வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010

இன்னும் கொஞ்சம் வழி முறைகள்

இந்த வடிவமைப்புக் கூறுகளை வரையறுத்தல் இரண்டாவது படி.

நுட்பவரையறை ஆவணம் (technical documentation) என்ற ஆவணத்தில்
  • பணியின் நோக்கம் என்ன,
  • எந்த முறையில் இதை உருவாக்கப் போகிறோம்,
  • தரவுத் தளத்தை எப்படி வடிவமைக்க வேண்டும்,
  • இடைமொழியை எப்படி எழுத வேண்டும்,
  • இவ்வளவும் செய்வதற்கு எவ்வளவு நேரமாகும்
என்ற திட்டமிடல்களையும் வடிவமைப்புகளையும் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.

இதை எழுதி முடித்தவர் தனது அணியின் இன்னொரு உறுப்பினரிடம் அதைக் காட்டி சரி பார்த்துக் கொள்ள வேண்டும்.

இங்கும் நிரல் எழுதுவதை ஆரம்பிக்கும் முன்னரே நன்கு சிந்தித்து எழுதி வைத்துக் கொள்வதால் பின்னால் நேர விரயத்தைக் குறைத்துக் கொள்ளலாம். வேலையில் இறங்கிய பிறகு மாற்றங்கள் தேவைப்பட்டால் செய்து கொள்ளலாம் என்றாலும் அதற்கான தேவையைக் குறைப்பதுதான் இதன் நோக்கம்.

இப்படி வடிவமைத்த திட்டமிட்ட மென்பொருளை உருவாக்கிய பிறகு அதை எப்படி எப்படி சோதனை செய்து பார்க்க வேண்டும் என்றும் வரையறுக்க வேண்டும், இது மூன்றாவது படி. இந்த சோதனை வழிகள் ஆவணத்தின் (Test Cases Document) அடிப்படையில்தான் சோதனை அணியினர் (Testing Team) உருவாக்கிய மென்பொருளை சரி பார்ப்பார்கள்.

புதிய தேவையைப் புரிந்து வடிவமைத்து வல்லுனருக்குத்தான் இதை இப்படியெல்லாம் சோதித்துப் பார்க்க வேண்டும் என்று தெரிந்திருக்கும். அவரே அதையும் குறிப்பிட்டு விடுவது பொருத்தமாக இருக்கிறது.

நான்காவதாக, நிரல் எழுதுவது.

ஒரு மென்பொருள் உருவாக்கலில் இந்த நிரல் எழுதுவதின் பங்கு 20-30 சதவீதத்துக்குள்தான் இருக்கும் என்று எனது மதிப்பீடு. இந்த 20-30% மதிப்புக் குறைந்த பணிகள் செய்வதற்குத்தான் ஜாவா, டாட்நெட், விபி என்று சுற்றிக் கொண்டிருக்க நேர்கிறது.

ஐந்தாவதாக எழுதிய நிரலை சரி பார்த்து சோதனை அணியிடம் ஒப்படைப்பது. அவர்கள் ஏற்கனவே எழுதி வைக்கப்பட்டிருக்கும் சோதனை வழிகளை அடிப்படையாகக் கொண்டு எல்லா திசைகளிலும் சோதித்துப் பார்ப்பார்கள். இங்கு ஏதாவது பிரச்சனை வெளியே வந்தால் அது நிரல் எழுதியவரிடம் திரும்பிப் போய் சரி செய்யப்பட வேண்டும். மென்பொருள் வடிவமைப்பிலேயே பிரச்சனை இருந்தால் அதைக் கூட மாற்றி அமைக்க வேண்டியிருக்கலாம்.

ஐந்தாவது படியான தர நிர்ணயத்திலேயே (Quality Control), எழுதப்பட்ட நிரலை சக பணியாளர் படித்து விமரிசனம் செய்யும் நிரல் விமரிசனம் (Code Review) என்பதும் அவ்வப்போது செய்யப்படுகிறது.

கடைசியாக தேவையை ஆரம்பித்து வைத்தவர் இந்த இறுதி வெளிப்பாட்டைப் பார்த்து தனது ஒப்புதலை அளிக்கிறார்.

சமையல் முடிந்து விட்டது, சாப்பாடு தயார். சாப்பிட வைக்க வேண்டுமே. தயாரான நிரல்களை, மாற்றங்களை வாடிக்கையாளருக்குக் கொண்டு போய் நிறுவுதல், அங்கு பயனர்களுக்கு பயிற்சி அளித்தல், அவர்கள் கேட்கும் மாற்றங்களைக் குறித்துக் கொள்ளுதல், அவர்களின் ஐயங்களுக்கு விளக்கம் அளித்தல் போன்ற செயல்படுத்தல் மிகப் பெரிய பங்கு.

அதைத் தொடர்ந்து வாடிக்கையாளரிடம் இறுதி விளைவை, நன்மைகளை ஏற்கனவே பேசியிருந்தபடி காண்பித்து காசைக் கையில் வாங்குவதோடு பணி முடிகிறது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக