- மீஉரை நிரலின் கொக்கிளும் இப்படி இரட்டையாகத்தான் பயன்படுகின்றன. இரண்டு கொக்கிகளுக்கும் நடுவில் பக்கத்தில் காண்பிக்க வேண்டிய உள்ளடக்கம்.
- சிலக் கொக்கிகள் ஒற்றையாகவே நின்று கொள்ள முடியும், அதைக் காட்டுவதற்கு <கோடு /> என்று, முதலில் வரும் கொக்கியிலேயே அடைப்புக் குறிக்குள் / என்ற முடிவு சின்னத்தையும் சேர்த்து எழுத வேண்டும்.
- ஆரம்பத்தில் பல வகைப்பட்ட கொக்கிகள் மீஉரை நிரலுக்கு வரையறுக்கப்பட்டாலும், அடுக்கடுக்கான அழகுச் சீட்டுகள் முறைமையில் இணையப் பக்கங்களின் உள்ளடக்கத்தையும், வடிவமைப்பையும் பிரித்துக் கையாள வேண்டும் என்ற அணுகுமுறையில் பெரும்பாலான உருவமைப்புக் கொக்கிகள் அழகுச்சீட்டுக் கோப்புகளில் வரையறுக்கப்படுகின்றன.
- கொக்கியின் கூடுதல் இயல்புகளை வரையறுக்க, ஆரம்பக் கொக்கியின் அடைப்புக்குறிகளுக்குள் இயல்பின் பெயரைக் குறிப்பிட்டு, சமன் குறிக்கு அப்பால் அதன் மதிப்பை, மேற்கோள் குறிகளுக்குள்ளாக சொல்ல வேண்டும்.
நாம் ஏற்கனவே பார்த்த <a> என்ற கொக்கியின் ஒரு இயல்பு, href என்பது. <a href="wepage3.html"> என்று எழுதினால் <a> என்ற கொக்கியின் href என்ற இயல்பு மதிப்பு webpage3.html.
இணைய உலாவிக்கு ஒவ்வொரு வகைக் கொக்கி, அவற்றின் இயல்புகள், ஒவ்வொரு இயல்பின் பலவகை மதிப்புகள் என்று இனம் கண்டு அவற்றிற்கேற்றவாறு பக்கத்தை பயனருக்கு காட்டும் வேலை. - a என்ற கொக்கியின் பொருள், நங்கூரம்.
திருச்சியில் இருக்கும் ஆற்றில் நிற்கும் படகிற்கு, சென்னையின் குளத்திலிருந்து ஒரு தொடுப்பு தர வேண்டும். ஆற்றுப் படகில் கட்டப்பட்ட கயிற்றின் இன்னொரு முனையை சென்னை குளத்தில் பொருத்தப்பட்ட நங்கூரத்தில் சேர்த்து விட்டால் போதும்.
உங்கள் இணையப் பக்கத்தில் இருக்கும் நங்கூரக் கொக்கியில், போக வேண்டிய பக்கத்தின் முகவரியை கொடுத்தால், அதன் மீதும் சொடுக்கும் பயனர் அந்தப் பக்கத்துக்குப் போய்ச் சேர்ந்து விடுவார்.
நாம் உருவாக்கிய இணையப் பக்கத்தில் உள்ளடக்கம் எல்லாம் ஒன்றாக ஒட்டிக் கொண்டு தெரிகின்றன. நிரலில் இடைவெளி நிறைய விட்டு, வரி பிரித்து, பத்தி பிரித்து எழுதினாலும், உலாவியில் காட்டப்படும் போது எல்லாம் சேர்ந்து கொள்கின்றன.
இதில் இரண்டு பாடங்கள்
1. மீஉரை நிரல் எழுதும் போது மூல நிரலைப் படிப்பதற்கு வசதியாக, சொற்களுக்கு நடுவிலும், பத்திகளுக்கு நடுவிலும் தாராளமாக இடைவெளிகளை விடலாம். உலாவி, சொற்களுக்கு இடையே இருக்கும் ஒற்றை இடைவெளியை மட்டும் கணக்கில் வைத்துக் கொண்டு மற்ற இடைவெளிகளை எல்லாம் கண்டு கொள்ளாமல் விட்டு விடும்.
2. உலாவியில் காண்பிக்கப்படும் பக்கத்தில் பத்தி பிரிப்பு அல்லது வரி பிரிப்பு தேவை என்றால் கூடுதல் வேலை செய்ய வேண்டியிருக்கும்.
<பத்தி> </பத்தி>
<முறி> </முறி>
என்ற கொக்கிகளைப் பயன்படுத்தி வரி உடைப்பு செய்து கொள்ளலாம்.
webpage1.html என்ற கோப்பில் தடிப்பாகக் காட்டியுள்ள கொக்கிகளைச் சேருங்கள்.
<html>
<head>
<meta content='text/html; charset=UTF-8'>
<title> உண்மைத் தமிழன் </title>
</head>
<body>
<p>உண்மைத்தமிழன் அனைவரையும் அன்போடு உளமார இரு கரம் கூப்பி வரவேற்கின்றான். வருக.. வருக.. நிறைய சுவையோடு பசியாறுக.. கொஞ்சம் இளைப்பாறுக.</p>
<a href="tamil-movies/webpage2.html"> தமிழ்ப் படங்கள் </a> <br />
<a href="http://truetamilans.blogspot.com/">உண்மைத் தமிழனின் வலைப்பதிவு </a> <br />
<a href="webpage3.html">என்னைப் பற்றி</a> <br />
</body>
</html>
கோப்பை மாற்றி சேமித்து விட்டு பயர்பாக்சில் திறந்து பாருங்கள்.
"உண்மைத்தமிழன் அனைவரையும் அன்போடு உளமார இரு கரம் கூப்பி வரவேற்கின்றான். வருக.. வருக.. நிறைய சுவையோடு பசியாறுக.. கொஞ்சம் இளைப்பாறுக." என்பது ஒரு பத்திக்குள்ளும் அதனைத் தொடர்ந்து கொடுத்துள்ள நங்கூர தொடுப்புகள் ஒவ்வொன்றின் இறுதியிலும் ஒரு வரி முறிவும் பக்கத்தில் காட்டப்பட்டிருக்கும்.
இப்ப கொஞ்சம் பரவாயில்லை. ஆனா, இன்னும் அழகா இருக்கணுமே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக