- நீங்கள் இணையத்தில் இணையும் போது உங்கள் கணினிக்கு ஒரு எண் அளிக்கப்படுகிறது.
- நீங்கள் அணுக விரும்பும் இணையத் தளங்களை வழங்கும் கணினிக்கும் ஒரு எண் இருக்கிறது.
- எண்ணைக் குறிப்பிட்டு தரவுகள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன.
- இணையத் தள பெயர்களையும் எண்களையும் இணைக்கும் அட்டவணை சேவை மூலம் எண்களை நினைவில் வைக்கத் தேவையில்லாமல் பெயர்கள் மூலம் தளங்களை அணுக முடிகிறது.
- இணையப் பக்கங்கள் மீஉரை என்ற கொக்கிகளுடன் கூடிய கோப்புகளாக வந்து சேருகின்றன.
- இணைய உலாவிகள் மீஉரை கொக்கிகளை பொருள் கண்டு மாற்றி திரையில் காண்பிக்கின்றன.
நாடெங்கிலும் இருக்கும் நீர்நிலைகளை, குளங்கள், ஏரிகள், ஆறுகள், கிணறுகள் எல்லாவற்றையும் இணைத்து கால்வாய்கள் வெட்டப்படுகின்றன என்று வைத்துக் கொள்வோம். திருநெல்வேலியில் இருக்கும் கோவில் குளத்திலிருந்து அடுத்தடுத்து கால்வாய்கள் மூலமாக நகர்ந்து சிம்லாவிலிருக்கும் ஏரி ஒன்றுக்குப் போய்ச் சேர்ந்து விட முடியும் என்று வைத்துக் கொள்வோம்.
இணையம் என்பது கிட்டத்தட்ட அப்படித்தான் இருக்கிறது.
திருநெல்வேலி குளத்திலிருந்து சிம்லா ஏரிக்கு ஒரு பொதியை அனுப்ப வேண்டும், இமாச்சல் காரர் அந்தப் பொதியை எடுத்து அதற்கான பதிலை அனுப்பி வைக்க வேண்டும். வழியில் நூற்றுக்கணக்கான வாய்க்கால்கள், ஆயிரக்கணக்கான கிணறுகள், ஆறுகள், ஏரிகள் எல்லாவற்றையும் தாண்டி திசை தவறி விடாமல் பொதி போய் பதில் வர வேண்டும்.
அனுப்ப வேண்டிய பொதியை இரண்டு பகுதிகளாக அமைத்துக் கொள்கிறார்கள். தலைப்பகுதியில்
- யார் அனுப்பிய பொதி - இணைய முறைமை எண்
- யாருக்கு அனுப்பிய பொதி - இணைய முறைமை எண்
பொதியின் உடல் பகுதியில் சொல்ல வேண்டிய தகவல் இருக்கும்.
திருநெல்வேலி குளத்தில் புறப்பட்ட பொதி, பக்கத்திலிருக்கும் கிணற்றை அடைந்ததும் போக வேண்டிய இடத்துக்கான திசையில் தட்டி விடப் படும். அடுத்த நிலையில் இன்னொரு தட்டு, அடுத்த நிலை, இன்னொரு தட்டு என்று தொடர்ச்சியாக நகர்த்தப்பட்டு சிம்லா வந்தடையும்.
வழியில் எல்லோருமே தலை விபரங்களைப் பார்த்துக் கொள்ளலாம் - அப்போதுதான் அவர்களால் சரியான இடத்துக்கு அனுப்பி வைக்க முடியும். பொதுவாக உடல் தகவலும் வழியில் இருக்கும் கணினிகளும் அணுகும் படியாகத்தான் இருக்கும். பாதுகாப்பு தேவைப்படும் தகவல்களுக்கு உடல் தகவலை மட்டும் குறியூட்டம் செய்து அனுப்பி வைப்பார்கள்.
பொதுவாக இணையத்தில் அனுப்பும் விபரங்களை (மின்னஞ்சல், கோப்புகள், உரையாடல்கள்), இடையில் இருக்கும் கணினிகளில் மற்றவர்களும் படித்துக் கொள்ளலாம் என்பதுதான் நடைமுறை.
ஒரு தகவலை ஒரே பொதியாக அனுப்பாமல், பல பொதிகளாக உடைத்துப் பொதிந்து அனுப்புவார்கள். தலைப்பகுதியில் இந்தப் பொதியின் அடையாள எண், வரிசை எண்ணும் சேர்த்து விட்டால் போதும். பெற்றுக் கொள்ளும் கணினி, எல்லா பொதிகளையும் சேர்த்து இணைத்து தகவலை புரிந்து கொள்ளும்.
உலகின் எந்த பகுதியிலிருந்தாலும் சில நொடிகளுக்குள் வந்து சேர்ந்து விடும் இணையப் பக்கங்களும், மின்னஞ்சல்களும் இந்த நுட்பத்தின் மூலமாகத்தான் இயங்குகின்றன.
