ஐலக்சி - ilugc லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஐலக்சி - ilugc லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

மென்பொருள் சுதந்திரதினம்

ஆகஸ்டு மாதம் 15ம் தேதி இந்திய சுதந்திர தினத்தைக் கொண்டாடினோம். இந்தியா எப்போது சுதந்திரம் பெற்றது என்று கேட்டால் இந்தியர் எல்லோருக்கும் விடை தெரியும் (தெரிந்திருக்க வேண்டும் என்று நம்பிக்கை :-) 1947ஆம் ஆண்டு ஆகஸ்டு 15ஆம் நாள்.

இந்தச் சுதந்திரத்தின் பிறகு நாம் ஏற்படுத்திக் கொண்ட அரசியலமைப்புச் சட்டத்தின் கீழான உரிமைகளும் கடமைகளும் நமக்கு அரசியல், சமூக தளங்களில் கிடைத்திருக்கின்றன.

அதே போல, நம்முடைய வாழ்வின் எல்லாப் பகுதிகளிலும் நமக்கு சுதந்திரம் இருக்கிறதா?  20ம் நூற்றாண்டின்  தகவல் தொழில் நுட்பப் புரட்சிக்குப் பிறகான கணினி உலகில் நமது உரிமைகள் எப்படி இருக்கின்றன? என்னென்ன அடிமைத் தளைகள் இருக்கின்றன?

'நாம் பயன்படுத்தும் மென்பொருட்கள் தொடர்பான நமது உரிமைகள் பறிக்கப்பட்டு வணிக நிறுவனங்களின் லாப நோக்கத்துக்காக நாம் கட்டுண்டிருக்கிறோம்' என்பது நம்மில் பலருக்குச் செய்தியாக இருக்கலாம்.

பயன்படுத்துபவர்கள், மாணவர்கள், மென்பொருள் துறையினரின் உரிமைகளைப் பறித்து தமது ஆதாயத்தைப் பெருக்கிக் கொள்ள முயலும் வணிக நிறுவனங்களுக்கு  (கிழக்கிந்திய கம்பெனி நினைவு வருகிறதா?) எதிராக போராட்டக் கொடி ஏற்றி, நமது உரிமைகளை மீட்டுத் தருவதற்காக 1980களிலிருந்தே உலகெங்கிலும் உள்ள சிந்தனையாளர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.

மென்பொருள் துறையின் வல்லுனர்கள் பலர் கட்டற்ற, மற்றவர்களின் உரிமைகளை மதிக்கக் கூடிய வகையில் மென்பொருட்களை உருவாக்கி வெளியிட்டு, பராமரித்து, மேம்படுத்தி வருகிறார்கள். வணிக நிறுவனங்களின் கட்டுத்தளைகளுடனான மென்பொருட்களுக்கு மாற்றாக கட்டற்ற மென்பொருட்கள் ஆயிரக்கணக்கில் இலவசமாகவும், விற்பனைக்கும் கிடைக்கின்றன.

இந்தக் கட்டற்ற மென்பொருட்களை கொண்டாடும் விதமாக உலகமெங்கும் மென்பொருள் சுதந்திர தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 

இந்தக் கொண்டாட்டங்களின் மூலம் உலகெங்கிலும் உள்ள பொதுமக்களுக்கு கட்டற்ற மென்பொருட்களை கல்விக் கூடங்களிலும், அரசு அலுவலகங்களிலும், வீட்டிலும், அலுவலகத்திலும் எல்லா இடத்திலும் பயன்படுத்துவதன் ஆதாயங்கள் எடுத்துச் சொல்லப்படுகின்றன.

நோக்கம்
எல்லா மக்களும் சுதந்திரமாக ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொள்ளவும், புதிய ஆக்கங்களை படைக்கவும், படைப்புகளை பகிர்ந்து கொள்ளவும் ஏதுவான வெளிப்படையான எல்லோரையும் அணைத்துச் செல்லும் தகவல் தொழில் நுட்ப சூழலை உருவாக்குவது.

குறிக்கோள்கள்
  • மென்பொருள் சுதந்திரத்தையும் அதற்காக உழைப்பவர்களையும் கொண்டாடுவது
  • மென்பொருள் சுதந்திரம் பற்றிய பொதுவான புரிதலை உருவாக்கி, கட்டற்ற மென்பொருட்களையும், பொதுவான தகுதரங்களையும் பயன்படுத்த மக்களை ஊக்குவித்தல்.
  • எல்லோருக்கும் கிடைக்கக் கூடிய எல்லோரும் பங்கேற்கக் கூடிய வாய்ப்புகளை ஏற்படுத்துவது
  • உருவாகி வரும் தகவல் சார்ந்த சமூகத்தில் பொறுப்புகளையும் கடமைகளையும் பற்றிய விவாதங்களை ஊக்குவித்தல்
  • இதே நோக்கத்தைக் கொண்டுள்ள நிறுவனங்களுடனும் தனிநபர்களுடனும் இணைந்து  செயல்படுதல். 
சென்னையில் மென்பொருள் சுதந்திரதினம்
ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் மூன்றாவது சனிக்கிழமை உலகெங்கிலும் கொண்டாடப்படும் இந்த நிகழ்வு இந்த ஆண்டு செப்டம்பர் 18ம் தேதி நடக்கவுள்ளது.

இந்திய லினக்சு பயனர் குழுவின் சென்னை (http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc.tamil) பிரிவைச் சேர்ந்த தன்னார்வலர்கள் இதைச் சிறப்பாகக் கொண்டாட ஏற்பாடுகள் செய்துள்ளார்கள்.  சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் கட்டற்ற மென்பொருட்கள் பற்றி விளக்கும் கண்காட்சியும் கலந்துரையாடல்களும் செப்டம்பர் 18ம் நாள் நடக்கும்.

1. இதில் கலந்து கொள்ள பொதுமக்களையும், மாணவர்களையும், பத்திரிகையாளர்களையும், அரசு ஊழியர்களையும், கணினி ஆர்வலர்களையும் அன்புடன் அழைக்கிறோம். இது பற்றித் தெரிந்து கொள்ள  இந்த என்ற வலைப்பக்கத்தைப் பாருங்கள்.

2. சென்னைக்கு வெளியில் வசிக்கும் இளைஞர்கள், தன்னார்வலர்கள் தத்தமது பகுதியில் மென்பொருள் சுதந்திர தினத்தைக் கொண்டாட ஏற்பாடுகள் செய்யலாம். உங்கள் கொண்டாட்டம் பற்றிய விபரங்களை  இந்தத் தளத்தில் பகிர்ந்து கொண்டால் உலகெங்கிலும் உள்ள மக்கள் அதைப் பார்வையிடுவார்கள்.

நமது கணினியில் இயங்கும் மென்பொருட்களை கட்டிப் போட்டுள்ள தளைகளை உடைத்து எறிவோம்.
எல்லோரும் பங்கேற்கக் கூடிய தகவல் தொழில் நுட்ப சமூகத்தை உருவாக்குவோம். 


மென்பொருள் வணிகக் கட்டுகளுக்குச் சாவுமணி

வியாழன், 12 ஆகஸ்ட், 2010

சென்னையில் தமிழில் உரையாடலாம் இனி....

கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் விவாதங்கள், பிறண்டல்கள், குத்தல்களுக்குப் பிறகு இந்திய லினக்சு பயனர் குழுவின் - சென்னை அமைப்பில் தமிழில் எழுதிக் கொள்ள தனி மடற்குழு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

லினக்சு, கட்டற்ற மென்பொருட்கள் பற்றி தெரிந்து கொள்ள, அது தொடர்பான பணிகளில் ஈடுபட ஆர்வம் உள்ளவர்கள், இந்த மடற்குழுவில் சேர்ந்து கொள்ளலாம். மடல்கள் எல்லாமே தமிழில் இருக்கும்.
http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc.tamil

ஆமாச்சு என்று அழைக்கப்படும் ஸ்ரீராமதாஸ் தமிழ்நாட்டில், தமிழில் கருத்துப் பரிமாற்றம் செய்யப்படும் உரிமைக்காக பல இடங்களில் போராடி வந்திருக்கிறார். அவர் கட்டற்ற தமிழ்க கணிமை தொடர்பான பணிகளில் இறங்கி, சென்னை லினக்சு பயனர் மடற்குழுவில் பங்கேற்கும் போது தமிழில் அஞ்சல் அனுப்ப ஆரம்பித்தார்.
  • ஆங்கில மடற்குழுவில் தமிழா!!!
  • தமிழ் தெரியாத உறுப்பினர்கள் என்ன செய்வார்கள்????
  • வேண்டுமானால், தமிழ் [Tamil] என்று ஒரு முத்திரை குத்தி தமிழ் மடல்களை அனுப்புங்கள்
  • தமிழில் எழுதினால் கூடவே ஆங்கில மொழிபெயர்ப்பும் இருக்க வேண்டும்.
இப்படி பல எதிர்ப்புகள் எழுந்த வண்ணம் இருந்தன. எல்லாவற்றுக்கும் தகுந்த பதில்கள் சொல்லி தனது தமிழ் அஞ்சல்களைத் தொடர்ந்து அனுப்பியபடி இருந்தார்.
  • தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் இயங்கும் மடற்குழுவில் தமிழில் பேசுவது இயல்பானது, அதைத் தொடர்ந்து செய்ய வேண்டும்
  • 'ஆங்கிலத்தில் எழுதத் தயங்கும் உறுப்பினர்கள் என்ன செய்வார்கள்' என்று ஆங்கில மடல்களை தடுக்க முடியுமா? தமிழ் தெரியாதவர்கள் தமிழ் கற்றுக் கொள்ள வேண்டும்.
  • முத்திரை எல்லாம் குத்த முடியாது.
  • ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பது கூடுதல் பணிச்சுமையாகி விடும்.
மூன்று ஆண்டுகளில் ஏற்கனவே இரண்டு மூன்று முறை நீண்ட விவாதங்கள் ஏற்பட்டு ஓய்ந்தன.

இது தொடர்பான இன்னொரு குழாயடிச் சண்டை சமீபத்தில் மீண்டும் ஆரம்பித்தது.
  • [Tamil] என்று முத்திரை குத்திக் கொள்ளத் தயாராக இருப்பதாக சமாதானத்துக்கு வந்த தமிழ் தரப்புக்கு அப்போதும் தீர்வு கிடைக்கவில்லை.
  • 'தமிழுக்கு என்று தனியாக ஒரு மடல் குழு ஏற்படுத்திக் கொள்வோம்' என்பதும் நிராகரிக்கப்பட்டது.

  • 'தமிழில் எழுதினாலும் மடலின் தலைப்பு ஆங்கிலத்தில்தான் இருக்க வேண்டும், தமிழில் எழுதியவற்றுக்கு ஆங்கில மொழிபெயர்ப்பையும் சேர்த்தே அனுப்ப வேண்டும்' என்று விதி முறை ஏற்படுத்தினார்கள்.
  • "தமிழ் பேசுபவர்கள் மட்டும்தானா சென்னையில், மலையாளம், இந்தி, தெலுங்கு, மராட்டி பேசுபவர்களும் இருக்கிறோம். எல்லோரும் அவரவர் மொழியில் மடல் அனுப்ப ஆரம்பித்தால் நிலைமை என்ன ஆகும்?"

  • "நீங்கள் தமிழில் அனுப்பும் தகவல்கள் எங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கலாம், அவற்றை எப்படி விட்டுக் கொடுப்பது"
இப்படி ஆரம்பித்து,
  • "இந்தியாவில் நூற்றுக்கணக்கான மொழிகள் இருக்கின்றன. உலகத்தில் ஆயிரக்கணக்கான மொழிகள் இருக்கின்றன. இவை எல்லாவற்றுக்கும் மடற்குழுவில் அனுமதி அளித்தால் நிலைமை என்ன ஆகும்?"
என்று வாதித்து
  • அப்படி அவருக்கே தெரியாத மொழிகளில் தொடர்பே இல்லாத உரைத் தொகுப்பு ஒன்றை கூகுள் மொழிமாற்றியில் தயாரித்து, வரிசையாக பல மடல்களை குழுவுக்கு அனுப்பி அடாவடி செய்தார் ஒருவர்.
மடற்குழுவை நடத்த இடம் அளித்து, நிர்வகித்து வந்த பேராசிரியர் இந்தக் கட்டத்தில் தலையிட்டு, 'எந்தெந்த மொழியில் மடற்குழு வேண்டும் என்று கேட்கப்படுகிறதோ அந்தந்த மொழிகளில் தனி மடற்குழு அமைத்துத் தருகிறேன்' என்று அறிவித்தார்.

அதன்படி ilugc.tamil என்ற மடற்குழு ஏற்படுத்தப்பட்டு இன்று முதல் செயல்பட ஆரம்பித்து விட்டது.

ஆங்கிலத்தில் செயல்படும் மடற்குழுவின் 2300 உறுப்பினர் எண்ணிக்கையை விட அதிகமான பேர் தமிழ் குழுவில் பங்கேற்று பலன் பெறுவார்கள் என்பது நம்பிக்கை.
  • தமிழ் நாட்டில் பொறியியல் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை சில லட்சங்களுக்குக் குறையாதது.
  • தமிழ் பேசும் கணினி பணியாளர்களின் எண்ணிக்கை இன்னும் பல லட்சங்கள்.
  • கணினியில் கட்டற்ற மென்பொருட்கள் பயன்படுத்த விரும்பும் தமிழ் ஆர்வலர்கள்
என்ற பல்வேறு தரப்பினருக்கும் பேருதவியாக இருக்கக் கூடிய இந்த மடற்குழு சிறப்பாக செயல்பட்டால், முதல் ஆண்டில் 50,000 உறுப்பினர்கள் வரை பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.