லினக்ஸ் - linux லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
லினக்ஸ் - linux லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 3 ஜூலை, 2012

கமாண்ட் லைன் இடைமுகத்தின் காலம் முடிந்து விட்டதா?


"கமாண்ட் லைன் இடைமுகத்திற்கு சில பயன்பாடுகள் இருக்கின்றன என்பதில் கேள்வியில்லை. ஆனால், சராசரி பயனர்களுக்கான எந்த ஒரு கருவியிலும் கமாண்ட் லைன் மூலமாக எதையும் செய்யத் தேவை இருக்கக் கூடாது என்கிறார் மொபைல் ரேப்டர் பதிவர் ராபர்டோ லிம். ஒரு விருப்பத் தேர்வாக வைத்திருக்கலாம் அல்லது முற்றாக நீக்கி விடலாம். வைத்திருந்தால், அது தொழில்நுட்ப ஊழியர்களின் பராமரிப்பு பணிக்காக மட்டுமே பயன்படுவதாக இருக்க வேண்டும்"


மேலும் விவாதங்களுக்கு ஸ்லாஷ்டாட்.

வெள்ளி, 22 ஜூன், 2012

என்வீடியாவும் லினக்சும்


லினக்ஸ் இயங்குதளத்தை உருவாக்கி பராமரிக்கும் லினஸ் தோர்வால்ட்ஸ் லினக்ஸில் அதன் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் என்வீடியாவின் பங்களிப்பை குறை கூறி தாக்கினார்

"லினக்ஸ் இயங்கு தளத்தில் அவரது பங்களிப்புக்காக வழங்கப்பட்ட ஆயிரமாண்டு பரிசை பெற்றுக் கொள்வதற்காக பின்லாந்து போயிருந்த லினஸ் தோர்வால்ட்ஸூடன் ஆல்டோ பல்கலைக் கழகம் ஒரு உரையாடல் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. 

கேள்வி நேரத்தின் போது ஒருவர் லினக்சில் 'என்வீடியா ஏன் சரியாக வேலை செய்வதில்லை' என்று கேட்டார். 'லினக்ஸ் உருவாக்கத்தில் பங்குபெறும் நிறுவனங்களில் மிக மோசமானவற்றில் ஒன்று என்வீடியா' என்று லினஸ் கருத்து சொன்னார். ஆண்ட்ராய்டு கருவிகளுக்கு (அவற்றின் உள்ளே இருப்பது லினக்ஸ்தான்) என்வீடியா பெரும் எண்ணிக்கையிலான சிப்புகளை வழங்குவது நிலவரத்தை இன்னும் மோசமாக்குகிறது. 


லினக்சில் என்வீடியா இயக்கிகளைப் பற்றி உங்கள் அனுபவம் என்ன?"


இப்படி ஒரு செய்தி ஜூன் 17ம் தேதி ஸ்லாஷ்டாட்டில் விவாதிக்கப்பட்டது


ஜூன் 20ம் தேதி என்வீடியா நிறுவனம் லினஸ் டோர்வால்ட்சுக்கு பதில் சொல்கிறது. 

"என்வீடியாவின் மக்கள் தொடர்பு பிரிவு லினஸ் டோர்வால்ட்சின் கருத்துகளுக்கு பதிலளிக்கும் விதமாக ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. தான் சேர்ந்து பணியாற்றிய நிறுவனங்களிலேயே மோசமானது என்றும், லினக்சில் ஆப்டிமசை பயன்படுத்த உதவ மறுப்பதற்காகவும், மற்ற விஷயங்களுக்காகவும் லினஸ் என்வீடியாவை  தாக்கியிருந்தார்.

அதற்கு பதிலளிக்கும் முகமாக வெளியிடப்பட்டுள்ள அந்த நிறுவனத்தின் அறிக்கை சுருக்கமாக, அவர்களது தனிவுரிமை இயக்கியை லினக்ஸ் பயன்படுத்துவதை எப்போதும் ஆதரிப்பதாகவும், அந்த இயக்கி பல்வேறு இயங்குதளங்களுக்கும் ஒரே மாதிரியானது என்பதால்,  உடனுக்குடன் முழுமையான ஓப்பன் ஜிஎல் செயல்படுத்தலுடன் லினக்ஸில் ஆதரவு அளிப்பதை அது உறுதி செய்கிறது என்றும் தெரிவித்துள்ளது. டேக்ராவுக்கு ஏஆர்ம் லினக்சில் அவர்கள் ஈடுபட்டிருப்பதாகவும், லினக்சில் பல வகையான கணினிகளில் பயன்படுத்துவதை உறுதி செய்வதாகவும் சொல்கிறார்கள். லினக்சில் ஆப்டிமஸ் பயன்பாட்டுக்கு இன்னும் சிறப்பான உதவி தொடர்பாக எந்த உறுதியும் அளிக்காததோடு, நோவோ குழுவினருக்கு தொழில் நுட்ப உதவி வழங்குவதையும் குறிப்பிடாவிட்டாலும், 'எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது பலவகையான இயங்குதளங்களிலும் ஒரே மாதிரியான ஜிபியு அனுபவத்தை வழங்குவதுதான் எங்கள் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக இருக்கிறது' என்று நமக்கு உறுதி அளிக்கிறது என்வீடியா. 


இது தொடர்பான விவாதம்.

(இந்தச் செய்திகள் ஸ்லாஷ்டாட் என்ற தகவல் தொழில் நுட்பம் தொடர்பான செய்திகளை விவாதிக்கும் வலைத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டது).

வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010

கமாண்ட் லைன் சுருக்கு முறைகள்

bash முனையத்தில் சில சுருக்க வழிகளை பயன்படுத்தலாம்

Alt+D - தற்போதைய இடத்திலிருந்து அடுத்த சொல்லை வெட்டு

Alt+F - தற்போதைய இடத்திலிருந்து அடுத்த சொல்லுக்குச் செல்
Alt+B - தற்போதைய இடத்திலிருந்து முந்தைய சொல்லுக்குச் செல்
Alt+T - தற்போதைய இடத்திலிருந்து முந்தைய சொல்லை தற்போதைய இடத்தைத் தாண்டி அனுப்பு

Alt+C - தற்போதைய இடத்தில் எழுத்தை பெரிய எழுத்தாக மாற்று (a -> A)
Alt+U - தற்போதைய இடத்தில் சொல்லின் எல்லா எழுத்துக்களையும் பெரிய எழுத்துக்களாக மாற்று (a->A)
Alt+L - தற்போதைய இடத்தில் சொல்லின் எல்லா எழுத்துக்களையும் சின்ன எழுத்துக்களாக மாற்று (A ->a)

Ctrl+U - தற்போதைய இடத்திலிருந்து ஆரம்பம் வரை வெட்டு
Ctrl+K - தற்போதைய இடத்திலிருந்து கடைசி வரை வெட்டு
Ctrl+Y - கடைசியாக சேமித்ததை (வெட்டுதல் மூலம்) ஒட்டு

Ctrl+T - தற்போதைய இடத்திற்கு முந்தைய எழுத்தை தற்போதை இடத்துக்கு அப்புறம் நகர்த்து

Ctrl+A - கட்டளைத் தொடரின் ஆரம்பத்துக்குப் போ
Ctrl+E - கட்டளைத் தொடரின் இறுதிக்குப் போ
Ctrl+B - ஒரு எழுத்து பின்னோக்கிப் போ

(2007ல் பாரதி சுப்ரமணியன் அனுப்பிய அஞ்சலிலிருந்து)

Ma Sivakumar
எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்
http://masivakumar.blogspot.com

மைக்ரோசாப்டு - முடிவின் ஆரம்பம்?

மைக்ரோசாப்டு - யாஹூ பற்றிய செய்தி அலசல்களை மேலும் படித்துக் கொண்டிருந்தேன்.

எந்த கோணத்தில் பார்த்தாலும் மைக்ரோசாப்டின் கழுத்தில் கல்லைக் கட்டி தண்ணீரில் நீந்த விடுவது போலத்தான் படுகிறது. கல்லும், ஆளும் சேர்ந்து மூழ்குவதுதான் நடக்கும். மைக்ரோசாப்டு அப்படி மூழ்கிப் போகும் நேரத்தை இத்தனை ஆண்டுகளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தாலும். யாஹூ என்ற நிறுவனமும் சேர்ந்து சீரழிவதுதான் வருத்தமாக இருக்கும்.

இந்த செலவு இல்லா விட்டால் வேறு ஏதாவது செய்து மைக்ரோசாப்டு தனக்குத் தானே குழி பறித்தலை வெற்றிகரமாகச் செய்து விடும் என்றுதான் தோன்றுகிறது. பில்கேட்ஸ் இருந்த வரை நிலவிய நடைமுறை புத்திசாலித்தனம் பால்மரின் கீழ் முற்றிலும் மறைந்து விட்டது. அல்லது இப்படிப்பட்ட சூழல்கள் தோன்றும் என்பதை உணர்ந்துதான் பில்கேட்ஸ் பாராசூட்டுடன் குதித்து விட்டாரோ? மைக்கேல் டெல் நிறுவனத்தை விட்டு விலகி சில ஆண்டுகளுக்குப் பிறகு திரும்ப வந்தது போல இவரும் மைக்ரோசாப்டை காப்பாற்றப் போவதாக ஓரிரு ஆண்டுகளில் திரும்பவும் பொறுப்பேற்றுக் கொள்ளலாம்.

மைக்ரோசாப்டு மென்பொருள் சேவைகளைப் பயன்படுத்துவதில்லை என்று ஆறேழு ஆண்டுகளாக புறக்கணித்து வருகிறேன். புதிய கணினி வாங்கினால் இயங்குதளம் இல்லாமலேயே வாங்குவது, மென்பொருள் பயன்பாடுகள் அனைத்துமே திறமூல மென்பொருடகள் மூலம் பயன்படுத்துவது. நிறுவனத்திலும் முற்றிலும் மைக்ரோசாப்டு அல்லாத பயன்பாடுகளை மட்டுமே பயன்படுத்துவது என்று செய்ய முடிந்தது

2000, 2001 ஆண்டுகள் மைக்ரோசாப்டின் உச்சக் கட்ட பருவம். அப்போது மைக்ரோசாப்டு மென்பொருளை புறக்கணிப்பது பைத்தியக்காரத்தனம் என்று பலர் பேசிக் கொண்டார்கள். விபி மூலம் மென்பொருள் செய்வதுதான் புத்திசாலித்தனம், இணைய உலாவியை இடைமுகமாக வைத்து எப்படி நிறுவனத்தில் மென்பொருள் பயன்படுத்த முடியும் என்று பல கேள்விகள்.

ஐந்து ஆண்டுகளின் தெளிவுகள் நான் சேர்ந்து கொண்ட தரப்பிற்கு சாதகமாகவே ஏற்பட்டன. இயங்கு தளங்களில் லினக்சு, வலை உலாவிகளில் ஃபயர்பாக்சு, பயன்பாடுகளில் இணையம் மூலம் வழங்கப்படும் கூகிள், ஜிமெயில், யாஹூவின் சேவைகள் என்று மிகச் சாதகமான மாற்றங்கள்.

மைக்ரோசாப்டு இணைய உலகை கண்டு கொள்ளாமல் விட்ட ஆரம்ப காலங்களுக்குப் பரிகாரமாக ஹாட்மெயில் நிறுவனத்தை வாங்கிக் கொண்டார்கள். அத்தோடு ஹாட் மெயில் கணக்கை பயன்படுத்துவதை நிறுத்தி விட்டேன். அவர்களது சேவை போகப் போக நலிந்து கொண்டே போய் ஜிமெயிலும் யாஹூவும் பிரபலமாகிக் கொண்டிருந்தன.

2002ல் டாட் நெட் என்று பின்னொட்டுடன் பல சேவைகள், மைக்ரோசாப்டு பாஸ்போர்ட் என்று ஒரு சேவை, விண்டோஸ் லைவ் என்ற அண்மைய முயற்சி என்று பணத்தையும் முயற்சிகளையும் அள்ளி இறைத்து அறிமுகப்படுத்தியவை எதுவும் எதிர்பார்த்தபடி கூகிள், யாஹூவை எதிர்கொள்ள முடியவில்லை.

பத்து ஆண்டுகளுக்கும் மேற்பட்டு முற்றுரிமை ஆதாயங்களினால் சேர்ந்து விட்ட பல்லாயிரம் கோடி டாலர்கள் கைவசம் இருந்தது கரைந்து கொண்டே போகிறது. இப்போது யாஹூவை வாங்குவதோடு அந்தப் பணம் முழுவதும் தீர்ந்து விடும்.

வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருந்த ஹாட்மெயிலை வாங்கி சரிவர பயன்படுத்தத் தெரியாமல் அதன் வாடிக்கையாளர்களை இழந்து விட்ட மைக்ரோசாப்டு யாஹூவை வாங்குவதன் மூலம் எப்படி தம்மை மாற்றிக் கொள்ளப் போகிறார்கள்? இயங்கு தளத்தையும் அலுவலக மென்பொருட்களையும் விற்று சம்பாதிக்க வேண்டும் என்ற தொழில் முறையிலிருந்து இன்னும் மாறவில்லை அந்த நிறுவனம். இணைய வழிச் சேவை என்பதற்கு மாறுபட்ட மனநிலையும் குறிக்கோள்களும் இருக்க வேண்டும். அது அவ்வளவு பெரிய நிறுவனத்திடம் இருப்பதாகத் தெரியவில்லை.

விண்டோசு எக்ஸ்பியிக்குப் பிறகு ஆரம்பித்த சரிவின் வேகம் இப்போது அதிகரித்திருக்கிறது. எதைத் தின்னால் பித்தம் தெளியும் என்று கையில் சேர்த்து வைத்துக் கொண்ட வளங்களைப் பயன்படுத்தி கட்டுகளை அறுத்துக் கொள்ள முயற்சிக்கிறார்கள். அடிப்படையில் பெருமளவு மாற்றங்களை ஏற்படுத்தினால் ஒழிய, தலைமைப் பொறுப்பில் இருக்கும் குழுவை ஒட்டுமொத்தமாக மாற்றினால் ஒழிய மைக்ரோசாப்டு இன்னும் சில ஆண்டுகளில் இல்லாமல் போய் விடும்.

இயங்குதளம் மற்றும் அலுவலக மென்பொருள் சந்தைகளில் மைக்ரோசாப்டின் தொடர்ந்த வருமானங்கள் மேலே சொன்ன மாற்றங்களை செய்ய முடியாமல் ஆக்கி விடும். ஒவ்வொரு காலாண்டிலும் நல்ல ஆதாயம் காட்ட முடியும் வரை பங்குதாரர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள். அந்த ஆதாயங்களின் அடிப்படை 5 ஆண்டுகளுக்கு முந்தைய ஆதிக்கத்தின் தொடர்ச்சி, அந்த ஆதிக்கம் சிறிது சிறிதாக அரிபட்டுக் கொண்டிருக்கிறது. குறிப்பிட்ட அளவு அடித்தளம் அரித்து விட்ட பிறகு ஒரு சில வாரங்களிலேயே வேர்கள் அரிக்கப்பட்ட மரம் போல சரிந்து போகும் போதுதான் விழித்துக் கொள்வார்கள். அதற்குள் காலம் கடந்திருக்கும்.

தமிழ் லினக்சு

tamilinix@yahoogroups.com என்ற குழுமத்தில் 2001ம் ஆண்டு முதல் சேர்ந்திருந்தேன். நான் உள்ளே வரும் போது கேடீயீ மொழிபெயர்ப்பை ஆரம்பித்திருந்த சிவகுமார் சண்முகசுந்தரம், கோமதி சண்முகசுந்தரம் பணியை துரையப்பா வசீகரனிடம் ஒப்படைத்து விட்டிருந்தார்கள். ஜினோம் மொழிபெயர்ப்புக்கு தினேஷ் நடராஜா பொறுப்பேற்றிருந்தார்.

D சிவராஜ், M K சரவணன், அப்போது டோக்கியோவில் இருந்து பங்கு கொண்ட V வெங்கட் போன்றோர் ஆரம்ப கால வழிகாட்டலை செய்து கொண்டிருந்தார்கள். டிஸ்கி எழுத்துருக்களில் எப்படி தமிழ் இடைமுகத்தை உருவாக்குவது என்ற பயனர் கையேடு எல்லாம் கிடைத்தது.

ரெட்ஹாட் அல்லது சுசே லினக்சை நிறுவி, கேடீயி பயன்டுத்தினால் தமிழ் இடைமுகத்தை அமைத்துக் கொள்ளும் வசதி கிடைத்தது.

தினேஷ் நடராஜா தமிழில் எழுதத் தேவையான கருவியை உருவாக்கி தமிழ் விசைப்பலகை என்று பின்னால் பெயர் சூட்டினார். வெங்கட் 'பெங்குயினுக்கு தமிழ் கற்றுக் கொடுப்போம்' என்று எல்லோரையும் மொழிபெயர்ப்பு வேலைக்கு அழைத்து கட்டுரை எழுதினார். தமிழ்லினக்சு என்று வலைத்தளத்தையும் நடத்தி வந்தார்.

முட்டி மோதி, தமிழ் இடைமுகத்தை ரெட்ஹாட் - கேடியி 2.1 நிறுவலின் மூலம், வசீகரன் இன்னும் பல நண்பர்களின் உதவியின் மூலம் கணினியில் பார்க்க முடிந்தது. 'இது எல்லாம் தன்னார்வலர்களால் செய்யப்பட்டவை, நாம் கூடக் கலந்து கொள்ளலாம்' என்று தெரிந்ததும், வசீகரனைத் தொடர்பு கொண்டு மொழிபெயர்க்கக் கோப்புகளை கேட்டு வாங்கிக் கொண்டேன்.

இப்படி வெளிநாடுகளில் உட்கார்ந்து கொண்டு நூறு நூறு சொற்களாக மொழிபெயர்த்தே இவ்வளவு செய்ய முடிகையில், தமிழகத்தின் கல்லூரி மாணவர்களும் பொது மக்களும் பெருவாரியாக ஈடுபட்டால் தமிழில் ஒரு முழுமையான இயங்குதளமே உருவாகி விடலாமே, ஏன் யாரும் செய்ய மாட்டேன் என்கிறார்கள் என்று குடைந்து கொண்டே இருந்தது.

2001ன் இறுதியில் சீனாவை விட்டு விட்ட சென்னை திரும்பினேன். என்னுடைய மடிக்கணினியில் தமிழ் இடைமுகத்தை வைத்துக் கொண்டு சந்திப்பவர்களிடம் எல்லாம் காட்டி அவர்களது ஆச்சரியத்தைத் தூண்டி விட முயற்சி செய்தேன். பலர் சேர்ந்து முயன்றால் வேலை சீக்கிரமாக முடியுமே என்று ஒரு நப்பாசை.

லினக்சு தமிழாக்கம்

  • நான் லினக்சு பயன்படுத்துவதில்லையே!
  • எனக்கு தொழில் நுட்பம் தெரியாதே!
  • இதற்கு சிறப்புக் கருவிகள் தேவைப்படுமோ?
  • பிற வேலைகளுக்கிடையே நேரம் இருக்காதே!

ஒருங்குறி (unicode) எழுத்துருக்கள் நிறுவப்பட்டு, தமிழில் தட்டச்சிட முடியும் கணினி பயன்படுத்துபவர் யாரும் இந்தப் பணியில் சேர்ந்து கொள்ளலாம்.

உங்கள் விருப்பப்படி வசதிப் படி, வாரத்துக்கு ஒரு மணி நேரம் செலவளித்தால் கூட போதும்.

உங்களுக்குப் பிடித்த திட்டத்தின் ஒருங்கிணைப்பாளருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி ஆர்வத்தைத் தெரிவித்தால், ஒரு உரைக்கோப்பு (text file) அனுப்பி வைப்பார்கள்.

அதை poedit என்ற உரைத் தொகுப்பியைப் (text editor) பயன்படுத்தி விண்டோசு கணினிகளிலும், KBabel என்ற மொழிபெயர்ப்புக் கருவியைப் பயன்படுத்தி லினக்சு கணினிகளிலும் மொழி பெயர்க்கலாம்.

சாளரத்தின் மேற்பகுதியில் ஆங்கில சொல் வரும், கீழ் பகுதியில் தமிழ்ச் சொல்லை உள்ளிட்டால் வேலை முடிந்தது.

இது போல ஒவ்வொரு கோப்பிலும் நூற்றுக் கணக்கான சொற்றொடர்கள் இருக்கலாம். முடிந்தவற்றை மொழி மாற்றி கோப்பை சேமித்து ஒருங்கிணைப்பாளருக்கு அனுப்பி விட்டால்
  • உங்கள் பங்களிப்பு ஆரம்பித்து விட்டது
  • உங்களால் மொழி மாற்றம் செய்யப்பட்ட சொற்கள் பல்லாயிரக் கணக்கான கணினிகளுக்குப் போய்ச் சேர்ந்து பயன்படுத்தப்படும்.
  • மொழிபெயர்த்தவர்கள் பட்டியலில் உங்கள் பெயரும் சேர்ந்து கொள்ளும்.
  • சில கோடி தமிழர்களுக்கு கணினி உலகிற்கான பலகணியைத் திறக்கும்முயற்சியில் உங்கள் கையும் சேர்ந்து விட்டது.
லினக்சு கணினி பயன்படுத்த வாய்ப்புக் கிடைத்தால் உங்கள் கைவண்ணத்தை நீங்களே பயன்படுத்தி மகிழலாம்.

யாரைத் தொடர்பு கொள்வது?

தமிழ்க் கணிமை - நிலைமை

சொன்னது போல பல முயற்சிகள் நடந்து வந்தாலும் கணினிகளும், அவற்றின் மூலம் கிடைக்கப் பெறும் இணைய உறவுகளும் பெரும்பான்மை தமிழருக்கு எட்டாக் கனிகளாகவே இருக்கின்றன.

ஆங்கிலம் தெரிந்த படித்த ஒருவர் கணினி வாங்கி, தனது தமிழ் பற்றைக் காட்ட, தமிழ் தாகத்தைத் தணித்துக் கொள்ள எழுத்துருக்களையும் (fonts), உள்ளீட்டு கருவிகளையும் (input tools), இடைமுகங்களையும் (interfaces) தனது கருவியில் நிறுவிக் கொண்டு மகிழ்வதற்கு இதுவரை செய்த தன்னார்வலர் பணிகள் வழி வகுத்திருக்கின்றன.

ஆங்கில புலமை இல்லாத தமிழ மட்டுமே பேச, எழுத, படிக்க முடியும் ஒருவர் தனது தொழிலுக்காக, வணிகத்துக்காக, பிற பணிகளுக்காக கணினி வாங்கத் துணியும் அளவுக்குக் கருவிகள் இல்லை.

கடைக்குப் போய் பத்தாயிரம் ரூபாய் கொடுத்து கணினி வாங்கினால்
  • நமக்குப் புரிந்த மொழியில் படிக்கலாம்
  • கருவிகளை இயக்கிப் பாட்டுக் கேட்கலாம்,
  • இணையத்தில் இணைந்து படம் பார்க்கலாம்,
  • உலகின் மூலைகளில் எல்லாம் உள்ள தமிழ் மக்களுடன் கருத்துப் பரிமாறலாம்,
  • பொருளாதாரப் பரிமாற்றங்கள் செய்து கொள்ளலாம்

    என்று வருவதற்கு இன்னும் கொஞ்சம் வேலை மீதியிருக்கிறது.
அப்படி ஒரு பொருள் கடைகளில் கிடைத்தால் இன்றைக்கு பரவலாக செல் பேசிகள் பயன்படுத்தப்படுவது போலக் கணினிகளும் வாங்கப்படும் என்பதில் சந்தேகம் தேவையில்லை. பயன்படுத்த தோதுவாக, அதனால் பலன் விளைவதாக, அதனால் பிள்ளைகளுக்கு முன்னேற வழி உள்ளது என்று இருந்தால் பல்லாயிரக் கணக்கான குடும்பங்கள் கணினி வாங்குவார்கள்.

அதற்கு என்ன செய்ய வேண்டும்?
  1. மேசை இடைமுகங்கள் கேடீயி, ஜினோம், வலை உலாவி மோசில்லா, அலுவலக மென்பொருள் ஓப்பன் ஆபிசு, லினக்சு பொதிகள் ஃபெடோரா, சுசே, உபுண்டு போன்றவற்றின் இடைமுகங்களை தமிழுக்கு மாற்ற தொடர்ந்து பணி நடக்க வேண்டும்.
    ஏற்கனவே தேவையான திட்ட அமைப்புகளைப் பயன்படுத்தி ஒரு சில தன்னார்வலர்களால் அவர்களால் முடிந்த வேலை நடந்து வருகிறது. இன்னும் பல கைகள் தேவை.

  2. கணினி பயன்படுத்துவது, அதன் பயன்பாடுகள் குறித்த தரமான, எளிதாகப் புரியும் வண்ணம் கையேடுகள், உதவிக் குறிப்புகள், புத்தகங்கள் மாணவர்களுக்குப் பாடப் புத்தகமாக இல்லாமல், பயனருக்கு என்று தமிழில் எழுதப்பட வேண்டும்.
    நல்ல எழுதும் திறமை படைத்தவர்கள், தொழில் நுட்பப் புலமையும் சேர்ந்தவர்கள் மட்டுமே செய்ய முடிகிற வேலை.

  3. இப்படி மொழிபெயர்க்கப்பட்டு கிடைக்கும் லினக்சு பொதிகளைக் கணினியில் நிறுவி பரவலாக விற்பனை செய்து, விற்பனைக்குப் பிறகான சேவை வழங்க தொழில் முனைவர்கள். கச்சிதமான திட்டமிடலும், திறமான மேலாண்டமை திறமையும் கொண்டவர்களால் மட்டுமே முடிவது.
எனக்கு விருப்பம் இருக்கிறது. எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும்?

இரட்டை கணினி திரைகள்

1. பொதுவாக கணினியில் வேலை செய்யும் போது ஒன்றுக்கும் மேற்பட்ட பயன்பாடுகளை பயன்படுத்துகிறோம். இப்போது ஆங்கிலத்தில் நான் எழுதிய குறிப்புகளை வைத்துக் கொண்டு தமிழில் இந்த இடுகையை எழுதுகிறேன். ஆங்கிலக் குறிப்புகளை பார்த்துக் கொண்டே தமிழில் எழுதுவது வசதியாக இருக்கும்.

கணினி திரை பெரியதாக இருந்தால், இரண்டு பயன்பாட்டு சாளரங்களையும் அருகருகாக வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம். பொதுவான 17", 15" திரைகளில் இரண்டை நமது கணினியுடன் இணைத்து பயன்படுத்துவது, மென்பொருள் உருவாக்குபவர்களின் செயல்திறனை உயர்த்துகிறது என்று கண்டிருக்கிறார்கள்.

ஆங்கில விக்கிபீடியா கட்டுரையிலிருந்து

“A multiple monitor setup increases the net display area of a system and can be an inexpensive way of improving computer usage.[6] Resulting display area after upgrading to a multi-monitor configuration is limited by the size, resolution and number of monitors.”

2. மடிக்கணினி ஒன்றுடன் வெளித்திரையை இணைத்தால், மடிக்கணினித் திரையில் தெரியும் அதே பயன்பாடுதான் வெளித்திரையிலும் தெரியும். திரையில் படக்காட்சிகள் காண்பிப்பதற்கு இந்த கொடாநிலை அமைப்பு தேவையான ஒன்று.

ஆனால் மேலே சொன்ன இரட்டை பயன்பாடு முறைக்கு, வேறு அமைப்பு வேண்டும்.

3. நான் இப்போது பயன்படுத்தி வரும் இயங்கு தளம் குபுண்டு 9.1 (Kubuntu). அதில் இரட்டைத் திரைகளை வடிவமைப்பது எப்படி என்று இரண்டு நாளாக இணையத்தில் தேடி, கடைசியில் எளிய சில மாற்றங்களில் வேலை ஆகி விட்டது.

4. இந்த சுட்டியில் இருக்கும் வழிகளைப் பின்பற்றி இரட்டைத் திரைகளை அமைத்துக் கொண்டேன்.

1. /etc/X11/xorg.conf கோப்பில் Screen பிரிவில் பின்வரும் வரிகளை சேர்க்கவும். (கோப்பை மாற்றும் முன்பு ஒரு நகல் எடுத்து வைத்துக் கொண்டால் ஏதாவது தவறாகப் போனால், பழைய நிலைக்கு எளிதாக மாறிக் கொள்ளலாம்)

DefaultDepth 24
SubSection “Display”
Modes “1680×1050″ “1280×800″
Virtual 2048 768
EndSubSection

2. கன்சோல் பயன்பாட்டிலிருந்து கீழ்க் கண்ட கட்டளையை இயக்க வேண்டும்xrandr –output LVDS –mode 1024×768 –output VGA-0 –mode 1024×768 –right-of LVDS

LVDS மடிக்கணினித் திரை

VGA-0 வெளித் திரை

1024x768 என்பது திரையின் அளவு.

இவை கணினிக்கு கணினி மாறுபடும்.

இந்தக் கையேட்டில் முழு விபரங்கள் கொடுத்திருக்கிறார்கள்.

முட்டாள் நிறுவனம்

சிவப்புத் தொப்பி போட்ட பெங்குயின்

ஒரு நிறுவனம் நடத்துகிறீர்கள்.
  • வேலைக்கு ஆள் வைத்து அவர்களுக்கு தேவையான கருவிகள், கணினிகள் கொடுத்து, சம்பளம் கொடுத்து மென்பொருள் உருவாக்குகிறீர்கள்.
  • அந்த மென்பொருளை நீங்கள் வெளியிட்ட அடுத்த நாளே நகலெடுத்து உங்களுடைய நிறுவனத்தின் பெயரை, படங்களை மட்டும் நீக்கி விட்டு வேறு ஒரு அமைப்பு விற்க முடிகிறது.
  • வேண்டுமென்றால் போட்டி நிறுவனம் கூட உங்கள் மென்பொருளை எடுத்து உங்கள் பெயரை நீக்கி விட்டுத் தமது பெயரைச் சேர்த்து விற்றுக் கொள்ளலாம்.
என்ன ஒரு இளிச்சவாயர்கள்? இப்படி இருந்தால் எத்தனை மாதம் இந்த நிறுவனம் தாக்குப் பிடிக்கும்? சில மாதங்களிலேயே நிறுவனம் இழுத்து மூடப்பட்டு விடுமே!

இது போல தொழில் நடத்தும் ஒரு நிறுவனத்துக்கு பிப்ரவரியில் 2009ல் முடிந்த நிதியாண்டில் நிதி நிலவரம்:

1. வருமானம் - $652 மில்லியன்
2. மொத்த ஆதாயம் - $546 மில்லியன்
3. நிகர ஆதாயம் - $78 மில்லியன்

செய்த பொருளை போட்டியாளருக்கு சும்மா கொடுத்து ஆண்டுக்கு கிட்டத்தட்ட 3000 கோடி ரூபாய்களுக்கு விற்பனை செய்கிறார்கள். சுமார் 350 கோடி ரூபாய்கள் ஆதாயம் சம்பாதிக்கிறார்கள். எது இந்த நிறுவனம்?

ரெட்ஹாட் (சிவப்புத்தொப்பி) என்ற வட அமெரிக்க நிறுவனம்தான் அது. அது பற்றிய மேல் விபரங்களை இங்கு போய் பாருங்கள்.

இது எப்படி சாத்தியமாகிறது?

திறவூற்று மென்பொருள் என்ற இருபதாம் நூற்றாண்டின் கடைசிப் பத்தாண்டுகளில் தகவல் தொடர்பு துறையில் நடந்த புரட்சி இயக்கத்தின் விளைவுதான் இந்த நிறுவனம். இதைப் போல நூற்றுக்கணக்கான நிறுவனங்களும், தனி நபர்களும் மென்பொருள் துறையை வளப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

லினக்சா கொக்கா!

"நீங்கள் ஒவ்வொரு தடவை கூகிளை பயன்படுத்தும் போதும் லினக்சைப் பயன்படுத்துகிறீர்கள்." முற்றிலும் உண்மை.

கூகிள் பொறியிலாளர்களில் பலர் லினக்சுதான் தமது கணினியில் பயன்படுத்துகிறார்களாம். கூகிள் தேடலில் ஏதாவது தேடினால் விபரங்களைத் தேடித் தருவது லினக்சு வழங்கிகள்தான். ஆரம்பத்திலிருந்தே கோடிக் கணக்கான பயனர்களுக்கு சேவை செய்யத் தேவையான ஆற்றலும் வசதியும் லினக்சினால்தான் கிடைத்ததாம்.

கூகிள் பிளாகிலிருந்து

You'll often hear members of our open source team say, “Every time you use Google, you’re using Linux.” It’s absolutely true. Check a Google engineer’s workstation, and you’ll probably find it's running Linux. Do a search on Google.com, and a Linux server will return your results. Ever since Google got its start, Linux has given us the power and flexibility we need to serve millions of users around the world.

லினக்சு வளர்ந்தது

கல்லூரி மாணவர்களுக்கு இயங்குதளம் பற்றிக் கற்றுக் கொடுக்க பரவலாகப் பயன்படுத்தப்படும் பாடப் புத்தகத்தை எழுதியவர் ஆண்ட்ரூ தானன்பவும் என்ற பேராசிரியர். லினஸ் தோர்வால்ட்ஸ் படித்துக் கொண்டிருந்த 1991லேயே அவரது புத்தகம்தான் பிரபலம். புத்தகத்துக்கு கூடவே மினிக்ஸ் என்று பொம்மை இயங்குதளத்தையும் மூல நிரலோடு மாணவர்களுக்கு வினியோகித்தார்கள்.

மினிக்ஸ் எளிதாக மாணவர்கள் கற்றுக் கொள்ளும் வண்ணம் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு கூடுதல் வசதிகள் சேர்ப்பதை மறுத்து வந்தார் தானன்பவும். லினக்சுக்குக் கிடைத்த 386 கணினியை சரிவரப் பயன்படுத்த மினிக்ஸ் தோதுவாக இல்லை. எம்எஸ் தாஸ் போன்ற இயங்குதளங்களை காசு கொடுத்து வாங்கினாலும், மூலநிரல் கிடைக்காது என்பதால் லினஸ் போன்ற மாணவர்களுக்குப் பலன் இல்லை.

தனது கணினியில் பயன்படுத்துவதற்காக ஹெல்சிங்கியின் குளிர்கால இரவு நாட்களில் எழுதிய இயங்கு தள நிரலின் முதல் பதிப்பை இணையத்தில் வெளியிட்டார் லினஸ். பொது மக்கள் உரிமத்தின் கீழ் கிடைத்த அந்த நிரலை யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். மாற்றி அமைக்கலாம், கூடுதல் வசதிகளைச் சேர்த்துக் கொள்ளலாம்.

உலகின் பல மூலைகளிலிருந்த கணினி வல்லுனர்கள், பயனர்கள், மாணவர்கள் லினஸ் தோர்வால்ட்சின் லினக்சு இயங்குதளத்தை தத்தமது கணினிகளில் நிறுவிப் பார்த்தார்கள். தமக்குத் தென்பட்ட குறைகளை சரி செய்தார்கள், தமக்குத் தேவையான பகுதிகளை தாமே எழுதிக் கொண்டார்கள். இந்த சரி செய்தல்கள், புது பகுதிகளும் பொது மக்கள் உரிமத்தின் விதிப்படி எல்லோருக்கும் மூல நிரலோடு கிடைத்தன.

அதை லினக்சுடனே சேர்த்து லினக்சு வளர ஆரம்பித்தது. இன்றைக்கும் லினக்ஸ் தோர்வால்ட்சின் மென்மையான தலைமையின்/வழிகாட்டலின் கீழ் சில நூறு கணினி வல்லுனர்கள் எழுதும் நிரல்கள்தான் லினக்சை வளர்த்து வருகின்றன. இவர்களில் பலர் ஒருவரை ஒருவர் சந்தித்தே இருக்க மாட்டார்கள். பின்னர் நிகழ்ந்த வணிக முயற்சிகளால் சிலர் பல்வேறு நிறுவனங்களின் சார்பாக முழு நேரமும் இதில் ஈடுபடுகிறார்கள். ஆனால், எல்லோருமே தன்னார்வலர்கள்தாம்.

இன்று லினக்சு என்று அறியப்படும் நிரல் இயங்குதளம் என்று அழைக்கப்படும் கணினி இயக்கத்தின் உட்கருதான். இன்றைக்கு இயங்குதளம் என்று அதற்கு மேல் சேர்க்கப்பட்ட மேல் வசதிகளையும் சேர்த்து அறியப்பட்டாலும், கணினிவியலைப் பொறுத்த வரை இந்த உட்கருதான் இயங்குதளம். அதைச் சுற்றி பல அடுக்குகளாக பிற கூறுகள் சேர்க்கப்படலாம்.

லினக்சு உருவாகத் தேவையான தொகுப்பி, நிரல் தொகுப்புகள் GNU மூலம் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகின்றன. லினக்சில் சாளர அமைப்பிலான இடைமுகம் வழங்குவதற்கு X வழங்கி, சாளர மேலாளர்கள், அவற்றுக்கு மேல் மேசைத்தள சூழல்கள் (கேடியீ, ஜினோம்) என்று தனித்தனி திட்டப் பணிகளாக நடந்து வருகின்றன. ஒவ்வொரு திட்டத்துக்குத் தேவையான கூறுகள் பிற திட்டங்களிலிருந்து கிடைக்கின்றன.

இயங்கு தள மூலக்கருவிலிருந்து ஆரம்பித்து ஒவ்வொரு அடுக்கிலும் தனக்குப் பிடித்த தேர்வை சேர்த்து பல வகையிலான மென்பொருள் தொகுப்பை ஒருவர் உருவாக்கிக் கொள்ள முடியும். லினக்சு, XFree86, கேடியி, Kஆபிசு, கான்கொரர் என்று ஒருவர் போனால், பிஎஸ்டி, X.org, ஜினோம், ஃபயர்ஃபாக்சு, ஓப்பன் ஆபிசு என்று இன்னொருவர் அமைத்துக் கொள்ளலாம். எந்த அடுக்கிலும் கிடைக்கும் பலவகையான தேர்வுகளில் ஒன்றை சேர்த்துக் கொள்ளலாம்.

ஒவ்வொருவரும் இப்படி உட்கார்ந்து தனித்தனிக் கூறுகளைப் பொறுமையாகப் பொறுக்கி எடுத்து ஒருங்கிணைத்து மென்பொருள் தொகுப்பை உருவாக்கிக் கொள்வது நடக்காத ஒன்று. அதற்குத் தேவையான தொழில் நுட்ப அறிவு சிலருக்கே இருக்கும். பரவலாக இந்தத் தொகுப்புகளைப் பயன்படுத்த உருவானவை லினக்சு பொதி சேவைகள் (linux distributions).

ரெட்ஹாட், மாண்ட்ரிவா, டெபியன், உபுண்டு, சூசே, லின்ஸ்பைர் என்று பல நிறுவனங்கள் தேவைப்படும் எல்லா அடுக்குகளையும் ஒன்று சேர்த்து தமது பெயர் பொறித்து தொகுப்பாக குறுவட்டு அல்லது அடர்வட்டில் வெளியிடுகின்றனர். இவற்றின் மூலம் யார் வேண்டுமானாலும் லினக்சை பயன்படுத்தும் வசதி கிடைக்கிறது.

இப்படி பரவலான பங்களிப்பின் மூலம் உருவாவதால் பல்வேறு நாட்டினரின், பல்வேறு மொழி பேசுபவர்களின் தேவைகளுக்கேற்ப பரிநிரல் மென்பொருட்கள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. பயனர் இடைமுகம் மட்டும் தமிழில் வேண்டும் என்றால், கேடியியில் பயன்படும் சொற்றொடர்களை மொழிபெயர்த்து சேர்த்து விட்டால் தமிழ் மேசைச் சூழல் கிடைத்து விடும்.

தமிழர் பயன்படுத்தும்படி முற்றிலும் மாறுபட்ட ஒரு பயனர் இடைமுகம் வடிவமைக்க வேண்டும் என்று ஒருவர் முன்வந்தால் அதற்குத் தேவையான கூறுகளாக ஏற்கனவே இருப்பவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேசைத்தளம் என்பது உயர்தட்டு மக்களுக்குப் பழக்கமானது. விவசாயியும், மீனவரும் மேசையைப் பயன்படுத்துவதில்லை. அவர்களுக்கான இடைமுகம் ஏன் மேசைத்தளமாக இருக்க வேண்டும். மாட்டு வண்டியாகவோ, வயற்காடாகவோ, கடற்பரப்பாகவோ இடைமுகம் வடிவமைக்கப்படலாம். ஏற்கனவே கிடைக்கும் இடைமுகங்களை தமிழ் படுத்துவது முதல் முயற்சியாக இருந்தாலும் நமக்குத் தேவையான, நமக்குப் பழகிய வடிவமைப்பை உருவாக்குவது இறுதி நோக்கமாக இருக்க வேண்டும்.

லினக்சின் ஆரம்பம்

1960களின் பிற்பகுதியில் அமெரிக்காவின் மின்னணு நிறுவனங்களும் பல்கலை மின்னணுத் துறைகளும் இணைந்து மல்டிக்ஸ் என்று கணினி இயங்கு தளம் உருவாக்கும் திட்டத்தில் இறங்கினார்கள். சில ஆண்டுகளுக்குப் பிறகு இது வேலைக்கு ஆகாது என்று கைவிட்டு குழுவில் இருந்தவர்கள் தத்தமது நிறுவனத்துக்குப் போய் விட்டார்கள்.

பெல் ஆய்வகத்தில் வேலை பார்த்த டென்னிஸ் ரிச்சியும் கென் தாம்சனும் அவரது நண்பரும், மல்டிக்சை கிண்டல் செய்யும் விதம் யுனிக்சு என்று பெயர் சூட்டி தமது படைப்பை வெளியிட்டார்கள்.

யூனிக்ஸ் எதிர்பாராத விதமாக பிரபலமடைந்து வணிக உலகிலும் நுழைந்தது. பெரிய கணினிகள் செய்து விற்கும் நிறுவனங்கள் யுனிக்ஸ் உரிமம் பெற்றுக் கொண்டு தமது கணினியுடன் இயங்குதளத்தை வழங்க ஆரம்பித்தன. பல ஆயிரம் டாலர்கள் கொடுத்து கணினி வாங்கினால் கூடவே இயங்கு தள உரிமமும், அதன் மூல நிரலும் சேர்ந்தே கிடைக்கும்.

பல்கலைக் கழகத்தில் பயிலும் மாணவர்களும் பெரிய நிறுவனத்தில் வேலை பார்க்கும் கணினி வல்லுநர்களும் மட்டும்தான் இத்தகைய கணினிகளையும் கூட வரும் மென்பொருளையும் பயன்படுத்த முடிந்தது. சின்னக் கணினிகளில் பயன்படுத்த இயங்கு தளம் இல்லை.

1980களின் தொடக்கத்தில் ஐபிஎம்மின் தனிப் பயனர் கணினி வெளியானதும், அதற்கு இயங்கு தளம் எழுதி வழங்கிய மைக்ரோசாப்டு வளர்ந்து ஆதிக்க சக்தியாக உருவானதும் இன்னொரு கதை.
  • தனிப் பயனர் கணினிகளுக்கான எம்எஸ் தாஸ் இயங்குதள மென்பொருள் மூலநிரல் இல்லாமல் விற்கப்பட்டது.
  • வாங்குபவர்கள் கணினியை இயக்க மென்பொருளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அதை மாற்றி அமைக்க முடியாது.
  • உரிமத்தின் மூலம் அதை நகல் செய்வது, பிறரிடம் பகிர்ந்து கொள்வது போன்ற உரிமைகள் கட்டுப்படுத்தப் பட்டன.
  • பள்ளி கல்லூரி மாணவர்கள் மென்பொருளைப் பற்றிக் கற்றுக் கொள்ள மூலநிரலைப் படித்துத் தெரிந்து கொள்ள முடியாது.
  • கணினியைப் பயன்படுத்தும் நிறுவனம் பழுது நீக்கவோ புது வசதிகளைச் செய்யவோ மென்பொருளை மாற்றியமைக்க முடியாது.
  • ஒரே நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் எல்லோரது தலைவிதியும்.
இது சரியான போக்கு இல்லை என்று ரிச்சர்டு ஸ்டால்மேன் என்ற பேராசிரியர்,
  • யூனிக்சு போன்று மூல நிரலுடன்
  • ஆனால் உரிமவிலை கொடுக்கத் தேவையில்லாது
  • எல்லோருக்கும் கிடைக்கும்
    கணினி மென்பொருள் தொகுப்பை உருவாக்க வேணடும் என்று திட்டமிட்டார்.
அதற்குத் தேவையான மென்பொருள் அடித்தளக் கருவிகளையும் கட்டமைப்புக் கருவிகளையும் எழுதும் பணியை ஆரம்பித்தார்.

அத்தகைய மென்பொருளை பிறருக்குக் கொடுக்கும் போது ஒரு புதுமையான உரிமத்தைப் பயன்படுத்தினார்.
  • 'இந்த மென்பொருள் மூல நிரலுடன் உங்களுக்குக் கிடைக்கிறது. இதை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். மூல நிரலை மாற்றிக் கொள்ளலாம். எத்தனை கணினியில் வேண்டுமானாலும் நகல் செய்து கொள்ளலாம், எந்தத் தடையும் இல்லை'

  • 'இன்னும், உங்கள் நண்பர்களுக்கு, அல்லது வணிக முறையில் இதே மென்பொருளை அல்லது மேம்படுத்திய மென்பொருளை பகிர்ந்து கொள்ளலாம்.

  • ஒரே ஒரு நிபந்தனை. மற்றவர்களிடம் இந்த மென்பொருளையோ இதை மேம்படுத்தி உருவாக்கிய மென்பொருளையோ வினியோகிக்கும் போது, உங்களுக்கு என்னென்ன உரிமைகள் கிடைத்தனவோ அதே உரிமைகள் அவர்களுக்கும் கொடுக்க வேண்டும்'.

    'அதாவது, அவர்களுக்கும் மூல நிரலும் அதை மாற்றி அமைக்கும் உரிமையும் கொடுக்கப்பட வேண்டும். கூடுதலாக எந்த நிபந்தனையும் விதிக்கக் கூடாது'
ஜெனரல் பப்ளிக் லைசன்சு - GPL (பொது மக்கள் உரிமம்) என்று அழைக்கப்படும் இந்த உரிமத்தின் மூலம் தனது படைப்பு பிறருக்குப் பயன்பட வெளியிட்டதோடு, பகிர்ந்து கொள்ளும் பண்பாட்டுக்குப் புத்துயிர் கொடுத்தார், ரிச்சர்ட் ஸ்டால்மான்.

1991ல் தனக்குப் பரிசாகக் கிடைத்த இன்டெல் 386 வகைக் கணினியில் பயன்படுத்த இயங்கு தள மென்பொருளை தானே எழுதிக் கொண்டார், அப்போது ஹெல்சிங்கி பல்கலைக் கழகத்தில் முது கலை கணினிவியல் பயின்று கொண்டிருந்த லினஸ் டோர்வால்ட்ஸ்.

அதற்கு லினக்சு என்று பெயர் சூட்டி GPL உரிமத்துடன் இணையத்தில் வெளியிட்டார். அந்த உரிமம் கொடுத்த உரிமைகள், கடமைகளுடன் உலகின் பல பகுதிகளிலிருந்து கலந்து கொள்ளும் பல்லாயிரக் கணக்கான கணினி வல்லுநர்களின் கூட்டு முயற்சியால் லினக்சு பதினைந்து ஆண்டுகளில் பெரும் சக்தியாக உருவெடுத்துள்ளது.

வியாழன், 12 ஆகஸ்ட், 2010

தமிழ் நாடு வழிகாட்டுகிறது.

தமிழ்நாடு அரசுப் பணி, பள்ளிகளில் பரிநிரல் மென்பொருள்களின் பயன்பாடு பரவலாக்கப்படுகிறது.

சுட்டி

சில மேற்கோள்கள்
  • லினக்சு கணினிகளைப் பயன்படுத்துவதில் செலவும் குறைவு நச்சு நிரல்கள் தொல்லையும் இல்லை.
  • 6500 பஞ்சாயத்துகளுக்கு இயங்குதள மென்பொருளும், இன்னும் 6,100 லினக்சு இயங்குதளம் நிறுவப்பட்ட கணினிகளும் அனுப்பப்பட்டு விட்டன.
  • பள்ளிகளுக்காக 20,000 கணினிகள் வாங்கப் போகிறோம்.
  • மைக்ரோசாப்டு ஒரு கணினிக்கு இயங்குதள விலையாக 7000 ரூபாய் கேட்டது. 300 ரூபாய்க்கு எல்லா மென்பொருளும் கிடைக்கும் போது ஏன் இவ்வளவு விலைக்கு இயங்கு தளத்தை மட்டும் நான் வாங்க வேண்டும்.
  • ஓப்பன் ஆபிஸ் பயன்பாட்டில் மைக்ரோசாப்டு ஆபிசு கோப்புகளையும் பயன்படுத்த முடியும், odt வடிவ கோப்புகளையும் பயன்படுத்தலாம். மைக்ரோசாப்டு ஆபிசில் odt கோப்புகளைப் பயன்படுத்த முடியாது. அப்படி இருக்க மட்டமான மைக்ரோசாப்டு ஆபிசுக்கு அதிகப் பணம் கொடுப்பது என்ன நியாயம்?
  • தமிழ் நாடு அரசு ஆண்டுக்கு 200 முதல் 500 கோடி ரூபாய் மென்பொருள் விலையில் மிச்சப்படுத்த முடியும்.
நம்மை நாமே பழித்துக் கொள்வதற்கிடையே இப்படியும் துணிச்சலான, அறிவார்ந்த ஆட்சி அலுவலர்கள் இருக்கிறார்கள் என்று பெருமைப் பட்டுக் கொள்ளலாம். 2002ம் ஆண்டு இவரை நான் சந்தித்த போது, அன்றைய அரசால் இலாகா ஒதுக்கப்படாமல் ஒதுக்கப்பட்டு வெறுத்துப் போய் இருந்தார். தான் வேறொரு மாநில சேவைப் பிரிவுக்கு மாற்றிப் போக வாய்ப்பு இருந்தாலும் தமிழகத்தை விட்டுப் போகப் போவதில்லை என்று உறுதியாகச் சொன்னார்.

திருவாரூர் ஆட்சியராக இருந்த போது இந்தியாவிலேயே முதல் மாவட்டமாக, மாவட்ட நிர்வாகத்தை கணினி மயமாக்கிய சாதனையை செய்து காட்டிய திரு உமாசங்கருக்கு தலைதாழ்த்தி வணக்கங்கள்.

விவாதத் தளத்தில் உற்சாகம்

மாற்று வழி 3 - லினக்ஸ்

எங்களுடைய வாடிக்கையாளரான தொழிற்சாலை ஒன்றின் அலுவலகத்தில் கணினிகளுடன் மாதாந்திர சண்டை நடக்கும். அவர்கள் மின்னஞ்சல் பயன்படுத்துவதற்காக மட்டும் இணையச் சேவைகளைப் பயன்படுத்துகிறார்கள்.

அதற்காக இணைய இணைப்பு வாங்கிக் கொண்டு, மைக்ரோசாப்டு அஞ்சல் கருவியான அவுட் லுக் எட்ஸ்பிரசைப் பயன்படுத்துகிறார்கள். அதே கணினியில் கணக்குப் பார்க்கப் பயன்படும் டேலி மென் பொருளும் மற்றக் கோப்பு வேலைகளையும் பார்த்து வந்தார்கள். மின்னஞ்சல் மூலமாக வரும் நச்சு நிரல்கள் மூலம் கணினியின் கோப்புகள் அழிக்கப் படுவதும், கணினி இயக்கம் தடைப் படுவதும் வாடிக்கையாகி விட்டது.

ஓரிரு முறை கோப்புகளை இழந்த பிறகு இணைய இணைப்பைத் தவிர பிற கோப்புகளையும் நிரல்களையும் ஒரு கணினியில் நீக்கி விட்டார்கள். மின்னஞ்சல்களையும் அச்சடித்து சேமித்துக் கொள்வார்கள். எப்போதெல்லாம் இது மாதிரி வைரசு தாக்குதல் நடக்கிறதோ அப்போது ஒரு கணினி சேவையாளரை அழைத்து எல்லாவற்றையும் அழித்து விட்டு விண்டோசை திரும்ப நிறுவிக் கொள்வார்கள். இந்தக் கணினியை மற்றக் கணினிகளுடன் இணைப்பதும் கிடையாது.

கிட்டத்தட்ட அம்மை கண்டவர்கள் ஒதுங்கி இருப்பது போல இந்தக் கணினி ஒர் ஓரமாக ஒதுக்கப் பட்டு மற்ற கணினிகளிடம் உறவாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலைமை கண்டிப்பாக நிறைவு அளிக்கவில்லை. ஒரு கணினி நிரந்தர நோயாளி என்று தண்ணீர் தெளித்து விட்டு விட்டது, அவ்வப்போது அது பழுது பட்டு விடுவது, அதைச் சரி செய்ய ஆள் வரும் வரை ஓரிரு நாட்களுக்கு வேலை முடக்கம், சரி செய்யும் சேவைக்குப் பணச் செலவு என்று அலுவலகத்தில் பல குழப்பம் இந்தக் கணினியால்.

விண்டோசு, ஒற்றைக் கணினியாக வேலை பார்க்கும் போது சிறந்த இயங்கு தளம். ஆனால் கணினி வலையமைப்பில் நுழைந்து பிற கணினிகளுடன் ஆரோக்கியமாகத் தகவல் பரிமாறிக் கொள்வது, முரட்டு நிரல்களிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வது போன்றவற்றில் யுனிக்சு குடும்ப இயங்கு தளங்களை அடித்துக் கொள்ள முடியாது. இதற்கும் காரணம் இருக்கிறது. விண்டோசின் வடிவமைப்பு தனி நபர் கணினியை அடிப்படையாகக் கொண்டு ஆரம்பித்தது. யூனிக்சு, லினக்சு வடிவமைப்புகள் பலர் பயன்படுத்தும் பிற கணினிகளுடன் பின்னிக் கொள்ளும் நோக்கத்தில் வடிவமைக்கப்பட்டவை.

இணையத் தொழில் நுட்பம் புகழ் பெற்ற பிறகு விண்டோசு இயங்கு தளத்தை அதில் இயங்க வைக்க பல கோடிக் கணக்கான பணம் செலவளித்தாலும், மைக்ரோசாப்டால் அதன் ஆரம்ப கால வடிவமைப்பை முற்றிலும் மாற்றி அமைத்து விட முடியவில்லை. ஏற்கனவே இருக்கும் நிரல்களுடன் சரிவர இயங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆரம்பத்தில் செய்த வடிவமைப்புக் குறைபாடுகளை இன்று வரை ஆதரிக்க வேண்டிய கட்டாயத்தில் இன்று வரை விண்டோசு ஒரு சவலைப் பிள்ளையாக, முரடர்களால் அடித்து நொறுக்கி விடக் கூடிய அளவில்தான் உள்ளது.

தொண்ணூறு சதவீதத்துக்கு அதிகமான மேசைக்கணினிகள் விலைக்கு வாங்கப்பட்ட அல்லது திருடப்பட்ட விண்டோசு பிரதிகளை பயன்படுத்திக் கொண்டிருக்கும் போது, இலவசமாகக் கிடைக்கும் ஒரு தேர்வு லினக்சு சார்ந்த இயங்கு தளங்கள்.

இன்றைக்குக் கிடைக்கும் சூசே சார்ந்த நோவல் லினக்ஸ், டெபியனைச் சார்ந்த உபுண்டு/Kஉபுண்டு இரண்டுமே கணினியை முன்பின் பயன்படுதியிராத யாரும் இயல்பாகப் பயன்படுத்தும் எளிமையுடன் கிடைக்கின்றன. விண்டோசு பயன்படுத்திப் பழகி விட்டவர்கள் புதிய சூழலைப் புரிந்து கொள்ள கொஞ்சம் சிரமப்பட வேண்டியிருக்கும். மற்றபடி பயன்படுத்தும் எளிமையில், பாதுகாப்பில், உறுதியில் எந்த ஒரு போட்டியிடும் இயங்கு தளத்தை விட மிகச் சிறந்த தேர்வு லினக்ஸுதான். வடுவூர் குமாரின் லினக்ஸு வலைப்பதிவும், மயூரனின் வலைப்பதிவும் இதைப் பற்றி பல விபரங்களை அழகு தமிழில் கொடுக்கின்றன.

மாற்று வழி 1 - ஃபயர் ஃபாக்ஸ்

மாற்று வழி 2 - ஓப்பன் ஆபிசு