கோப்பு நமது கணினியின் உலாவிக்கு வந்து சேர்ந்து விட்டது. அந்தக் கோப்பில் மீஉரை இருக்கிறது. மீஉரைக்கும் திரையில் தெரியும் பக்கத்துக்கும் என்ன தொடர்பு?
மீஉரைப் பக்கங்களின் அமைப்பு இப்படி இருக்கும்.
<மீஉரை>
<தலை>
<தலைப்பு> சரவணா மளிகைக்கடை </தலைப்பு>
</தலை>
<உடல்>
</உடல்>
</மீஉரை>
- முதல் வரியும் கடைசி வரியும் இது மீஉரைக் குறியாக்கப்பட்ட பக்கம் என்று சொல்கிறது - யாருக்கு? உலாவிக்கு!
- மேற்கோள் குறிகளைப் போல ஆரம்பிப்பதும் முடிப்பதும் குறிக்கப்பட வேண்டும். மேற்கோள் குறிகளில் ஆரம்பம் ", முடிவு ". மீஉரைக் கொக்கிகளுக்கு ஆரம்பம் < > முடிவு < />
- இணையப் பக்கத்தில் காண்பிக்கப்படும் உள்ளடக்கம் அனைத்தும் <உடல்> </உடல்> கொக்கிகளுக்குள் வரும்.
- <தலை> </தலை> கொக்கிகளுக்குள் வருபவை கோப்பைப் பற்றிய விபரங்கள், உலாவியின் தலையில் காண்பிக்கப் பட வேண்டிய பெயர் போன்றவை.
<தலை> கொக்கிக்குள் <தலைப்பு> என்ற கொக்கிகளுக்குள் வரும் வாக்கியத்தை, தனது நெற்றியில் பக்கத்தின் பெயராகக் காண்பிக்க வேண்டும் என்று உலாவி வடிவமைக்கப்பட்டிருக்கும்.
இது போல நூற்றுக் கணக்கான மீஉரைக் கொக்கிகள் இருக்கின்றன. எழுத்துக்களை தடிப்பாகக் காட்ட, படக் கோப்புகளைக் காட்ட, கோடு வரைய, அட்டவணை ஒன்று வரைந்து காட்ட.
மாறும் எண்ணும் நிலை எண்ணும்
பொதுவாக இணையத்தில் இணைவதற்கு நாம் ஏதாவது சேவை நிறுவனத்தை அணுகுகிறோம். அவர்கள் தொலைபேசி கம்பி மூலம் அல்லது கம்பியில்லா இணைப்பு மூலம், நமது கணினிக்கும் அவர்களது கணினிக்கும் இணைப்பை ஏற்படுத்தி இணையத்தில் இணைத்து விடுகிறார்கள்.
நமது கணினி இணையத்தில் சேர்ந்தவுடன் கணினிக்கு ஒரு இணைய முறைமை எண்ணையும் கொடுத்து விடுகிறார்கள். இந்த எண் நமது கணினிக்கு என்று ஒதுக்காமல், நாம் இணையும் போது கொடுத்து விட்டு, துண்டித்த பிறகு அந்த எண்ணை அதன் பிறகு இணையும் இன்னொரு பயனர் கணினிக்குக் கொடுத்து விடுவார்கள். இப்போது நாம் மீண்டும் வந்தால், நமக்கு இன்னொரு எண் கிடைக்கும்.
இப்படி ஒரே எண்ணை மாற்றி மாற்றி கணினிகளுக்கு கொடுப்பது மாறும் இணைய முறைமை எண் என்று அழைக்கப்படுகிறது.
உங்களுடைய கணினியின் எண் இன்னதென்று நிலையாகத் தெரிந்தால்தான், அந்த எண்ணை மற்றவர்களுக்குக் கொடுத்து உங்கள் கணினியுடன் நேரடியாக இணைவதற்கு வழி செய்யலாம்.
இணையத் தளங்களின் பெயரையும் எண்ணையும் தொடர்பு படுத்த வேண்டும் என்றால் இப்படி ஒரு நிலையான எண் தேவைப்படும். அப்படி நிலையான எண்ணுடன் இணையத்தில் இணையும் கணினிகள் நம்பகத்தன்மையுள்ள வழங்கிகளாக செயல்பட முடியும்.
இணையத் தள சேவைகள்
உங்கள் இணையத் தளத்தை மற்றவர்களுக்கு அணுகத் தர வேண்டுமானால், இணையத் தள பெயரை ஒரு நிலையான எண்ணுடன் தொடர்பு படுத்தி அந்த எண் கொண்ட கணினியில், அந்தத் தளத்தை அணுகும் பயனருக்கு அனுப்ப வேண்டிய கோப்புகளை தயாராக வைத்திருக்க வேண்டும்.
இந்தச் சேவைகளை ஆயிரக்கணக்கான இணையத் தள சேவை நிறுவனங்கள் தருகின்றன. ஒரு கணினி, நிலையான இணைய முறைமை எண்ணுடன் இணைய இணைப்பு இந்த இரண்டும் இருந்தால் இணையத் தள சேவை தருவதற்கான அடிப்படைக் கட்டமைப்பு தயார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக