வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010

மைக்ரோசாப்டு - முடிவின் ஆரம்பம் ? - 2

மைக்ரோசாப்டு யாஹூவை வாங்க முயற்சிப்பதை விட, SAP வாங்க முயற்சி செய்யலாம் என்று ஒரு கட்டுரை குறித்து ஸ்லாஷ் டாட்டில் விவாதம். 'கூகிள் மைக்ரோசாப்டுக்கு போட்டியே இல்லை. கூகிளின் பயன்பாடுகள் பெரிய நிறுவனங்களுக்குள் நுழையவே இல்லை. நிறுவன சந்தையில் மைக்ரோசாப்டின் பிடி இன்னும் உறுதியாக SAP உதவியாக இருக்கும்' என்று கருத்துக்கள்.

1990களின் ஆரம்பத்தில் மைக்ரோசாப்டு இன்றைய கூகிள் போலவும், ஐபிஎம் இன்றைய மைக்ரோசாப்டு போலவும் இருந்தன. மைக்ரோசாப்டுக்கு நிறுவனங்களுக்குள் பிடி கிடையாது. அவர்கள் தமது தொழிலை வளர்த்தது தனி பயனர்களுக்கு இயங்கு தளமும், அலுவலக பயன்பாடுகளையும் விற்பதன் மூலம்தான். அப்படி மனங்களைப் பிடித்து அதன் மூலம் தொழில் நிறுவனங்களுக்கான சந்தையில் நுழைந்து 1990களின் இறுதி ஆண்டுகளில் அந்தப் பிடியை இறுக்கிக் கொண்டார்கள்.

'கூகிளிடம் இணைய தேடு வசதியைத் தவிர பெரிதாக எதுவுமில்லை' என்கிறார்கள். 'கூகிள் பயன்பாடுகள் என்று இணையம் சார்ந்த பயன்பாடுகள் எதுவும் பெரிய நிறுவனங்களில் பயன்படுத்தப்படுவதில்லை' என்கிறார்கள்.

ஆனால் கூகிள் பயன்பாடுகள் மூலம் தமது மின்னஞ்சல் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் இரண்டு நிறுவனங்கள் எனக்கே தெரியும். புதிதாக இணைய மின்னஞ்சல் ஆரம்பிப்பவர்களுக்கு ஜிமெயில்தான் இயல்பாகக் கிடைக்கிறது. வீட்டில் அப்பாவுக்கு இணைய இணைப்பு வந்ததும், கணினி சேவை அளிப்பவர் ஒரு ஜிமெயில் கணக்குதான் ஆரம்பித்துக் கொடுத்திருக்கிறார்.

ஜிமெயிலில் ஒரு இணைப்பு வந்தால், அதை 'கூகிள் ஆவணங்கள் பயன்பாட்டில் திறக்கவா' என்று கேட்கிறது. இன்றைக்கு அந்தப் பயன்பாடுகள் அவ்வளவு சிறப்பாக இல்லா விட்டாலும், ஒரு நாளைக்கு ஒரு மேம்பாடு என்று நகர்ந்து கொண்டே இருந்தால் ஒவ்வொருவாராக பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஒரு நல்ல நாளில் அந்த எண்ணிக்கை தேவையான அளவைத் தாண்டி கிரிடிகல் மாஸ் பெற்று விடும்.

இதை மைக்ரோசாப்டு மேலாளர்கள் உணர்ந்திருக்கிறார்கள். அவர்கள் இப்படியான ஒரு நிலவரத்தின் மூலம் பலன் பெற்று வளர்ந்தவர்கள். இது போன்ற நடைமுறைகளை நன்றாகவே அடையாளம் கண்டு கொள்ள முடியும். கூகிள் அப்படி வளர்ந்து விடக் கூடாதே என்றுதான் முயற்சிக்கிறார்கள்.

நிறுவனச் சந்தை தனிநபர் சந்தைக்கு சில ஆண்டுகள் பின்தங்கி வரும். நிறுவனங்களில் பணி புரிபவர்கள் முடிவெடுப்பவர்கள் எல்லோருமே முதலில் தனிநபர்கள்தான். அவர்களின் மனதைக் கவர்ந்து விட்டால், இன்று இல்லா விட்டால் ஒரு நாள் நிறுவனத்தின் முடிவுகள் நமக்குச் சாதகமாகத் திரும்பி விடும்.

அதுதான் மைக்ரோசாப்டின் வெற்றிப் பாதை, அதில் கூகிள் இப்போது நடை போடுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக