் சமமாக்க கருதப்படக் கூடாது. மதிப்பு பெற்ற, (நிறைய சுட்டிகளை பெற்ற) பக்கத்திலிருந்து கிடைக்கும் சுட்டிக்கு மதிப்பு அதிகம்.
இவற்றுக்கும் மேலாக தேடுபவர்களுக்கு சரியான பக்கங்கள் கிடைக்கும் படி புதிது புதிதாக உத்திகளை சேர்த்துக் கொண்டே இருப்பதுதான் தேடு செயலி உருவாக்குபவர்களின் சவால்.
இந்த இரண்டு அளவீடுகளையும் கொண்டு தரவு சேகரிக்கின்றன கூகுளின் ஊர்வான்கள். (இப்போது எல்லா தேடுபொறிகளுமே இந்த அடிப்படைக் கோட்பாடுகளை பயன்படுத்துகின்றன).
C. இணையத்தின் மூலம் வையவிரிவு வலையில் சேவைகள் வழங்குபவர்கள் எப்படி வருமானம் ஈட்ட முடியும் என்பது ஒரு கேள்விக்குறி. யாஹூ முதலான தேடு சேவை நிறுவனங்கள், கதம்பமாக தமது இணையத் தளங்களை மாற்றிக் கொண்டார்கள். தேடுசேவையை பத்தில் ஒன்றாக வைத்து விட்டு, இணையத் தளம் உருவாக்கும் சேவை, மின்னஞ்சல் சேவை, இணைய உரையாடல் சேவை, பொருட்கள் விற்பனை என்று தளத்துக்கு வருபவர்களுக்கு எல்லா தேவைகளையும் நிறைவேற்ற முயற்சிக்கிறார்கள்.
1. அடிப்படை சேவைகள் இலவசம், மதிப்புக் கூடுதல் சேவைக்கு கட்டணம் என்பது ஒரு வருமானம் பார்க்கும் ஒரு உத்தி.
2. வலைப்பக்கங்களில் விளம்பரங்களைக் காட்டுவதன் மூலம் வருமானம் ஈட்டுவது இன்னொரு வழிமுறை.
தொலைக்காட்சி அல்லது அச்சு ஊடகம் போலில்லாமல், இணையத்தில் விளம்பரங்களைப் பார்க்க வைப்பது சுலபமில்லை. ஒரே கிளிக்கில் தளத்தைத் தாண்டிப் போய் விட்டால், அந்த வாசகரை திரும்பி சந்திக்கவே வாய்ப்பில்லாமல் போய் விடலாம். வையவிரிவுவலையில் இருக்கும் இணையத்தளங்கள், வலைப்பக்கங்களின் எண்ணிக்கை, பயனாளரை கவனத்தைக் கட்டிப் போடும் அளவுக்கு களம் இல்லாமை இரண்டும் விளம்பரங்கள் மூலம் பணம் ஈட்டுவதை சிக்கலாக்கின.
கூகுள் இங்கும் ஒரு புதிய உத்தியைக் கொண்டு வந்தது. குறிப்பிட்ட பொருளைப் பற்றித் தேடுபவருக்கு அதில் இயல்பான ஆர்வம் இருக்கும். தேடும் சொல்லுக்குப் பொருத்தமான, தொடர்புடைய விளம்பரங்களை மட்டும் தேடல் முடிவுகளைக் காட்டும் பக்கத்தில் காண்பிக்கலாம். கூகுள் பிற்பாடு ஆரம்பித்த எல்லா சேவைகளிலுமே பயனருக்கு தேவையான விளம்பரத்தை அடையாளம் கண்டு அதை அவருக்குக் காட்டுவது என்ற கோட்பாடு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. கூகுளில் இலவச மின்னஞ்சல் சேவையில் மின்னஞ்சலில் வரும் சொற்களைப் பொறுத்து காட்டப்படும் விளம்பரம் தீர்மானிக்கப்படுகிறது.
விளம்பரமும் பயனரை எரிச்சலூட்ட வைக்கும்படி பெரிதாக படங்களாக இல்லாமல், உரை விளம்பரங்களாகவே காட்டப்படுகின்றன (text ads).
விளம்பரங்கள் மூலம் சம்பாதித்த கூகுளின் மொத்த விற்பனை மதிப்பு 2008ம் ஆண்டில் 21.7 பில்லியன் டாலர்கள் அல்லது சுமார் 90,000 கோடி இந்திய ரூபாய்கள் (மிகச்சிறிதளவு மற்ற வருமானங்கள்). ஆதாயம் 6.6 பில்லியன் டாலர்கள் அல்லது சுமார் 30,000 கோடி இந்திய ரூபாய்கள்.
D. இணையத்தின் பயன்பாடும் வீச்சும் அதிகமாக அதிகமாக தேடுபொறிகள் அதன் வாயிற்காப்போனாக செயல்படுகின்றன. குறிப்பிட்ட தகவலை தேடுபவருக்கு பொருத்தமான தளத்தைக் காண்பிக்கும் பணியை தேடுசேவைகள் செய்கின்றன.
இந்த சேவையை தவறாக பயன்படுத்துவதற்க பல வாய்ப்புகள் இருக்கின்றன.
1. குறிப்பிட்ட நிறுவனம் கூகுளை முறைத்துக் கொள்கிறது என்று வைத்துக் கொள்வோர். அந்த நிறுவனத்தின் இணையத் தளத்தை, வலைப்பக்கங்களை தொடர்புள்ள குறிச் சொற்களைத் தேடும் போது முதல் பக்கங்களில் வர விடாமல் கூகுள் தனது தரவுத்தளத்தில் மாற்றி விட்டால் அந்த நிறுவனம் என்ன செய்ய முடியும்?
2. மின்னஞ்சல்கள், இணையப் பக்கங்கள், இணைய உரையாடல்கள் எல்லாவற்றின் உள்ளடக்கங்களை ஊர்ந்து பொருத்தமான விளம்பரங்களை காண்பிப்பது நியாயம்தானா?
3. தனி நபர், அல்லது நிறுவனம் பற்றிய விபரங்களை அரசாங்கம் கேட்டால் தனது தரவுத் தளத்திலிருந்து எடுத்துக் கொடுப்பது தனி மனித உரிமைகளுக்கு பெரும் பாதிப்பாக அமையும்.
இதை எல்லாம் முன் நோக்கி கூகுள் தனது வழிமுறைகளாக 10 கோட்பாடுகளை வகுத்துள்ளது. அதில் ஆறாவது கோட்பாடு make money without doing evil.
மென்பொருள் சேவை வழங்க முனையும் எந்த நிறுவனத்துக்கு வழிகாட்டியாக விளங்கக் கூடியவை இந்த 10 கோட்பாடுகள்.
வியாழன், 12 ஆகஸ்ட், 2010
இணையப் பயன்பாடுகள் - 1
அ. சரவணன்மளிகைக்கடையின் இணைய தளத்தில் (சரவணன்மளிகைக்கடை.காம்) நான்கு முதல் ஆறு பக்கங்கள் இப்படி கொடுத்திருக்கலாம்.
1. கடையைப் பற்றி
2. பொருட்கள்
3. மேலாளர்கள்
4. தொடர்பு கொள்ள
5. வாடிக்கையாளர் சேவை
ஒவ்வொரு பக்கத்துக்கும் ஒரு கோப்பு இருக்கும். பொதுவாக இந்தக் கோப்புகள் html எனப்படும் மீஉரை குறியீட்டில் இருக்கும்.
ஆ. மீஉரை என்றால் என்ன?
உரை என்பது சாதாரணமாக நாம் எழுதுவது.
மீஉரையில்
- ஒரு கோப்பிலிருந்து இன்னொரு கோப்புக்கு இணைப்புகளும்,
- உள்ளடக்கத்தில் சொற்களையும், எழுத்துக்களையும் அழகுபடுத்தல்களும்,
- படங்களை சேர்ப்பதும்
வசதி செய்யப்பட்டிருக்கும்.
மீஉரைக் கோப்பில் இருக்கும் கொக்கிகளின் பொருள் பொருத்தி நாம் படிக்கும் உரையாக மாற்றுவது வலை உலாவிகளின் வேலை. நீங்கள் பயன்படுத்தும் மோசில்லா பயர்பாக்சு அல்லது இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்கு மீஉரைக்கோப்புகள் இணையத் தளத்திலிருந்து வந்து சேரும். அந்த மீஉரைக் கோப்புகளின் கொக்கிகளுக்குத் தக்கவாறு பொருள் மாற்றி காண்பிக்கும் போது, அலங்கரிக்கப்பட்ட சொற்களும், படங்களும் திரையில் தெரிகின்றன.
மேலே சொன்ன எடுத்துக்காட்டில் நிறுவனத்தைப் பற்றி என்ற பக்கத்துக்கான கோப்பின் பெயர் - கடையைப்பற்றி.மீஉரை என்று வைத்துக் கொள்வோம். இந்த கடையைப்பற்றி.html உள்ளடக்க உரைக் குறியீடுகளுடன் மீஉரைக் கொக்கிகள் கலந்து உருவாக்கப்பட்டிருக்கும்.
சரவணன்மளிகைக்கடை.காம் என்ற இணையத்தளத்தில் இந்தப் பக்கங்கள் வழங்கப்படுகின்றன என்றால் சரவணன்மளிகைக்கடை.காம்/கடையைப்பற்றி.மீஉரை என்ற கோப்பு அந்த இணையத் தளம் வழங்கப்படும் கணினியில் இருக்கும்.
வாடிக்கையாளர் ஒருவர் தனது உலாவியில் சரவணன்மளிகைக்கடை தளத்துக்குப் போய் கடையைப்பற்றி என்ற சுட்டியை சொடுக்கினால், கடையைப்பற்றி.மீஉரை என்ற கோப்பு இணையத்தளத்தின் வழங்கியான கணினியிலிருந்து வாடிக்கையாளரின் பயனர் கணினிக்குப் போய்ச் சேரும்.
பயனர் கணினியில் அவர் பயன்படுத்தும் உலாவி, அந்த மீஉரைக் கோப்பை குறிமாற்றம் செய்து இணையப்பக்கமாக காண்பிக்கிறது.
இ. இணைய முறைமை எண்
இணையத்தில் இணையும் எல்லா கணினிகளுக்கும் ஒரு அடையாள எண் கொடுக்கப்படுகிறது. அந்த அடையாள எண்ணினைப் பயன்படுத்தி ஒரு கணினியிலிருந்து இன்னொரு கணினிக்குத் தகவல்கள் பரிமாறப்படுகின்றன.
59.92.1.111 என்ற எண் சரவணன்மளிகைக்கடையின் இணையத் தளம் இருக்கும் கணினியின் எண், 203.22.222.1 என்ற எண் அதை அணுகும் வாடிக்கையாளர் கணினியின் எண் என்று வைத்துக் கொள்வோர்.
வாடிக்கையாளர் கணினி இன்ன பக்கத்தைக் கேட்கிறது என்ற தகவல் 59.92.1.111 என்ற கணினிக்குப் போகும் படி ஒரு முறைமை வகுக்கப்பட்டிருக்கிறது. அதே போல இணைய கணினி, வாடிக்கையாளர் கணினிக்கு அனுப்பும் கோப்பை 203.22.222.1 என்ற எண்ணுக்குக் கொண்டு சேர்க்கும் வேலையும் அதே முறைமைக்குத்தான்.
ஈ. இணையத் தள பெயர் சேவை
ஆனால் நாம் இப்படி எண்களைப் பயன்படுத்துவதில்லையே! சரவணன்மளிகைக்கடை.காம் அல்லது முத்துராமன்துணிக்கடை.காம் என்று பெயர்களைத்தானே உள்ளிடுகிறோம். இது எப்படி வேலை செய்கிறது?
பெயர்களை நினைவில் வைத்துப் பயன்படுத்துவது இது போன்று எண்களைப் பயன்படுத்துவதை விட எளியது என்பதால் பெயர்களைப் பயன்படுத்தும் முறைமை வகுக்கப்பட்டது.
இன்ன பெயருக்கு இன்ன எண் என்று அட்டவணைப்படுத்தும் சேவைகள் இணையத்தள பெயர் சேவை எனப்படுகின்றன. இந்த அட்டவணைப்படுத்துதல் ஊருக்கு ஊர், நாட்டுக்கு நாடு, உலகெங்கும் உள்ள ஆயிரக்கணக்கான கணினிகளில் இயங்கி வருகிறது. அந்த இடத்துக்குத் தேவையான பெயர்கள் அங்கங்கு சேமிக்கப்பட்டிருக்கும்.
கூகுள்.காம் என்று நாம் பெயர் அடிக்கிறோம். .காம் என்று முடியும் பெயர்களுக்கான விபரங்களை தொகுத்து வைத்திருக்கும் கணினி எண்ணில் போய் விபரம் கேட்டால் அது கூகுள்.காம் இருக்கும் கணினியின் எண்ணைக் கொடுத்து விடும். ஒரு தடவை எண்ணை வாங்கிக் கொண்டால், அடுத்த தடவை அதே எண்ணைப் பயன்படுத்திக் கொள்ளலாம். திரும்பத் திரும்பப் போய்க் கேட்டுக் கொண்டிருக்கத் தேவையில்லை.
இணையப் பயன்பாடுகள் - 2
- நீங்கள் இணையத்தில் இணையும் போது உங்கள் கணினிக்கு ஒரு எண் அளிக்கப்படுகிறது.
- நீங்கள் அணுக விரும்பும் இணையத் தளங்களை வழங்கும் கணினிக்கும் ஒரு எண் இருக்கிறது.
- எண்ணைக் குறிப்பிட்டு தரவுகள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன.
- இணையத் தள பெயர்களையும் எண்களையும் இணைக்கும் அட்டவணை சேவை மூலம் எண்களை நினைவில் வைக்கத் தேவையில்லாமல் பெயர்கள் மூலம் தளங்களை அணுக முடிகிறது.
- இணையப் பக்கங்கள் மீஉரை என்ற கொக்கிகளுடன் கூடிய கோப்புகளாக வந்து சேருகின்றன.
- இணைய உலாவிகள் மீஉரை கொக்கிகளை பொருள் கண்டு மாற்றி திரையில் காண்பிக்கின்றன.
நாடெங்கிலும் இருக்கும் நீர்நிலைகளை, குளங்கள், ஏரிகள், ஆறுகள், கிணறுகள் எல்லாவற்றையும் இணைத்து கால்வாய்கள் வெட்டப்படுகின்றன என்று வைத்துக் கொள்வோம். திருநெல்வேலியில் இருக்கும் கோவில் குளத்திலிருந்து அடுத்தடுத்து கால்வாய்கள் மூலமாக நகர்ந்து சிம்லாவிலிருக்கும் ஏரி ஒன்றுக்குப் போய்ச் சேர்ந்து விட முடியும் என்று வைத்துக் கொள்வோம்.
இணையம் என்பது கிட்டத்தட்ட அப்படித்தான் இருக்கிறது.
திருநெல்வேலி குளத்திலிருந்து சிம்லா ஏரிக்கு ஒரு பொதியை அனுப்ப வேண்டும், இமாச்சல் காரர் அந்தப் பொதியை எடுத்து அதற்கான பதிலை அனுப்பி வைக்க வேண்டும். வழியில் நூற்றுக்கணக்கான வாய்க்கால்கள், ஆயிரக்கணக்கான கிணறுகள், ஆறுகள், ஏரிகள் எல்லாவற்றையும் தாண்டி திசை தவறி விடாமல் பொதி போய் பதில் வர வேண்டும்.
அனுப்ப வேண்டிய பொதியை இரண்டு பகுதிகளாக அமைத்துக் கொள்கிறார்கள். தலைப்பகுதியில்
- யார் அனுப்பிய பொதி - இணைய முறைமை எண்
- யாருக்கு அனுப்பிய பொதி - இணைய முறைமை எண்
பொதியின் உடல் பகுதியில் சொல்ல வேண்டிய தகவல் இருக்கும்.
திருநெல்வேலி குளத்தில் புறப்பட்ட பொதி, பக்கத்திலிருக்கும் கிணற்றை அடைந்ததும் போக வேண்டிய இடத்துக்கான திசையில் தட்டி விடப் படும். அடுத்த நிலையில் இன்னொரு தட்டு, அடுத்த நிலை, இன்னொரு தட்டு என்று தொடர்ச்சியாக நகர்த்தப்பட்டு சிம்லா வந்தடையும்.
வழியில் எல்லோருமே தலை விபரங்களைப் பார்த்துக் கொள்ளலாம் - அப்போதுதான் அவர்களால் சரியான இடத்துக்கு அனுப்பி வைக்க முடியும். பொதுவாக உடல் தகவலும் வழியில் இருக்கும் கணினிகளும் அணுகும் படியாகத்தான் இருக்கும். பாதுகாப்பு தேவைப்படும் தகவல்களுக்கு உடல் தகவலை மட்டும் குறியூட்டம் செய்து அனுப்பி வைப்பார்கள்.
பொதுவாக இணையத்தில் அனுப்பும் விபரங்களை (மின்னஞ்சல், கோப்புகள், உரையாடல்கள்), இடையில் இருக்கும் கணினிகளில் மற்றவர்களும் படித்துக் கொள்ளலாம் என்பதுதான் நடைமுறை.
ஒரு தகவலை ஒரே பொதியாக அனுப்பாமல், பல பொதிகளாக உடைத்துப் பொதிந்து அனுப்புவார்கள். தலைப்பகுதியில் இந்தப் பொதியின் அடையாள எண், வரிசை எண்ணும் சேர்த்து விட்டால் போதும். பெற்றுக் கொள்ளும் கணினி, எல்லா பொதிகளையும் சேர்த்து இணைத்து தகவலை புரிந்து கொள்ளும்.
உலகின் எந்த பகுதியிலிருந்தாலும் சில நொடிகளுக்குள் வந்து சேர்ந்து விடும் இணையப் பக்கங்களும், மின்னஞ்சல்களும் இந்த நுட்பத்தின் மூலமாகத்தான் இயங்குகின்றன.
கோப்பு நமது கணினியின் உலாவிக்கு வந்து சேர்ந்து விட்டது. அந்தக் கோப்பில் மீஉரை இருக்கிறது. மீஉரைக்கும் திரையில் தெரியும் பக்கத்துக்கும் என்ன தொடர்பு?
மீஉரைப் பக்கங்களின் அமைப்பு இப்படி இருக்கும்.
<மீஉரை>
<தலை>
<தலைப்பு> சரவணா மளிகைக்கடை </தலைப்பு>
</தலை>
<உடல்>
</உடல்>
</மீஉரை>
- முதல் வரியும் கடைசி வரியும் இது மீஉரைக் குறியாக்கப்பட்ட பக்கம் என்று சொல்கிறது - யாருக்கு? உலாவிக்கு!
- மேற்கோள் குறிகளைப் போல ஆரம்பிப்பதும் முடிப்பதும் குறிக்கப்பட வேண்டும். மேற்கோள் குறிகளில் ஆரம்பம் ", முடிவு ". மீஉரைக் கொக்கிகளுக்கு ஆரம்பம் < > முடிவு < />
- இணையப் பக்கத்தில் காண்பிக்கப்படும் உள்ளடக்கம் அனைத்தும் <உடல்> </உடல்> கொக்கிகளுக்குள் வரும்.
- <தலை> </தலை> கொக்கிகளுக்குள் வருபவை கோப்பைப் பற்றிய விபரங்கள், உலாவியின் தலையில் காண்பிக்கப் பட வேண்டிய பெயர் போன்றவை.
<தலை> கொக்கிக்குள் <தலைப்பு> என்ற கொக்கிகளுக்குள் வரும் வாக்கியத்தை, தனது நெற்றியில் பக்கத்தின் பெயராகக் காண்பிக்க வேண்டும் என்று உலாவி வடிவமைக்கப்பட்டிருக்கும்.
இது போல நூற்றுக் கணக்கான மீஉரைக் கொக்கிகள் இருக்கின்றன. எழுத்துக்களை தடிப்பாகக் காட்ட, படக் கோப்புகளைக் காட்ட, கோடு வரைய, அட்டவணை ஒன்று வரைந்து காட்ட.
மாறும் எண்ணும் நிலை எண்ணும்
பொதுவாக இணையத்தில் இணைவதற்கு நாம் ஏதாவது சேவை நிறுவனத்தை அணுகுகிறோம். அவர்கள் தொலைபேசி கம்பி மூலம் அல்லது கம்பியில்லா இணைப்பு மூலம், நமது கணினிக்கும் அவர்களது கணினிக்கும் இணைப்பை ஏற்படுத்தி இணையத்தில் இணைத்து விடுகிறார்கள்.
நமது கணினி இணையத்தில் சேர்ந்தவுடன் கணினிக்கு ஒரு இணைய முறைமை எண்ணையும் கொடுத்து விடுகிறார்கள். இந்த எண் நமது கணினிக்கு என்று ஒதுக்காமல், நாம் இணையும் போது கொடுத்து விட்டு, துண்டித்த பிறகு அந்த எண்ணை அதன் பிறகு இணையும் இன்னொரு பயனர் கணினிக்குக் கொடுத்து விடுவார்கள். இப்போது நாம் மீண்டும் வந்தால், நமக்கு இன்னொரு எண் கிடைக்கும்.
இப்படி ஒரே எண்ணை மாற்றி மாற்றி கணினிகளுக்கு கொடுப்பது மாறும் இணைய முறைமை எண் என்று அழைக்கப்படுகிறது.
உங்களுடைய கணினியின் எண் இன்னதென்று நிலையாகத் தெரிந்தால்தான், அந்த எண்ணை மற்றவர்களுக்குக் கொடுத்து உங்கள் கணினியுடன் நேரடியாக இணைவதற்கு வழி செய்யலாம்.
இணையத் தளங்களின் பெயரையும் எண்ணையும் தொடர்பு படுத்த வேண்டும் என்றால் இப்படி ஒரு நிலையான எண் தேவைப்படும். அப்படி நிலையான எண்ணுடன் இணையத்தில் இணையும் கணினிகள் நம்பகத்தன்மையுள்ள வழங்கிகளாக செயல்பட முடியும்.
இணையத் தள சேவைகள்
உங்கள் இணையத் தளத்தை மற்றவர்களுக்கு அணுகத் தர வேண்டுமானால், இணையத் தள பெயரை ஒரு நிலையான எண்ணுடன் தொடர்பு படுத்தி அந்த எண் கொண்ட கணினியில், அந்தத் தளத்தை அணுகும் பயனருக்கு அனுப்ப வேண்டிய கோப்புகளை தயாராக வைத்திருக்க வேண்டும்.
இந்தச் சேவைகளை ஆயிரக்கணக்கான இணையத் தள சேவை நிறுவனங்கள் தருகின்றன. ஒரு கணினி, நிலையான இணைய முறைமை எண்ணுடன் இணைய இணைப்பு இந்த இரண்டும் இருந்தால் இணையத் தள சேவை தருவதற்கான அடிப்படைக் கட்டமைப்பு தயார்.
இணையப் பயன்பாடுகள் - 3
<உடல்> | <body> |
| <தலை> | <head> |
| <தலைப்பு> | <title> |
| அடிப்படைக் கட்டமைப்பு | basic infrastructure |
| அடையாள எண் | identity no |
| அட்டவணை | table |
| அழகுபடுத்தல் | decoration |
| இணைய முறைமை எண் | IP No |
| இணைய முறைமை எண் | IP no |
| இணையத் தள சேவை | web hosting service |
| இணையத் தள பெயர் சேவை | domain name service |
| இணையம் | internet |
| உடல் தகவல் | body content |
| உடல் பகுதி | body |
| உரையாடல் | chats |
| உள்ளடக்கம் | content |
| எழுத்துக்கள் | characters |
| ஒதுக்குதல் | allocation |
| கடவுச் சொல் | password |
| கணினி | computer |
| கம்பியில்லா இணைப்பு | wireless connection |
| கொக்கிகள் | tags |
| குறிமாற்றம் | interpretation |
| குறீயூட்டம் | encoding |
| கோடு | line |
| கோப்பு | file |
| கோப்பு | file |
| கோப்புகள் | files |
| கோப்பைப் பற்றிய விபரம் | file meta information |
| சுட்டி | link |
| சேவை நிறுவனம் | service provider |
| சொடுக்கல் | click |
| தகவல் | information |
| தடிப்பு | bold |
| தலை தகவல் | header content |
| தலைப்பகுதி | header |
| திரை | screen |
| துண்டித்தல் | disconnect |
| தொலைபேசி கம்பி | telephone line |
| நம்பகத்தன்மையுள்ள வழங்கி | dependable server |
| நிரலாக்கம் | coding |
| நிலை இணைய முறைமை எண் | static IP |
| நிலையான பக்கம் | static page |
| நுட்பம் | technology |
| படக் கோப்புகள் | image files |
| படங்கள் | images |
| பதில் | response |
| பயனர் கணினி | client computer |
| பயன்பாடு | application |
| பரிமாற்றம் | exchange |
| பாதுகாப்பு | security |
| பொதி | packet |
| மாறும் இணைய முறைமை எண் | dynamic IP |
| மின்னஞ்சல் | |
| மீஉரை | hypertext |
| மீஉரைக் குறியாக்கப்பட்ட பக்கம் | html encoded page |
| மீஉரைக் கொக்கிகள் | html tags |
| மீஉரைக் கோப்பு | html file |
| முறைமை | protocol |
| வரிசை எண் | sequence no |
| வலை உலாவி | web browser |
| வலைத்தளம் | website |
| வழங்கு கணினி | server |
இணையப் பயன்பாடுகள் - 4
இணையத் தளம் ஒன்றுக்கான கோப்புகளை வைத்திருந்து கேட்கும் கணினிகளுக்கு அனுப்பி வைக்கும் வழங்கிகள் எப்படி செயல்படுகின்றன?
தகவல் பாயும் துறைகள்
ஒரு கணினியை குளம் அல்லது ஏரிக்கு ஒப்பிட்டால், அதிலிருந்து தகவல் வெளியேறும் அல்லது உள்வரும் வழிகளை துறைகள் என்று சொல்லலாம். ஒரு கணினிக்கு உயிர் கொடுக்கும் இயங்குதளம் பல்வேறு துறைகளை செயல்படுத்தியிருக்கும். துறை 80 இணையத் தள வழங்கிக்கு வரும் கோரிக்கைகளை பெற்று கோப்புகளை வெளியில் அனுப்பும் திறப்பு. துறை 110 என்பது மின்னஞ்சல்களை இறக்கிக் கொள்ள அனுமதிக்கும் திறப்பு. துறை 25 என்பது மின்னஞ்சல்களை அனுப்பி வைக்க ஏற்படுத்தியிருக்கும் திறப்பு.
கணினியின் எல்லா துறைகளையும் மூடி விட்டால், வெளிக் கணினிகளுடன் எந்த விதமான பரிமாற்றமும் இல்லாமல் போய் விடும். 'என்னிடம் இருக்கும் தகவல்கள் வேறு யாருக்கும் போகக் கூடாது. வேறு யாரது தகவலும் எனக்குத் தேவையில்லை' என்ற கணினிகளை இப்படிப் பூட்டி வைத்துக் கொள்ளலாம். அல்லது இணையத்தில் இணைக்கும் இணைப்பைத் துண்டித்து விடலாம்.
எல்லாவற்றையும் பூட்டி விட்டு, துறை 80ஐ மட்டும் திறந்து விட்டால் மற்ற கோரிக்கைகளால் பாதிக்கப்படாத ஒரு இணையத் தள வழங்கி தயார். ஏற்கனவே சொன்னது போல, இணைய இணைப்பு ஒன்றும் இருந்து விட்டால், இந்தக் கணினியின் இணைய எண்ணைக் குறிப்பிட்டு, துறை 80க்கு வரும் கோரிக்கைகளை பெறுவதற்கு தயாராக இருக்கிறது கணினி.
இணையத் தளவழங்கி
துறை 80ல் வரும் கோரிக்கைகளை கையாளும் பயன்பாடு தளவழங்கி எனப்படுகிறது. இணையத் தள வழங்கியாக செயல்பட வேண்டிய கணினியில் இத்தகைய தளவழங்கி பயன்பாட்டை நிறுவிக் கொள்ள வேண்டும்.
இந்தப் பயன்பாட்டை இயக்கியவுடன் அது துறை 80ல் வரும் கோரிக்கைகளுக்காகக் காத்திருக்கும். கோரிக்கைகளில் கேட்கப்படும் கோப்புகளை வைத்திருக்க வேண்டிய அடைவு இந்த தளவழங்கியின் வேர் அடைவு எனப்படும்.
சரவணன்மளிகைக்கடை.காம் என்று அடித்தால், அந்த பெயருக்கான இணைய முறைமை எண்ணைக் கொண்ட கணினிக்கு கோரிக்கை போய்ச் சேரும். அந்தக் கணினியில் இயங்கும் தளவழங்கி பயன்பாடு தனது வேர் அடைவில் இருக்கும் முதன்மைப் பக்கத்தை எடுத்து பயனர் கணினிக்கு (அதன் எண்ணுக்கு) அனுப்பி வைத்து விடும், பயனர் கணினி அதை குறிமாற்றி பயனருக்குக் காட்டும்.
சரவணன்மளிகைக்கடை.காம்/கடையைப்பற்றி.மீஉரை என்று அடித்தால், கடையைப்பற்றி என்ற கோப்பை எடுத்து அனுப்பும். அந்த பெயரில் கோப்பு இல்லை என்றால், நீங்கள் கேட்ட கோப்பு இங்கு இல்லை என்று பிழை தகவல் சொல்லி விடும்.
சரவணன்மளிகைக்கடை.காம்/பொருட்கள்/உணவுப்பொருட்கள்/பிஸ்கெட்டுகள்.மீஉரை என்று அடித்தால், வேர் அடைவிற்குள் பொருட்கள் என்ற துணை அடைவினுள், உணவுப்பொருட்கள் என்ற துணை அடைவினுள் பிஸ்கெட்டுகள்.மீஉரை என்ற கோப்பு கோரப்படுகிறது என்று பொருள்.
கோரப்பட்ட கோப்பு தனது வேர் அடைவில் இருந்தால் அதை கோரும் கணினிக்கு அனுப்பி வைக்க வேண்டியதுதான் வழங்கியின் பணி. இணையத் தளம் வைத்திருப்பவர் புதிய விபரங்களை சேர்க்க வேண்டுமானால் ஏற்கனவே இருக்கும் கோப்புகளை மாற்றலாம், அல்லது புதிய கோப்புகளைச் சேர்த்துக் கொள்ளலாம்.
மீஉரை குறியீடு மூலம் ஒரு கோப்பிலிருந்து இன்னொரு கோப்பை அணுகும் படி சுட்டிகள் கொடுக்கலாம்.
நிலையான பக்கங்களும் உருவாகும் பக்கங்களும்
20 ஆண்டுகளுக்கு முன்பு இணையத்தளங்களில் பெரும்பகுதி இது போன்ற நிலையான பக்கங்களால் நிரப்பப்பட்டிருந்தன. இப்போதோ மிகச் சில இணையத் தளங்களில் மட்டும்தான் நிலையான பக்கங்கள் மட்டும் பயன்படுத்தப்படுகின்றன.
நிலையான பக்கங்களில் குறியீடு மாற்றுதல் பயனர் கணினியில் வலை உலாவியில் நடைபெறுகிறது. வழங்கு கணினியில் கோரிக்கையை பெறுதல், கோப்பை அனுப்புதல் என்று போக்குவரத்து ஒழுங்குபடுத்துதல் மட்டும்தான் நடக்கிறது.
மேலே சொன்ன சரவணன் மளிகைக்கடை இணைய தளத்தில் எல்லா பொருட்களின் பட்டியலை நிலையான பக்கமாகக்கொடுத்து விடலாம். ஒவ்வொரு பொருளைப் பற்றிய விபரம், அதன் புகைப்படம், தற்போதைய கையிருப்பு, தற்போதைய விலை விபரம், சிறப்பு தள்ளுபடி விபரங்கள் என்று பட்டியலிட வேண்டும் என்று வைத்துக் கொள்வோம்.
கடையில் 2000 பொருட்கள் விற்பனைக்கு இருந்தால், 2000 பக்கங்கள் செய்து வைக்க வேண்டுமா?
விபரங்கள் மாறினாலும், எல்லா பொருட்களுக்கு என்ன விபரங்கள் என்பது மாறுவதில்லை. அவற்றை காண்பிக்கும் பக்கத்தின் வடிவமைப்பும் ஒரே மாதிரி இருக்கலாம். இதை சாதிக்க வழங்கு கணினியில் நிரல்மாற்றி மற்றும் தரவுத் தளம் பயன்படுத்தி உருவாக்கிய இணையப் பக்கங்கள் ஏற்படுத்தப்படுகின்றன.
இந்த முறையில்
- புத்தக விற்பனை,
- பாடல்கள் விற்பனை,
- திரைப்படங்கள் விற்பனை,
- வலைப்பதிவுகள்,
- நூலகங்கள்,
- வங்கிகள்,
- செய்தித் தாள் தளங்கள்,
- விளையாட்டுத் தளங்கள்
இதற்கு வழங்கு கணினியில் என்ன தேவை?
உருவாகும் பக்கங்கள்
கோப்புக்கான கோரிக்கை வரும் போது இணையத் தளத்தை உருவாக்கியவர் எழுதிய கோப்பை அப்படியே எடுத்துக் கொடுத்து விடாமல், குறிப்பிட்ட வகை கோப்பாக இருந்தால் அதில் இருக்கும் நிரல்களை படித்து கட்டளைகளை இயக்கி அதன் விளைவாக வரும் கோப்பை பயனருக்கு அனுப்பும் வேலையையும் வழங்கி பயன்பாடு செய்யலாம்.
இப்படி ஒரு பயன்பாடு இணைய வழங்கியில் சேர்க்கப்படும் போது ஒரு பொருளுக்கு ஒரு பக்கம் என்று 2000 பக்கங்கள் செய்யத் தேவை இல்லாமல் ஒரே பக்கத்தில் 2000 பொருட்களைக் காண்பிப்பதற்கான நிரல் எழுதி வைத்து விட்டால் போதுமானது.
சரவணன்மளிகைக்கடை.காம்/பொருட்கள்/உணவுப்பொருட்கள்/பொருள்விபரம்.நிரல்?கடலைஎண்ணெய் என்று கோரிக்கை வந்தால் பொருள் விபரம்.நிரல் என்ற கோப்பை எடுத்து அதில் எழுதப்பட்ட நிரல் மூலம் கடலைஎண்ணெய்க்கான விபரங்களை எல்லாம் எடுத்து ஒரு கோப்பு தயாரித்து பயனருக்கு அனுப்பி விடலாம்.
பொருள்விபரம்.நிரல்?துவரம்பருப்பு என்று கோரிக்கை வந்தால் துவரம்பருப்புக்கான விபரங்களை எடுத்து கோப்பு அனுப்பலாம்.
இந்த விபரங்களை எல்லாம் 2000 கோப்புகளில் எழுதி வைப்பதற்குப் பதிலாக தரவுத் தளம் ஒன்றைப் பயன்படுத்தலாம். மிக எளிமையான, அடிப்படையான தரவுத்தளம் ஒரு அட்டவணைதான்.
எண், பெயர், விற்பனை அளவு, கையிருப்பு, பெட்டி அளவு, விலை, நிறுவனம்
1. மிளகாய்ப் பொடி, 100 கிராம்/பொதி, 20 பெட்டிகள், 100 பொதிகள்/பெட்டி, ரூ 22/பொதி, சக்திமிளகாய்ப் பொடி
2. துவரம்பருப்பு, 500 கிராம்/பொதி, 100 பொதிகள்,-, ரூ45/பொதி, சரவணன் மளிகைக்கடை
3. துவரம்பருப்பு, 1000 கிராம்/பொதி, 70 பொதிகள்,-, ரூ85/பொதி, சரவணன் மளிகைக்கடை
4. நல்லெண்ணெய், 1 லிட்டர்/பொதி, 10 பெட்டிகள், 10 பொதிகள்/பெட்டி, ரூ135/பொதி, இதயம்
கோரப்படும் பொருளின் பெயருக்கு (அல்லது வரிசை எண்ணுக்கு) ஏற்றவாறு அந்த வரியில் போய் விபரங்களை எடுத்து வர நிரல் எழுதியிருப்போம். அந்த விபரங்களை மீஉரைப் பக்கத்தில் அழகுபடுத்திக் காண்பிக்கும்படி அமைத்து விட்டால்
- 2000 பொருட்களைப் பற்றிய விபரங்களையும் சேமித்து வைக்க ஒரு கோப்பு
- அவற்றை எடுத்து எந்த விபரத்தை எப்படிக் காண்பிக்க வேண்டும் என்று நிரலுடன் ஒரு கோப்பு
பொருட்களின் கையிருப்பு மாறும் போது விபரக் கோப்பை திறந்து விபரங்களை மாற்றி விட்டால் போதும்.
விபரங்களைக் காண்பிக்கும் பக்கத்தை மாற்றி அமைக்க வேண்டுமானால், பொருள்விபரம்.நிரல் என்ற ஒரே ஒரு கோப்பை மட்டும் மாற்றினால் போதும்.