வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

மென்பொருள் சுதந்திரதினம்

ஆகஸ்டு மாதம் 15ம் தேதி இந்திய சுதந்திர தினத்தைக் கொண்டாடினோம். இந்தியா எப்போது சுதந்திரம் பெற்றது என்று கேட்டால் இந்தியர் எல்லோருக்கும் விடை தெரியும் (தெரிந்திருக்க வேண்டும் என்று நம்பிக்கை :-) 1947ஆம் ஆண்டு ஆகஸ்டு 15ஆம் நாள்.

இந்தச் சுதந்திரத்தின் பிறகு நாம் ஏற்படுத்திக் கொண்ட அரசியலமைப்புச் சட்டத்தின் கீழான உரிமைகளும் கடமைகளும் நமக்கு அரசியல், சமூக தளங்களில் கிடைத்திருக்கின்றன.

அதே போல, நம்முடைய வாழ்வின் எல்லாப் பகுதிகளிலும் நமக்கு சுதந்திரம் இருக்கிறதா?  20ம் நூற்றாண்டின்  தகவல் தொழில் நுட்பப் புரட்சிக்குப் பிறகான கணினி உலகில் நமது உரிமைகள் எப்படி இருக்கின்றன? என்னென்ன அடிமைத் தளைகள் இருக்கின்றன?

'நாம் பயன்படுத்தும் மென்பொருட்கள் தொடர்பான நமது உரிமைகள் பறிக்கப்பட்டு வணிக நிறுவனங்களின் லாப நோக்கத்துக்காக நாம் கட்டுண்டிருக்கிறோம்' என்பது நம்மில் பலருக்குச் செய்தியாக இருக்கலாம்.

பயன்படுத்துபவர்கள், மாணவர்கள், மென்பொருள் துறையினரின் உரிமைகளைப் பறித்து தமது ஆதாயத்தைப் பெருக்கிக் கொள்ள முயலும் வணிக நிறுவனங்களுக்கு  (கிழக்கிந்திய கம்பெனி நினைவு வருகிறதா?) எதிராக போராட்டக் கொடி ஏற்றி, நமது உரிமைகளை மீட்டுத் தருவதற்காக 1980களிலிருந்தே உலகெங்கிலும் உள்ள சிந்தனையாளர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.

மென்பொருள் துறையின் வல்லுனர்கள் பலர் கட்டற்ற, மற்றவர்களின் உரிமைகளை மதிக்கக் கூடிய வகையில் மென்பொருட்களை உருவாக்கி வெளியிட்டு, பராமரித்து, மேம்படுத்தி வருகிறார்கள். வணிக நிறுவனங்களின் கட்டுத்தளைகளுடனான மென்பொருட்களுக்கு மாற்றாக கட்டற்ற மென்பொருட்கள் ஆயிரக்கணக்கில் இலவசமாகவும், விற்பனைக்கும் கிடைக்கின்றன.

இந்தக் கட்டற்ற மென்பொருட்களை கொண்டாடும் விதமாக உலகமெங்கும் மென்பொருள் சுதந்திர தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 

இந்தக் கொண்டாட்டங்களின் மூலம் உலகெங்கிலும் உள்ள பொதுமக்களுக்கு கட்டற்ற மென்பொருட்களை கல்விக் கூடங்களிலும், அரசு அலுவலகங்களிலும், வீட்டிலும், அலுவலகத்திலும் எல்லா இடத்திலும் பயன்படுத்துவதன் ஆதாயங்கள் எடுத்துச் சொல்லப்படுகின்றன.

நோக்கம்
எல்லா மக்களும் சுதந்திரமாக ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொள்ளவும், புதிய ஆக்கங்களை படைக்கவும், படைப்புகளை பகிர்ந்து கொள்ளவும் ஏதுவான வெளிப்படையான எல்லோரையும் அணைத்துச் செல்லும் தகவல் தொழில் நுட்ப சூழலை உருவாக்குவது.

குறிக்கோள்கள்
  • மென்பொருள் சுதந்திரத்தையும் அதற்காக உழைப்பவர்களையும் கொண்டாடுவது
  • மென்பொருள் சுதந்திரம் பற்றிய பொதுவான புரிதலை உருவாக்கி, கட்டற்ற மென்பொருட்களையும், பொதுவான தகுதரங்களையும் பயன்படுத்த மக்களை ஊக்குவித்தல்.
  • எல்லோருக்கும் கிடைக்கக் கூடிய எல்லோரும் பங்கேற்கக் கூடிய வாய்ப்புகளை ஏற்படுத்துவது
  • உருவாகி வரும் தகவல் சார்ந்த சமூகத்தில் பொறுப்புகளையும் கடமைகளையும் பற்றிய விவாதங்களை ஊக்குவித்தல்
  • இதே நோக்கத்தைக் கொண்டுள்ள நிறுவனங்களுடனும் தனிநபர்களுடனும் இணைந்து  செயல்படுதல். 
சென்னையில் மென்பொருள் சுதந்திரதினம்
ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் மூன்றாவது சனிக்கிழமை உலகெங்கிலும் கொண்டாடப்படும் இந்த நிகழ்வு இந்த ஆண்டு செப்டம்பர் 18ம் தேதி நடக்கவுள்ளது.

இந்திய லினக்சு பயனர் குழுவின் சென்னை (http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc.tamil) பிரிவைச் சேர்ந்த தன்னார்வலர்கள் இதைச் சிறப்பாகக் கொண்டாட ஏற்பாடுகள் செய்துள்ளார்கள்.  சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் கட்டற்ற மென்பொருட்கள் பற்றி விளக்கும் கண்காட்சியும் கலந்துரையாடல்களும் செப்டம்பர் 18ம் நாள் நடக்கும்.

1. இதில் கலந்து கொள்ள பொதுமக்களையும், மாணவர்களையும், பத்திரிகையாளர்களையும், அரசு ஊழியர்களையும், கணினி ஆர்வலர்களையும் அன்புடன் அழைக்கிறோம். இது பற்றித் தெரிந்து கொள்ள  இந்த என்ற வலைப்பக்கத்தைப் பாருங்கள்.

2. சென்னைக்கு வெளியில் வசிக்கும் இளைஞர்கள், தன்னார்வலர்கள் தத்தமது பகுதியில் மென்பொருள் சுதந்திர தினத்தைக் கொண்டாட ஏற்பாடுகள் செய்யலாம். உங்கள் கொண்டாட்டம் பற்றிய விபரங்களை  இந்தத் தளத்தில் பகிர்ந்து கொண்டால் உலகெங்கிலும் உள்ள மக்கள் அதைப் பார்வையிடுவார்கள்.

நமது கணினியில் இயங்கும் மென்பொருட்களை கட்டிப் போட்டுள்ள தளைகளை உடைத்து எறிவோம்.
எல்லோரும் பங்கேற்கக் கூடிய தகவல் தொழில் நுட்ப சமூகத்தை உருவாக்குவோம். 


மென்பொருள் வணிகக் கட்டுகளுக்குச் சாவுமணி

2 கருத்துகள்:

ராஜ்குமார் ரவி சொன்னது…

விழிப்புணர்வு கட்டுரை தந்ததற்கு நன்றி. உங்கள் வலைப்பூவில் மேல் வலது மூலையில் பார்த்த தொடுப்பால்தான் நாளைக்கு உலகெங்கிலும் உள்ள மென்பொருள் ஆர்வலர்கள் கொண்டாடத்திற்கு தயாராவது இந்த மூளைக்கு எட்டியது. மிக மிக நன்றி. கூகிளில் தேடிதான் இந்த பக்கத்திற்கே வந்தேன். இது குறித்து வேறு குறிப்புகள் தமிழில் கிடைக்காதது, விழிப்புணர்வு பரவலாக வேண்டுமெனத் தோன்றுகிறது. நாளைக்கு நேரில்வர இயலவில்லை. இருப்பினும் இந்த நாள் குறித்து இன்று எங்கள் அலுவலக மேலதிகாரிகளுக்கு எடுத்துரைத்தோம். நாளை கொண்டாட ஏற்பாடு செய்திருக்கிறோம். சென்னையில் விழா சிறப்பாக அமைய வாழ்த்துகள்.

மா சிவகுமார் சொன்னது…

நன்றி ராஜ்குமார்,

உங்கள் அலுவலகத்திலும் விழா சிறப்பாக நடந்திருக்கும் என்று நம்புகிறேன்.
அன்புடன், மா சிவகுமார்

கருத்துரையிடுக