தமிழ்கணிமை - tamil லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ்கணிமை - tamil லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 31 ஜனவரி, 2012

தமிழ் எழுத்துரு தகுதரம்

1997 வாக்கில் டிஸ்கி என்று தமிழ் எழுத்துருக்களில் இட அமைவை வெளிநாட்டுத் தமிழர்கள் உருவாக்கியிருந்தார்கள். அப்போது இருந்த 8 பிட் எழுத்து அமைப்பு முறையில் மொத்தம் 256 இடங்கள்தான். முதல் 7 பிட்டுகளுக்கான 128 இடங்கள் அஸ்கி எனப்படும் அமெரிக்க எழுத்துக்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தன. மற்ற மொழிகள் ஒவ்வொன்றும் அடுத்த 128 இடங்களில் தமது எழுத்துக்களை பொருத்திக் கொள்ள முடியும். தமிழ் எழுத்துக்களை அப்படி மேல் 128 இடங்களில் பொருத்தியது tscii என்ற டிஸ்கி தகுதரம்.

அதை ஏற்றுக் கொள்ளாமல் 1999 மாநாட்டில் tab, tam என்று இரண்டு தகுதரங்களை அறிவித்தார்கள். டேப் என்பது தமிழ், ஆங்கிலம் இரண்டையும் ஒரே எழுத்துருவில் அடிக்க வேண்டி உருவானது. 128 இடங்களில் அஸ்கியும் அடுத்த 128 இடங்களில் தமிழ் எழுத்துக்களுக்கான ஒதுக்கீடும். இதற்கும் டிஸ்கிக்கும் தொடர்பே இல்லாமல் இருந்தது. டேம் என்பது 256 இடங்களையும் தமிழ் எழுத்துக்களுக்காக பயன்படுத்துவது. டேம் மூலம் தமிழ் அச்சுத் துறைக்கான எழுத்துக்கள் அனைத்தும் சேர்க்கப்பட்டிருந்தன.

ஒவ்வொரு பிட் அதிகரிக்கும் போது எழுத்துக்களுக்கான இடம் இரண்டு மடங்காகும்.
2 பிட் - 4 இடங்கள்
3 பிட் - 8 இடங்கள்
4 பிட் - 16 இடங்கள்
5 பிட் - 32 இடங்கள்
6 பிட் - 64 இடங்கள்
7 பிட் - 128 இடங்கள்
8 பிட் - 256 இடங்கள்

8 பிட் முறையிலான டிஸ்கி, டேப் அல்லது பிற மொழிகளுக்கான அமைப்பில் இருந்த மிகப்பெரிய சிக்கல் அவற்றை பல மொழிகளுக்கு ஒரே நேரத்தில் பயன்படுத்த முடியாது என்பதுதான். உதாரணமாக தமிழ் எழுத்துருவில் 142வது இடம் க என்ற எழுத்துக்கு ஒதுக்கப்பட்டிருக்கும். அதே இடம் இந்தியில் இந்தி கவுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும். இதனால் ஒரே எழுத்துருவைப் பயன்படுத்தி பல மொழிகளை எழுத முடியாமல் இருந்தது.

டிஸ்கி உருவாக்கிப் பயன்படுத்திக் கொண்டிருந்த வெளிநாட்டுத் தமிழர்களின் முகாமில் நான் இருந்தேன். இந்த புதிய தகுதரங்களுக்கு முன்பாகவே நாங்கள் டிஸ்கியின் அடிப்படையில் அமைந்த எழுத்துருக்களையும், விசைப்பலகை இயக்கிகளையும் பயன்படுத்திக் கொண்டிருந்தோம். தமிழ்நாட்டு கணினி அறிஞர்கள் வேண்டுமென்றே இந்த பயன்பாட்டை புறக்கணித்து விட்டார்கள் என்று நீண்ட விவாதங்கள் நடந்தன. இணையத்தில் நடந்த விவாதங்களில் இயல்பாகவே டிஸ்கிக்கு ஆதரவு அதிகமாக இருந்தது. கடைசி வரை நான் டிஸ்கி எழுத்துக்களைத்தான் பயன்படுத்திக் கொண்டிருந்தேன். டேப் எழுத்துருக்கள் தமிழ் இணையதளங்களை சிலவற்றைப் பயன்படுத்த மட்டுமே நிறுவிக் கொண்டேன்.

இந்த சச்சரவுக்கு வெளியிலிருந்து முற்றிலும் வேறுபட்ட தீர்வு/முடிவு வந்தது. இஸ்கி என்று இந்திய மொழிகளுக்கான தகுதரம் ஒன்று இந்தி மொழியின் அடிப்படையில் எல்லா இந்திய மொழிகளுக்கும் உருவாக்கப்பட்டிருந்தது. யூனிகோட் உருவாக்கப்பட்ட போது மத்தியிலிருந்து இந்திய மொழிகளுக்கு அந்த ஒதுக்கீட்டை அனுப்பி விட்டார்கள். டேப், டிஸ்கி என்று அடித்துக் கொண்டிருந்த தமிழ்ச்சூழல் அதில் கவனம் செலுத்தவேவில்லை. யூனிகோட் தகுதரம் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்ட பிறகுதான் விழித்துக் கொண்டார்கள்.

யூனிகோட் என்பது 16 பிட் என்கோடிங்.
16 பிட் எழுத்துருவில்
9 பிட் - 512 இடங்கள்
10 பிட் - 1024 இடங்கள்
11 பிட் - 2048 இடங்கள்
12 பிட் - 4096 இடங்கள்
13 பிட் - 8192 இடங்கள்
14 பிட் - 16384 இடங்கள்
15 பிட் - 32768 இடங்கள்
16 பிட் - 65536 இடங்கள்

இது மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட விளக்கம். முழு விபரங்களையும் இங்கு பார்த்துக் கொள்ளலாம். http://en.wikipedia.org/wiki/Unicode

இந்த இடங்கள் உலகின் எல்லா மொழிகளுக்கும் ஒதுக்கப்பட்டன. ஒரு மொழிக்கான இடத்தில் இன்னொரு மொழிக்கான எழுத்துக்கள் தலையிடுவதில்லை. அதனால் கணினியின் ஒரே ஆவணத்தில் எல்லா மொழிகளையும் எழுதுவதற்கான சாத்தியம் ஏற்படுத்தப்பட்டது. யூனிகோடை பெரிய மென்பொருள் நிறுவனங்கள் உடனடியாக ஏற்றுக் கொண்டன. விண்டோஸ் எக்ஸ்பி வெளியீட்டில் தமிழுக்கான யூனிகோடு ஆதரவு முழுமையாக இருந்தது. லதா என்ற எழுத்துருவையும் மைக்ரோசாப்டு உருவாக்கியிருந்தது.

அது வரை உருவாக்கியிருந்த டிஸ்கி, டேப் எழுத்துருக்கள் சீக்கிரமே வழக்கு ஒழிந்து அல்லது குறைந்து போயின. இப்போது இணையத்தில் பார்த்தால் கிட்டத்தட்ட எல்லா தமிழ் இணைய தளங்களும் ஒருங்குறி எனப்படும் யூனிகோடு தகுதரத்தில்தான் எழுத்துக்களை காண்பிக்கின்றன. மதுரைத் திட்டம் தளத்துக்குப் போனால், ஆரம்ப கால புத்தகங்களை டிஸ்கி எழுத்துரு வடிவத்தில் பெற்றுக் கொள்ள முடியும். சுஜாதாவின் வழிகாட்டலில் ஆரம்பித்திருந்த அம்பலம் மின் பத்திரிகையில் டேப் எழுத்துக்கள் பயன்பட்டன.

டேப், டிஸ்கி எழுத்துருக்கள் அடிப்படையிலான மோதல்கள் நெருங்கிய நண்பர்களுக்கிடையே கூட இருந்தது. அது பெரும்பாலும் தமிழ்நாட்டில் வாழ்ந்த கணினியாளர்களுக்கும் இணையத்தில் செயல்பட ஆரம்பித்திருந்த சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா வாழும் தமிழ் கணினியாளர்களுக்கும் இடையிலானதாகவே இருந்தது. இந்த போட்டியும், சச்சரவும் தமிழ்க் கணிமைக்கு பெருமளவு பின்னடைவைக் கொடுத்ததோடு மட்டுமில்லாமல், யூனிகோடு தகுதரத்தில் தமிழின் இயல்புக்கு முற்றிலும் பொருந்தாத இந்தி எழுத்துக்களின் அடிப்படையிலான ஒதுக்கீட்டுக்கு வழி வகுத்தது. அந்தச் சுமையை தமிழ் இன்று வரை சுமந்து கொண்டுதான் இருக்கிறது. இன்னும் கண்ணுக்கெட்டும் தூரம் வரை அதை சுமக்க வேண்டியிருக்கிறது என்பதுதான் நிதர்சனம்.

அது என்ன சுமை?

தமிழில் மொத்தம் 247 எழுத்துக்கள் என்று நமக்கெல்லாம் தெரியும். மற்ற குறியூடுகளுக்கும் சேர்த்து 256 இடங்கள் வாங்கியிருந்தால் தமிழ் எழுத்துக்கள் அனைத்தையும் பொருத்திக்கொண்டிருக்கலாம். முதலாவதாக தமிழ் மொழிக்கு 128 இடங்கள்தான் ஒதுக்கப்பட்டது. அதனால் உயிர் எழுத்து 12, மெய்யெழுத்து 18 இடம் ஒதுக்கினார்கள். உயிர்மெய் எழுத்துக்களை கூட்டெழுத்துக்களாக எழுத்துருக்கள் கையாள வேண்டும். இரண்டாவதாக, இப்படிப்பட்ட கூடுதல் சுமையிலும் ஒதுக்கீட்டை இந்தி எழுத்துக்களின் அடிப்படையில் அமைத்திருந்தார்கள். இந்தியில் க உச்சரிப்புக்கு 4 எழுத்துக்கள் இருந்தன. தமிழ் க வை இந்தி க இருக்கும் இடத்தில் வைத்து விட்டு அடுத்த 3 இடங்களை காலியாக விட்டு வைத்தார்கள். (http://unicode.org/charts/PDF/U0B80.pdf)

இப்படி தமிழுக்கு முற்றிலும் பொருத்தமற்ற ஒரு ஒதுக்கீட்டை செய்திருந்தார்கள். இதை சரி செய்வது என்பது இப்போதைக்கு சாத்தியமில்லைதான். இதற்குள் நூற்றுக்கணக்கான பயன்பாடுகள், ஆயிரக்கணக்கான எழுத்துருக்கள், லட்சக்கணக்கான இணைய தளங்கள், கோடிக்கணக்கான ஆவணங்கள் ஒருங்குறி முறையில் உருவாகியிருக்கின்றன. இவற்றை எல்லாம் மாற்றும் முயற்சி, நாள் போகப் போக கடினமாகிக் கொண்டேதான் போகும்.
இதைப்பற்றிய விவாதங்களின் இரண்டு பக்கங்கள்
http://www.kanithamizh.in/unicode-il-tamil.htm (யூனிகோடு ஒதுக்கீட்டை குறை சொல்லி)
http://ezilnila.com/archives/769 (யூனிகோடு ஒதுக்கீட்டை ஆதரித்து)

யூனிகோடுக்கு அடுத்த தகுதரம் உருவாக்கப்படும் போது உறுதியாக தமிழுக்கான தனித்தன்மையான ஒதுக்கீடு கோரப்படுவது ஒரு வழி.

சனி, 28 ஆகஸ்ட், 2010

தமிழில் இணையப் பயன்பாடுகள்

இப்போதைய பயன்பாடுகள்

  1. தமிழ்மணம், தமிழிஷ் இரண்டும் தமிழுக்காகவே இணையத்தில் உருவாகி பயன்படுத்தப்படுகின்றன.
  2. 1990களில் மன்றமையம் என்ற forumhub தமிழ் விவாதங்களுக்குப் பயன்பட்டது
  3. மதுரைத் திட்டம் என்று தமிழ் மின்னூல் திட்டம் web 2.0 நாட்களிலும் web 0.5 வடிவத்திலேயே செயல்பட்டு வருகிறது.
  4. யாஹூ, கூகுள் மடற்குழு சேவைகளைப் பயன்படுத்தி தமிழ் மடற்குழுக்கள் இயங்குகின்றன.
  5. தமிழ் நாளிதழ்கள், வார இதழ்கள், இணைய இதழ்கள் பல செயல்படுகின்றன.
  6. தமிழ் நூலகம் (சென்னை நூலகம்), புத்தக விற்பனைத் தளங்கள் சில இருக்கின்றன.
  7. கூகுளில் தமிழ் இணையத் தளங்களைத் தேடும் வசதி கிடைக்கிறது
  8. http://thevaaram.org/ 
    http://www.noolaham.net
    தமிழ் மரபு அறக்கட்டளையின் பணியும் கருதத் தக்கது.

ஆங்கிலத்தில் பயன்படும் ஆனால் தமிழில் இன்னமும் இல்லாத பயன்பாடுகள்

  1. அமேசான் போன்ற பொதுவான விற்பனைத் தளம்
  2. ஃபேஸ்புக் அல்லது லிங்க்ட்இன் அல்லது ஆர்குட் போன்று உறவுகளை வளர்க்க உதவும் பயன்பாடுகள். இப்போது இருப்பதை தமிழர்களும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். தமிழர் சமூகத்துக்குப் பொருத்தமாக உருவாக்கினால்?
  3. செய்தி விவாதத் தளங்கள் - slashdot.org போல
  4. திசை காட்டும் சேவைகள் - google maps போல?
  5. ஒருங்கிணைந்த தகவல் பரிமாற்றச் சேவை - google voice போல?

தமிழ் சமூக வளர்ச்சிக்கு என்று தனியாக உருவாக்கும் சாத்தியங்கள்

  1. ஐந்திணைகள் சார்ந்து நிலவரைபடம் உருவாக்குதல்
  2. தமிழக வரலாற்றைத் தொகுக்கும் ஒரு விக்கி பயன்பாடு. இதில் தமிழ் அறிந்தவர்கள் எளிதில் பயன்படுத்தும்படியான இடைமுகம் இருக்க வேண்டும்.

இன்னும் நமது கலாச்சாரத்தை மட்டும் சார்ந்த பயன்பாடுகள் நாம்தான் உருவாக்க வேண்டியிருக்கும். அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் அதற்கு ஆர்வமே இருக்காது.

தமிழில் தொழில் நிறுவனங்களுக்கான மென்பொருட்கள் செய்வது

செப்டம்பர் 28ம் தேதி மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் நடந்த கட்டற்ற தமிழ்க் கணிமை கருத்தரங்கில் நடந்த கலந்துரையாடலுக்கான குறிப்புகள்.

தொழில் நிறுவனங்களுக்கு தமிழில் மென்பொருள் பயன்பாடுகள் தேவையா? என்ற கேள்வி முதலில் எழும். தொழில் நிறுவனங்களையும், நிறுவனங்களின் செயல்பாடுகளின் பிரிவுகளையும் பார்த்து இதற்கு விடை சொல்ல முயற்சிக்கலாம்.

தமிழில் மென்பொருட்களுக்கான சந்தை - தமிழ்நாடு, சிங்கப்பூர், இலங்கை, மலேசியா போன்ற தமிழ் பேசும், தமிழ் அலுவல் மொழியாக இன்னும் இருந்து வரும் நாடுகளில் இருக்கிறது.

மற்ற இடங்களை விட தமிழ்நாட்டில் இதற்கான தேவை அதிகமாக இருக்கிறது.

நிறுவன வகைப்பாடுகள்

  • பெரிய நிறுவனங்கள், ஏற்கனவே மென்பொருள் பயன்பாடுகளை பெருமளவு பயன்படுத்துபவர்கள். இந்த மென்பொருள் பயன்பாடுகள் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே இருக்கின்றன.
  • நடுத்தர நிறுவனங்கள், நிறுவனத்தில் சில செயல்பாடுகளுக்கு மென்பொருட்களை பயன்படுத்துபவர்கள். இவையும் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே இருக்கின்றன.
  • சிறு நிறுவனங்கள். நிறுவன மேலாண்மைக்கு மென்பொருள் எதையும் பயன்படுத்தாமல் இருப்பவர்கள். 

செயல்பாட்டுப் பிரிவுகள்

  • கணக்கியல் மற்றும் நிதித் திட்டமிடல்
  • பொருள் வரத்து, செலவு, சரக்குக் கையிருப்பு
  • இயந்திரங்கள் பராமரிப்பு, உதிரிப் பாகங்கள்
  • ஊழியர் வருகைப்பதிவு, சம்பளப் பட்டியல், பணி வாழ்க்கை விபரங்கள்
  • உற்பத்தி மேலாண்மை மற்றும் தரக்கட்டுப்பாடு
  • ஏற்றுமதி, உள்ளூர் விற்பனை மேலாண்மை
  • விற்பனையாளர்களுடனும் வாடிக்கையாளருடனும் தகவல் பரிமாற்றம்
இன்றைய நிலைமை என்ன என்று பார்ப்போம். 


  1. கணக்கியல் மற்றும் நிதித் திட்டமிடல் எல்லா நிறுவனங்களுக்குமே மென்பொருள் பயன்பாட்டில் செய்யப்படுவதாக வைத்துக் கொள்ளலாம். நடுத்தர நிறுவனங்களில் சொந்தமாக டேலி வாங்கி நிறுவிக் கொள்கிறார்கள். சின்ன நிறுவனங்களின் கணக்காளர்/தணிக்கையாளர் விபரங்களை வாங்கி அவர்களது அலுவலக டேலி மென்பொருளில் உள்ளிட்டு அறிக்கை எடுத்துக் கொடுக்கிறார்கள்.

    இப்படி எல்லா நிறுவனங்களுமே கணினி வழி பயன்பாட்டில் போனதற்கு முக்கிய காரணம், அரசாங்க விதிமுறைகளும், அதைப் பின்பற்ற வேண்டியதற்கான தேவைகளும் டேலி போன்ற மென்பொருட்களில் பூர்த்தியாவதால்தான்.
  2. வாடிக்கையாளர்களுடன் தகவல் பரிமாற்றம் செய்து கொள்ள மின்னஞ்சல் எல்லோருமே பயன்படுத்துகிறார்கள்
  3. ஏற்றுமதி ஆவணங்கள் தயாரிக்க மிகக் குறைந்த அளவில் மைக்ரோசாப்டு ஆஃபிஸ் பயன்பாட்டில் வார்ப்புருக்கள் ஏற்படுத்தி பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

பெரிய நிறுவனங்களைத் தவிர்த்த பிற நடுத்தர மற்றும் சிறு நிறுவனங்களில் பொதுவாக மென்பொருள் பயன்பாடுகளை ஒரு செலவினமாகத்தான் பார்க்கிறார்கள் - முதலீடாக பார்ப்பதில்லை. அதனால், அரசாங்க சட்டங்கள், வாடிக்கையாளர் தேவை என்று கட்டாயம் வந்தால் தவிர கணினி அல்லது மென்பொருள் பயன்பாட்டில் முதலீடு செய்வதில்லை.

மென்பொருள் பயன்பாடுகளின் பலன்களை நேரடியாக நிறுவன உரிமையாளர்களும் தலைமை மேலாளர்களும் பயன்படுத்தி உணர முடியாததால், தரவு உள்ளிட சில ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வைத்திருக்கும் ஊழியர் மூலமாகவே மென்பொருள் தேவைகளை எடை போடுகிறார்கள்.

நிறுவன உரிமையாளர்களும், தலைமை மேலாளர்களும் நேரடியாக மென்பொருள் பயன்பாடுகளைப் பயன்படுத்தாமல் இருப்பதற்கான பெரிய தடைகள்

  1. பயனர் இடைமுக மொழி தமிழில் இல்லாமல் இருப்பது
  2. பயன்பாட்டின் வடிவமைப்பு அவர்கள் புரிந்து கொள்ள முடியாமல் இருப்பது. 

என்ன தீர்வு?

இந்த இரண்டுக்கும் தீர்வு காண, நம்ம ஊரின் தேவைகளுக்கேற்ப புதிதாக உருவாக்கப்படும் மென்பொருள் பயன்பாடுகள் தேவைப்படுகின்றன.

கூகுள் தேடல் வந்து ஏற்கனவே கல்லா கட்டிக் கொண்டிருந்த யாஹூவையும் அல்டாவிஸ்டாவையும் தூக்கிச் சாப்பிட்டு விட்டது போல, ஜிமெயில் மூலமாக மற்ற இணையப் பக்கவழி மென்பொருள் சேவையில் முந்தி விட்டது போல நம்ம ஊர் சூழலிலும் புதிய ஒரு மென்பொருள், பயனர்களுக்கு ஏற்றபடி செயல்படும் வடிவமைப்புடன் வந்தால் ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் டேலி போன்றவற்றைக் கூடத் தூக்கிச் சாப்பிட்டு விடலாம்.

எந்த மாதிரியான துறைகள் இருக்கின்றன:

  1. முதன்மைத் துறை
    விவசாயம், மீன்பிடித்தல், தோட்டத் துறை, சுரங்கத் துறை
  2. தொழில் துறை
    உற்பத்தி நிறுவனங்கள் - வாகன உற்பத்தி, காலணி உற்பத்தி, விளையாட்டுப் பொருட்கள் செய்வது போன்றவை
  3. processing நிறுவனங்கள் - சாயமூட்டும் தொழிற்சாலை, அச்சுத் தொழில் போன்றவை, தோல் பதனிடுதல்
  4. சேவைத் துறைகள்
    விற்பனைக் கடைகள் - கட்டிடப் பொருட்கள், மளிகைப் பொருட்கள், மருந்துக் கடை, தின்பண்டக் கடை, துணிக்கடை, ஃபேன்ஸி கடைகள், பால்,
  5. சேவை நிலையங்கள்
    உணவகங்கள், தங்கும் விடுதிகள், துரித அஞ்சல் சேவைகள், கல்வி நிறுவனங்கள், பயிற்சி நிறுவனங்கள், மருத்துவர்கள், திரைப்பட அரங்குகள்
  6. திரைப்படத் தயாரிப்பு, பதிப்பகம், தரகு வியாபாரம், கட்டுமானத் துறை, வழக்கறிஞர்கள், மருத்துவர்கள்

இந்தச் சந்தையின் அளவு என்ன?
ஒரு ஒப்பீடு

தமிழ் நாட்டின் மக்கள் தொகை - 70 மில்லியன்
தமிழ் நாட்டின் மென்பொருள் சந்தை மதிப்பு - 5 பில்லியன் டாலர்கள் ஏற்றுமதி, உள்ளூர் நுகர்வு???

அமெரிக்காவின் மக்கள் தொகை - 300 மில்லியன்
அமெரிக்காவின் மென்பொருள் சந்தை மதிப்பு - 130 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (தலைக்கு 450 டாலர்கள் = 20000 ரூபாய்கள்)

இத்தனை கோடி மதிப்பிலான மென்பொருள் பயன்பாடுகள் உருவாக்கப்பட்டு விற்கப்படும் வாய்ப்புகள் இருக்கின்றன.

இது ஏற்கனவே தயாராக இருக்கும் சந்தை இல்லை. இதில் இறங்குபவர் துணிந்து பணத்தையும் நேரத்தையும் செலவழித்து சந்தையை உருவாக்க வேண்டியிருக்கும்.

ஏற வேண்டிய மலைகள்

மென்பொருள் பணிச்சூழல் ஒன்று உருவாக்க வேண்டியிருக்கும்

1. தொழில்/வணிக நிறுவனங்களுக்கான மென்பொருள் பயன்பாட்டுக்கான கணினி வடிவமைப்பு
2. தொழில் வணிக நிறுவனங்களுக்கான  மென்பொருள் பயன்பாடுகளை இயக்கத் தேவையான இயங்குதளம்
3. மென்பொருள் பயன்பாடுகள் பல
பயன்பாடுகளுக்குத்தான் கணினி வாங்குகிறார்கள்

விற்பனை வழிமுறைகள்

  1. பெட்டியில் பயன்பாடு - கணினி பயன்படுத்தாத அல்லது மற்ற கணினிகளை விட்டுப் புதுக்கணினியில் பயன்படுத்த விரும்புபவர்களுக்குப் பெட்டியை வாங்கிப் போய் மின்னிணைப்புக் கொடுத்து இயக்கினால் பயன்பாடு செயல்படும்படியான வசதி
  2. கணினியில் நிறுவிப் பயன்படுத்தும் குறுந்தகடு
  3. கணினியில் மாயச் சூழலில் பயன்பாடு - குறுவட்டு ஒன்றில் பயன்பாடு இயங்கத் தேவையான சூழல் மென்பொருட்கள் எல்லாவற்றையும் உள்ளடக்கி வினியோகித்தால், ஏற்கனவே பயன்படுத்திக் கொண்டிருக்கும் கணினியில் நிறுவப்பட்டுள்ள இயங்குதளத்தை பாதிக்காமல் பயன்பாட்டைப் பயன்படுத்தும் வசதியை அளிக்கலாம்.

வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010

காலக்கண்ணாடி

2008
  • தமிழகத்தில் மின்னணு கருவிகள் (electronic appliances) வாங்கினால் தமிழிலேயே நம் மக்களுக்கு எளிதாகப் புரியும் இடைமுகத்துடன் (interface) கிடைக்கின்றன.
  • கணினியில் பயன்படுத்தத் தேவைப்படும் மென்பொருட்கள் அனைத்தும் தமிழ் மட்டும் தெரிந்த ஒருவர் கூட பயன்படுத்தும் வகையில் கிடைக்கின்றன.
  • தமிழ் மாணவர் எவரும் ஆங்கில அறிவுக் குறைவால் வாய்ப்பை இழக்கும் நிலை மாற ஆரம்பிக்கிறது.
2010
  • தமிழில் அறிவுக் கருவூலங்கள் (encyclopedia) பெருகி, யாரும் தமிழ் வழியே உலகின் அறிவுச் செல்வங்களை அணுகலாம் என்ற நிலைமை.
  • தமிழக அரசுப் பணிகள் யாவும் தமிழிலேயே நடைபெறுகின்றன. தகவல் இணைப்புகளால் அரசு அலுவல்களில் கால தாமதம், ஊழல் புரிவதற்கான வாய்ப்புகள் ஒழிந்து போகின்றன.
  • கடலுக்குப் போகும் மீனவர்களும், பயிர் போடும் விவசாயிகளும் தமக்கு வேண்டிய விபரங்களைத் திரட்டவும், தமது அறிவைப் பகிர்ந்து கொள்ளவும் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர்.
  • வீட்டு செலவுக் கணக்குக்கும், கடைகளில் விற்பனைக் கணக்கும், செய்தித்தாள் போடுபவரின் கணக்கும், பால் கணக்கும் கணினிகளின் மூலம் செய்து கொள்ள முடிகிறது.
  • தமிழ் மருத்தவர்களும், தமிழ் பொறியாளர்களும், தமிழ் வணிகர்களும், வழக்கறிஞர்களும் தமது ஆவணங்களையும் (documents), குறிப்புகளையும் (records) முழுமையாகப் பதிவு செய்து தரமான சேவை வழங்க முடிகிறது.
  • படித்த இளைஞர்கள் யாவருக்கும் நமது சமூகத்திலேயே உலகத் தரத்திலான வேலை வாய்ப்புகளும், ஊதியமும் கிடைக்கிறது.
2020
  • ஆப்பிளின் iPod போல, மைக்ரோசாப்டின் விண்டோசு போல், லினஸ் தோர்வால்ட்சின் லினக்சு போல உலகையே மாற்றி அமைக்கும் கண்டுபிடிப்புகளுக்கு (inventions) தமிழகம் ஊற்றுக் கண்ணாக விளங்குகிறது.
  • மரபணு ஆராய்ச்சிகள், இயற்பியலின் முன்னணி பணிகள் தமிழகத்தின் பல்கலைக் கழகங்களில் தமிழிலேயே நடைபெறுகிறது.
  • உயர்தர திரைப்படங்கள், உலகே வியக்கும் கலைப் படைப்புகள் தமிழகத்தில் உருவாகின்றன.
  • தரமான சாலைகள், உயர்வான பொதுச் சேவைகள், எல்லோருக்கும் மருத்துவ வசதி, இயலாதவருக்கு சமூக ஆதரவு என்று எல்லோரும் எல்லாமும் பெற்றுள்ள சமூகமாக தமிழகம் உலகுக்கே வழி காட்டுகிறது.
இதெல்லாம் நடக்க முடியுமா?
முடியும்.

யார் செய்வார்கள்?
நாம் எல்லோரும் சேர்ந்துதான்.

எப்படி?

தகவல் தொழில்நுட்பத் துறையில் வாய்ப்புகள்

வளர்தொழில் என்ற தொழில் பத்திரிகைக்கு அனுப்பிய கட்டுரை

தகவல் தொழில்நுட்பத் துறையில் தொழில் முனைவோருக்கான வாய்ப்புகள்

இந்தியாவில் தகவல் தொழில் நுட்பம், தகவல் தொழில் நுட்பம் சார்ந்த சேவைகள், தொழில்களுக்கான தொலைதூரச் சேவைகள் போன்ற துறைகள் பெருநகரங்களில் தளைத்து வளர்ந்துள்ளன. பெரும்பாலும் அமெரிக்க, ஐரோப்பிய நாட்டுச் சந்தைகளுக்கு தமது சேவைகளை அளிக்கும் நிறுவனங்கள், நம் ஊரின் ஆயிரக்கணக்கான இளம் பொறியியல் பட்டதாரிகளை பணிக்கு அமர்த்தி, குறைந்த செலவில் தரமான சேவைகளை வெளி நாட்டு நிறுவனங்களுக்கு அளிக்கின்றன.

இதனால் நாட்டுக்கு ஆயிரக்கணக்கான கோடி மதிப்பில் அன்னியச் செலவாணி ஆண்டு தோறும் கிடைக்கின்றது. ஆங்கிலத்தில் சரளமாக பேசும் திறமையோ கணினித் துறையில் வல்லமையோ உள்ள இளம் பட்டதாரிகளுக்குத் தொடக்கத்திலேயே பத்தாயிரத்துக்கு மேல் சம்பளம் கொடுக்கும் வேலை வாய்ப்புகள் பெருகியுள்ளன.

இது எல்லாம் எல்லோருக்கும் தெரிந்ததே! நாளிதழ்களிலும், தொழில் பத்திரிகைகளிலும் இது பற்றிய கட்டுரைகள், புள்ளி விபரங்கள், செய்திகள் கொட்டிக் கிடக்கின்றன.

அமெரிக்க ஐரோப்பியத் தொடர்புகள் இல்லாமல், ஆனால் தொழில் துறையில் திறமையுடைய தொழில் முனைவோருக்கு இந்தத் துறையில் என்ன வாய்ப்புகள் உள்ளன? ஆங்கிலத்தில் சரளமாகப் பேசத் தெரியாத, சிறு நகரங்களிலும், கிராமங்களிலும் படித்த திறமையான பட்டதாரிகளுக்கும் மேற்சொன்ன தொழில் நுட்ப வளர்ச்சியில் பங்கு குறைவாகவே உள்ளது.

நம் ஊர் சூழ்நிலைக்குத் தகுந்தவாறு, நம் ஊர்த் தொழில்களுக்கு உதவுமாறு தகவல் தொழில் நுட்பத் துறையில் என்னென்ன வாய்ப்புகள் உள்ளன, அவற்றை எப்படி அணுகலாம் என்று பார்ப்போம்.

முதலில் மென்பொருள் சேவைகளுக்கான இலக்குச் சந்தைகள் சில:
1. மத்திய மாநில அரசுகளின் கணினி மூலம் அரசாளும் திட்டங்களுக்கான மென் பொருட்கள்.
2. பெரிய தொழில் நிறுவனங்களில் தகவல் சேகரிப்பு, சேமிப்பு, அலசல் மற்றும் தகவல் பரிமாற்றங்களுக்கான மென்பொருட்கள்.
3. பள்ளி கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை, தேர்வுகள், கட்டணங்கள், பாடத்திட்டங்கள் பற்றிய தகவல்களை கையாளும் மென்பொருட்கள்.
4. ஆலயங்கள், மருத்துவமனைகள், தனி மருத்துவர்கள், கட்டிடம் கட்டித் தருபவர்கள் போன்ற சேவைத் துறைகளுக்கான மென்பொருட்கள்.
5. சாலைப் போக்குவரத்து நிறுவனங்கள், சரக்கு மற்றும் கடிதப் போக்குவரத்து நிறுவனங்கள், கூட்டுறவு அமைப்புகளுக்கான மென்பொருட்கள்.
6. மளிகைக் கடை, மருந்துக் கடை, துணிக்கடை, காய்கறிக் கடைகளுக்கான மென்பொருட்கள்.
7. சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களாலான தோல் துறை, பிளாஸ்டிக் பொருட்கள் துறை, இயந்திரப் பாகங்கள் துறை, வாகனப் பாகங்கள் துறை போன்றவற்றில் தகவல் கையாளுதல் மற்றும் துறை தழுவிய தகவல் பரிமாற்றங்களுக்கான மென்பொருட்கள்.

இதுவரை யாரும் மென்பொருட்கள் செய்யவில்லையா? ஏன் அவை பிரபலமாகவில்லை? பெரிய பல்பொருள் அங்காடிகளிலும், வங்கிகளிலும், ரயில்வேயிலும், சில மருந்துக் கடைகளிலும், மென்பொருட்கள் பயன்படுவதைப் பார்த்திருக்கிறோம். இவை யாவும் பெரிய நிறுவனங்களைச் சார்ந்து மேற்கத்திய மேலாண்மை முறைகளைப் பின்பற்றுகின்றன. உண்மையிலேயே உள்நாட்டுத் தொழில்களின் மென்பொருள் பயன்பாடு மிகக் குறைவாகவே உள்ளது. இதற்குப் பல காரணங்கள் உள்ளன:

1. பயன்பாட்டு மொழி
இப்போது கிடைக்கும் பெரும்பாலான மென்பொருட்கள் ஆங்கில மொழியில் உள்ளன. அவற்றில் சில தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. தமிழிலேயே சிந்தித்து தமிழ் மொழி பேசுபவர் பயன்படுத்தும் வண்ணம் உருவாக்கப்பட்ட மென் பொருட்கள் விரல் விட்டு எண்ணும் அளவிலேயே உள்ளன.
2. மென்பொருள் வடிவமைப்பு
ஏற்கனவே சொன்ன மாதிரி சந்தையில் கிடைக்கும் அனைத்து மென்பொருட்களும் மேல்நாட்டு பழக்கங்களுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டவை. நமது பழக்கத்துக்கு ஏற்றவாறு, நமது புரிதலுக்குச் சரியான வண்ணம் மென்பொருட்கள் கிடைக்காதது ஒரு குறையாகவே உள்ளது.

3. விலை
மென்பொருட்கள் மற்றும் கணினிகளின் விலை அமெரிக்கப் பொருளாதரத்துக்கு ஏற்றவாறே உள்ளன. ஒரு கணினியில் பயன்படுத்த ஆறாயிரம் ரூபாய் என்று தொடங்கும் விலைப் பட்டியல்கள் பல லட்சம் ரூபாய் விலைக்குக் கூட விற்கப்படுகின்றன. சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்குக் கட்டுப்படியாகும் விலையில் மென்பொருட்கள் கிடைக்காததும் மென்பொருள் பயன்பாடு பரவலாகாமல் இருக்க ஒரு காரணமாகும்.

4. உரிமக் கட்டுப்பாடுகள்
வாங்கிய மென்பொருளை மற்றொரு கணினியில் நகல் செய்யக் கூடாது, அதை அடுத்தவருடன் பகிர்ந்து கொள்ளக் கூடாது, பழுது நீக்க வசதியாக மூலநிரல் கொடுக்க மாட்டோம், புதிய வசதிகளைச் செய்து கொள்ள மூல நிரல் கொடுக்க மாட்டோம் என்று மென்பொருள் விற்பனையாளர்கள் ஏராளமான கட்டுப்பாடுகள் விதிப்பதால், கணினியாக்கத்தின் பலன்களை நம் தொழில்கள் அறுவடை செய்ய முடியாமல் உள்ளது.

5. துறை சார் நுணுக்கங்கள் இல்லாமை
மருந்துக் கடையில் சரக்குக் கையாளப் பயன்படும் மென்பொருள் மளிகைக்கடையில் அப்படியேப் பயன்படுத்த முடியாது. மளிகைத் துறையில் பல்லாண்டு செயல் முறை அனுபவம் உள்ள ஒருவர்தான் அந்தத் துறைக்குத் தேவையான நுணுக்கங்களை மென்பொருளில் வடிவமைக்க முடியும். கணினித் துறையில் மட்டுமே தேர்ந்த கணினி வல்லுநர்கள் செய்யும் மென்பொருட்கள் செயல்படுத்தப்பட முடியாமல் போய் விடுகின்றன.

இந்தக் குறைகளை எல்லாம் களைந்து குறைந்த விலையில், தமிழில், நமக்குப் வசதியான வடிவமைப்பில், பயன்படுத்துபவருக்கு எல்லா உரிமைகளையும் அளித்து துறை சார்ந்த நெளிவுசுளிவுகளையும் உள்ளடக்கி மென்பொருள் செய்து விற்று லாபம் ஈட்ட முடியுமா? இத்தகையத் தொழிலில் வேலை வாய்ப்புகளைப் பெருக்க முடியுமா?

சரக்கு விபரங்களைக் கையாளும் மென்பொருள் விற்பனையைப் பார்ப்போம். நம் ஊரில் சரக்குக் கையாளும் பொதுப் பழக்கங்களையும், கணக்கியல் விதிகளையும் நன்கு தெரிந்த ஒருவர், அனைத்துக்கும் பொருந்தும் வண்ணம் ஒரு மென்பொருள் வரைவு ஆவணத்தை உருவாக்குகிறார்.

அதை அறிவு சார் சொத்து என்று பூட்டி வைக்காமல், வெவ்வேறு துறைகளில் (மளிகை, காய்கறி, மருந்த்து வியாபாரம்) அனுபவம் நிறைந்தவர்களுக்கு குறைந்த விலையில் முழு உரிமைகளுடன் பயன்படுத்த விற்கிறார். அவர்கள் தமது துறைக்குத் தேவையான நெளிவுசுளுவுகளைச் சேர்த்து ஒரு மென்பொருளை உருவாக்கி, அந்தத் துறையில் மூல நிரலுடன் விற்கிறார்கள்.

ஒவ்வொரு கடையிலும் அவர்களுக்குத் தேவைப்படும் மாறுதல்களை செய்தல், கடைப் பணியாளர்களுக்கு மென்பொருளைப் பயன்படுத்தப் பயிற்சி அளித்தல் போன்றவற்றிற்குச் சேவை அடிப்படையில் தனிப்பயனாக்கத்துக்கு கட்டணம் வசூலித்து செய்து கொடுக்க ஒன்றுடன் ஒன்று போட்டி போடும் சிறு நிறுவனங்கள் உருவாகின்றன.

ஒருங்குறி எனப்படும் யூனிகோடு எழுத்துருக்களைப் பயன்படுத்தி எல்லா மென்பொருட்களும் தமிழிலேயே செய்யப்படுகின்றன.

இந்தச் சேவைகளை அளிக்க பெரிய அளவில் முதலீடு தேவையில்லை. கணினிகள் அவற்றில் வேலை செய்ய கணினிப் பட்டதாரிகள் இரண்டையும் சேர்த்து சேவையை வழங்க ஆரம்பித்து விடலாம்.

தமிழ் லினக்சு

tamilinix@yahoogroups.com என்ற குழுமத்தில் 2001ம் ஆண்டு முதல் சேர்ந்திருந்தேன். நான் உள்ளே வரும் போது கேடீயீ மொழிபெயர்ப்பை ஆரம்பித்திருந்த சிவகுமார் சண்முகசுந்தரம், கோமதி சண்முகசுந்தரம் பணியை துரையப்பா வசீகரனிடம் ஒப்படைத்து விட்டிருந்தார்கள். ஜினோம் மொழிபெயர்ப்புக்கு தினேஷ் நடராஜா பொறுப்பேற்றிருந்தார்.

D சிவராஜ், M K சரவணன், அப்போது டோக்கியோவில் இருந்து பங்கு கொண்ட V வெங்கட் போன்றோர் ஆரம்ப கால வழிகாட்டலை செய்து கொண்டிருந்தார்கள். டிஸ்கி எழுத்துருக்களில் எப்படி தமிழ் இடைமுகத்தை உருவாக்குவது என்ற பயனர் கையேடு எல்லாம் கிடைத்தது.

ரெட்ஹாட் அல்லது சுசே லினக்சை நிறுவி, கேடீயி பயன்டுத்தினால் தமிழ் இடைமுகத்தை அமைத்துக் கொள்ளும் வசதி கிடைத்தது.

தினேஷ் நடராஜா தமிழில் எழுதத் தேவையான கருவியை உருவாக்கி தமிழ் விசைப்பலகை என்று பின்னால் பெயர் சூட்டினார். வெங்கட் 'பெங்குயினுக்கு தமிழ் கற்றுக் கொடுப்போம்' என்று எல்லோரையும் மொழிபெயர்ப்பு வேலைக்கு அழைத்து கட்டுரை எழுதினார். தமிழ்லினக்சு என்று வலைத்தளத்தையும் நடத்தி வந்தார்.

முட்டி மோதி, தமிழ் இடைமுகத்தை ரெட்ஹாட் - கேடியி 2.1 நிறுவலின் மூலம், வசீகரன் இன்னும் பல நண்பர்களின் உதவியின் மூலம் கணினியில் பார்க்க முடிந்தது. 'இது எல்லாம் தன்னார்வலர்களால் செய்யப்பட்டவை, நாம் கூடக் கலந்து கொள்ளலாம்' என்று தெரிந்ததும், வசீகரனைத் தொடர்பு கொண்டு மொழிபெயர்க்கக் கோப்புகளை கேட்டு வாங்கிக் கொண்டேன்.

இப்படி வெளிநாடுகளில் உட்கார்ந்து கொண்டு நூறு நூறு சொற்களாக மொழிபெயர்த்தே இவ்வளவு செய்ய முடிகையில், தமிழகத்தின் கல்லூரி மாணவர்களும் பொது மக்களும் பெருவாரியாக ஈடுபட்டால் தமிழில் ஒரு முழுமையான இயங்குதளமே உருவாகி விடலாமே, ஏன் யாரும் செய்ய மாட்டேன் என்கிறார்கள் என்று குடைந்து கொண்டே இருந்தது.

2001ன் இறுதியில் சீனாவை விட்டு விட்ட சென்னை திரும்பினேன். என்னுடைய மடிக்கணினியில் தமிழ் இடைமுகத்தை வைத்துக் கொண்டு சந்திப்பவர்களிடம் எல்லாம் காட்டி அவர்களது ஆச்சரியத்தைத் தூண்டி விட முயற்சி செய்தேன். பலர் சேர்ந்து முயன்றால் வேலை சீக்கிரமாக முடியுமே என்று ஒரு நப்பாசை.

தமிழில் மோசில்லா

மோசில்லாவும் அதன் செல்லப் பிள்ளை ஃபயர்ஃபாக்சும் இன்று பரவலாக தெரிந்துள்ள மென்பொருட்கள்.

இவற்றைத் தமிழில் மொழி பெயர்க்க வேண்டும் என்று முதலில் முயற்சி எடுத்து ஒரு குழுவைச் சேர்த்து இன்று வரை தொடர்ந்து பங்களித்து வருபவர் முகுந்தராஜ். எ-கலப்பை உருவாக்கிய அதே முகுந்தராஜ்தான்.

எறும்புகள் குழுவின் மூலம் எனக்கு அவரைத் தெரியும். 2001ல் அவர் கோலாலம்பூரில் தங்கி வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது அவரை முதலில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது லினக்சை தனது மடிக்கணினியில் நிறுவிக் கொண்ட அவர் இன்று பரிநிரல் உலகில் முழு நேரப் பணியாற்றுகிறார்.

ஃபயர்ஃபாக்சின் தமிழ் இடைமுகம் லினக்சில் மட்டுமின்றி விண்டோசு கணினிகளிலும் பயன்பட்டு வருகிறது.

தமிழா குழுவில் இணைந்து ஃபயர்ஃபாக்ஸ் மொழிபெயர்ப்பில் பங்கேற்க விரும்புபவர்கள் அதன் இணையத் தளத்தில் பதிவு செய்து முகுந்தை தொடர்பு கொள்ளலாம்.

முகுந்தின் செய்தி

தமிழா அமைப்பு செய்யும் மொழிபெயர்ப்புகள் அனைத்தும் தமிழா மொழிபெயர்ப்பு பகுதியில் திறந்த நிலையில் தான் உள்ளன. பார்க்க: http://translation.thamizha.com

அங்கு இருக்கும் கோப்புகளைத் தான் நாங்கள அவ்வப்போது அந்தந்த மொழிபெயர்ப்பு தளங்களுக்கு அனுப்பிவைக்கிறோம்.

பயர்பாக்ஸ் மொழிபெயர்ப்பைத்தான் இன்னும் மொசில்லாத் தளத்தில் அனுப்ப முடியாமல் இருக்கிறோம். இதற்கு மொசில்லாவின் பாலிசிகள் மற்றும் ஏற்கனவே தமிழ்மொழிக்காக cvs access வாங்கிய ஒருவர் காணாமல் போனதும் காரணம். அதற்கான முயற்சியிலும் இருக்கிறேன். விரைவில் பயர்பாக்ஸும் வலைப்பக்கத்தில் ஏறிவிடும்.

யாரேனும் மொழிபெயர்ப்பு செய்யவிழைந்தால் அவர்களை http://translation.thamizha.com தளத்தில் ஒரு கணக்கை உருவாக்கிவிட்டு, எனக்குத் தனப்பட்ட முறையிலோ அல்லது தமிழாவில் கட்டற்றதமிழ்கணிமைக் குழுவில் ஒரு மடல் அனுப்பச் சொல்லுங்கள். http://lists.thamizha.com/mailman/listinfo/freetamilcomputing_lists.thamizha.com

[தமிழா டெவலப்பர் யாகூ குழுவை தற்போது freetamilcomputing என்று பெயர்மாற்றி தமிழா சேவையகத்திலேயே மெயில்மேன் மென்பொருள் உதிவியுடன் இயக்கவருகிறோம். நீங்களும் freetamilcomputing குழுவில் இணையும் மாறு கேட்டுக்கொள்கிறேன்]

ஆன்லைனாக மொழிபெயர்ப்பு செய்ய முடியாதவர்களும், தேவையான po கோப்புகளை http://translation.thamizha.com தளத்திலிருந்து இறக்கு மொழிபெயர்த்துவிட்டு கோப்புகளை அனுப்பிவைக்கலாம்.

தமிழ்க் கணிமை - சாத்தியங்கள்

கடைக்குப் போய்க் கணினி (computer) வாங்க வேண்டும். பையன் படிப்பதற்கு கணினி வாங்கிக் கொடுத்தால் அவன் வாழ்க்கையில் முன்னேறலாம்.
  • அம்மாவும், அப்பாவும் செய்யும் வேலைக்குக் கணினி பயன்படுமா?
மென்பொருள் நிறுவனத்தில் சேர்ந்து கணினியில் அமர்ந்து, இணையத்தில் இணைந்து தமிழில் வலைப்பதிவுகள் போடுகிறோம்.
  • கடலில் மீன் பிடிக்கப் போகும் தமிழகக் கடலோர மீனவர்கள் தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு உதவிகள் பெற முடியுமா?
பயணத்துக்கு, பணிக்குத் தேவையான விபரங்களை கூகிளாண்டவர் துணையுடன் தேடிப் பிடித்துக் கொள்கிறோம்.
  • பயிரிடும் விவசாயி ஒருவர் இணையத்தை (internet) அணுகி தனக்குத் தேவையான தகவல்களைப் பெற முடியுமா?

கணினியைப் பயன்படுத்த ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும் என்ற தேவை தமிழர்களில் பெரும்பாலானோரை நவீன முன்னேற்றங்களின் சாத்தியங்களிலிருந்து ஒதுக்கி விட்டிருக்கிறது. வேறு காரணங்களும் இருந்தாலும், மொழி புரியாமல் இருப்பது முதன்மை தடையாக இருந்து வருகிறது.

நமது சமூகத்தின் சிறுபான்மையினர் மட்டுமே குழாய் சட்டை போட்டுக் கொண்டு, குளிரூட்டப்பட்ட அறைகளில், அமெரிக்கர்களுக்காக உருவாக்கப்பட்ட மென்பொருட்களைப் (software) பயன்படுத்திக் கொண்டிருக்கும் நிலை மாறி, ஆறு கோடி தமிழர்களில் விருப்பம் உள்ள யாரும் எளிதாக தகவல் தொழில் நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தும் நிலைமை உருவாக வேண்டாமா?

இதற்கான விதை பல ஆண்டுகளுக்கு முன்பே போடப்பட்டது. இன்றைக்கு உலகின் எந்த சமூகமும் தனது மொழியில், தமது சூழலுக்கு பொருத்தமான வகையில் கணினி இடைமுகம் (user interface) உருவாக்கிப் பயன்படுத்திக் கொள்வதற்கான வசதிகள் உள்ளன. அவற்றை எடுத்துப் பயன்படுத்திக் கொள்வது நம் கையில் இருக்கிறது.

பரிநிரல் (Free Software) முறையில் கடந்த இருபது ஆணடுகளுக்கு மேலாக உருவாக்கப்பட்டு வரும் பல மென்பொருட்களை நமது மொழிக்கு மாற்றம் செய்து கொள்ளும் வாய்ப்பு பல ஆண்டுகளாகவே இருக்கிறது.

1990களின் பிற்பகுதிகளில் ஆரம்பித்து பல நாடுகளில் வாழும் தமிழ் ஆர்வலர்களின் (volunteers) முயற்சியால் கேடீயீ, ஜினோம், ஓப்பன் ஆபிசு, மோசில்லா ஃபயர்ஃபாக்சு போன்ற மென்பொருள் பயன்பாடுகளைத் (software applications) தமிழில் மொழி பெயர்க்கும் வேலை நடந்து வருகிறது.

இந்த முயற்சிகளால் இன்றைக்கு வெளிவரும் லினக்சு பொதிகளில் எல்லாம் (Linux Distributions) தமிழ் இடைமுகத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு தமிழ் பெயர்களில், தலைப்புகளில் பயன்பாடுகளை ஓட்டிக் கொள்ள முடிகிறது. தமிழ் தட்டச்சுக் கருவிகளின் மூலம் தமிழில் எழுதவும் முடிகிறது.

ஆனால், இன்னும் வெகு தூரம் போக வேண்டியிருக்கிறது.

கல்லூரி மாணவர்களுக்கான விக்கிப்பீடியா தகவல் பக்கங்கள் போட்டி

ரவிசங்கர் மின்னஞ்சலில் அனுப்பிய அறிவிப்பு

உ லகத் தமிழ் இணைய மாநாட்டையொட்டி தமிழ்நாடு அரசு - தமிழ் விக்கிப்பீடியா இணைந்து கல்லூரி மாணவர்களுக்கான "விக்கிப்பீடியா தகவல் பக்கங்கள்" என்ற போட்டியை நடத்துகிறது.

அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் அழைப்பு:

தமிழ் விக்கிப்பீடியா ( http://ta.wikipedia.org ) என்பது இணையத்தில் இயங்கும் தகவல் களஞ்சியத் திட்டம். இத்திட்டத்துக்கு ஏற்ற தகவல் பக்கங்களை எழுதும் போட்டியைத் தமிழக அரசு நடத்துகிறது.

கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம், விளையாட்டு, வேளாண்மை, சட்டம், கல்வியியல், இயக்குநர் மருத்துவம் (பிசியோதெரப்பி), சித்த மருத்துவம், பல் மருத்துவம், செவிலியர், கால்நடை மருத்துவம், பல தொழில்நுட்பப் பயிலகம் என அனைத்துத் துறைகளைச் சார்ந்த தமிழ்நாட்டில் உள்ள அரசு, தனியார், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் கல்லூரி மாணவ, மாணவியர்கள் இப்போட்டியில் பங்கேற்கலாம்.

விதிமுறைகள்:

தகவல் பக்கங்கள் ஆதாரங்களின் அடிப்படையில் நடுநிலைமையுடன் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு ஏற்றதாக அமைய வேண்டும்.

தகவல் பக்கங்களை ஒருங்குறி ( Unicode ) எழுத்துருவில் தமிழில் எழுத வேண்டும். சொற்களின் எண்ணிக்கை 250 முதல் 500 வரை அமைய வேண்டும்.

தகவல் பக்கங்களை ஏப்ரல் 30ம் தேதிக்குள் நிறைவு செய்து http: / / tamilint2010.tn.gov.in என்ற இணையதளத்தில் அனுப்ப வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட தகவல் பக்கங்கள் தமிழ் விக்கிப்பீடியாவில் சேர்க்கப்படும்.

பரிசுகள்

இப்போட்டியில் வெல்லும் அனைத்துத் துறை மாணவர்களுக்கும் மடிக்கணினி உள்ளிட்ட பல்வேறு மின்னணுக் கருவிகள் பரிசுகளாக வழங்கப்பட உள்ளன.

மேலும் விவரங்களுக்கு

மேலும் விவரங்களுக்கு, http: / / ta.wikipedia.org என்ற இணையதளத்தைப் பார்த்து வழிகாட்டு நெறிமுறைகளைத் தெரிந்து கொள்ளலாம்.

NHM உள்ளீட்டுச் செயலி

(டிசம்பர் 12, 2007)
கிழக்குப் பதிப்பகத்தின் வேலைகளில் பயன்படுவதற்காக தமிழ் உள்ளீட்டுக் கருவி ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள். நாகராஜன் அதற்கான நிரல் உருவாக்கம் செய்திருக்கிறார்.
  • பயன்பாட்டின் அளவு,
  • பயன்படுத்தும் போது சிக்கல்கள் வராமலிருத்தல்,
  • பல எழுத்துருக்கள், உள்ளீட்டு முறைகளுக்கான ஆதரவு,
  • பல மொழிகளுக்கும் எளிதாக விரிவுபடுத்துதல்
என்று ஒவ்வொன்றாக யோசித்து பல மாதங்கள் உழைத்து உருவாக்கியிருக்கிறார்கள். மிக எளிமையான மென்பொருள் உருவாக்கத்துக்கு நிறைய உழைப்பு தேவைப்படும், திட்டமிடல் அதிகமாகத் தேவைப்படும். இந்த முயற்சியில் அவை அனைத்தும் தெரிந்தன. 'கிரிக்இன்போ குழுமம் என்றால் சும்மாவா' என்று பத்ரியைப் பற்றி லக்கிலுக் ஒரு முறை எழுதியிருந்தார். அவரது வழிகாட்டலும், நாகராஜனின் மென்பொருள் திறமையும் பளிச்சிட்டன.

அருமையான ஒரு மென்பொருள் செயலியாக உருவெடுத்திருக்கிறது.
  • எண்ணூற்றிச் சொச்சம் KBக்கள் அளவில்,
  • சில நிமிடங்களில் நிறுவுதலும்,
  • சில விநாடிகளில் ஆரம்பித்தலும்
  • கச்சிதமாக வடிவமைக்கப்பட்ட பயன்பாடு.
  • செயலியின் நிரல்களையும் தரவுகளையும் தனித்தனியாக வடிவமைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஒவ்வொரு உள்ளீட்டு முறைக்கும் உள்ளிடலுக்கான தரவுகள் XML கோப்புகளாக (அது எந்த மொழியாக இருந்தாலும் பயன்படும்படி) வடிவமைப்பு. படிப்பதற்கு எளிதாக புரியும்படி இருக்கும் அந்த XML கோப்பை உருவாக்கி விட்டால் இதே செயலியை எந்த உள்ளீட்டு முறையாகவும், சரியான எழுத்துரு நிறுவிக் கொண்டால் எந்த மொழிக்கான, எந்த விதமான குறியூட்டு எழுத்துருவிலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

நூற்றுக் கணக்கான உள்ளீட்டு முறைகளை வைத்துக் கொள்ளலாம். ஒரே நேரத்தில் 9 உள்ளீட்டு முறைகளை சேர்த்து செயலியை இயக்கலாம். மென்பொருள் தொழில்நுட்ப வல்லுனர்களான மகேசன், நந்தா போன்றவர்கள் நல்ல ஆழமான கேள்விகளைக் கேட்டு பதில் பெற்றனர்.

இதை இணையத்தின் மூலம் இலவசமாக தகவிறக்கிக் கொள்ள தரப் போகிறார்கள். இணைய வசதி இல்லாதவர்களுக்கு குறுந்தகட்டில் 25 ரூபாய்களுக்கு கிடைக்கும். நகல் செய்வதிலும், மற்றவர்களுக்கு கொடுப்பதிலோ எந்தத் கட்டும் கிடையாது, இணைக்கும் மென்பொருள் தொகுப்புகளின் நிரல் அவர்களின் உரிமைப் பொருளாக இல்லாததால், விண்டோசுக்கான செயலியின் மூல நிரலை திறவூற்றாகத் தர முடியாதாம்.

டெல்பி என்ற நிரல் மொழியில் எழுதியிருக்கிறார்கள். அதே நிரலையும் வடிவமைப்பையும் திறவூற்று முறையில் வெளியிட்டு லினக்சுக்கும் பயன்படுத்தச் செய்யத் திட்டமிருக்கிறதாம்.

ஒரு பொருளை/ சேவையை உருவாக்கும் போது உலகளாவிய அளவில் பயன்படும்படி உருவாக்குவதுதான் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் ஒரே வழி. இந்தச் செயலி உலகின் எந்த மொழிக்கும் உள்ளீட்டு முறை உருவாக்கப் பயன்படக் கூடியது. தமிழகத்திலிருந்து உலகுக்கு போகும் ஒரு உயர்தர பங்களிப்பு. கிழக்கு பதிப்பகத்துக்கும், நாகராஜூக்கும், பத்ரிக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.

இந்த செயலிக்கு நல்ல தமிழ் பெயர் ஒன்று சூட்டியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

தமிழ்நெட் 99 உள்ளீட்டு முறை

தமிழ்நாட்டின் அன்றைய வளமைப்படி பத்தாம் வகுப்பு இறுதித் தேர்வு முடிந்து முடிவுகளுக்குக் காத்திருக்கும் நீண்ட மூன்று மாத கால இடைவெளியில் கையில் சுருட்டிய தாளுடன் டைப் படிக்கக் கிளம்பினோம். தட்டச்சில் லோயர் தேர்வில் சான்றிதழ் பெறும் வரை பயிற்சி தொடர்ந்தது. (இரண்டு ஆண்டுகள் என்று நினைவு).

எப்படிப் போனோம், யார் யார் போனோம், யார் யாரைப் பார்த்தோம் என்ற கிளைக் கதைகளை விடுத்து தட்டச்சிடுவது குறித்துப் புரிந்து கொண்ட சில அடிப்படைகள் இன்றைக்கும் நினைவில் இருப்பதைச் சொல்கிறேன்.

ஆங்கிலத்தில் நாம் பயன்படுத்தும் qwerty என்று முதல் வரிசையில் எழுத்துக்கள் அமைக்கப்பட்டிருக்கும் உள்ளீட்டு முறையின் சாதகங்களை இப்படிப் பட்டியலிடுவார்கள்: (பிற்பாடு கணினி பயன்படுத்த ஆரம்பித்த பிறகு இணையத்தில் படித்ததில், Dvorak முறையில்தான் இந்த எல்லா பண்புகளும் இருப்பதாகத் தெரிந்தது. qwerty முறையில், தட்டச்சு கருவியின் கம்பிகள் ஒன்றுக்கொன்று சிக்கிக் கொள்ளாமல் இருப்பதுதான் முதன்மை நோக்கமாக இருந்திருக்கிறது.)
  1. அதிகமாகப் பயன்படுத்தப்படும் எழுத்துக்கள் வலிமையான விரல்களால் அடிக்கப்பட வேண்டும். தட்டச்சுப்பலகையின் மையத்தில் dfghjk ertiuy xcvmnb என்ற எழுத்துக்களை வைத்திருப்பார்கள். நான்கு விரல்களால் ஒவ்வொரு எழுத்துக்கும் உரிய விரலால் அடிக்க வேண்டும் என்ற முறையில் இந்த எழுத்துக்கள் ஆள்காட்டி விரலுக்கும் நடுவிரலுக்கும் போய்ச் சேரும்.
  2. ஆங்கிலச் சொற்களை அலசி எந்தெந்த எழுத்துக்கள் அருகருகே வருகின்றனவோ அந்த எழுத்துக்கள் தட்டச்சு முறையிலும் அருகருகே இருக்க வேண்டும் என்று அமைத்திருப்பார்கள். iou mnb போன்றவற்றை இவற்றுக்கு உதாரணமாக குறிப்பிடலாம்.
  3. shift விசையை அழுத்த சுண்டு விரலைப் பயன்படுத்த வேண்டும். அதனால் விரல் சீக்கிரம் களைத்து விடும் சாத்தியங்கள் உண்டு.
1987ல் ஆரம்பித்த தட்டச்சுப் பழக்கம் கல்லூரியில் படிக்கும் போது முற்றிலும் பயன்படாமலேயே போனது. மிதிவண்டி ஓட்டக் கற்றுக் கொண்டது மோட்டர் வண்டி ஓட்டும் போது கை கொடுப்பது போல, வேலையில் சேர்ந்து கணினி பயன்படுத்த ஆரம்பித்த போது தட்டச்சு பழக்கம் பின்னணியிலிருந்து தாங்கிப் பிடித்தது.

1997ல் சீனாவுக்கு வேலைக்குப் போய் தனிக்கணினி வாங்கிய பிறகு தட்டச்சுவதை ஒரு மனப்பயிற்சி போல கூட செய்து வந்தேன். அந்த நேரத்தில் அறிமுகமானது முரசு அஞ்சல், அதனுடன் வந்தது 'ammaa என்று அடித்தால் அம்மா என்று வந்து விடுமாம்' என்று வாயைப் பிளக்க வைக்கும் அஞ்சல் தட்டச்சு முறை. இன்றைக்கு தமிங்கில தட்டச்சு முறை என்றும் குறிப்பிடுகிறார்கள்.

ஏற்கனவே ஆங்கிலத் தட்டச்சு தெரிந்ததால், தமிழுக்கும் அதையே பயன்படுத்த ஆரம்பித்தேன். 'தமிழில் தட்டச்சுவதற்குப் போய் புதிய முறையைக் கற்றுக் கொள்வதாவது' என்ற அலட்சிய மனப்பான்மையும் இருந்திருக்கலாம்.

1999ல் நடந்த தமிழ் இணைய மாநாட்டில் பரிந்துரைக்கப்பட்ட தமிழ்நெட்99 தட்டச்சு முறை தமிழ் இணையத்தில் அவ்வளவு பிரபலமாகவில்லை என்றே சொல்ல வேண்டும். ஏற்கனவே தமிழ்த் தட்டச்சு பயின்று அதைப் பயன்படுத்துபவர்கள் மட்டுமே, தமிங்கில முறையின் மாயப்பிடிக்கு மயங்காதவர்கள். புதிதாக தமிழில் எழுத ஆரம்பிக்கும் யாருக்கும் தமிங்கில முறைதான் பொருத்தமானது என்று பொதுக்கருத்து உருவாகியிருந்தது.

தமிழ் மடற்குழுக்களில் அவ்வப்போது எழுதுவதைத் தவிர அதிகமாக எழுத்துப் பழக்கம் வந்து விடவில்லை. சென்னைக்கு வந்து 2005 வாக்கில் தமிழ் வலைப்பதிவுகள் அறிமுகமாயின. 2006ல் எழுத ஆரம்பித்த பிறகு தமிழ் தட்டச்சுவது தினசரி வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கமாக ஆனது. ஒரு மணி நேரம் எழுதி முடித்த பிறகு கைகள் உளைச்சல் எடுக்கும். இயல்புதானே என்று ஓய்வெடுத்துக் கொள்வேன். ஆங்கிலத்தில் இதே ஒரு மணி நேரம் அடித்து ஒப்பிட்டுப் பார்த்ததில்லை.

போன மே மாதம் கோவையில் செல்லா ஏற்பாடு செய்திருந்த பதிவர் பட்டறையில் பேசிய முகுந்த் 'தான் இப்போது தமிழ்99 முறையையே பயன்படுத்துவதாகச்' சொன்னார். எல்லோரும் அதற்கு மாறுவது பலனுள்ளதாக இருக்கும் என்றும் சொன்னார். முயற்சித்துப் பார்க்கலாமே என்று அந்த மாத இறுதியிலிருந்து ஆரம்பித்து விட்டேன்.

ஆறு மாதங்கள் ஓடி விட்டன. 20 ஆண்டுகளாக பழகியிருந்த ஆங்கில தட்டச்சு முறைக்குக் கூடுதலாக, கற்றுக் கொண்ட தமிழ்த் தட்டச்சு முறை இப்போது தன்னிச்சையாகி விட்டது. எண்ணம் போகும் வேகத்தில் தட்டச்சிட முடிகிறது.

ஆரம்பத்தில் சொன்ன 'அதிகமாகப் பயன்படும் எழுத்துக்கள் வலுவான விரல்களுக்கு அருகில், அருகருகே வரும் எழுத்துக்கள் அருகருகே' என்று பல தமிழ் அறிஞர்கள், மொழியியல் அறிஞர்கள் கூடி விவாதித்து உருவான முறை தமிழ்99 என்று தமிழ்99 முறையை உருவாக்கிய குழுவில் இடம் பெற்றிருந்த நண்பர் செந்தில்நாதன் சொன்னார். சிந்தாநதியும் ரவிசங்கரும் தமிழ்99 முறையை பரவலாக்க முயற்சிகளில் இறங்கி இருந்தார்கள்.

சராசரியாக நிமிடத்துக்கு 20 சொற்களுக்கு மேல் உள்ளிட முடிகிறது. இது நானாக எழுதும் கட்டுரைகளுக்கு. எதையாவது பார்த்து நகல் செய்தால் 30 சொற்களை எளிதாகத் தொட்டு விட முடிகிறது. ஒரு மணி நேரம் தட்டச்சிட்டால் 1200 சொற்கள் சுலபமாக உருவாகி விடுகின்றன.

எண்ணிக்கையை விட கை விரல்களுக்குக் கிடைக்கும் ஓய்வு முக்கியமானது. தமிழ் 99 முறையில் தட்டச்சிட்டால் தமிங்கில முறையுடன் ஒப்பிடும் போது கை விரல்களுக்கு வேலை மிகவும் குறைவு. மேலே சொன்ன புள்ளிவிபர வடிவமைப்புடன், 'எந்த ஒரு தமிழ் எழுத்தையும் shift விசை அழுத்தாமலேயே உள்ளிட முடியும். இரண்டு விசைகளை அழுத்தி எல்லா எழுத்துக்களையும் உருவாக்கிக் கொள்ளலாம்.' என்ற வசதிகள் தமிழில் எழுதுவதை ஆங்கிலத்தில் தட்டச்சிடுவதற்கு இணையாக எளிதாக்குகிறது தமிழ்99 தட்டச்சு முறை.

தமிங்கில முறையில் அடிக்கும் போது நமது மனம் சிந்தனைகளைத் தொகுக்கும் வேலையுடன். தமிழ் சொற்களை ஆங்கில எழுத்துக்களாக மாற்றும் வேலையையும் கூடவே செய்ய வேண்டியிருக்கும். அதனால் மூளையின் processing திறன் பிளவு பட்டு விடும். தமிழ்99 முறையில் தமிழில் சிந்தித்து இடைத் தரகு மொழி இல்லாமல் நேரடியாக தமிழிலேயே உள்ளிட்டு தமிழ்ப் படைப்புகளை உருவாக்கலாம்.

இப்போது தமிழ்க்கணிமை ஆங்கிலத் தட்டச்சு தெரிந்த, ஆங்கிலத்தில் ஏற்கனவே நன்கு பழகி விட்ட மக்களைத் தாண்டி, மாணவர்களிடம், தமிழகத்து பொதுமக்களிடம் போய்ச் சேர ஆரம்பித்திருக்கிறது. இந்த நேரத்தில் தமிழில் தட்டச்சும் எல்லோருமே தமிழ்99 முறையையே பின்பற்றும் படி கற்றுக் கொடுப்பது அவர்களது எதிர்காலத்துக்கும் தமிழின் வளத்துக்கும் தேவையான ஒன்று.

தமிங்கில முறையில் எத்தனை ஆண்டுகள் தட்டச்சினாலும், அது நமது ஆங்கிலப் புலமையைத்தான் அதிகமாக்கும். சொல்லப் போனால், ஆங்கில எழுத்துக்களை தமிழ்99 முறையில் அடிக்கப் பழகிக் கொண்டால் இன்னும் சிறப்பாக இருக்கலாம்.
  • ஏற்கனவே ஆங்கிலத் தட்டச்சு முறையாகக் கற்றுக் கொண்டவர்கள், அப்
  • படிக் கற்றுக் கொள்ளாமல் வேகமாக அடிப்பவர்கள்,
  • தமிங்கில முறையில் தமிழில் எழுதுபவர்கள்
  • எல்லோருமே சில வாரங்கள் முயன்று தமிழ்99 முறையைப் பழகிக் கொண்டால் மேலே சொன்ன எல்லா பலன்களையும் பெறலாம்.

பதிவர் பட்டறையின் அலைகள்

தமிழ் கம்ப்யூடர் என்ற பிரபலமான தமிழ் மாதமிருமுறை வெளி வரும் இதழின் சமீபத்திய வெளியீட்டுடன் பதிவர் பட்டறையை ஒட்டித் தொகுத்து வெளியிடப்பட்ட குறுந்தகடை இலவசமாக வினியோகிக்கிறார்கள்.

அதே இதழில் முதல் கட்டுரையாக சிந்தாநதி எழுதி கிழக்கு பதிப்பகம் அச்சிட்டு வினியோகித்த தமிழ்நெட் 99 பற்றிய கட்டுரையும் வெளியாகியிருக்கிறது.

குறுந்தகட்டில் அடங்கியுள்ள மென்பொருட்களை குறித்து நந்தா எழுதிக் கொடுத்த கட்டுரையை, பதிவர் பட்டறை என்ற அடையாளத்துடன் பிரசுரித்திருக்கிறார்கள்.

தமிழில் படிக்க, எழுத இலவசமாக கிடைக்கும் எழுத்துருக்கள், எழுது கருவிகள், தமிழ் இடைமுகத்துடனான மென்பொருட்கள், தமிழ் மின் நூல்கள், தமிழில் வலைப் பதிவுகள் என்று தமிழ்நாட்டில் பரப்பப்பட வேண்டிய முக்கிய தகவல்கள் அனைத்தும் குறுவட்டிலும், கட்டுரையிலும் அழுத்தமாக வெளியாகியுள்ளன.

குறுந்தகட்டின் முகப்பு வடிவமைப்பை முற்றிலும் மாற்றி விட்டிருக்கிறார்கள். அது எதிர்பார்க்கப்பட்டதுதான். ஆனால் தொகுப்பு மற்றும் வடிவமைப்பு என்பதில் கவின்சாப்ட் என்று போட்டுக் கொண்டது கொஞ்சம் அதிகப்படி. அத்தனை மென்பொருட்களையும் தொகுத்தது தமிழ் வலைப்பதிவர்களான தன்னார்வலர்கள்தான்.

எப்படியோ, நல்ல விஷயம் பரவலாகப் போய்ச் சேர்வதற்கு உதவிய தமிழ் கம்ப்யூட்டர் பத்திரிகைக்கு நன்றி.

தமிழுக்கும் தனி இடம் - ஜிமெயில் வாழ்க

ஜி மெயிலில் தமிழ் சொற்பிழை திருத்தி

தமிழில் தட்டச்சிட்டு முதல் முதலில் பார்த்த மகிழ்ச்சியைப் போன்ற அனுபவம் ஜிமெயிலின் எழுதும் சாளரத்தில் சில தமிழ்ச் சொற்களை அடித்து விட்டு Check Spelling என்ற சுட்டியை இயக்கி, பிழையான சொற்களுக்கு அடிக்கோடிடலும், அவற்றின் மீது சொடுக்கினால் மாற்று சொற்பட்டியலும் துள்ளி வரும் காட்சி.

முயற்சித்துப் பாருங்களேன்.

ழ கணினி

எறும்புகள் குழுவின் மூலம் அறிமுகமாயிருந்த ஜெயராதா அம்பலம் இணைய இதழில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். e-கலப்பை உருவாக்கலில் இவருக்கும் பங்குண்டு.

அவரைப் போய்ப் பார்க்கும் போதும் என் மடிக்கணினியை கொண்டு போய் தமிழ் இடைமுகத்தைக் காட்டினேன். சுஜாதா சாரைப் பார்த்து இதைக் காட்டுங்கள், அவர் உதவியுடன் மொழிபெயர்ப்பு வேலைகளில் ஈடுபடலாம் என்று சொன்னார்.

பல நாட்கள் கழித்து சுஜாதா அவர்களின் வீட்டுக்குப் போய் இது பற்றிப் பேசினோம். 'எதுக்கு வீண் வேலை, கணினி மொழியைத் தமிழில் ஆக்கி என்ன செய்யப் போகிறீர்கள்' என்று ஆரம்பித்த அவர், 'இடைமுகத்தைத்தான் மொழிமாற்றுகிறோம்' என்று விளக்கியதும் இந்தப் பணியில் வழிகாட்ட முன்வந்தார்.

ஏதாவது அரசுத் துறையில் திட்டப் பணி சமர்ப்பித்து நிதி உதவி கூட வாங்கிக் கொள்ளலாம் என்று சொல்லியிருந்தார். அப்போது டிஷ்நெட்டில் வேலை பார்த்து கொண்டிருந்த சாந்தகுமாரும் இந்தக் குழுவில் சேர்ந்து கொள்ள தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தில் தமிழ்க்கணினி ஒன்றை உருவாக்கும் முயற்சிக்குப் பண உதவி தர ஒப்புதல் பெற்றோம்.

ஓப்பன் ஆஃபிசை முதலில் தமிழில் மொழி மாற்றலாம் என்று, அதிலிருந்து பிரித்துக் கொடுத்த சொற்களை சுஜாதா மொழிபெயர்த்துக் கொடுத்து விட்டார். அவற்றை ஒன்று சேர்த்து தமிழ் இடைமுகத்தை ஓப்பன் ஆஃபிஸில் காட்ட சில வாரங்கள் முயற்சித்து என்று முழு நேரமாக குழுவில் சேர்ந்த ஹரிராம் வெற்றி கண்டு விட்டார். எல்லோருக்கும் ஒரு நம்பிக்கை ஏற்பட்டது. இன்னும் பிற குழுக்களின் முயற்சிகளையும் சேர்த்து ஓப்பன் ஆபிசு இப்போது தமிழிலேயே கிடைக்கிறது.

டிஷ்நெட் பின்னணியில் அவர்களது நுங்கம்பாக்கம் இணைய உலவும் மையத்தை பயன்படுத்த அனுமதி பெற்று மொழிபெயர்ப்பு மாரத்தான்கள் நடத்தினோம். ஆரம்பத்தில் சுஜாதா கற்றதும் பெற்றதும் மூலம் ஆனந்த விகடனில் அழைப்பு விட, தன்னார்வலர்கள் சேர்ந்து ஒரு ஞாயிற்றுக் கிழமை முதல் மாரத்தான் நடந்தது.

எம் ஓ பி வைஷ்ணவா கல்லூரி, லயோலா கல்லூரி இரண்டையும் தொடர்பு கொண்டு மாணவர்களை மொழிபெயர்ப்பில் ஈடுபடுத்த ஜெயராதா களத்தில் இறங்கினார். ஒரே நேரத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் மொழிபெயர்ப்பில் ஈடுபட்டார்கள். எல்லாக் கணினிகளிலும் poedit நிறுவி, பொதுவான சொல்லகராதி ஒன்றை வைத்துக் கொண்டு ஒருவொருக்கொருவர் விவாதித்துக் கொண்டு சுறுசுறுப்பாக பணி நடந்தது.

தொண்ணூறாயிரம் சொற்றொடர்கள் இருந்த கேடீயீ இடைமுகத்துக்கான பெரும்பாலான சொற்களை மொழிபெயர்த்து கேடியி திட்டக் கிடங்கில் சேர்த்து விட்டோம். தமிழ் முதல் ஐந்து மொழிகளில் ஒன்றாக பட்டியலில் வந்தது. ஒவ்வொன்றாக ரெட்ஹாட் கணினி மேலாண்மை கருவிகளின் மொழிபெயர்ப்புகளும் நடந்தது.

இதற்கிடையே மடற்குழுக்களில் வெங்கட் உடன் தேவையில்லாத ஒரு விவாதத்தில் இறங்கி பல இழப்புகளை உருவாக்கி விட்டேன் நான். சுஜாதாவை முன் நிறுத்துவது அவருக்குப் பிடிக்கவில்லை. அது வரை நடந்த பணிகளை இருட்டடித்து பேர் வாங்கப் பார்ப்பதாக குற்றம் சாட்டினார். அதைத் தொடர்ந்து நடந்த விவாதங்களில் எங்கள் குழுவினரின் பெருமளவு ஆர்வம் வடிந்து கொண்டிருந்தது.

இது வரை நடந்த பணிகளை பொதுமக்களுக்குக் காட்ட லயோலா கல்லூரியில் ஒரு பொதுக் கூட்டம் நடத்தினோம். சுஜாதா அவர்களின் அழைப்பைப் பார்த்து நூற்றுக் கணக்கான கணினி ஆர்வலர்கள் கூடியிருந்தார்கள். அதைக் குறித்த பத்ரியின் இடுகைகள் இதோ.

ழ கணினி அறிமுகம் - 1 , 2, 3, 4.

அப்புறம் ஓரிரு மாதம் வேலையைத் தொடர முயன்றோம். சாந்தகுமார் வெளியூருக்கு வேலை மாற்றிப் போனார். ஜெயராதா ரெட்ஹாட் இந்தியாவில் வேலை கிடைத்து பூனேவுக்குப் போனார். நானும், ஹரிராமும் எங்கள் தொழிலில் அதிகக் கவனம் செலுத்தப் போவதாக ஒதுங்கிக் கொள்ள அந்தத் திட்டம் அந்த நிலையிலேயே நின்று விட்டது.

அதன் பிறகு ஜெயராதா மட்டும் தன்னால் முடிந்த அளவில் மொழிபெயர்ப்பைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார். இப்போது கிடைத்த விபரங்களின் படி ராமதாஸ் என்பவர் கேடியி மொழியாக்கக் குழுவையும், என்பவர் ஜினோம் மொழிமாற்றக் குழுவையும் ஒருங்கிணைக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார்கள். இப்போதும் கேடியீ இடைமுக மொழிபெயர்ப்புகளில் தமிழில் பெருமளவு பணி முடிக்கப்பட்டு இருக்கிறது. இந்திய மொழிகளிலேயே அதிகமாக மொழிபெயர்க்கப்பட்டிருப்பது தமிழ்தான்.