வியாழன், 12 ஆகஸ்ட், 2010

மீஉரை - சுட்டிகள்

1. முந்தைய பகுதியில் தமிழில் உள்ளிட்ட எழுத்துக்கள் சரியாக தெரிவதற்கு கோப்பின் தலைப்பகுதிக்குள் ( இப்படி ஒரு வரியைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

<meta content="text/html; charset=UTF-8">

மெட்டா என்பது இந்தக் கோப்பைப் பற்றிய பின்னணி விபரங்கள். இதைப் பயன்படுத்தி வலை உலாவிக்கு பக்கத்தின் உள்ளடக்கத்தை காண்பிப்பதற்குத் தேவையான கூடுதல் தகவல்களை சொல்லலாம். கூகுள் போன்ற தேடுகருவிகளுக்கு உள்ளடக்கத்தின் குறிச்சொற்களைச் சொல்லலாம். இப்போதைக்கு, ஒருங்குறியில் காண்பிக்க வேண்டும் என்று சொல்லிக் கொள்வதோடு நிறுத்திக் கொள்வோம்.

2. அடுத்தக் கட்டம் இந்த வலைப்பக்கத்திலிருந்து இன்னொரு வலைப்பக்கத்துக்கு ஒரு சுட்டி அல்லது தொடுப்பு கொடுக்க வேண்டும். அந்தப் பக்கம் நம்முடைய அடைவிற்குள்ளேயே இருக்கலாம் (My Website), அதன் உள்ளே இருக்கும் இன்னொரு அடைவிற்குள் இருக்கலாம் (My Website/tamil-movies) அல்லது இன்னொரு இணையத் தளத்தில் இருக்கும் பக்கம் அல்லது படம் அல்லது கோப்பாக இருக்கலாம்.

மூன்றையும் செய்து பார்த்து விடலாம்.

3. webpage2.html என்று இன்னொரு கோப்பை உருவாக்குங்கள். முதலில் சொன்னது போலவே நோட்பேடில் கோப்பை உருவாக்க வேண்டும். .txt என்ற பின்னொட்டு இல்லாமல் .html என்ற பின்னொட்டோடு கோப்பு சேமிக்கப்பட வேண்டும்

<html>
<head>
<meta content="text/html; charset=UTF-8">
<title> உண்மைத் தமிழனின் வலைத்தளம் - தமிழ் திரைப்பட உலகம் </title>
</head>
<body>
நான் பார்த்து ரசித்த தமிழ்த் திரைப்படங்களைப் பற்றிய என்னுடைய கருத்துக்களை படிக்க.
</body>
</html>

tamil-movies என்ற உள்அடைவை My Website என்ற அடைவில் உருவாக்கி அதனுள் இந்தக் கோப்பை சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.

4. My Website/webpage1.html என்ற கோப்பை திறந்து இந்த வரியைச் சேருங்கள்.
<a href="tamil-movies/webpage2.html"> தமிழ்ப் படங்கள் </a>

மாற்றங்களை சேமித்து விட்டு, பயர்பாக்சில் கோப்பைத் திறந்து பாருங்கள், தமிழ்ப்படங்கள் என்று அடிக் கோடிட்டு ஒரு சொற்றொடர் தெரியும், அதன் மீது கிளிக்கினால், நமது இரண்டாவது கோப்பை திரையில் பார்க்கலாம்.

<a> </a> கொக்கிளுக்கு நடுவில் இடுவது திரையில் காண்பிக்கப்படும், <a>க்கு உள்ளேயே href= என்ற பண்பில், கிளிக்கினால் எங்கு போய்ச் சேர வேண்டும் என்ற பாதையையும், கோப்பின் பெயரையும் கொடுத்திருக்கிறோம். அவ்வளவுதான்!

5. தன்னுடைய வலைப்பதிவை இங்கிருந்து இணைக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?

My Website/webpage1.html என்ற கோப்பை திறந்து இந்த வரியைச் சேருங்கள்.
<a href="http://truetamilans.blogspot.com/"> உண்மைத் தமிழனின் வலைப்பதிவு</a>

அதே போல பக்கத்தில் காண்பிக்கப் பட வேண்டிய - உண்மைத்தமிழனின் வலைப்பதிவு என்பதை <a> </a>க்குள் கொடுத்து விட்டு, கிளிக்கினால் எங்கு போக வேண்டும் என்ற முகவரியை href= மேற்கோள் குறிகளுக்கு உள்ளே கொடுத்து விட வேண்டியது.

6. My Website என்ற அடைவுக்குள்ளேயே, இருக்கும் கோப்பை இணைக்க என்ன செய்ய வேண்டும்?

My Website/webpage1.html என்ற கோப்பை திறந்து இந்த வரியைச் சேருங்கள்.
<a href="webpage3.html"> என்னைப் பற்றி</a>

எந்தப் பாதையையும் குறிப்பிடாமல் கோப்பின் பெயரை மட்டும், மேற்கோள் குறிகளுக்குள், href என்ற பண்புக்கு குறிப்பிட்டால், இந்தக் கோப்பு இருக்கும் அதே அடைவுக்குள் தேடிப் பார் என்று கட்டளை. சொன்னதை கணினி கேட்கும்!

webpage3.html என்ற கோப்பை உருவாக்கி தேவையான உள்ளடக்கத்தைச் சேர்த்து, My Website என்ற அடைவுக்குள்ளேயே சேமித்துக் கொள்ளுங்கள்.

<html>
<head>
<meta content="text/html; charset=UTF-8">
<title> உண்மைத் தமிழனின் வலைத்தளம் - என்னைப் பற்றி </title>
</head>
<body>
நான் சென்னை மாநகரில் வசித்து ஊடகத்துறையில் பணிபுரிகிறேன்.
</body>
</html>

7. உங்கள் My Website/website1.html என்ற கோப்பு இப்போது இப்படி இருக்கும்.

<html>
<head>
<meta content='text/html; charset=UTF-8'>
<title> உண்மைத் தமிழன் </title>
</head>
<body>
உண்மைத்தமிழன் அனைவரையும் அன்போடு உளமார இரு கரம் கூப்பி வரவேற்கின்றான். வருக.. வருக.. நிறைய சுவையோடு பசியாறுக.. கொஞ்சம் இளைப்பாறுக.

<a href="tamil-movies/webpage2.html"> தமிழ்ப் படங்கள் </a>
<a href="http://truetamilans.blogspot.com/">உண்மைத் தமிழனின் வலைப்பதிவு </a>
<a href="webpage3.html"> என்னைப் பற்றி</a>
</body>
</html>

8. பக்கம் கொஞ்சம் கடுப்பாக மொட்டையாக இருக்குமே!
வரிக்கு வரி அழகாக பிரித்து போட்ட சுட்டிகள் எல்லாம் முதல் வரியுடன் ஒட்டிக் கொண்டு கச்சா முச்சாவென்று தெரிகிறது. அதற்கு என்ன செய்யலாம்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக