வியாழன், 12 ஆகஸ்ட், 2010

இணையப் பயன்பாடுகள் - 1

இணையத்தில் சில வலைத்தளங்கள் நிலையான பக்கங்களை பயன்படுத்துகின்றன. ஒரு பக்கத்தை வடிவமைத்து அதன் உள்ளடக்கத்தை நிரப்பி கணினியில் போட்டு விட்டால், வந்து பார்ப்பவர்கள் எல்லோருக்கும் அது காட்டப்படும்.

அ. சரவணன்மளிகைக்கடையின் இணைய தளத்தில் (சரவணன்மளிகைக்கடை.காம்) நான்கு முதல் ஆறு பக்கங்கள் இப்படி கொடுத்திருக்கலாம்.

1. கடையைப் பற்றி
2. பொருட்கள்
3. மேலாளர்கள்
4. தொடர்பு கொள்ள
5. வாடிக்கையாளர் சேவை

ஒவ்வொரு பக்கத்துக்கும் ஒரு கோப்பு இருக்கும். பொதுவாக இந்தக் கோப்புகள் html எனப்படும் மீஉரை குறியீட்டில் இருக்கும்.

ஆ. மீஉரை என்றால் என்ன?

உரை என்பது சாதாரணமாக நாம் எழுதுவது.

மீஉரையில்
  • ஒரு கோப்பிலிருந்து இன்னொரு கோப்புக்கு இணைப்புகளும்,
  • உள்ளடக்கத்தில் சொற்களையும், எழுத்துக்களையும் அழகுபடுத்தல்களும்,
  • படங்களை சேர்ப்பதும்
    வசதி செய்யப்பட்டிருக்கும்.
ஒவ்வொன்றுக்கும் தேவையான நிரலாக்கத்தைப் பயன்படுத்துவதன் மூலம் ஒரு மீஉரைக் கோப்பு உருவாக்கப்படும்.

மீஉரைக் கோப்பில் இருக்கும் கொக்கிகளின் பொருள் பொருத்தி நாம் படிக்கும் உரையாக மாற்றுவது வலை உலாவிகளின் வேலை. நீங்கள் பயன்படுத்தும் மோசில்லா பயர்பாக்சு அல்லது இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்கு மீஉரைக்கோப்புகள் இணையத் தளத்திலிருந்து வந்து சேரும். அந்த மீஉரைக் கோப்புகளின் கொக்கிகளுக்குத் தக்கவாறு பொருள் மாற்றி காண்பிக்கும் போது, அலங்கரிக்கப்பட்ட சொற்களும், படங்களும் திரையில் தெரிகின்றன.

மேலே சொன்ன எடுத்துக்காட்டில் நிறுவனத்தைப் பற்றி என்ற பக்கத்துக்கான கோப்பின் பெயர் - கடையைப்பற்றி.மீஉரை என்று வைத்துக் கொள்வோம். இந்த கடையைப்பற்றி.html உள்ளடக்க உரைக் குறியீடுகளுடன் மீஉரைக் கொக்கிகள் கலந்து உருவாக்கப்பட்டிருக்கும்.

சரவணன்மளிகைக்கடை.காம் என்ற இணையத்தளத்தில் இந்தப் பக்கங்கள் வழங்கப்படுகின்றன என்றால் சரவணன்மளிகைக்கடை.காம்/கடையைப்பற்றி.மீஉரை என்ற கோப்பு அந்த இணையத் தளம் வழங்கப்படும் கணினியில் இருக்கும்.

வாடிக்கையாளர் ஒருவர் தனது உலாவியில் சரவணன்மளிகைக்கடை தளத்துக்குப் போய் கடையைப்பற்றி என்ற சுட்டியை சொடுக்கினால், கடையைப்பற்றி.மீஉரை என்ற கோப்பு இணையத்தளத்தின் வழங்கியான கணினியிலிருந்து வாடிக்கையாளரின் பயனர் கணினிக்குப் போய்ச் சேரும்.

பயனர் கணினியில் அவர் பயன்படுத்தும் உலாவி, அந்த மீஉரைக் கோப்பை குறிமாற்றம் செய்து இணையப்பக்கமாக காண்பிக்கிறது.

இ. இணைய முறைமை எண்

இணையத்தில் இணையும் எல்லா கணினிகளுக்கும் ஒரு அடையாள எண் கொடுக்கப்படுகிறது. அந்த அடையாள எண்ணினைப் பயன்படுத்தி ஒரு கணினியிலிருந்து இன்னொரு கணினிக்குத் தகவல்கள் பரிமாறப்படுகின்றன.

59.92.1.111 என்ற எண் சரவணன்மளிகைக்கடையின் இணையத் தளம் இருக்கும் கணினியின் எண், 203.22.222.1 என்ற எண் அதை அணுகும் வாடிக்கையாளர் கணினியின் எண் என்று வைத்துக் கொள்வோர்.

வாடிக்கையாளர் கணினி இன்ன பக்கத்தைக் கேட்கிறது என்ற தகவல் 59.92.1.111 என்ற கணினிக்குப் போகும் படி ஒரு முறைமை வகுக்கப்பட்டிருக்கிறது. அதே போல இணைய கணினி, வாடிக்கையாளர் கணினிக்கு அனுப்பும் கோப்பை 203.22.222.1 என்ற எண்ணுக்குக் கொண்டு சேர்க்கும் வேலையும் அதே முறைமைக்குத்தான்.

ஈ. இணையத் தள பெயர் சேவை

ஆனால் நாம் இப்படி எண்களைப் பயன்படுத்துவதில்லையே! சரவணன்மளிகைக்கடை.காம் அல்லது முத்துராமன்துணிக்கடை.காம் என்று பெயர்களைத்தானே உள்ளிடுகிறோம். இது எப்படி வேலை செய்கிறது?

பெயர்களை நினைவில் வைத்துப் பயன்படுத்துவது இது போன்று எண்களைப் பயன்படுத்துவதை விட எளியது என்பதால் பெயர்களைப் பயன்படுத்தும் முறைமை வகுக்கப்பட்டது.

இன்ன பெயருக்கு இன்ன எண் என்று அட்டவணைப்படுத்தும் சேவைகள் இணையத்தள பெயர் சேவை எனப்படுகின்றன. இந்த அட்டவணைப்படுத்துதல் ஊருக்கு ஊர், நாட்டுக்கு நாடு, உலகெங்கும் உள்ள ஆயிரக்கணக்கான கணினிகளில் இயங்கி வருகிறது. அந்த இடத்துக்குத் தேவையான பெயர்கள் அங்கங்கு சேமிக்கப்பட்டிருக்கும்.

கூகுள்.காம் என்று நாம் பெயர் அடிக்கிறோம். .காம் என்று முடியும் பெயர்களுக்கான விபரங்களை தொகுத்து வைத்திருக்கும் கணினி எண்ணில் போய் விபரம் கேட்டால் அது கூகுள்.காம் இருக்கும் கணினியின் எண்ணைக் கொடுத்து விடும். ஒரு தடவை எண்ணை வாங்கிக் கொண்டால், அடுத்த தடவை அதே எண்ணைப் பயன்படுத்திக் கொள்ளலாம். திரும்பத் திரும்பப் போய்க் கேட்டுக் கொண்டிருக்கத் தேவையில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக