சனி, 14 ஆகஸ்ட், 2010

சென்னை பயனர் குழு - ஆகஸ்டு மாதக் கூட்டம்.

சென்னை லினக்சு குழுவின் மாதாந்திரக் கூட்டங்களில் பல ஆண்டுகளாகக் கலந்து கொண்டதில்லை. சனிக்கிழமை, நிறுவன வேலை நாளாக இருந்ததாலும், மற்ற பொறுப்புகளுக்கு இடையிலும் சனிக்கிழமை பிற்பகலில் கூட்டத்துக்குப் போவது நடக்காததாகவே போயிருந்தது. சமீபத்திய மாற்றங்களினால் இந்த அழுத்தங்கள் குறைந்து பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.

கூட்டத்துக்குப் போய்ச் சேருவது:

பேருந்தில் ஏறி ஐஐடிக்கு முன்பு இறங்கிய பிறகு விண்வெளி பொறியியல் துறை (aerospace engineering) வரை போய்ச் சேருவதற்கு அரை மணி நேரம் ஒதுக்கிக் கொள்ள வேண்டும். நுழைவாயிலிலிருந்து 'கஜேந்திரா சர்க்கிள இரண்டு கிலோமீட்டர் தூரம் இருக்கும் சார், அதோ நிற்கும் வேனில் ஏறினால் கொண்டு விட்டு விடுவார்கள்' என்று வாயிற் காவலர் வழி காட்டினார்.

வேன் வந்து புறப்படுவதற்குக் காத்திருக்க வேண்டும் அல்லது நடந்தே போக வேண்டும். வேனில் இரண்டு நிறுத்தங்களுக்குப் பிறகு யானை சிலைகள் வைக்கப்பட்ட ரவுண்டானாவில் இறங்க வேண்டும். அதுதான் கஜேந்திரா சர்க்கிள்.

(நினைவில் இருப்பது) வேன் வந்த பாதையைத் தவிர்த்து மூன்று சாலைகள் பிரிந்து போகின்றன. வலது புறம் திரும்ப வேண்டும். மின், மின்னணுவியல் (electrical department) துறை என்ற திசையில் நடந்து கொஞ்ச தூரத்துக்குப் பிறகு பயன்பாட்டு இயந்திரவியல் (applied mechanics) என்ற சாலையில் திரும்ப வேண்டும். பயன்பாட்டு இயந்திரவியல் கட்டிடத்துக்கு முன்பு இருக்கும் புதிய கட்டிடம் விண்வெளி பொறியியல் துறையுடையது. அந்தக் கட்டிடத்தின் முகப்பில் மட்டும்தான் பெயர் எழுதியிருந்தது பார்க்கக் கிடைத்தது.

போகும் போது 20 நிமிடங்கள் தாமதமாகி விட்டிருந்தது.

ராமன் லினக்சில் கோப்பு அனுமதிகள் குறித்து பேச ஆரம்பித்திருந்தார்.

-- பயனர்(u), குழு(g), பிறர்(o) என்று மூன்று பிரிவினருக்கு அனுமதிகள் மாற்றலாம்
-- படித்தல்(r), மாற்றுதல்(w), இயக்குதல்(x) என்று மூன்று வகை அனுமதிகளை கொடுக்கலாம் அல்லது நீக்கலாம்.

-- ls -l மூலம் ஒரு கோப்பின் அனுமதி விபரங்களை பார்க்கலாம்.
-- அனுமதி விபரங்கள் ஒவ்வொரு பிரிவினருக்கு மூன்று கட்டங்களாக ஒன்பது கட்டங்களில் காட்டப்படுகிறது (உதாரணம் : r-xrw-r--). முதல் மூன்று கட்டங்கள் பயனருக்கு உள்ள அனுமதிகள், அடுத்த மூன்று கட்டங்கள் குழுவிற்கான அனுமதிகள், கடைசி மூன்று கட்டங்கள் மற்றவர்களுக்கான அனுமதிகள்.

-- லினக்சில் எல்லாமே கோப்புகள்தான்
-- கோப்பு, அடைவு, கருவி என்று காட்டுவதற்கு அனுமதி விபரங்களுக்கு முந்தைய கட்டம் பயன்படுகிறது (- என்றால் சாதாரண கோப்பு, d என்றால் அடைவு, c என்றால் கேரக்டர் டிவைஸ், b என்றால் பிளாக் டிவைஸ், l என்றால் லிங்க்)

--chmod பயன்படுத்தி அனுமதிகளை மாற்றலாம். பயனர் பிரிவு (u, g, o), + (சேர்) / - (நீக்கு), அனுமதி வகை (rwx). (உதாரணம் : chmod u+rw கோப்பு)
--இன்னொரு முறையில் எண்கணக்கு மூலம் மாற்றலாம். r=4, w=2, x=1 என்ற கணக்கில் கூட்டி என்ன அனுமதிகள் என்று அமைக்கலாம். (உதாரணம் : chmod 666 கோப்பு)

ஸ்டிக்கி பிட்  மற்றும் இயக்கப்படும் கோப்பு உரிமையாளரின் (setuid) அனுமதிகளுடனேயே இயங்கும் உத்தி பற்றியும் விளக்கினார்.

என்னதான் மேனுவல் (man) பக்கங்களைப் படித்தாலும், எத்தனை புத்தகங்களை புரட்டினாலும், ஒருவர் உதாரணங்களுடன் விளக்கிச் சொல்லும் போது மனதில் இன்னும் ஆழமாக பதிந்து விடுகிறது. அந்த வகையில் மிகவும் பலனுள்ள அமர்வு.

சந்திரசேகர் பாபு - ரூபி கணிமொழி குறித்துப் பேசினார்.

பேர்ல், ஷெல் நிரல்கள், ஜாவா, பைதன் என்று பல மொழிகளில் பணி புரிந்த இவர் ரூபி மொழி, தான் அறிந்த மொழிகளில் இனிதானது என்று மிகச்சிறப்பாக விளக்கினார். 'பேர்ல், ஷெல் நிரல்களால் செய்யக் கூடிய பணிகளை ரூபியில் எப்படி சிறப்பாக செய்ய முடியும்' என்பது பேச்சின் குறிக்கோளாக இருந்தது.

மென்பொருள் இயல் பின்னணி இல்லாத என்னைப் போன்றவர்களுக்கும் புரியும்படி நிறைய எடுத்துக்காட்டுகள், அனுபவப் பகிர்வுகள், சரளமான பேச்சு, நட்பு தவளும் புன்னகை சேர்த்து நேரம் போவது தெரியாமல் விறுவிறுப்பாக இருந்தது இந்த அமர்வு.

  • ரூபி என்பது முழுக்க முழுக்க பொருள் சார்ந்த நிரல் மொழி (object oriented language). ரூபி மொழியில் எண்கள் (integer), சொற்றொடர்கள் (strings) கூட பொருட்களாகத்தான் கருதப்படுகின்றன.


  • நிரல் எழுதுவது அழகாக இருக்க வேண்டும், நிரலை பராமரிப்பது எளிமையாக இருக்க வேண்டும் என்பது ரூபியின் குறிக்கோள்.
  • ரூபியை வெறும் இணையப் பயன்பாட்டு நிரல்மொழியாக நினைக்க வேண்டாம். அது ஒரு பொதுப் பயன்பாட்டு நிரல்மொழி.

பேசும் போதே எடுத்துக்காட்டு செயலிகளாக ஷெல் நிரல், பேர்ல், ரூபி மூன்றிலும் எழுதி இயக்கிக் காட்டினார். இடையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கும் பொறுமையாக, தெளிவாக, எளிமையாக பதிலளித்தார். நேரம் கடந்து போனதை சுட்டிக் காட்டிய பிறகுதான் அவருக்கும் கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கும் அவ்வளவு நேரம் ஓடிப் போனது உறைத்தது.

சுகி வெங்கட், அவரது நிறுவனத்தில் உருவாக்கி கட்டற்ற மென்பொருளாக வெளியிட்டுள்ள மல்டி ஃப்ளோ பற்றிப் பேசினார்.

ஃபயர்ஃபாக்சின் சூல் (xul) சட்டகத்தில், ஜாவாஸ்கிரிப்டில் உருவாக்கப்பட்ட இந்த தொகுப்பியில் பன்மொழி இடைமுகம், கணிதக் குறியீடுகள் சேர்ப்பது என்று வசதிகள் இருக்கின்றன. ஒருவர் இத்தகைய படைப்பை உருவாக்கி கட்டற்ற மென்பொருளாக வெளியிட்டிருப்பது பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

அவர் கேட்டுக் கொண்டது போல பயனர்களாகவும், நிரலாளர்களாகவும் மற்றவர்களும் பங்கேற்று இதை மேம்படுத்த முடிந்தால் சிறப்பான ஒரு மென்பொருளாக உருப்பெறும் வாய்ப்புகளைக் கொண்டிருக்கிறது.

செப்டம்பர் மாதம் 18ம் தேதி நடத்த உத்தேசித்துள்ள மென்பொருள் சுதந்திர நாள் (software freedom day) முன் தயாரிப்புகளைக் குறித்து ஸ்ரீனி, தியாகராஜன், ராமன் அறிவித்தார்கள். 'யார் யார் எத்தனை கடைகள் அமைக்கப் போகிறார்கள், பணிகளைச் செய்வதற்கு தன்னார்வலர்கள்' என்று பட்டியல் தயாரித்தார்கள்.

'நிகழ்ச்சிக்கு முந்தைய மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத் தொடர்பு வேலைகளைப்' பற்றிக் கேட்ட என்னிடம் அந்தப் பொறுப்பைத் தந்தார்கள். அருண் SAG, ஸ்ரீனிவாசன், சுரேஷ், நாகராஜன், சத்யநாராயணன், அகிலன் ஆகியோர் இதில் சேர்ந்து கொண்டோம்.
  • சென்னையில் வெளியாகும் தமிழ் நாளிதழ்கள் (தினமணி, தினமலர், தினத்தந்தி, தினகரன்),
  • ஆங்கில நாளிதழ்கள் (தி இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ், டெக்கான் குரோனிக்கிள், டைம்ஸ் ஆஃப் இந்தியா),
  • கணினி பத்திரிகைகள் (தமிழ் கம்ப்யூட்டர், லினக்சு ஃபார் யூ),
  • தமிழ் பத்திரிகைகள் (ஆனந்த விகடன், குமுதம், குங்குமம்),
  • பண்பலை வானொலிகள் (சூரியன், மிர்ச்சி, ஆஹா, பிக், ரேடியோ சிட்டி)
    போன்ற எல்லா ஊடக நிறுவனங்களுக்கும் மின்னஞ்சல் மற்றும் தகவல்களை முன் கூட்டிய அனுப்பி வைப்பது

  • sfd2010.ilugc.in என்ற தளத்தில் நிகழ்வு பற்றிய விபரங்களை தொகுத்து அளித்தல்
  • டிவிட்டர், ஃபேஸ்புக், லிங்க்ட்இன் போன்ற இணைய தளங்களில் தகவலை பரப்புவது
  • வலைப்பதிவர்களில் விழிப்புணர்வு உருவாக்குவது
  • கல்லூரி, பள்ளிகளுக்கு விபரங்களை அனுப்புவது..
என்று பல வழிகளில் மென்பொருள் சுதந்திரம் குறித்த தகவலை பரப்பி நிகழ்ச்சிக்கு மக்களை வரவேற்க வேண்டும்.

இவற்றைத் தவிர
- தமிழக அரசின் எல்காட்
- c-dac
- nrcfoss
போன்ற மென்பொருள் தொடர்பான அரசு துறைகளை அதிகாரபூர்வமாக பங்கேற்க அழைக்கலாம்.

சிறப்பு விருந்தினர் என்று யாரையும் அழைக்காமல், கட்டற்ற மென்பொருளில் ஆர்வம் உடைய அதற்கான பணிகளை செய்த தலைவர்களையும் (இந்திய ஆட்சிப் பணி அலுவலர் திரு உமாசங்கர், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் போன்றவர்கள்) வருகை தர அழைக்கலாம்.

லினக்சு பயிற்சி நிறுவனங்கள், லினக்சு சேவை நிறுவனங்கள், கணினி விற்பனை நிறுவனங்கள் போன்றவற்றை அணுகி அவர்களின் பங்களிப்பையும் கேட்கலாம்.

9 கருத்துகள்:

vignesh சொன்னது…

கஜேந்திரா சர்க்கிளில் இறங்கி நடக்கவேண்டிய அவசியம் இல்லை. ESB (Electrical Sciences Block) நிறுத்தத்தில் இறங்கினால் பயன்பாட்டு இயந்திரவியல் திருப்பத்திற்கு மிகவும் பக்கம் :-)

மா சிவகுமார் சொன்னது…

நன்றி விக்கி,

ஆனால், சந்திப்பு குறித்த அறிவிப்பில் கஜேந்திரா சர்க்கிள் அருகில் என்றுதான் குறிப்பிட்டிருந்தார்கள், அதுதான் இந்தக் குழப்பம்.

இனி வரும் மாதங்களில் தெளிவான வழிகாட்டல் எழுதி மடற்குழுவுக்கு அனுப்பி விட்டு வலைத்தளத்திலும் போட்டு வைப்பது வசதியாக இருக்கும்.

அன்புடன்,
மா சிவகுமார்

ராம்ஜி_யாஹூ சொன்னது…

should be roobi kanini mozi, not kanimozi akka

மா சிவகுமார் சொன்னது…

வணக்கம் ராம்ஜி யாஹூ,

நான் கணிமொழி என்றுதான் எழுதியிருக்கிறேன், நீங்கதான் ஆங்கிலத்தில் கனிமொழி அக்காவை கொண்டு வருகிறீர்கள் :-)

பெயரில்லா சொன்னது…

'object' என்கிறதுக்கு, பொருளை விட நல்ல சொல் தேவை

மா சிவகுமார் சொன்னது…

//'object' என்கிறதுக்கு, பொருளை விட நல்ல சொல் தேவை//

நானும் வெகுநேரம் யோசித்தேன். பொருள் என்ற தமிழ்ச் சொல் பல பொருட்களில் (:-) பயன்படுகிறது.

பொருள் - money, wealth
பொருள் - meaning
பொருள் - object

இந்த மூன்றாவது பயன்பாட்டிற்கு வேறு பொருத்தமான சொல் எதுவும் தோன்றவில்லை. கணித் தமிழ் அகராதிகளில் ஆப்ஜக்ட் என்பதற்கு பொருள் என்றே ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

object properties - பொருளின் பண்புகள்
object methods - பொருளின் செயற்பாடுகள்
class -> object - வகுப்பு (வகை) -> பொருள்

instantiation - பொருள் உருவாக்கம்
destruction - பொருள் அழித்தல்

பொருத்தமாகத்தான் படுகிறது.

ஜாவாகாரரும் பொருள் என்றே பாவிக்கிறார்.
http://tamilcpu.blogspot.com/

அன்புடன்,
மா சிவகுமார்

Bharathi சொன்னது…

பொருள் is also having different meaning in North madras ;)

ராஜ்குமார் ரவி சொன்னது…

//ஜாவாகாரரும் பொருள் என்றே பாவிக்கிறார்....
அய்யய்யோ, அதெல்லாம் ஒன்னும் இல்லீங்க. என்னிடம் ஒரு கணித்தமிழ் அகராதி(சென்னை பல்கலைகழகம்) pdf கோப்பாக உள்ளது. அதில் உள்ளதைத்தான் அப்படியே பாவித்தேன். பின்னூட்டத்தை ஒரு நோட்டம் விட்டபோது என்னைப் பற்றி எழுதியிருப்பது ஒரு இன்ப அதிர்ச்சி.

மா சிவகுமார் சொன்னது…

வணக்கம் ராஜ்குமார்,

உங்களுக்கும் பொருத்தமாகப் பட்டதால்தானே பயன்படுத்தினீர்கள் :-).

உங்கள் பதிவு நன்றாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள்.

அன்புடன்,
மா சிவகுமார்

கருத்துரையிடுக