அனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010

விறு விறுவென்று நடக்கட்டும்

அடுத்ததாக சோதனை வழிகளை பட்டியலிடுவது. (Test Cases)
  1. எல்லா விபரங்களையும் பொருத்தமாக உள்ளிட்டால் சரியாக சேமிக்கப்பட்டு அறிக்கைப் பக்கத்தில் காண்பிக்கிறதா?
  2. வாடிக்கையாளர் பட்டியலில் விற்பனையாளர் பெயரைக் காண்பிக்கக் கூடாது.
  3. பொருளின் பெயரைக் குறிப்பிடாமல் உள்ளிட முயன்றால் என்ன நடக்கிறது/
என்று நூற்றுக் கணக்கில் எழுதிக் கொள்ள வேண்டும். எத்தனை சோதனைவழிகளைக் குறிப்பிடுகிறோமோ அத்தனை நம்பிக்கையுடன் மென்பொருளை வெளியிட முடியும்.

இனிமேல் நிரல் எழுதுவது. (Coding)

ஜாவா குருக்கள், பிஎச்பி பிஸ்துகள், டாட்நெட் தாதாக்கள் இறங்கி விளையாட வேண்டிய கட்டம். ஒரே வரையறையை ஒருவர் 200 வரிகளில் செய்து காட்டலாம், இன்னொருவர் முப்பது வரிகளில் முடித்து விடலாம். கவிதை எழுதுவது போல, ஓவியம் வரைவது போல கணிமொழியின் கூறுகளை எப்படிப் பயன்படுத்தி அழகான நிரல் எழுதுவது என்பது எல்லோருக்கும் வந்து விடும் ஒன்று கிடையாது.

அடுத்ததாக எழுதியதை நிரலாளரே ஒரு தடவை சரிபார்த்து விட்டு சோதனைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இங்கு ஒரு முக்கியத்துவம் வாய்ந்த குழு இருக்க வேண்டும். இவர்கள் அனுமதித்தால்தான் வெளியே எந்த பதிப்பும் போக வேண்டும். மேலே பட்டியலிடப்பட்ட சோதனை வழிகளுடன் கூடவே அவர்களும் தமக்குத் தோன்றிய முறைகளில் சோதிப்பார்கள். (Unit Testing)

ஏற்கனவே இருக்கும் மென்பொருளில் புதிய கூறு சேர்த்தல் அல்லது மாறுதல் செய்தால் இந்தப் பகுதியைச் சோதித்ததோடு இல்லாமல் பிற பகுதிகளையும் ஒரு முறை சரி பார்த்துக் கொள்ள வேண்டும். தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டுவது போல ஒரு மூலையில் ஏதோ மாற்றப் போக இன்னொரு மூலையில் புட்டுக் கொள்ளும் அபாயம் எப்போதுமே இருக்கும். அதை அடையாளம் கண்டு சரி செய்வதும் திட்டமிட்டு செய்யப்பட வேண்டும். (Integration Testing)

இப்படி உருவான நிரலை ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கும் வாடிக்கையாளருக்கு அல்லது புதிதாக நிறுவ வேண்டிய இடத்துக்கு எப்படிக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற பொதி போடுதல் (Packaging) அடுத்தக் கட்டம். என்னென்ன கோப்புகள், என்னென்ன நிரல்கள் என்று ஒரு பொதியாகப் பொதிந்து அதை பிரித்து சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்க்கும் நிரலையும் இணைத்து வாடிக்கையாளர் சேவைப்பிரிவினர் (Service Team) கையில் போகும்.

அவர்கள் முன்னெச்சரிக்கையாக அலுவலகத்திலேயே இருக்கும் அந்த வாடிக்கையாளரின் தற்போதைய நிரல் தொகுப்பின் இந்த மாறுதல்களை ஓட்டிப் பார்த்து சிக்கல் எதுவும் இல்லை என்று உறுதிப் படுத்திக் கொள்வார்கள். வாடிக்கையாளரின் கணினி இணையத்தில் இணைந்திருந்தால் அப்படி இணைந்தோ, அல்லது நேரடியாகப் போயோ இந்த மாறுதல்களை அவர்களது கணினியில் ஏற்றி விடுகிறோம்,.

'என்னென்ன மாற்றியிருக்கிறோம். அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும்' என்று விளக்கி விட்டு அவர்களிடம் ஒரு புரிதல் அத்தாட்சி வாங்கிக் கொண்டு வந்து விடுவோம்.

ஆனால் சில நாட்களுக்குப் பிறகுதான் பயன்படுத்த ஆரம்பித்து சரியான பின்னூட்டம் கொடுப்பார்கள். அந்த நேரத்தில் சின்ன ஐயங்களை தொலைபேசியிலும், இன்னும் சிக்கலானதை மின்னஞ்சல் மூலம் மாற்றம் அனுப்பியோ, நேரிலோ தீர்த்து வைக்கிறோம்.

வேலையில் இறங்குவோம்

இதற்கு வழிமுறையாக
  • நிறுனப் பெயர்களை, வணிக விபரங்களை ஒவ்வொரு முறையும் உள்ளிடத் தேவையில்லாமல் ஒரு பொதுவான இடத்தில் (master) போடச் சொல்லி, தேவை விபர உள்ளிடலில் தேர்ந்தெடுக்க வைப்போம்.

  • இதே போன்று பொருள் பட்டியல் (product master), நிறப்பட்டியல் (colour master) போன்றவற்றுக்கும் பொதுவான பட்டியல் உருவாக்கிக் கொள்வோம் என்று தீர்மானிக்கிறோம்.

  • நாளை இந்த வடிவத்தில் உள்ளிடச் சொல்வோம்.
  • அளவுக்கு என்ன அலகைப் பயன்படுத்த வேண்டும், விலைக்கு எந்த நாட்டுப் பணம் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதும் வாங்க வேண்டும்.
இப்படி தொழில் நுட்பமுறைகளைத் தீர்மானித்த பிறகு தரவுத் தள வடிவமைப்பில் இறங்க வேண்டும்.
  1. வாடிக்கையாளர், விற்பனையாளர், வங்கி, என்று யாராக இருந்தாலும் அவற்றுக்கு ஒரு பெயர் இருக்கும், முகவரி இருக்கும், நம்முடன் என்ன உறவு என்று இருக்கும்.
    எனவே வாடிக்கையாளர், விற்பனையாளர் என்று தனித்தனி இடத்தில் சேமிக்காமல் ஒரே இடத்தில் எல்லா பெயர்களையும் வைத்துக் கொண்டு அவர்களது முகவரி விபரங்களுக்கு ஒரு பட்டியும் (table), உறவு விபரங்களுக்கு (relationships) இன்னொரு பட்டியும் உருவாக்குவோம் என்று தீர்மானிக்கிறோம்.



  2. தேவை விபரம் (order details) உள்வாங்கும் போது வாங்குபவர் (Buyer) என்ற உறவு இருக்கும் நிறுவனப் பெயர்களை மட்டும் எடுத்துக் காட்டி அந்தத் தேவை விபரங்கள் பட்டியில் அந்த உறவுக்கான எண்ணை மட்டும் சேமித்து வைப்போம்.
    தேவைப்படும் போது இந்த மூன்று பட்டிகளையும் இணைத்து வாடிக்கையாளர் நிறுவனப் பெயரை எடுக்கலாம் என்று தீர்மானிக்கிறோம்.

  3. வணிக விபரங்களை (commercial details) ஒரு பட்டியில் போட்டு ஒரு வரிசை எண் (Serial Id) உருவாக்கி, இன்னொரு பட்டியில் பல்வேறு பொருட்களின் விபரங்களையும், அளவு, நாள் விபரங்களையும் சேமிப்போம் என்று முடிவு செய்கிறோம்.

  4. விலை விபரங்கள் (price details) குறிப்பிட்ட மேலாளர்களுக்கு மட்டும்தான் தெரிய வேண்டும் என்று இருப்பதால் தரவுத் தள அளவிலேயே விலையைத் தனிப் பட்டியில் சேமித்துக் கொள்வோம்.
    பயன்பாட்டு நிரலிலோ (application program), தரவுத் தளக் கருவிகள் (database tools) மூலமாகவோ விலை விபரங்களை யார் பார்க்கலாம் என்று கட்டுப்படுத்த முடிந்தாலும் ஒரு கூடுதல் பாதுகாப்புக்காக தனிப் பட்டியில் சேமிப்போம்.
இப்படி பல முடிவுகளை எடுக்கிறோம். இந்த வடிவமைப்பு முடிவுகளில் சரி தவறு என்று எதுவும் இல்லை. எது அதிகப் பொருத்தமானது என்றுதான் சிந்திக்க வேண்டும். அதனால் வேலை எப்போதுமே முழுமையாக முடிந்து விடாது, அதற்காகக் காத்திருக்கவும் கூடாது, ஆனால் செய்த வேலையை மேம்படுத்துவதையும் நிறுத்தி விடக் கூடாது.

நிரலில் என்னென்ன நிரல்செயலிகள் எழுத வேண்டும், தரவுத் தளத்துடன் இணைய, உள்ளிட, வெளியெடுக்கத் தேவையான செயலிகளை ஒரு தொகுப்பாகவும் (Database Class), பக்கக் கூறுகளை காட்ட ஒரு தொகுப்பு (Page Class), படிவப் பகுதிகளைக் காட்ட ஒரு தொகுப்பு (Form Class) என்று முடிவு செய்கிறோம்.

மென்பொருள் உருவாக்கம்

ஒரு வாடிக்கையாளரிடமிருந்து வந்த தோல் தேவை விபரங்களை (purchase order) உள்வாங்கிச் சேமிக்கும் வசதியை உருவாக்க வேண்டும்.

இதற்கான வழிமுறைகள்:
  1. இடைமுக வடிவம்
  • வாடிக்கையாளர் நிறுவனப் பெயர் (company name)
  • அவர்களது முகவரி, (address)
  • அவர்களிடம் பணம் வாங்கும் முறைமை (payment term)
  • பொருளை அனுப்பும் முறைமை (shipment term)
  • பொருளை அனுப்பும் வழி, (shipment mode)
  • சேர வேண்டிய துறைமுகம் (port of destination)
  • தேவை நாள், (order date)
  • வந்து சேர்ந்த விபரம் (order reference)
போன்ற வணிக விபரங்களை வாங்க வேண்டும்.

அடுத்ததாக அவர்கள் வாங்கப் போகும் பொருளின் விபரங்களை உள் வாங்க வேண்டும்.
  • பொருளின் பெயர் (தோல் வகையின் பெயர்),
  • அதன் பண்புகள் (நிறம், தடிமன், அளவு, தரம்),
  • எவ்வளவு சதுர அடி வேண்டும்,
  • என்ன விலை,
  • என்றைக்கு அனுப்பி வைக்க வேண்டும்,
  • இது போக தரக் கட்டுப்பாட்டுக் குறிப்புகள்,
  • முன்மாதிரி அனுப்பும் தேவை குறித்த குறிப்புகள்
இவற்றை சேமிக்க வேண்டும்.

ஒரு பக்கத்தின் மேற்பகுதியில் பொதுவான வணிக விபரங்களையும், கீழ்ப்பகுதியில் ஏழெட்டு பொருள் விபரங்களை உள்ளிடும் வசதியும் கொடுக்க வேண்டும்.
  • விபரங்களை உள்ளிட்டு சேமித்த பிறகு, உறுதிப்படுத்தலாக விபரங்களை வெளியிலெடுத்துக் காண்பிக்க ஒரு அறிக்கை
  • இதுவரை உள்ளிட்டு இன்னும் பொருள் அனுப்பி வைக்கப்படாத தேவைகளைப் பார்க்க ஒரு அறிக்கை,
  • இது வரை வந்த எல்லா தேவைகளின் விபரங்களைப் பார்க்க ஒரு அறிக்கை,
  • இது வரை வந்து பொருள் முழுவதும் அனுப்பி வைக்கப்பட்ட தேவைகளின் விபரங்கள்
என்று அறிக்கைகளும் உருவாக்கப்பட வேண்டும்.

இதுதான் தேவையான மென்பொருளின் வடிவம்.

இதற்கான படிவங்களை உருவாக்கி, அறிக்கைகளின் படம் போட்டு பயன்படுத்தப் போகும் வாடிக்கையாளரிடம் காண்பித்தால் அவர் தனது கருத்துக்களைச் சொல்லலாம். அதன் அடிப்படையில் தேவையான மாறுதல்களைச் செய்த பிறகு, நுட்ப விபர ஆவணம் எழுத ஆரம்பிக்கலாம்.

கதையின் தொடர்ச்சி

உரிமையாளர்களுக்கு உடனடிப் பலன் கிடைக்கும் விதமாக மென்பொருள் திட்டம் கிடைத்து விட்டது.

ஆனால், மென்பொருளை உருவாக்கிய பிறகு எப்படி அதை நடைமுறைப்படுத்துவது என்பதில் சுணக்கங்கள். முன் அனுபவம் இல்லாததால் 'மென்பொருளை நிறுவிப் பயன்படுத்த வைத்து பலன் வருவது வரை எங்கள் பொறுப்பு அதற்கு இத்தனை ஆயிரம் ரூபாய்கள்' என்று பேசியதில், முடியவே செய்யாத பொறுப்புகளை எடுக்க வேண்டி வந்தது.

அப்படி இரண்டு ஆண்டுகள் வேலை பார்த்ததில் மென்பொருள் ஒரு விற்பனைப் பொருளாக முழுமை அடைந்தது. கிட்டத்தட்ட 20 நிறுவனங்களில் நிறுவிச் செய்து கொடுத்ததலில் பல நுணுக்கங்கள் இடம் பெற்று விட்டன.

இனிமேல்
  • செய்யும் வேலைக்கு சரியாக காசு வாங்கி,வேலை செய்யும் ஊழியருக்கு மென்பொருள் துறையில் பொதுவாக கிடைக்கும் அளவுக்கு ஊதியம் வழங்கி சேவை அளிக்க வேண்டும்.
  • அதற்கு வாடிக்கையாளரை எப்படி அணுக வேண்டும் என்று அலசி,
  • இதைச் செய்தால் இவ்வளவு ஆதாயம் கிடைக்கலாம். அதைச் செய்ய எங்களுக்கு இவ்வளவு செலவாகும் என்று பேச ஆரம்பித்ததும்
வழி மலர்ந்து விட்டது.

இந்த எல்லா மாற்றங்களுக்கிடையேயும்,
  • நிறுவனங்களை இணைத்து தகவல் பரிமாற்றத்தை எளிதாக்க வேண்டும்,
  • வீணான நேர விரயங்களைத் தவிர்த்தல்
  • ஒரே விபரத்தைத் திரும்பத் திரும்ப உள்ளிடுவதால் வரும் தவறுகளை தவிர்த்தல்,
  • எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் அனுமதிக்கப்பட்டவர்கள் விபரங்களைப் பார்க்கும் வசதி
என்ற அடிப்படை நோக்கங்கள் வடிவமைப்பில் இடம் பிடித்துக் கொண்டிருந்தன.

இடைமுகம் பல மொழிகளிலும் மாற்றும் வசதி இருக்க வேண்டும் என்பதையும் செயல்படுத்திக் கொண்டோம்.

நடுவில் கொஞ்சம் கதை

சென்னையில் இருக்கும் ஒரே ஒரு நிறுவனம் இதை பயன்படுத்த ஆரம்பித்து அலுவலகத்தில் உள்ளிடப்படும் தகவல்களை அதன் உரிமையாளர் வீட்டில் கூடப் பார்க்கும் வசதியை பயன்படுத்தினார்கள்.

அந்த நிறுவன உரிமையாளர் ஸ்பானிய வாடிக்கையாளர் ஒருவருக்கு கணக்கு ஏற்படுத்திக் கொடுக்க முயன்றார். ஆனால் இணையத்தில் தகவல் பரிமாறுவது வசதியில்லை என்று அந்த வாடிக்கையாளரும் மறுத்து விட்டார்.

சென்னைக்கு வெளியே இணைய இணைப்பு வசதி மோசமாக இருந்தாதால் யாரும் அருகில் கூட வரவில்லை. அகலப்பட்டை அதோ வருகிறது, இதோ வருகிறது என்று சொல்லி இன்னும் மூன்று நான்கு ஆண்டுகள் பிடித்தன.

இதே பாணியில் விற்பனை செய்ய முயன்று இரண்டு ஆண்டுகள் ஓடி விட்டன. இந்த முறையில் இருந்த பெரிய குறைபாடுகள்:
  1. இணைய இணைப்பு எல்லா இடங்களிலும் பரவலாக இல்லாததால் பயன்படுத்த முன்வருபவர்கள் கூட மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே இருந்தார்கள்.

  2. இணையக் கணினியில் தகவல் போட்டு வைத்தால் யாராவது வந்து திருடிச் சென்று விடுவார்கள், நமது தொழில் நுணுக்கங்கள் வெளியே தெரிந்து போகும் என்று தயக்கம் பலரை ஓட வைத்தது.

  3. எங்களிடமும் அந்தக் காலகட்டத்தில் அடிக்க ஆரம்பித்திருந்த தொழில் முறை தகவல் பரிமாற்ற அலையைப் (Business Information Transfer) புரிந்து கொண்டு மென்பொருளாக உருவாக்கி விற்கத் திறமையான மென்பொருள் பின்னணியினர் இல்லை.

  4. டாட்காம் காலங்களில் உருவான போர்ட்டல் எனப்படும் குறிப்பிட்ட துறைக்கான வணிகத் தளங்களைப் போலவே குறிப்பிட்ட தகவலை மட்டும் கணினியில் உள் நுழைக்க வைப்பது வேலைக்கு ஆகவில்லை. தொழிற்சாலையின் சரக்கு விபரங்கள், வேலை முறைகள், கணக்கு வழக்குகள் எல்லாமே குறிப்பேட்டில் எழுதிக் கொண்டிருக்கும் போது குறிப்பிட்ட தகவலை மட்டும் கணினியில் போட்டு இணையம் மூலம் பரிமாறிக் கொள் என்பதில் பெரிய சிக்கல் இருந்தது.

    இந்தத் தகவல்களை உள்ளிடுவது தினசரி வேலைகளுக்குக் கூடுதலாக, கணக்குக் குறிப்பேட்டில் எழுதிய பிறகு செய்யும் அதிக பணியாக ஆகி விட்டது. அதனால் சரியான நேரத்தில் சரியான விபரம் உள்ளிடப்படாமல் அறிக்கைகள் பயனற்றுப் போய் விட்டன.
வாடிக்கையாளர்கள் சிலரின் கோரிக்கையை ஏற்று, மென்பொருளை இணையத்திலிருந்து இறக்கி அவர்களது உள்ளுறைக் கணினிகளில் நிறுவிக் கொடுத்து விட்டோம்.

சரக்கு விபரங்கள், ஆதாய/இழப்புக் கணக்குகள், வாடிக்கையாளர் விபரங்கள் போன்றவற்றை திரட்டி அறிக்கை தரும் பயன்பாட்டைத் தந்தால் பலனுள்ளதாக இருக்கும் என்று இரண்டு மூன்று வாய்ப்புகளைப் பிடித்தோம்.

நடுவில் கொஞ்சம் கதை

சென்னையில் இருக்கும் ஒரே ஒரு நிறுவனம் இதை பயன்படுத்த ஆரம்பித்து அலுவலகத்தில் உள்ளிடப்படும் தகவல்களை அதன் உரிமையாளர் வீட்டில் கூடப் பார்க்கும் வசதியை பயன்படுத்தினார்கள்.

அந்த நிறுவன உரிமையாளர் ஸ்பானிய வாடிக்கையாளர் ஒருவருக்கு கணக்கு ஏற்படுத்திக் கொடுக்க முயன்றார். ஆனால் இணையத்தில் தகவல் பரிமாறுவது வசதியில்லை என்று அந்த வாடிக்கையாளரும் மறுத்து விட்டார்.

சென்னைக்கு வெளியே இணைய இணைப்பு வசதி மோசமாக இருந்தாதால் யாரும் அருகில் கூட வரவில்லை. அகலப்பட்டை அதோ வருகிறது, இதோ வருகிறது என்று சொல்லி இன்னும் மூன்று நான்கு ஆண்டுகள் பிடித்தன.

இதே பாணியில் விற்பனை செய்ய முயன்று இரண்டு ஆண்டுகள் ஓடி விட்டன. இந்த முறையில் இருந்த பெரிய குறைபாடுகள்:
  1. இணைய இணைப்பு எல்லா இடங்களிலும் பரவலாக இல்லாததால் பயன்படுத்த முன்வருபவர்கள் கூட மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே இருந்தார்கள்.

  2. இணையக் கணினியில் தகவல் போட்டு வைத்தால் யாராவது வந்து திருடிச் சென்று விடுவார்கள், நமது தொழில் நுணுக்கங்கள் வெளியே தெரிந்து போகும் என்று தயக்கம் பலரை ஓட வைத்தது.

  3. எங்களிடமும் அந்தக் காலகட்டத்தில் அடிக்க ஆரம்பித்திருந்த தொழில் முறை தகவல் பரிமாற்ற அலையைப் (Business Information Transfer) புரிந்து கொண்டு மென்பொருளாக உருவாக்கி விற்கத் திறமையான மென்பொருள் பின்னணியினர் இல்லை.

  4. டாட்காம் காலங்களில் உருவான போர்ட்டல் எனப்படும் குறிப்பிட்ட துறைக்கான வணிகத் தளங்களைப் போலவே குறிப்பிட்ட தகவலை மட்டும் கணினியில் உள் நுழைக்க வைப்பது வேலைக்கு ஆகவில்லை. தொழிற்சாலையின் சரக்கு விபரங்கள், வேலை முறைகள், கணக்கு வழக்குகள் எல்லாமே குறிப்பேட்டில் எழுதிக் கொண்டிருக்கும் போது குறிப்பிட்ட தகவலை மட்டும் கணினியில் போட்டு இணையம் மூலம் பரிமாறிக் கொள் என்பதில் பெரிய சிக்கல் இருந்தது.

    இந்தத் தகவல்களை உள்ளிடுவது தினசரி வேலைகளுக்குக் கூடுதலாக, கணக்குக் குறிப்பேட்டில் எழுதிய பிறகு செய்யும் அதிக பணியாக ஆகி விட்டது. அதனால் சரியான நேரத்தில் சரியான விபரம் உள்ளிடப்படாமல் அறிக்கைகள் பயனற்றுப் போய் விட்டன.
வாடிக்கையாளர்கள் சிலரின் கோரிக்கையை ஏற்று, மென்பொருளை இணையத்திலிருந்து இறக்கி அவர்களது உள்ளுறைக் கணினிகளில் நிறுவிக் கொடுத்து விட்டோம்.

சரக்கு விபரங்கள், ஆதாய/இழப்புக் கணக்குகள், வாடிக்கையாளர் விபரங்கள் போன்றவற்றை திரட்டி அறிக்கை தரும் பயன்பாட்டைத் தந்தால் பலனுள்ளதாக இருக்கும் என்று இரண்டு மூன்று வாய்ப்புகளைப் பிடித்தோம்.

ஆரம்பப் பணிகள்

தோல் வாங்குபவர்களும் விற்பவர்களும் தமது ஆர்டர்களை, விற்பனை விபரங்களைப் பரிமாறிக் கொள்ளும் வசதியைச் உருவாக்கினோம்.
  • ஒரு தோல் நிறுவனம் தமது வாடிக்கையாளர் தேவை விபரங்களை உள்ளிட்டு, அதன் தொடர்பான உற்பத்தித் தகவல்கள், அதன் அடிப்படையில் அனுப்பி வைக்கும் தோலின் விபரங்கள் போன்றவற்றையும் உள்ளிடலாம்.
  • தோல் நிறுவனத்தின் மேலாளர்களும் ஊழியர்களும் தமக்குத் தேவையான அறிக்கைகளைப் பார்த்துக் கொள்ளலாம்.
  • என்னென்ன ஆர்டர்கள் இன்னும் நிலுவையில் இருக்கின்றன, குறிப்பிட்ட கால கட்டத்தில் என்னென்ன அனுப்பி வைத்தோம் போன்ற விபரங்களைப் பார்த்துக் கொள்ளலாம்.
  • தோல் வாங்குபவர்களுக்கும் ஒரு பயனர் கணக்கு உருவாக்கி தமக்குத் தேவையான, அனுமதிக்கப்பட்ட விபரங்களைப் பார்த்துக் கொள்ளலாம்.
  • வாடிக்கையாளர் உள் நுழைந்து தனது தேவை விபரங்களைக் குறிப்பிட்டு விட்டால் வேளியே மின்னஞ்சல் மூலமாகவே தொலை நகல் மூலமாகவே தனி தகவல் அனுப்பத் தேவையில்லை.
அடுத்தக் கட்டத்தில் இதே வாடிக்கையாளர் தான் தோல் வாங்கும் மற்ற நிறுவனங்களையும் மென்பொருள் சேவையில் சேர்த்து விட்டால், தனது தோல் வாங்கும் நடவடிக்கைகள் அனைத்தையும் ஒரே இடத்தில் கையாளலாம்.

மென்பொருளை ஒரு இணையக் கணினியில் நிறுவி யாருக்கு வேண்டுமானாலும் கணக்கு உருவாக்கித் தருகிறோம் அதற்கு மாதம் தோறும் சேவைக் கட்டணம் கொடுத்து விடுங்கள் என்பதுதான் திட்டம்.

நடைமுறை தேர்வுகள்

நிவதி மென்பொருளில் மூன்று அடுக்குகள் இருக்கலாம் என்று பார்த்தோம்.

எங்கள் மென்பொருளுக்கு பயனர் இடைமுகமாக இணைய உலாவியைப் (web browser) பயன்படுத்துகிறோம். 2000ம் ஆண்டிலேயே இணையத்தின் மூலமாக சேவைகள் வழங்குவது சூடுபிடிக்கும் காலத்துக்கு முன்பே எங்களுக்கு இது போன்று எந்தக் கணினியிலும் போய் நமது பயன்பாட்டை இயக்க முயலும் வசதி கவர்ச்சியாக இருந்தது.

நமது மென்பொருளை இயக்க ஒரே ஒரு கணினி மட்டும் இருந்தால் மற்ற கணினிகள் வலைப்பின்னல் மூலம் இணைந்து கொள்ளலாம். இயங்குதளம் (OS), கணிமொழியை(Programming Language) ஒரே கணினியில் நி'றுவிக் கொண்டால் போதும். பயனர் கணினிகளில் அவர்களுக்குப் பிடித்த இயங்குதளம் போட்டுக் கொள்ளலாம். ஒரே ஒரு இணைய உலாவி மட்டும் இருந்தால் போதும்.

இப்படி யோசித்து எச்டிஎம்எல் (html) எனப்படும் மீயுரை கணிமொழியை உலாவிக்கு அனுப்பி இடைமுகம் காட்டும் முறையைத் தேர்ந்தெடுத்தோம். பின் ஆண்டுகளில் அந்தத் தொழில் நுட்பம் வெகுவாக வளர்ச்சியடைந்து இப்போது பல வசதிகளை இணைய உலாவி மூலமாகவும் கொடுக்க முடிகிறது.

தரவுத் தளமும் (database) இயங்குதளமும்(OS) திறவூற்று (open source) மென்பொருளாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்தோம். ஆரக்கிள் தரவுத் தளம் அல்லது மைக்ரோசாப்டு எஸ்கியூஎல் தரவுத் தளம் என்று போனால் வாடிக்கையாளர்கள் அந்த மென்பொருட்களின் உரிமம் வாங்கவும் தனியாகக் காசு செலவழிக்க வேண்டியிருக்கும்.

இயங்கு தளத்தைப் பொறுத்த வரை இணையத்தின் மூலம் இந்தப் பயன்பாடு இயங்க வேண்டியிருப்பதால் லினக்சுதான் பாதுகாப்பு, நம்பகத்தன்மை அடிப்படையில் பொருத்தமானது என்று முடிவு செய்தோம்.

தரவுத் தளத்தையும் பயனர் இடைமுகத்தையும் இணைக்கும் நடு அடுக்குக்கு, அப்பச்சே இணைய வழங்கியுடன் இணைந்த பிஎச்பி என்று கணிநிரல் மொழியை தேர்ந்தெடுத்தோம். இந்தத் தேர்வு கொஞ்சம் பலவீனமான ஒன்றுதான். ஆனால் மென்பொருள் பின்னணி இல்லாத யாரும் ஆரம்ப காலத்தில் இல்லாததால், உள்ளதில் எளிதாக நிரல் எழுத முடியும் ஒரு மொழியை தேர்ந்தெடுத்துக் கொண்டோம்.

லெதர்லிங்க் எனப்படும் தோல்இணை பயன்பாட்டின் நம்பகத்தன்மை, நிலைத்தன்மை போன்றவற்றுக்கு அடிப்படையாக ஏற்படுத்திய தரவுத் தள வடிவமைப்பு (database design) காரணமாக இருக்கிறது.

இன்னும் கொஞ்சம் வழி முறைகள்

இந்த வடிவமைப்புக் கூறுகளை வரையறுத்தல் இரண்டாவது படி.

நுட்பவரையறை ஆவணம் (technical documentation) என்ற ஆவணத்தில்
  • பணியின் நோக்கம் என்ன,
  • எந்த முறையில் இதை உருவாக்கப் போகிறோம்,
  • தரவுத் தளத்தை எப்படி வடிவமைக்க வேண்டும்,
  • இடைமொழியை எப்படி எழுத வேண்டும்,
  • இவ்வளவும் செய்வதற்கு எவ்வளவு நேரமாகும்
என்ற திட்டமிடல்களையும் வடிவமைப்புகளையும் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.

இதை எழுதி முடித்தவர் தனது அணியின் இன்னொரு உறுப்பினரிடம் அதைக் காட்டி சரி பார்த்துக் கொள்ள வேண்டும்.

இங்கும் நிரல் எழுதுவதை ஆரம்பிக்கும் முன்னரே நன்கு சிந்தித்து எழுதி வைத்துக் கொள்வதால் பின்னால் நேர விரயத்தைக் குறைத்துக் கொள்ளலாம். வேலையில் இறங்கிய பிறகு மாற்றங்கள் தேவைப்பட்டால் செய்து கொள்ளலாம் என்றாலும் அதற்கான தேவையைக் குறைப்பதுதான் இதன் நோக்கம்.

இப்படி வடிவமைத்த திட்டமிட்ட மென்பொருளை உருவாக்கிய பிறகு அதை எப்படி எப்படி சோதனை செய்து பார்க்க வேண்டும் என்றும் வரையறுக்க வேண்டும், இது மூன்றாவது படி. இந்த சோதனை வழிகள் ஆவணத்தின் (Test Cases Document) அடிப்படையில்தான் சோதனை அணியினர் (Testing Team) உருவாக்கிய மென்பொருளை சரி பார்ப்பார்கள்.

புதிய தேவையைப் புரிந்து வடிவமைத்து வல்லுனருக்குத்தான் இதை இப்படியெல்லாம் சோதித்துப் பார்க்க வேண்டும் என்று தெரிந்திருக்கும். அவரே அதையும் குறிப்பிட்டு விடுவது பொருத்தமாக இருக்கிறது.

நான்காவதாக, நிரல் எழுதுவது.

ஒரு மென்பொருள் உருவாக்கலில் இந்த நிரல் எழுதுவதின் பங்கு 20-30 சதவீதத்துக்குள்தான் இருக்கும் என்று எனது மதிப்பீடு. இந்த 20-30% மதிப்புக் குறைந்த பணிகள் செய்வதற்குத்தான் ஜாவா, டாட்நெட், விபி என்று சுற்றிக் கொண்டிருக்க நேர்கிறது.

ஐந்தாவதாக எழுதிய நிரலை சரி பார்த்து சோதனை அணியிடம் ஒப்படைப்பது. அவர்கள் ஏற்கனவே எழுதி வைக்கப்பட்டிருக்கும் சோதனை வழிகளை அடிப்படையாகக் கொண்டு எல்லா திசைகளிலும் சோதித்துப் பார்ப்பார்கள். இங்கு ஏதாவது பிரச்சனை வெளியே வந்தால் அது நிரல் எழுதியவரிடம் திரும்பிப் போய் சரி செய்யப்பட வேண்டும். மென்பொருள் வடிவமைப்பிலேயே பிரச்சனை இருந்தால் அதைக் கூட மாற்றி அமைக்க வேண்டியிருக்கலாம்.

ஐந்தாவது படியான தர நிர்ணயத்திலேயே (Quality Control), எழுதப்பட்ட நிரலை சக பணியாளர் படித்து விமரிசனம் செய்யும் நிரல் விமரிசனம் (Code Review) என்பதும் அவ்வப்போது செய்யப்படுகிறது.

கடைசியாக தேவையை ஆரம்பித்து வைத்தவர் இந்த இறுதி வெளிப்பாட்டைப் பார்த்து தனது ஒப்புதலை அளிக்கிறார்.

சமையல் முடிந்து விட்டது, சாப்பாடு தயார். சாப்பிட வைக்க வேண்டுமே. தயாரான நிரல்களை, மாற்றங்களை வாடிக்கையாளருக்குக் கொண்டு போய் நிறுவுதல், அங்கு பயனர்களுக்கு பயிற்சி அளித்தல், அவர்கள் கேட்கும் மாற்றங்களைக் குறித்துக் கொள்ளுதல், அவர்களின் ஐயங்களுக்கு விளக்கம் அளித்தல் போன்ற செயல்படுத்தல் மிகப் பெரிய பங்கு.

அதைத் தொடர்ந்து வாடிக்கையாளரிடம் இறுதி விளைவை, நன்மைகளை ஏற்கனவே பேசியிருந்தபடி காண்பித்து காசைக் கையில் வாங்குவதோடு பணி முடிகிறது.

மூன்று முகங்கள்

இது போன்ற நிவதி மென்பொருளில் மூன்று அடுக்குகள் (layers) இருக்கும்.
  • விபரங்களை உள்ளிட படிவங்கள், விபரங்களை அறிக்கைகளாகப் பார்க்கும் பக்கங்கள் அடங்கிய பயனர் இடைமுகம் (User Interface).
  • உள்ளிட்ட விபரங்களைச் சேமித்து வைத்து, தேவைப்படும் போது வெளியே கொடுக்கும் தரவுத் தளம் (Database).
  • இரண்டையும் இணைக்கும் வண்ணம், படிவங்களிலிருந்து தரவுகளை எடுத்து தரவுத் தளத்தில் போடுவது, தரவுத் தளத்திலிருந்து தேவையான வடிவில் தகவல்களைத் திரட்டி இடைமுகத்துக்கு அனுப்புவது போன்ற பணிகளைச் செய்யும் ஒரு இடைபயன்முகம். (Application Layer)
வாடிக்கையாளரிடம் ஒப்புதல் வாங்குவதற்கு பயனர் இடைமுக மாதிரிகளைக் காண்பித்தால் போதுமானது.

அடுத்ததாக,
  • அந்த தகவல்களை எப்படி சேமிக்கப் போகிறோம்,
  • எப்படி வெளியே எடுக்கப் போகிறோம்,
  • என்னென்ன காரண காரியங்களின் (logic) அடிப்படையில் இயக்கப் போகிறோம்
போன்ற வழிமுறைகளில் பெருமளவு நேரம் செலவளித்தால்தான் மென்பொருளின் பயன்பாட்டு நன்மையும் எளிமையும் சிறப்பாக அமையும்.

பொதுவாக விபி (VB) போன்ற பொம்மை இடைமுக மென்பொருள் உருவாக்க முறையில் (GUI development tools) படிவத்தில் என்ன வரிசையில் தகவல்கள் வாங்கப்படுகின்றனவோ அதே அடிப்படையில் தரவுத் தளத்தில் சேமித்துக் கொள்ளும் போக்கு சோம்பேறி மென்பொருள் நிரலர்களிடம் (programmers) இருக்கும்.

  • பயனருக்கு எப்படிக் காண்பித்தால் வசதியாக இருக்கும் என்பதைப் பொறுத்து பயனர் இடைமுகம் அமைய வேண்டும்.
  • தரவுத் தளத்தில் எப்படிச் சேமித்து வைத்தால், தகவல் இழப்பு, பலமுறை ஒரே தகவல் சேமிப்பு இல்லாமல் மிகக் குறைந்த முயற்சியில் உள்ளிடுதலும், சேமித்தலும் வெளி எடுத்து காட்டுதலும் செய்ய முடியும் என்பதைப் பொறுத்து அதன் வடிவமைப்பு அமைய வேண்டும்.
  • எந்த வழிமுறையில் வேகமாக, குறைந்த கணினி ஆற்றலைப் பயன்படுத்தி தகவல்களை உள்ளே அனுப்பவும், வெளியே எடுக்கவும் என்பதைப் பொறுத்து இடைபயன்முகம் அமைய வேண்டும்.

எதுக்காக எல்லாம்

மென்பொருள் உருவாக்கும் போது சில வழிமுறைகளைக் கடைப்பிடிக்கிறார்கள்.

(இப்படித்தான் என்றில்லாமல் இன்னும் பல வழிமுறைகளும் உள்ளன. ஆனால் நிறுவனம் ஒன்றில் தொழில் முறையாக மென்பொருள் உருவாக்கும் போது இந்த ஒழுக்கங்கள் உதவுகின்றன என்று அனுபவம்.)

முதலில் என்ன செய்யப் போகிறோம் என்பதைத் தெளிவாக வரையறுத்துக் கொள்ள வேண்டும்.

இந்தத் தேவை
  • வாடிக்கையாளர் ஒருவர் கேட்டதாலோ
  • அல்லது விற்பனைப் பிரிவினர் சொல்லும் ஆலோசனையின் அடிப்படையிலோ
  • அல்லது நிறுவனத்தில் துறையின் போக்கு புரிந்த ஒருவரின் பரிந்துரையாலோ
ஆரம்பிக்கப்பட்டிருக்கலாம்.

ஒரே வாடிக்கையாளருக்குச் செய்து மென்பொருளை அவருக்கே கொடுத்து விடுவது project எனப்படும் குத்தகை வேலை முறை.

ஒரு மென்பொருளை உருவாக்கி பல வாடிக்கையாளருக்கு விற்று, அது தொடர்பான சேவைகளையும் வழங்குவது product எனப்படும் மென்பொருள் உருவாக்கி விற்கும் வேலை முறை.

எங்களுடைய நிறுவனத்தின் வாடிக்கையாளர்களில் பெருமளவு சிறு குறு நிறுவனங்கள். லட்சக் கணக்கில் பணமும் நேரமும் செலவழித்து மென்பொருள் தேவையை விளக்குவதில் கூட ஆர்வம் கொண்டிருக்க மாட்டார்கள்.

அதனால், ஆரம்ப காலத்தில், புதிய கூறுகள் எங்கள் திட்டத்தின் பேரில் உருவாக்கப்பட்டன. முதல் வாடிக்கையாளர் கிடைத்த பிறகு அவர்கள் கேட்கும் தேவைகளை உருவாக்கிக் கொடுத்து மேம்படுத்திக் கொண்டோம். நான்கைந்து வாடிக்கையாளர்களுக்கு பணி செய்யும் போது எல்லோருக்கும் பொதுவில் உருவாக்கி பொருளை மேம்படுத்த முயன்றோம்.

தேவையை வரையறுக்க,
  • எப்படிப்பட்ட விபரங்களை உள்வாங்க வேண்டும் என்பதற்கான படிவங்களின் மாதிரிகள் (form templates),
  • எப்படிப்பட்ட அறிக்கைகள் உருவாக வேண்டும் என்று மாதிரிகள் (report templates),
  • என்னென்ன ஆவணங்கள் அச்செடுக்க வேண்டும் என்று மாதிரிகள் (document templates)
உருவாக்கிக் கொள்ளுவது உத்தமம்.

முதலில் யார் அந்தத் தேவையை கிளப்பினார்களோ அவருக்கு இந்த மாதிரிகளைக் காட்டி,
'இதுதானே நீங்கள் கேட்டது' என்று உறுதி செய்து கொண்டால் பின்னர் மறு வேலைகள், நேர விரயங்களைத் குறைத்துக் கொள்ளலாம். .

சின்னச் சின்ன மாறுதல்களில் கூட இப்படி மாதிரிகளில் படமாகக் காட்டும் போது சொன்னவர் சொன்ன நோக்கும் கேட்டவர் புரிந்த நோக்கும் வெவ்வேறாக இருப்பது வெளி வந்து விடுகிறது. அப்போதே புரிதலை சரி செய்து கொண்டு விட்டால், பின்னர் முழுமையாக வடிவமைத்து நிரல் எழுதிய பிறகு மாற்றங்களைச் செய்யும் விரயத்தைத் குறைத்து விடலாம்.

இந்த முதல் அடியை இறுதிவெளிப்பாடு வரையறை ஆவணம் (functional specification) என்று குறிப்பிடுகிறோம் (இவெவ).

அறிமுகம்

நிறுவனத்தில் வளங்களை கட்டி மேய்க்க உதவும் மென்பொருள் பயன்பாடு ERP எனப்படும் நிறுவன வள திட்டமிடல் (நிவதி). நிவதி (ERP) மென்பொருளை உருவாக்குதல், அதன் அடிப்படைக் கூறுகள், நடைமுறைப்படுத்துதல் குறித்து எழுதுவதாக திட்டம்.

இந்த மென்பொருள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று வரையறைகள், சரியான நடைமுறை பரிந்துரைகள் சில இருந்தாலும் ஒரு இடத்தில் பொருந்துவது எல்லா இடத்திலும் பொருந்தாமல் போய் விடலாம்.

அடிப்படையில் ஒரு நிறுவனத்தின் எல்லா நடவடிக்கைகளையும் ஒரே தரவுத் தளத்தில் சேமித்துப் பயன்படுத்துவது என்று வரையறுக்கலாம்.

டேலி போன்ற கணக்கியல் பயன்பாட்டுக்காக வடிவமைக்கப்பட்ட மென்பொருளை நிவதி மென்பொருளாக விரிவுபடுத்துவது, உற்பத்தித் துறை மேலாண்மைக்காக உருவாக்கப்பட்ட மென்பொருளை கணக்கியலுக்கும் நீட்டிப்பதுடன் ஒப்பிடும்போது பல அடிப்படை வேறுபாடுகள் இருக்கும்.

உலக அளவில் எஸ்ஏபி நிறுவனம் உற்பத்தித் துறைக்கும், பீப்பிள்சாப்டு நிறுவனத்தின் நிவதி மென்பொருள் நிதிநிலை மேலாண்மைக்கும் அதிக பொருத்தமுடையதாக இருக்கின்றன என்று நம்பப்படுகிறது. பீப்பிள்சாப்டு இப்போது ஆரக்கிள் நிறுவனத்தால் வாங்கப்பட்டு விட்டது.

எங்கள் மென்பொருளுக்கு முதல் வடிவம் கொடுக்கும் போது அடிப்படை நோக்கம்
  • இணையம் வழி தகவல் பரிமாறிக் கொள்ளுதல்
  • பல இடங்களில் இருக்கும் தொழிற்சாலைகள், அலுவலகங்கள், வாடிக்கையாளர்கள், விற்பனையாளர்களுக்கு விபரங்கள் அணுக வசதி செய்தல்
என்பதாக இருந்தது.

தோலுக்கு ERP ஒட்டுமா என்ன?

ஜெர்மனியைச் சேர்ந்த SAP என்ற நிறுவனம் 1970களிலேயே இந்தத் துறையில் நுழைந்து உலகெங்கும் கால் பதித்திருக்கிறது. அவர்களது மென்பொருளை மாற்றி அமைக்க, செயல்படுத்த, பயிற்சி அளிக்க என்று பெரும் எண்ணிக்கையிலான துணை நிறுவனங்கள், ஆயிரக் கணக்கான மென்பொருள் வல்லுனர்கள் வேலை செய்கிறார்கள்.

அமெரிக்காவின் ஆரக்கிள் நிறுவனம், தரவுத் தள மென்பொருள் உருவாக்கிக் கொடுக்கும் பணியில் ஆரம்பித்து இன்றைக்கு SAPயுடன் போட்டி போடும் அளவுக்கு தொழில் நிறுவன மேலாண்மை மென்பொருட்களையும் உருவாக்கி விற்கிறது. கடந்த சில ஆண்டுகளில் சந்தையில் தனக்குப் போட்டியாக இருந்து சிறு நிறுவனங்களை வாங்கி விழுங்கி ஏப்பம் விட்டு வளர்ந்திருக்கிறது.

இதைத் தவிர ஐபிஎம், மைக்ரோசாப்டு போன்ற நிறுவனங்களும் தமது சேவைகளை வழங்குகின்றன. இவை கோடிக்கணக்கில் செலவாகும் சேவைகள். இந்தியாவில் ராம்கோ சிஸ்டம் முதலான நிறுவனங்களும் இந்தத் துறையில் கால் வைத்திருக்கின்றன.

பெரிய நிறுவனங்களின் பெரிய இலக்குகள், வாகன உற்பத்தி, பெரிய இயந்திரங்கள் செய்யும் தொழில்கள், எஃகுத் தொழில், விமானம் கட்டும் தொழில் என்று ஒரே நிறுவனத்தில் பல்லாயிரம் கோடி ரூபாய்கள் புழங்கும் துறைகளில் இருக்கின்றன.

இந்தக் கணினி மயமாக்கல் தோல் துறையில் இன்னும் நடைபெறவில்லை. தோல் துறையில் ஒரு நடுத்தர அளவு நிறுவனத்தின் சராசரி ஆண்டு வருமானம் 200 கோடி ரூபாய்களாக இருக்கலாம். தொழில் செய்யும் முறையும் பழைய ஊறிப்போன பழக்கங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது. சில கோடி ரூபாய்கள் செலவழித்து மென்பொருள் பயன்பாட்டைச் செயல்படுத்த முன்வரும் நிறுவனங்கள் விரல் விட்டு எண்ணி விடும் அளவில் கூட இல்லை.

பிற துறைகளில் மென்பொருட்கள் புழங்குவதைப் பார்த்தவர்கள் தாமும் ஏதாவது பயன்படுத்த வேண்டும் என்ற ஆசையில் உள்ளூரில் கணினித் துறையில் பட்டம் பெற்ற உறவினர் அல்லது நண்பரின் மகனைக் கேட்டு ஏதாவது செய்ய முயன்றார்கள். கணக்கு முடிப்பதற்கு டேலி போன்ற கணக்கியல் மென்பொருளைப் பயன்படுத்தினாலும், முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட நிறுவன மென்பொருட்கள் மூலம் செலவுகளைக் குறைத்து வருமானத்தைப் பெருக்கும் வழி திறக்காமலேயே இருந்து வந்தது.

அத்தகைய மென்பொருள் குறைந்த செலவில் துறையின் நுணுக்கங்களை தெரிந்து உருவாக்கப்பட்டால், துறையில் இயங்கும் தொழில் முனைவோரின் மனமறிந்து அவர்களுக்கு எது பலனளிக்கும் என்பதைப் புரிந்து கொண்டு சேவை வழங்கக் கூடிய ஒரு சேவை கிடைத்தால் சிறிது சிறிதாக நிலைமை மேம்படலாம்.

தோல் துறை - மென்பொருள் தகவல் மேலாண்மை

தோல் பதனிடும் நிறுவனங்கள், தோல் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், அவற்றை கடைகளுக்குக் கொண்டு சேர்க்கும் பணியைச் செய்யும் நிறுவனங்கள், விற்பனை செய்யும் கடைகள், இவை அனைத்தையும் தாங்கும் வடிவமைப்பு நிறுவனங்கள், வேதிப் பொருள் வழங்கும் நிறுவனங்கள், இயந்திர உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் என்று ஒவ்வொன்றாக தமது செயல்பாடுகள் குறித்த விபரங்களைக் கணினியில் முறைப்படுத்த ஆரம்பிக்க வேண்டும்.

ஒரு வணிக நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்த விபரங்களைக் கணினிகளில் சேமித்து முடிவுகள் எடுக்கப் பயன்படுத்துவதற்கு ERP (Enterprise Resource Planning) எனப்படும் நிறுவன வளங்களைப் பேணும் மென்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இவற்றின் அடிப்படை மிக எளிதானது. நிறுவனத்தின் செயல்பாடுகளான வாங்குதல், பயன்படுத்துதல், விற்றல், ஊழியர்கள் விபரங்கள், கணக்கு வழக்குகள் அனைத்தையும் ஒரே தரவுத் தளத்தில் சேர்க்க வேண்டும். தகவல்களை சரியாக வடிவமைக்கப்பட்ட தரவுத் தளத்தில் சேமித்தால் தேவைப்படும் போது தேவைப்படும் விபரங்களைக் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல்கள் மூலமாக கூடுதல் விபரங்களையும் கணினி மூலமாகப் பெற்றுக் கொள்ளலாம்.

நிறுவனத்தில் மூலப் பொருள் உள்ளே வரும் போது கணினியில் வாசலில் இருக்கும் காவலர் விபரங்களை உள்ளிடுகிறார். அது கிடங்குக்கு வந்ததும், அதனுடன் வந்த ஆவணங்களைச் சரி பார்த்து அளவு, தரம் சரியாக இருக்கிறதா என்று பார்த்த பிறகு கிடங்கு மேலாளர், அந்த விபரத்தை உள்ளிடுகிறார்.

பொருள் வாங்கும் பிரிவினர் இப்படி வந்து சேர்ந்த விபரத்தை தமது கணினியில் பார்த்து, விற்பனையாளரிடமிருந்து வரப் போகும் பில்லை அதனுடன் இணைத்துக் கொள்வார்கள். அதை அடிப்படையாகக் கொண்டு கணக்கியல் பிரிவு விற்பனையாளருக்கு காசோலை அனுப்பி விடும்.

இப்படியே ஒவ்வொரு கட்டத்திலும் பொருட்களும் ஆவணங்களும் பணமும் நகரும் விபரங்களை எல்லாம் சேர்த்து வைத்துக் கொள்ளும் மென்பொருள் பயன்பாடு, தேவைப்பும் விபரங்களைத் தேவைப்படும் நேரத்தில் சரியான அனுமதிகள் இருப்பவர்களுக்கு எடுத்துக் காட்ட முடியும்.

இப்படி ஒரு மென்பொருளை ஒவ்வொரு நிறுவனத்தின் தேவைக்கேற்ப வடிவமைத்து, சின்னச் சின்ன விபரங்களை மாற்றியமைத்து, விபரங்களைக் கணினியில் உள்ளிட்டு, தனக்கு வேண்டிய தகவல்களை கணினியின் மூலம் பெறும்படி நிறுவன ஊழியர்கள் வேலை செய்யும் பழக்கங்களை மாற்றி, தேவையான கணக்கீடுகளைப் போட்டு நிறுவனத்தை நடத்த எடுக்கும் முடிவுகளுக்கு உதவி செய்யும் படி ஆவணங்களை உருவாக்கித் தருவது இன்றைக்கு ஒரு பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான துறை.

நிறுவன வளம் பேணல் - தோல் துறை

தோல் பதனிடும் நிறுவனங்கள், தோல் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், அவற்றை கடைகளுக்குக் கொண்டு சேர்க்கும் பணியைச் செய்யும் நிறுவனங்கள், விற்பனை செய்யும் கடைகள், இவை அனைத்தையும் தாங்கும் வடிவமைப்பு நிறுவனங்கள், வேதிப் பொருள் வழங்கும் நிறுவனங்கள், இயந்திர உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் என்று ஒவ்வொன்றாக தமது செயல்பாடுகள் குறித்த விபரங்களைக் கணினியில் முறைப்படுத்த ஆரம்பிக்க வேண்டும்.

ஒரு வணிக நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்த விபரங்களைக் கணினிகளில் சேமித்து முடிவுகள் எடுக்கப் பயன்படுத்துவதற்கு ERP (Enterprise Resource Planning) எனப்படும் நிறுவன வளங்களைப் பேணும் மென்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இவற்றின் அடிப்படை மிக எளிதானது. நிறுவனத்தின் செயல்பாடுகளான வாங்குதல், பயன்படுத்துதல், விற்றல், ஊழியர்கள் விபரங்கள், கணக்கு வழக்குகள் அனைத்தையும் ஒரே தரவுத் தளத்தில் சேர்க்க வேண்டும். தகவல்களை சரியாக வடிவமைக்கப்பட்ட தரவுத் தளத்தில் சேமித்தால் தேவைப்படும் போது தேவைப்படும் விபரங்களைக் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல்கள் மூலமாக கூடுதல் விபரங்களையும் கணினி மூலமாகப் பெற்றுக் கொள்ளலாம்.

நிறுவனத்தில் மூலப் பொருள் உள்ளே வரும் போது கணினியில் வாசலில் இருக்கும் காவலர் விபரங்களை உள்ளிடுகிறார். அது கிடங்குக்கு வந்ததும், அதனுடன் வந்த ஆவணங்களைச் சரி பார்த்து அளவு, தரம் சரியாக இருக்கிறதா என்று பார்த்த பிறகு கிடங்கு மேலாளர், அந்த விபரத்தை உள்ளிடுகிறார்.

பொருள் வாங்கும் பிரிவினர் இப்படி வந்து சேர்ந்த விபரத்தை தமது கணினியில் பார்த்து, விற்பனையாளரிடமிருந்து வரப் போகும் பில்லை அதனுடன் இணைத்துக் கொள்வார்கள். அதை அடிப்படையாகக் கொண்டு கணக்கியல் பிரிவு விற்பனையாளருக்கு காசோலை அனுப்பி விடும்.

இப்படியே ஒவ்வொரு கட்டத்திலும் பொருட்களும் ஆவணங்களும் பணமும் நகரும் விபரங்களை எல்லாம் சேர்த்து வைத்துக் கொள்ளும் மென்பொருள் பயன்பாடு, தேவைப்பும் விபரங்களைத் தேவைப்படும் நேரத்தில் சரியான அனுமதிகள் இருப்பவர்களுக்கு எடுத்துக் காட்ட முடியும்.

இப்படி ஒரு மென்பொருளை ஒவ்வொரு நிறுவனத்தின் தேவைக்கேற்ப வடிவமைத்து, சின்னச் சின்ன விபரங்களை மாற்றியமைத்து, விபரங்களைக் கணினியில் உள்ளிட்டு, தனக்கு வேண்டிய தகவல்களை கணினியின் மூலம் பெறும்படி நிறுவன ஊழியர்கள் வேலை செய்யும் பழக்கங்களை மாற்றி, தேவையான கணக்கீடுகளைப் போட்டு நிறுவனத்தை நடத்த எடுக்கும் முடிவுகளுக்கு உதவி செய்யும் படி ஆவணங்களை உருவாக்கித் தருவது இன்றைக்கு ஒரு பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான துறை.