வியாழன், 28 ஜூன், 2012

சிலிக்கன் பள்ளத்தாக்கும் சுரண்டலைஆரம்பித்து விட்டது


"பில் டேவிடோ சிலிக்கன் பள்ளத்தாக்கின் பழம் பெரும் பார்வையாளர். சிலிக்கன் பள்ளத்தாக்கு எப்படி மாறி வந்திருக்கிறது என்பதைப் பற்றி எழுதும் போது, டேவிடோ பெருமைப்படும்படியாக எதுவும் இல்லை என்கிறார். பேஸ்புக், ஆப்பிள், கூகுள் போன்ற நிறுவனங்களை கடும் சொற்களால் தாக்குகிறார். 


'ஜெயித்தவனுக்குத்தான் எல்லாமே என்ற சூழலில் மேலும் மேலும் பணத்தைத் துரத்தும் நிறுவன உரிமையாளர்கள், ஏற்றுக் கொள்ளப்படும் நடத்தையின் விளிம்பில் நடனமாடுகிறார்கள். அவர்கள் விளிம்பிற்கு கொண்டு போகவில்லை என்றால் போட்டியாளர் அதைச் செய்து ஆதிக்கம் செலுத்த ஆரம்பிப்பார். ஏகபோகம் போட்டியாளர் கையில் போய் விடும். இப்படிக் கிடைப்பதுதான் பயனரை சுரண்டி கிடைக்கும் மதிப்பு"



இப்போது ஏன் இந்த மாற்றம் என்று ஆராயும் போது 'முன்பெல்லாம் பெரிய, கறாரான பெரு நிறுவனங்களுடன் உறவாடும் போது சப்ளையர்கள் நேர்மையாக இருந்தார்கள். சிலிக்கன் பள்ளத்தாக்கின் ஆரம்ப கட்டங்களில் பெரும்பான்மையான நிறுவனங்கள் பெருநிறுவனங்களுக்கு அல்லது அரசாங்கத்துக்கு விற்றார்கள். வாங்கும் மேலாளர்கள் அதிகாரமும், மறந்து விடாத நினைவுத் திறனும் கொண்டிருந்தார்கள். வாடிக்கையாளரின் நம்பிக்கையை பொய்ப்பித்தால், கடுமையாக தண்டிக்கப்பட்டு வியாபாரத்திலிருந்தே வெட்டி விடப்படுவார்கள். அதுதான் அவர்களை நேர்மையாக நடக்க வைத்தது' என்கிறார் டேவிடோ.

இப்போது நிலைமை மாறி விட்டது. தனிநபர் நுகர்வோரை சுரண்டுவதால் எதிர்மறை பின்விளைவுகளை விட ஆதாயம் அதிகம் கிடைக்கிறது.


(இந்த செய்தி ஸ்லாஷ்டாட் என்ற தகவல் தொழில் நுட்பம் தொடர்பான செய்திகளை விவாதிக்கும் வலைத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. அந்தத் தளத்தில் இது தொடர்பாக சூடான விவாதங்கள்  நடக்கின்றன). 

'உங்கள் மின்னஞ்சல் @Facebook முகவரிதான்'


உங்கள் மின்னஞ்சல் @Facebook முகவரிதான் என்கிறது பேஸ்புக்

"பேஸ்புக்  வெளியில் சொல்லாமல் பயனர்களின் கொடாநிலை மின்னஞ்சல் முகவரியை @facebook.com என்ற முகவரியாக மாற்றி வருகிறது. பயனர்களை பாதுகாக்கவும், ஒரே மாதிரி தன்மையை உருவாக்கவும்தான் இந்த நடவடிக்கை என்கிறது பேஸ்புக். ஆனால் தனது மின்னஞ்சல் சேவையை பயனர்கள் மீது சுமத்துவதாக வலைப்பதிவர்களும் செய்தி நிறுவனங்களும் பேஸ்புக்கை தாக்குகின்றன. 

இது பயனர்களின் சொந்த தகவல் பரிமாற்றத்தில் மேன்-இன்-த-மிடில் (நடுவில் இருக்கும் ஆசாமி) தாக்குதலைப் போன்றது என்று கூடச் சொல்கிறார்கள். 2010ல் அறிவிக்கப்பட்ட அதன் மின்னஞ்சல் சேவையை புகுத்துவதற்கான முரட்டு நடவடிக்கையாக பல கட்டுரைகள் இதை பார்க்கின்றன. அந்த நேரத்தில் குறுஞ்செய்திகள், மின்னஞ்சல், பேஸ்புக் சாட் என பல வழிகளில் நடக்கும் உரையாடல்களை ஒன்று சேர்ப்பதுதான் தனது குறிக்கோள் என்று பேஸ்புக் சொல்லியிருந்தது. 

இந்த எதிர்வினைகள் பேஸ்புக் எதிர்பாராதவையான இருக்கின்றன. 'இதை அறிமுகப்படுத்தும் போது எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்பதற்காக பேஸ்புக் மின்னஞ்சல் முகவரியை கொடாநிலையாக மாற்றினோம். பேஸ்புக் முகவரியை மட்டும் பயன்படுத்தும்படி பயனர்களை கட்டாயப்படுத்தும்படியாக நாங்கள் இதை செய்யவில்லை. எது எளிதாக இருக்கிறதோ, அதை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளட்டும்' என்கிறார் பேஸ்புக்கின் தகவல் தொடர்பு மேலாளர் மெரிடித் சின்.

(இந்த செய்தி ஸ்லாஷ்டாட் என்ற தகவல் தொழில் நுட்பம் தொடர்பான செய்திகளை விவாதிக்கும் வலைத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. அந்தத் தளத்தில் இது தொடர்பாக சூடான விவாதங்கள்  நடக்கின்றன).

புதன், 27 ஜூன், 2012

அமெரிக்க சிறுமிக்கு ஐ-பேட் விற்க மறுப்பு


ஆப்பிள் விற்பனை முனையம் ஈரானைச் சேர்ந்த அமெரிக்க சிறுமிக்கு ஐ-பேட் விற்க மறுப்பு.

"அமெரிக்க வர்த்தகத் தடைகளை மீறுவதாக தோன்றுவதால் அவளுக்கு ஐ-பேட் விற்க முடியாது என்று ஆப்பிள் விற்பனை முனையத்தின் விற்பனையாளர் ஒரு இரானிய-அமெரிக்க சிறுமியிடம் சொன்னார். உள்ளூர் தொலைக்காட்சி நிலையத்தின் காமிரா குழுவினரை அழைத்துக் கொண்டு அவள் திரும்பி வந்த போது மீண்டும் அவளுக்கு விற்பனை மறுக்கப்பட்டது.

அவள் பார்சியில் பேசிக் கொண்டிருப்பதை ஆப்பிள் ஊழியர் கேட்டிருக்கிறார். அவரும் ஈரானிலிருந்து வந்தவராதலால் அந்த மொழியை புரிந்து கொண்டு அதன் அடிப்படையில் ஐ-பேட் விற்பதற்கு மறுத்திருக்கிறார்."

செவ்வாய், 26 ஜூன், 2012

மைக்ரோசாப்ட் சர்பேஸ் - கணினி நிறுவனங்கள் அதிர்ச்சி


"மைக்ரோசாப்டின் சர்பேஸ் கணினி ஐபேடின் ஆதிக்கத்தை எதிர்ப்பதற்கான முயற்சியும் சொந்தமாக வடிவமைக்கும்   முயற்சியும் மட்டுமல்ல. 
பல ஆண்டுகளாக மைக்ரோசாப்டின் கூட்டாளிகளாக இருந்து மேசைக் கணினி ஒரு விலை உயர்ந்த பொருள் என்ற நினைப்பை தகர்த்த கணினி நிறுவனங்களுக்கு அது ஒரு மிரட்டலாக வெளியாகியிருக்கிறது. இந்த பகைமையின் வேர்கள் ஆழமாக இருக்கின்றன. மைக்ரோசாப்டு தனது கூட்டாளிகளுக்கு சர்பேஸ் பற்றிய விபரங்களை அது வெளியாவதற்கு மூன்று நாட்களுக்கு முன்தான் தெரிவித்தது. அப்போதும் குறைந்த பட்ச விபரங்களைத்தான் தெரிவித்தது. பெரிய நிறுவனங்களுக்கு மட்டும்தான் நேரடி தொலைபேசி அழைப்பு வந்தது. 
உலக அளவில் 4வது 5வது கணினி நிறுவனங்களான ஆசுஸ், ஏசர் இரண்டு நிறுவனங்களும் தங்களுக்கு சர்பேஸ் போல ஒன்று வருவதைப் பற்றிய தகவலே இல்லை என்கிறார்கள். பல ஆண்டுகளாக ரெட்மாண்டுடன் நெருக்கமாக ஆடிக் கொண்டிருந்த இந்த கணினி நிறுவனங்களுக்கு இது மிகவும் கவலையளிக்கும் ஒன்றாக இருக்கிறது. "

(இந்த செய்தி ஸ்லாஷ்டாட் என்ற தகவல் தொழில் நுட்பம் தொடர்பான செய்திகளை விவாதிக்கும் வலைத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. அந்தத் தளத்தில் இது தொடர்பாக சூடான விவாதங்கள்  நடக்கின்றன). 

சனி, 23 ஜூன், 2012

கோப்புகளை பகிர்ந்து கொள்ளும் இணையதளங்களின் மீதான இந்திய தடை நீங்குகிறது


பைரட்பே உள்ளிட்ட பல பிரபல இணையவழி   கோப்பு பகிர்ந்து கொள்ளும் சேவைகள்  இந்தியாவில் சென்ற மாதம் தடை செய்யப்பட்டன.  இப்போது  சென்னை உயர்நீதி மன்றம் தனது முந்தைய தீர்ப்பை மாற்றியிருக்கிறது


"முந்தைய நீதிமன்ற உத்தரவு, பதிப்புரிமை வைத்திருப்பவர் குறிப்பிட்ட இணைய தளம் அல்லது இணைய சேவை நிறுவனத்தை மட்டும் குறிப்பிடாமல்,  பரவலான தடையை கோரும் படி அனுமதித்தது. பயனர்களும், 'முகமிலி' குழுக்களும் விரும்பா விட்டாலும், நீதி மன்ற ஆணையை நடைமுறைப் படுத்துவதைத் தவிர இணைய சேவை நிறுவனங்களுக்கு வேறு வழியில்லாமல் இருந்தது." 


இப்போதைய ஆணையின்படி, ஒரு கோப்பு பகிர்ந்து கொள்ளப்படுவதை தடுக்க குறிப்பிட்ட சுட்டியை  மட்டும் தடுத்தால் போதுமானது. "இணைய சேவை நிறுவனங்களின் கூட்டமைப்பு பதிவு செய்த மேல் முறையீட்டை தொடர்ந்து இந்த புதிய ஆணை வழங்கப்பட்டது."


(இந்த செய்தி ஸ்லாஷ்டாட் என்ற தகவல் தொழில் நுட்பம் தொடர்பான செய்திகளை விவாதிக்கும் வலைத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. அந்தத் தளத்தில் இது தொடர்பாக விவாதங்கள்  நடக்கின்றன). 

வெள்ளி, 22 ஜூன், 2012

என்வீடியாவும் லினக்சும்


லினக்ஸ் இயங்குதளத்தை உருவாக்கி பராமரிக்கும் லினஸ் தோர்வால்ட்ஸ் லினக்ஸில் அதன் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் என்வீடியாவின் பங்களிப்பை குறை கூறி தாக்கினார்

"லினக்ஸ் இயங்கு தளத்தில் அவரது பங்களிப்புக்காக வழங்கப்பட்ட ஆயிரமாண்டு பரிசை பெற்றுக் கொள்வதற்காக பின்லாந்து போயிருந்த லினஸ் தோர்வால்ட்ஸூடன் ஆல்டோ பல்கலைக் கழகம் ஒரு உரையாடல் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. 

கேள்வி நேரத்தின் போது ஒருவர் லினக்சில் 'என்வீடியா ஏன் சரியாக வேலை செய்வதில்லை' என்று கேட்டார். 'லினக்ஸ் உருவாக்கத்தில் பங்குபெறும் நிறுவனங்களில் மிக மோசமானவற்றில் ஒன்று என்வீடியா' என்று லினஸ் கருத்து சொன்னார். ஆண்ட்ராய்டு கருவிகளுக்கு (அவற்றின் உள்ளே இருப்பது லினக்ஸ்தான்) என்வீடியா பெரும் எண்ணிக்கையிலான சிப்புகளை வழங்குவது நிலவரத்தை இன்னும் மோசமாக்குகிறது. 


லினக்சில் என்வீடியா இயக்கிகளைப் பற்றி உங்கள் அனுபவம் என்ன?"


இப்படி ஒரு செய்தி ஜூன் 17ம் தேதி ஸ்லாஷ்டாட்டில் விவாதிக்கப்பட்டது


ஜூன் 20ம் தேதி என்வீடியா நிறுவனம் லினஸ் டோர்வால்ட்சுக்கு பதில் சொல்கிறது. 

"என்வீடியாவின் மக்கள் தொடர்பு பிரிவு லினஸ் டோர்வால்ட்சின் கருத்துகளுக்கு பதிலளிக்கும் விதமாக ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. தான் சேர்ந்து பணியாற்றிய நிறுவனங்களிலேயே மோசமானது என்றும், லினக்சில் ஆப்டிமசை பயன்படுத்த உதவ மறுப்பதற்காகவும், மற்ற விஷயங்களுக்காகவும் லினஸ் என்வீடியாவை  தாக்கியிருந்தார்.

அதற்கு பதிலளிக்கும் முகமாக வெளியிடப்பட்டுள்ள அந்த நிறுவனத்தின் அறிக்கை சுருக்கமாக, அவர்களது தனிவுரிமை இயக்கியை லினக்ஸ் பயன்படுத்துவதை எப்போதும் ஆதரிப்பதாகவும், அந்த இயக்கி பல்வேறு இயங்குதளங்களுக்கும் ஒரே மாதிரியானது என்பதால்,  உடனுக்குடன் முழுமையான ஓப்பன் ஜிஎல் செயல்படுத்தலுடன் லினக்ஸில் ஆதரவு அளிப்பதை அது உறுதி செய்கிறது என்றும் தெரிவித்துள்ளது. டேக்ராவுக்கு ஏஆர்ம் லினக்சில் அவர்கள் ஈடுபட்டிருப்பதாகவும், லினக்சில் பல வகையான கணினிகளில் பயன்படுத்துவதை உறுதி செய்வதாகவும் சொல்கிறார்கள். லினக்சில் ஆப்டிமஸ் பயன்பாட்டுக்கு இன்னும் சிறப்பான உதவி தொடர்பாக எந்த உறுதியும் அளிக்காததோடு, நோவோ குழுவினருக்கு தொழில் நுட்ப உதவி வழங்குவதையும் குறிப்பிடாவிட்டாலும், 'எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது பலவகையான இயங்குதளங்களிலும் ஒரே மாதிரியான ஜிபியு அனுபவத்தை வழங்குவதுதான் எங்கள் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக இருக்கிறது' என்று நமக்கு உறுதி அளிக்கிறது என்வீடியா. 


இது தொடர்பான விவாதம்.

(இந்தச் செய்திகள் ஸ்லாஷ்டாட் என்ற தகவல் தொழில் நுட்பம் தொடர்பான செய்திகளை விவாதிக்கும் வலைத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டது).

ஆரக்கிளின் காப்புரிமை தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு கூகுள் $0 கொடுக்க வேண்டும்


"ஆரக்கிளின் காப்புரிமை தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு கூகுள் $0 கொடுக்க வேண்டும்  என்று அமெரிக்க மாவட்ட நீதிமன்றம் ஒன்று இன்று தீர்ப்பு அளித்தது. வழக்கு செலவுகளை ஆரக்கிளிடமிருந்து வாங்குவதற்கான விண்ணப்பத்தை பதிவு செய்ய (போலியான வழக்குகளில் செய்வதைப் போல) கூகுளுக்கு 14 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. 


இருந்தாலும், கூகுளுக்கு 'இனி எல்லாம் சுகமே' என்று ஆகி விடவில்லை, இந்தத் தீர்ப்பை மேல் முறையீட்டுக்கு எடுத்து செல்ல ஆரக்கிள் திட்டமிட்டுள்ளது. 

(இந்தச் செய்தி ஸ்லாஷ்டாட் என்ற தகவல் தொழில் நுட்பம் தொடர்பான செய்திகளை விவாதிக்கும் வலைத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. அந்தத் தளத்தில் இது தொடர்பாக சூடான விவாதங்கள்  நடக்கின்றன)

நல்ல ஊழியர்களுக்கு ஏன் மோசமான வேலைகள் கிடைக்கின்றன (அல்லது வேலையே கிடைப்பதில்லை)


"நிறுவனங்களுக்குத் தேவையான ஊழியர்கள் ஏன் கிடைப்பதில்லை" என்ற கட்டுரை வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் கடந்த அக்டோபரில் (2011) வெளியானது. மூன்று தலைமுறைகளில் பார்த்திராத பொருளாதார நெருக்கடியின் காரணமாக கோடிக்கணக்கான படித்த, அனுபவம் வாய்ந்த ஊழியர்கள் வேலை இல்லாமல் இருக்கும் சூழலிலும் நிறுவனங்கள் திறமை படைத்த ஊழியர்களுக்கு பற்றாக்குறை இருப்பதாக சொல்கின்றன. 

பொருத்தமான கல்வியை வழங்காத கல்வி நிலையங்களையும், புலம் பெயரும் ஊழியர்களை போதுமான அளவு அனுமதிக்காத அரசாங்கத்தையும் பழிப்பதோடு மட்டுமில்லாமல் நல்ல சம்பளத்துடனான நல்ல வேலைகளில் சேர மறுக்கும் ஊழியர்களையும் குறை சொல்கின்றன நிறுவனங்கள்.

அந்தக் கட்டுரையை எழுதியவர் வேலை வாய்ப்பு மற்றும் மேலாண்மை துறைகளில் நிபுணரான பீட்டர் கேப்பல்லி. 'நிறுவனங்கள் அனைத்தும் திறமைக் குறைவு பற்றி ஒத்தக் கருத்தைக் கொண்டிருந்தாலும் நடைமுறையில் அதற்கான ஆதாரங்கள்  இல்லை' என்று முடித்திருந்தார்.  


'உண்மையில் குறை சொல்லப்பட வேண்டியவை வேலை கொடுக்கும் நிறுவனங்கள்தான்' என்பது அவரது முடிவு. 

அவருடனான ஒரு நேர்முகத்தை இங்கு படிக்கலாம்.  திறமை குறைவுகள் என்று சொல்லப்படுவதைப் பற்றிய ஒரு புத்தகத்தை அவர் சமீபத்தில் வெளியிட்டுள்ளார்.  


(இந்த செய்தி ஸ்லாஷ்டாட் என்ற தகவல் தொழில் நுட்பம் தொடர்பான செய்திகளை விவாதிக்கும் வலைத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. அந்தத் தளத்தில் இது தொடர்பாக சூடான விவாதங்கள்  நடக்கின்றன).