உங்கள் மின்னஞ்சல் @Facebook முகவரிதான் என்கிறது பேஸ்புக்
"பேஸ்புக் வெளியில் சொல்லாமல் பயனர்களின் கொடாநிலை மின்னஞ்சல் முகவரியை @facebook.com என்ற முகவரியாக மாற்றி வருகிறது. பயனர்களை பாதுகாக்கவும், ஒரே மாதிரி தன்மையை உருவாக்கவும்தான் இந்த நடவடிக்கை என்கிறது பேஸ்புக். ஆனால் தனது மின்னஞ்சல் சேவையை பயனர்கள் மீது சுமத்துவதாக வலைப்பதிவர்களும் செய்தி நிறுவனங்களும் பேஸ்புக்கை தாக்குகின்றன.
இது பயனர்களின் சொந்த தகவல் பரிமாற்றத்தில் மேன்-இன்-த-மிடில் (நடுவில் இருக்கும் ஆசாமி) தாக்குதலைப் போன்றது என்று கூடச் சொல்கிறார்கள். 2010ல் அறிவிக்கப்பட்ட அதன் மின்னஞ்சல் சேவையை புகுத்துவதற்கான முரட்டு நடவடிக்கையாக பல கட்டுரைகள் இதை பார்க்கின்றன. அந்த நேரத்தில் குறுஞ்செய்திகள், மின்னஞ்சல், பேஸ்புக் சாட் என பல வழிகளில் நடக்கும் உரையாடல்களை ஒன்று சேர்ப்பதுதான் தனது குறிக்கோள் என்று பேஸ்புக் சொல்லியிருந்தது.
இந்த எதிர்வினைகள் பேஸ்புக் எதிர்பாராதவையான இருக்கின்றன. 'இதை அறிமுகப்படுத்தும் போது எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்பதற்காக பேஸ்புக் மின்னஞ்சல் முகவரியை கொடாநிலையாக மாற்றினோம். பேஸ்புக் முகவரியை மட்டும் பயன்படுத்தும்படி பயனர்களை கட்டாயப்படுத்தும்படியாக நாங்கள் இதை செய்யவில்லை. எது எளிதாக இருக்கிறதோ, அதை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளட்டும்' என்கிறார் பேஸ்புக்கின் தகவல் தொடர்பு மேலாளர் மெரிடித் சின்.
(இந்த செய்தி ஸ்லாஷ்டாட் என்ற தகவல் தொழில் நுட்பம் தொடர்பான செய்திகளை விவாதிக்கும் வலைத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. அந்தத் தளத்தில் இது தொடர்பாக சூடான விவாதங்கள் நடக்கின்றன).