வியாழன், 28 ஜூன், 2012

சிலிக்கன் பள்ளத்தாக்கும் சுரண்டலைஆரம்பித்து விட்டது


"பில் டேவிடோ சிலிக்கன் பள்ளத்தாக்கின் பழம் பெரும் பார்வையாளர். சிலிக்கன் பள்ளத்தாக்கு எப்படி மாறி வந்திருக்கிறது என்பதைப் பற்றி எழுதும் போது, டேவிடோ பெருமைப்படும்படியாக எதுவும் இல்லை என்கிறார். பேஸ்புக், ஆப்பிள், கூகுள் போன்ற நிறுவனங்களை கடும் சொற்களால் தாக்குகிறார். 


'ஜெயித்தவனுக்குத்தான் எல்லாமே என்ற சூழலில் மேலும் மேலும் பணத்தைத் துரத்தும் நிறுவன உரிமையாளர்கள், ஏற்றுக் கொள்ளப்படும் நடத்தையின் விளிம்பில் நடனமாடுகிறார்கள். அவர்கள் விளிம்பிற்கு கொண்டு போகவில்லை என்றால் போட்டியாளர் அதைச் செய்து ஆதிக்கம் செலுத்த ஆரம்பிப்பார். ஏகபோகம் போட்டியாளர் கையில் போய் விடும். இப்படிக் கிடைப்பதுதான் பயனரை சுரண்டி கிடைக்கும் மதிப்பு"



இப்போது ஏன் இந்த மாற்றம் என்று ஆராயும் போது 'முன்பெல்லாம் பெரிய, கறாரான பெரு நிறுவனங்களுடன் உறவாடும் போது சப்ளையர்கள் நேர்மையாக இருந்தார்கள். சிலிக்கன் பள்ளத்தாக்கின் ஆரம்ப கட்டங்களில் பெரும்பான்மையான நிறுவனங்கள் பெருநிறுவனங்களுக்கு அல்லது அரசாங்கத்துக்கு விற்றார்கள். வாங்கும் மேலாளர்கள் அதிகாரமும், மறந்து விடாத நினைவுத் திறனும் கொண்டிருந்தார்கள். வாடிக்கையாளரின் நம்பிக்கையை பொய்ப்பித்தால், கடுமையாக தண்டிக்கப்பட்டு வியாபாரத்திலிருந்தே வெட்டி விடப்படுவார்கள். அதுதான் அவர்களை நேர்மையாக நடக்க வைத்தது' என்கிறார் டேவிடோ.

இப்போது நிலைமை மாறி விட்டது. தனிநபர் நுகர்வோரை சுரண்டுவதால் எதிர்மறை பின்விளைவுகளை விட ஆதாயம் அதிகம் கிடைக்கிறது.


(இந்த செய்தி ஸ்லாஷ்டாட் என்ற தகவல் தொழில் நுட்பம் தொடர்பான செய்திகளை விவாதிக்கும் வலைத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. அந்தத் தளத்தில் இது தொடர்பாக சூடான விவாதங்கள்  நடக்கின்றன). 

'உங்கள் மின்னஞ்சல் @Facebook முகவரிதான்'


உங்கள் மின்னஞ்சல் @Facebook முகவரிதான் என்கிறது பேஸ்புக்

"பேஸ்புக்  வெளியில் சொல்லாமல் பயனர்களின் கொடாநிலை மின்னஞ்சல் முகவரியை @facebook.com என்ற முகவரியாக மாற்றி வருகிறது. பயனர்களை பாதுகாக்கவும், ஒரே மாதிரி தன்மையை உருவாக்கவும்தான் இந்த நடவடிக்கை என்கிறது பேஸ்புக். ஆனால் தனது மின்னஞ்சல் சேவையை பயனர்கள் மீது சுமத்துவதாக வலைப்பதிவர்களும் செய்தி நிறுவனங்களும் பேஸ்புக்கை தாக்குகின்றன. 

இது பயனர்களின் சொந்த தகவல் பரிமாற்றத்தில் மேன்-இன்-த-மிடில் (நடுவில் இருக்கும் ஆசாமி) தாக்குதலைப் போன்றது என்று கூடச் சொல்கிறார்கள். 2010ல் அறிவிக்கப்பட்ட அதன் மின்னஞ்சல் சேவையை புகுத்துவதற்கான முரட்டு நடவடிக்கையாக பல கட்டுரைகள் இதை பார்க்கின்றன. அந்த நேரத்தில் குறுஞ்செய்திகள், மின்னஞ்சல், பேஸ்புக் சாட் என பல வழிகளில் நடக்கும் உரையாடல்களை ஒன்று சேர்ப்பதுதான் தனது குறிக்கோள் என்று பேஸ்புக் சொல்லியிருந்தது. 

இந்த எதிர்வினைகள் பேஸ்புக் எதிர்பாராதவையான இருக்கின்றன. 'இதை அறிமுகப்படுத்தும் போது எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்பதற்காக பேஸ்புக் மின்னஞ்சல் முகவரியை கொடாநிலையாக மாற்றினோம். பேஸ்புக் முகவரியை மட்டும் பயன்படுத்தும்படி பயனர்களை கட்டாயப்படுத்தும்படியாக நாங்கள் இதை செய்யவில்லை. எது எளிதாக இருக்கிறதோ, அதை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளட்டும்' என்கிறார் பேஸ்புக்கின் தகவல் தொடர்பு மேலாளர் மெரிடித் சின்.

(இந்த செய்தி ஸ்லாஷ்டாட் என்ற தகவல் தொழில் நுட்பம் தொடர்பான செய்திகளை விவாதிக்கும் வலைத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. அந்தத் தளத்தில் இது தொடர்பாக சூடான விவாதங்கள்  நடக்கின்றன).

புதன், 27 ஜூன், 2012

அமெரிக்க சிறுமிக்கு ஐ-பேட் விற்க மறுப்பு


ஆப்பிள் விற்பனை முனையம் ஈரானைச் சேர்ந்த அமெரிக்க சிறுமிக்கு ஐ-பேட் விற்க மறுப்பு.

"அமெரிக்க வர்த்தகத் தடைகளை மீறுவதாக தோன்றுவதால் அவளுக்கு ஐ-பேட் விற்க முடியாது என்று ஆப்பிள் விற்பனை முனையத்தின் விற்பனையாளர் ஒரு இரானிய-அமெரிக்க சிறுமியிடம் சொன்னார். உள்ளூர் தொலைக்காட்சி நிலையத்தின் காமிரா குழுவினரை அழைத்துக் கொண்டு அவள் திரும்பி வந்த போது மீண்டும் அவளுக்கு விற்பனை மறுக்கப்பட்டது.

அவள் பார்சியில் பேசிக் கொண்டிருப்பதை ஆப்பிள் ஊழியர் கேட்டிருக்கிறார். அவரும் ஈரானிலிருந்து வந்தவராதலால் அந்த மொழியை புரிந்து கொண்டு அதன் அடிப்படையில் ஐ-பேட் விற்பதற்கு மறுத்திருக்கிறார்."

செவ்வாய், 26 ஜூன், 2012

மைக்ரோசாப்ட் சர்பேஸ் - கணினி நிறுவனங்கள் அதிர்ச்சி


"மைக்ரோசாப்டின் சர்பேஸ் கணினி ஐபேடின் ஆதிக்கத்தை எதிர்ப்பதற்கான முயற்சியும் சொந்தமாக வடிவமைக்கும்   முயற்சியும் மட்டுமல்ல. 
பல ஆண்டுகளாக மைக்ரோசாப்டின் கூட்டாளிகளாக இருந்து மேசைக் கணினி ஒரு விலை உயர்ந்த பொருள் என்ற நினைப்பை தகர்த்த கணினி நிறுவனங்களுக்கு அது ஒரு மிரட்டலாக வெளியாகியிருக்கிறது. இந்த பகைமையின் வேர்கள் ஆழமாக இருக்கின்றன. மைக்ரோசாப்டு தனது கூட்டாளிகளுக்கு சர்பேஸ் பற்றிய விபரங்களை அது வெளியாவதற்கு மூன்று நாட்களுக்கு முன்தான் தெரிவித்தது. அப்போதும் குறைந்த பட்ச விபரங்களைத்தான் தெரிவித்தது. பெரிய நிறுவனங்களுக்கு மட்டும்தான் நேரடி தொலைபேசி அழைப்பு வந்தது. 
உலக அளவில் 4வது 5வது கணினி நிறுவனங்களான ஆசுஸ், ஏசர் இரண்டு நிறுவனங்களும் தங்களுக்கு சர்பேஸ் போல ஒன்று வருவதைப் பற்றிய தகவலே இல்லை என்கிறார்கள். பல ஆண்டுகளாக ரெட்மாண்டுடன் நெருக்கமாக ஆடிக் கொண்டிருந்த இந்த கணினி நிறுவனங்களுக்கு இது மிகவும் கவலையளிக்கும் ஒன்றாக இருக்கிறது. "

(இந்த செய்தி ஸ்லாஷ்டாட் என்ற தகவல் தொழில் நுட்பம் தொடர்பான செய்திகளை விவாதிக்கும் வலைத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. அந்தத் தளத்தில் இது தொடர்பாக சூடான விவாதங்கள்  நடக்கின்றன).