மீஉரை - html லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மீஉரை - html லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 12 ஆகஸ்ட், 2010

மீஉரை - அறிமுகம்

மென்பொருள் நிரலாளர் அல்லாதவர்களுக்கு html மீஉரை நிரல்

1. இணையத்தில் ஏதாவது ஒரு பக்கத்தைப் படித்துக் கொண்டிருக்கும் போது உலாவியின் மூல நிரலைப் பார்க்கவும் என்ற தேர்வை தேர்ந்தெடுத்தால், அந்தப் பக்கத்தை உருவாக்கிக்காட்டும் மூல நிரலைக் காணலாம்.

(பயர்பாக்சு உலாவியில்
View -> Page Source
அல்லது
ctrl-U)

2. http://www.google.com/ என்ற பக்கத்துக்குப் போய் மூல நிரலைப் பார்க்கவும். அதில் இருக்கும் பல வரிகளில் இவற்றை மட்டும் கவனிக்கவும்:

<html>
<head>
<title> </title>
</head>
<body>
</body>
</html>

  • மீஉரைக் கொக்கிகளுக்கு (<html> </html>) நடுவில் பக்கத்தின் உள்ளடக்கம் முழுவதும் தரப்பட்டிருக்கிறது.

  • தலைக் கொக்கிகளுக்கு (<head> </head>) இடையே தலைப்பகுதியில் பயன்படுத்த வேண்டிய விபரங்கள் தரப்பட்டிருக்கின்றன.

  • தலைப்புக் கொக்கிகளுக்கு (<title> </title> ) இடையே பக்கத்தின் தலைப்பு தரப்படுகிறது

  • உடற் கொக்கிகளுக்கு (<body> </body> ) இடையே பக்கத்தில் காண்பிக்க வேண்டிய உள்ளடக்கம் தரப்பட்டிருக்கிறது.
3.
  • உங்கள் கணினியில் ஒரு உரைத் தொகுப்பியை இயக்குங்கள். விண்டோசு பயன்படுத்திக் கொண்டிருந்தால் நோட்பேட் என்ற பயன்பாடை பயன்படுத்திக் கொள்ளலாம். மைக்ரோசாஃப்டு வேர்டு பயன்படுத்தக் கூடாது.

  • மேலே கொடுத்திருக்கும் மீஉரை நிரலை இந்தக் கோப்பில் உள்ளிடுங்கள், உங்களுக்குத் தேவையான விபரங்களைச் சேருங்கள்.
  • உங்கள் கோப்பின் உள்ளடக்கம் இப்படி இருக்க வேண்டும்.

<html>
<head>
<title> உண்மைத்தமிழன் </title>
</head>
<body>
உண்மைத்தமிழன் அனைவரையும் அன்போடு உளமார இரு கரம் கூப்பி வரவேற்கின்றான். வருக.. வருக.. நிறைய சுவையோடு பசியாறுக.. கொஞ்சம் இளைப்பாறுக..
</body>
</html>

4. இந்தக் கோப்பை சேமிக்க வேண்டும்.

1. File --> Save
2. Save in --> My Documents --> My Website
(My Website என்ற புதிய அடைவை உருவாக்கிக் கொள்ளவும்)
3. File Name --> webpage1.html
4. Files of type --> All files (*.*)

Save.

5. இப்போது பயர்பாக்சில் போய் File --> Open File --> (My Documents/My Website/webpage1.html) என்று தேர்ந்தெடுக்கவும்.

நீங்கள் உருவாக்கிய வலைத்தளப் பக்கத்தை உங்கள் உலாவி திரையில் இப்போது காட்டும். இதன் நிரல் மூலத்தைப் பார்வையிட்டால், நீங்கள் எழுதியை நிரலைப் பார்க்கலாம்.

மீஉரை - சுட்டிகள்

1. முந்தைய பகுதியில் தமிழில் உள்ளிட்ட எழுத்துக்கள் சரியாக தெரிவதற்கு கோப்பின் தலைப்பகுதிக்குள் ( இப்படி ஒரு வரியைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

<meta content="text/html; charset=UTF-8">

மெட்டா என்பது இந்தக் கோப்பைப் பற்றிய பின்னணி விபரங்கள். இதைப் பயன்படுத்தி வலை உலாவிக்கு பக்கத்தின் உள்ளடக்கத்தை காண்பிப்பதற்குத் தேவையான கூடுதல் தகவல்களை சொல்லலாம். கூகுள் போன்ற தேடுகருவிகளுக்கு உள்ளடக்கத்தின் குறிச்சொற்களைச் சொல்லலாம். இப்போதைக்கு, ஒருங்குறியில் காண்பிக்க வேண்டும் என்று சொல்லிக் கொள்வதோடு நிறுத்திக் கொள்வோம்.

2. அடுத்தக் கட்டம் இந்த வலைப்பக்கத்திலிருந்து இன்னொரு வலைப்பக்கத்துக்கு ஒரு சுட்டி அல்லது தொடுப்பு கொடுக்க வேண்டும். அந்தப் பக்கம் நம்முடைய அடைவிற்குள்ளேயே இருக்கலாம் (My Website), அதன் உள்ளே இருக்கும் இன்னொரு அடைவிற்குள் இருக்கலாம் (My Website/tamil-movies) அல்லது இன்னொரு இணையத் தளத்தில் இருக்கும் பக்கம் அல்லது படம் அல்லது கோப்பாக இருக்கலாம்.

மூன்றையும் செய்து பார்த்து விடலாம்.

3. webpage2.html என்று இன்னொரு கோப்பை உருவாக்குங்கள். முதலில் சொன்னது போலவே நோட்பேடில் கோப்பை உருவாக்க வேண்டும். .txt என்ற பின்னொட்டு இல்லாமல் .html என்ற பின்னொட்டோடு கோப்பு சேமிக்கப்பட வேண்டும்

<html>
<head>
<meta content="text/html; charset=UTF-8">
<title> உண்மைத் தமிழனின் வலைத்தளம் - தமிழ் திரைப்பட உலகம் </title>
</head>
<body>
நான் பார்த்து ரசித்த தமிழ்த் திரைப்படங்களைப் பற்றிய என்னுடைய கருத்துக்களை படிக்க.
</body>
</html>

tamil-movies என்ற உள்அடைவை My Website என்ற அடைவில் உருவாக்கி அதனுள் இந்தக் கோப்பை சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.

4. My Website/webpage1.html என்ற கோப்பை திறந்து இந்த வரியைச் சேருங்கள்.
<a href="tamil-movies/webpage2.html"> தமிழ்ப் படங்கள் </a>

மாற்றங்களை சேமித்து விட்டு, பயர்பாக்சில் கோப்பைத் திறந்து பாருங்கள், தமிழ்ப்படங்கள் என்று அடிக் கோடிட்டு ஒரு சொற்றொடர் தெரியும், அதன் மீது கிளிக்கினால், நமது இரண்டாவது கோப்பை திரையில் பார்க்கலாம்.

<a> </a> கொக்கிளுக்கு நடுவில் இடுவது திரையில் காண்பிக்கப்படும், <a>க்கு உள்ளேயே href= என்ற பண்பில், கிளிக்கினால் எங்கு போய்ச் சேர வேண்டும் என்ற பாதையையும், கோப்பின் பெயரையும் கொடுத்திருக்கிறோம். அவ்வளவுதான்!

5. தன்னுடைய வலைப்பதிவை இங்கிருந்து இணைக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?

My Website/webpage1.html என்ற கோப்பை திறந்து இந்த வரியைச் சேருங்கள்.
<a href="http://truetamilans.blogspot.com/"> உண்மைத் தமிழனின் வலைப்பதிவு</a>

அதே போல பக்கத்தில் காண்பிக்கப் பட வேண்டிய - உண்மைத்தமிழனின் வலைப்பதிவு என்பதை <a> </a>க்குள் கொடுத்து விட்டு, கிளிக்கினால் எங்கு போக வேண்டும் என்ற முகவரியை href= மேற்கோள் குறிகளுக்கு உள்ளே கொடுத்து விட வேண்டியது.

6. My Website என்ற அடைவுக்குள்ளேயே, இருக்கும் கோப்பை இணைக்க என்ன செய்ய வேண்டும்?

My Website/webpage1.html என்ற கோப்பை திறந்து இந்த வரியைச் சேருங்கள்.
<a href="webpage3.html"> என்னைப் பற்றி</a>

எந்தப் பாதையையும் குறிப்பிடாமல் கோப்பின் பெயரை மட்டும், மேற்கோள் குறிகளுக்குள், href என்ற பண்புக்கு குறிப்பிட்டால், இந்தக் கோப்பு இருக்கும் அதே அடைவுக்குள் தேடிப் பார் என்று கட்டளை. சொன்னதை கணினி கேட்கும்!

webpage3.html என்ற கோப்பை உருவாக்கி தேவையான உள்ளடக்கத்தைச் சேர்த்து, My Website என்ற அடைவுக்குள்ளேயே சேமித்துக் கொள்ளுங்கள்.

<html>
<head>
<meta content="text/html; charset=UTF-8">
<title> உண்மைத் தமிழனின் வலைத்தளம் - என்னைப் பற்றி </title>
</head>
<body>
நான் சென்னை மாநகரில் வசித்து ஊடகத்துறையில் பணிபுரிகிறேன்.
</body>
</html>

7. உங்கள் My Website/website1.html என்ற கோப்பு இப்போது இப்படி இருக்கும்.

<html>
<head>
<meta content='text/html; charset=UTF-8'>
<title> உண்மைத் தமிழன் </title>
</head>
<body>
உண்மைத்தமிழன் அனைவரையும் அன்போடு உளமார இரு கரம் கூப்பி வரவேற்கின்றான். வருக.. வருக.. நிறைய சுவையோடு பசியாறுக.. கொஞ்சம் இளைப்பாறுக.

<a href="tamil-movies/webpage2.html"> தமிழ்ப் படங்கள் </a>
<a href="http://truetamilans.blogspot.com/">உண்மைத் தமிழனின் வலைப்பதிவு </a>
<a href="webpage3.html"> என்னைப் பற்றி</a>
</body>
</html>

8. பக்கம் கொஞ்சம் கடுப்பாக மொட்டையாக இருக்குமே!
வரிக்கு வரி அழகாக பிரித்து போட்ட சுட்டிகள் எல்லாம் முதல் வரியுடன் ஒட்டிக் கொண்டு கச்சா முச்சாவென்று தெரிகிறது. அதற்கு என்ன செய்யலாம்?

மீஉரை - கொக்கிகள்

வீட்டில் துணி காயப்போடக் கட்டும் கொடிக்கு இரண்டு கொக்கிகள் தேவை. இரண்டுக்கும் நடுவில் கயிறு, கயிற்றின் மீது துணிகளைப் போட்டுக் கொள்ளலாம்.
  1. மீஉரை நிரலின் கொக்கிளும் இப்படி இரட்டையாகத்தான் பயன்படுகின்றன. இரண்டு கொக்கிகளுக்கும் நடுவில் பக்கத்தில் காண்பிக்க வேண்டிய உள்ளடக்கம்.

  2. சிலக் கொக்கிகள் ஒற்றையாகவே நின்று கொள்ள முடியும், அதைக் காட்டுவதற்கு <கோடு /> என்று, முதலில் வரும் கொக்கியிலேயே அடைப்புக் குறிக்குள் / என்ற முடிவு சின்னத்தையும் சேர்த்து எழுத வேண்டும்.

  3. ஆரம்பத்தில் பல வகைப்பட்ட கொக்கிகள் மீஉரை நிரலுக்கு வரையறுக்கப்பட்டாலும், அடுக்கடுக்கான அழகுச் சீட்டுகள் முறைமையில் இணையப் பக்கங்களின் உள்ளடக்கத்தையும், வடிவமைப்பையும் பிரித்துக் கையாள வேண்டும் என்ற அணுகுமுறையில் பெரும்பாலான உருவமைப்புக் கொக்கிகள் அழகுச்சீட்டுக் கோப்புகளில் வரையறுக்கப்படுகின்றன.

  4. கொக்கியின் கூடுதல் இயல்புகளை வரையறுக்க, ஆரம்பக் கொக்கியின் அடைப்புக்குறிகளுக்குள் இயல்பின் பெயரைக் குறிப்பிட்டு, சமன் குறிக்கு அப்பால் அதன் மதிப்பை, மேற்கோள் குறிகளுக்குள்ளாக சொல்ல வேண்டும்.
    நாம் ஏற்கனவே பார்த்த <a> என்ற கொக்கியின் ஒரு இயல்பு, href என்பது. <a href="wepage3.html"> என்று எழுதினால் <a> என்ற கொக்கியின் href என்ற இயல்பு மதிப்பு webpage3.html.

    இணைய உலாவிக்கு ஒவ்வொரு வகைக் கொக்கி, அவற்றின் இயல்புகள், ஒவ்வொரு இயல்பின் பலவகை மதிப்புகள் என்று இனம் கண்டு அவற்றிற்கேற்றவாறு பக்கத்தை பயனருக்கு காட்டும் வேலை.

  5. a என்ற கொக்கியின் பொருள், நங்கூரம்.

    திருச்சியில் இருக்கும் ஆற்றில் நிற்கும் படகிற்கு, சென்னையின் குளத்திலிருந்து ஒரு தொடுப்பு தர வேண்டும். ஆற்றுப் படகில் கட்டப்பட்ட கயிற்றின் இன்னொரு முனையை சென்னை குளத்தில் பொருத்தப்பட்ட நங்கூரத்தில் சேர்த்து விட்டால் போதும்.

    உங்கள் இணையப் பக்கத்தில் இருக்கும் நங்கூரக் கொக்கியில், போக வேண்டிய பக்கத்தின் முகவரியை கொடுத்தால், அதன் மீதும் சொடுக்கும் பயனர் அந்தப் பக்கத்துக்குப் போய்ச் சேர்ந்து விடுவார்.
இப்போது முந்தைய பகுதியில் பார்த்த கேள்விக்கு விடை காண்போம்.

நாம் உருவாக்கிய இணையப் பக்கத்தில் உள்ளடக்கம் எல்லாம் ஒன்றாக ஒட்டிக் கொண்டு தெரிகின்றன. நிரலில் இடைவெளி நிறைய விட்டு, வரி பிரித்து, பத்தி பிரித்து எழுதினாலும், உலாவியில் காட்டப்படும் போது எல்லாம் சேர்ந்து கொள்கின்றன.

இதில் இரண்டு பாடங்கள்

1. மீஉரை நிரல் எழுதும் போது மூல நிரலைப் படிப்பதற்கு வசதியாக, சொற்களுக்கு நடுவிலும், பத்திகளுக்கு நடுவிலும் தாராளமாக இடைவெளிகளை விடலாம். உலாவி, சொற்களுக்கு இடையே இருக்கும் ஒற்றை இடைவெளியை மட்டும் கணக்கில் வைத்துக் கொண்டு மற்ற இடைவெளிகளை எல்லாம் கண்டு கொள்ளாமல் விட்டு விடும்.

2. உலாவியில் காண்பிக்கப்படும் பக்கத்தில் பத்தி பிரிப்பு அல்லது வரி பிரிப்பு தேவை என்றால் கூடுதல் வேலை செய்ய வேண்டியிருக்கும்.

<பத்தி> </பத்தி>
<முறி> </முறி>

என்ற கொக்கிகளைப் பயன்படுத்தி வரி உடைப்பு செய்து கொள்ளலாம்.

webpage1.html என்ற கோப்பில் தடிப்பாகக் காட்டியுள்ள கொக்கிகளைச் சேருங்கள்.

<html>
<head>
<meta content='text/html; charset=UTF-8'>
<title> உண்மைத் தமிழன் </title>
</head>
<body>
<p>உண்மைத்தமிழன் அனைவரையும் அன்போடு உளமார இரு கரம் கூப்பி வரவேற்கின்றான். வருக.. வருக.. நிறைய சுவையோடு பசியாறுக.. கொஞ்சம் இளைப்பாறுக.</p>
<a href="tamil-movies/webpage2.html"> தமிழ்ப் படங்கள் </a> <br />
<a href="http://truetamilans.blogspot.com/">உண்மைத் தமிழனின் வலைப்பதிவு </a> <br />
<a href="webpage3.html">என்னைப் பற்றி</a> <br />
</body>
</html>

கோப்பை மாற்றி சேமித்து விட்டு பயர்பாக்சில் திறந்து பாருங்கள்.

"உண்மைத்தமிழன் அனைவரையும் அன்போடு உளமார இரு கரம் கூப்பி வரவேற்கின்றான். வருக.. வருக.. நிறைய சுவையோடு பசியாறுக.. கொஞ்சம் இளைப்பாறுக." என்பது ஒரு பத்திக்குள்ளும் அதனைத் தொடர்ந்து கொடுத்துள்ள நங்கூர தொடுப்புகள் ஒவ்வொன்றின் இறுதியிலும் ஒரு வரி முறிவும் பக்கத்தில் காட்டப்பட்டிருக்கும்.

இப்ப கொஞ்சம் பரவாயில்லை. ஆனா, இன்னும் அழகா இருக்கணுமே!

மீஉரை - பட்டியல்களும் படங்களும்

இவ்வளவு தமிழில் படிச்சாச்சு. முழுசா மீஉரை நிரல் அமைப்பில் என்னெல்லாம் இருக்கிறது என்று பார்க்க வேண்டும் என்று ஆர்வம் இருப்பவர்கள் http://w3schools.com/html/default.asp என்ற முகவரியில் இருக்கும் பாடங்களைப் பார்க்கலாம்.

வலைப்பக்க உள்ளடக்கத்தில் நிரல் எழுத நாம் இதுவரை பார்த்த கொக்கிகள் -
<a></a> - <நங்கூரம்></நங்கூரம்>
<br /> - <முறி />
<p></p> - <பத்தி></பத்தி>

இன்றைக்கு பட்டியல்களும், படங்களும்.

நாம் உருவாக்கும் இணையத்தளத்தில் மூன்று சுட்டிகளைச் சேர்த்திருந்தோம். மூன்றையும் ஒரு பட்டியலாகக் காட்ட வேண்டுமானால், இரண்டு வகைக் கொக்கிகள் இருக்கின்றன.

<வரிசை பட்டியல்> </வரிசை பட்டியல்> - <ol> </ol>
<வரிசையில்லா பட்டியல்> </வரிசையில்லா பட்டியல்) - <ul> </ul>

வரிசை எண்ணுடன் ஒவ்வொரு உருப்படியையும் ஒரு வரியில் காண்பிப்பது வரிசைப் பட்டியலின் பணி.
ஒரு பொட்டுடன் ஒவ்வொரு உருப்படியையும் ஒரு வரியில் காண்பிப்பது வரிசையற்ற பட்டியலின் பணி.

செய்ய வேண்டியது இவ்வளவுதான். நமது webpage1.html பக்கத்தில் போன பகுதியில் சேர்த்த <முறி> கொக்கிகளை நீக்கி விட்டு வரிசையான பட்டியல் கொக்கிகளைச் சேர்ப்போம்

<ol>
<li><a href="tamil-movies/webpage2.html"> தமிழ்ப் படங்கள் </a></li>
<li><a href="http://truetamilans.blogspot.com/">உண்மைத் தமிழனின் வலைப்பதிவு </a></li>
<li><a href="webpage3.html">என்னைப் பற்றி</a></li>
</ol>

மேலே சொன்ன வரிசை பட்டியல் கொக்கிகளை உருப்படிகள் பட்டியலுக்கு முன்னும் பின்னும் குறிப்பிட்டு விட்டு, ஒவ்வொரு உருப்படியையும் பிரித்துக் காட்ட <உருப்படி> </உருப்படி) என்ற கொக்கிகளைக் கொடுக்க வேண்டும். (<li> </li>)

கோப்பை சேமித்து பயர்பாக்சில் திறந்து பார்த்தால், தொடுப்புகள் இப்படிக் காட்டப்பட்டிருக்கும்.
  1. தமிழ்ப் படங்கள்

  2. உண்மைத் தமிழனின் வலைப்பதிவு

  3. என்னைப் பற்றி
1, 2, 3 என்று எண் கொடுத்து எழுதினால் முதலில் வருவது முதலிடம் பெற்றிருக்கிறது என்று பொருளாகி விடுமே! இப்படி எண் இல்லாமல் பட்டியல் போட வேண்டும் என்று நினைத்தால், <வரிசைப் பட்டியல்> கொக்கிகளுக்குப் பதிலாக, வரிசையற்ற பட்டியல் கொக்கிகளை மாற்றி விடுங்கள்.

<ul>
<li><a href="tamil-movies/webpage2.html"> தமிழ்ப் படங்கள் </a></li>
<li><a href="http://truetamilans.blogspot.com/">உண்மைத் தமிழனின் வலைப்பதிவு </a></li>
<li><a href="webpage3.html">என்னைப் பற்றி</a></li>
</ul>

பக்கத்தில் இப்படி தெரியும்.
இப்போ நம்ம புகைப்படத்தை அல்லது இன்னொரு படத்தை இந்தப் பக்கத்தில் சேர்க்கணும். அதற்கு <படம் /> என்று கொக்கி இருக்கிறது. படம் கொக்கியில் படக் கோப்பின் இருப்பிடத்தையும் பெயரை சுட்டிகளுக்காக நங்கூரம் கொக்கியில் கொடுத்தது போலக் கொடுத்தால் போதும்.

<படம் மூலக்கோப்பு="" />
<img src="http://img.photobucket.com/albums/v462/tamilsaran/DSC_0019.jpg" />

<a> கொக்கியில் hrefக்குக் கொடுத்தது போல இந்தப் படக் கோப்பு webpage1.html என்ற கோப்பு இருக்கும் அதே கணினியில் அதே அடைவில் அல்லது இன்னொரு அடைவில் இருக்கலாம், அல்லது இணைக்கப்பட்டுள்ள வேறு கணினிகளில் (இணையம் அல்லது அதற்கு நிகரான முறைமைகளின் மூலம் அணுக முடிகிற கணினிகள்) இருக்கலாம்.

மேலே சொன்ன வரியை webpage3.html என்ற பக்கத்தில் சேர்த்து விட்டால், என்னைப் பற்றி என்ற பக்கத்தில் இப்போது ஒரு புகைப்படமும் தெரியும்! so simple!

இந்த கொக்கிகளில் என்னென்ன இயல்புகளைச் சேர்க்கலாம் என்று பின்னொரு பகுதியில் பார்க்கலாம்.

மீஉரை - அழகுபடுத்தல்

ஒவ்வொரு மீஉரைக் கொக்கிக்கும் அதன் இயல்புகளைக் குறிப்பிட்டு, அந்த இயல்புகள் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லலாம் என்று பார்த்தோம். ஆரம்பத்தில் எல்லா விதமான இயல்புகளையும் இந்த முறையில் குறிப்பிடும் முறைமை இருந்தது.

அதில் பல குறைகள் இருந்ததால், ஒரு கொக்கியின் சிறப்பு இயல்புகளைத் தவிர, பொதுவாக எல்லா கொக்கிகளிலும் பயன்படுத்தக் கூடிய இயல்புகளை அழகுக் குறிப்புகளாகச் செயல்படுத்தும் முறைமை ஏற்பட்டது.

செயல்படுத்த வேண்டிய இயல்புகளை அழகு="பெயர்:குறிப்பு" என்று குறிப்பிட்டால் போதும். அழகு என்பது கொக்கியின் ஒரு இயல்பு, அதன் மதிப்பாக, நமக்கு வேண்டிய குறிப்புகளை எல்லாம் சேர்த்துக் கொள்ளலாம்.

நமது சுட்டியில் காண்பிக்கும் எழுத்துக்கள் தடிப்பாக இருக்க வேண்டும் நினைத்தால்.

<a href="tamil-movies/webpage2.html" style="font-weight:bold;"> தமிழ்ப் படங்கள் </a>

தமிழ்ப் படங்கள் என்பது தடிப்பான எழுத்துக்களாக காட்டப்படும்.
தமிழ்ப் படங்கள்

இதைப் போல நூற்றுக்கணக்கான அழகுக் குறிப்புகள் வரையறுக்கப்பட்டிருக்கின்றன.

காண்பிக்கப்படும் எழுத்துக்கள் மின்னி மறைந்து தோன்ற வேண்டும் என்று நினைத்தால்.

<a href="tamil-movies/webpage2.html" style="font-weight:bold;text-decoration:blink;"> தமிழ்ப் படங்கள் </a>

இப்போது உலாவியில் பக்கத்தைத் திறந்து பார்த்தால் தமிழ்ப்படங்கள் என்ற சுட்டி, தடித்த எழுத்துக்களில் மின்னி மறைந்து தோன்றும்.
தமிழ்ப் படங்கள்

ஒன்றுக்கு மேற்பட்ட அழகுக் குறிப்புகளைச் சேர்க்க,
பெயர்1:மதிப்பு1; பெயர்2:மதிப்பு2;
என்று வரிசையாக சேர்க்க வேண்டியதுதான்.