- நிறுனப் பெயர்களை, வணிக விபரங்களை ஒவ்வொரு முறையும் உள்ளிடத் தேவையில்லாமல் ஒரு பொதுவான இடத்தில் (master) போடச் சொல்லி, தேவை விபர உள்ளிடலில் தேர்ந்தெடுக்க வைப்போம்.
- இதே போன்று பொருள் பட்டியல் (product master), நிறப்பட்டியல் (colour master) போன்றவற்றுக்கும் பொதுவான பட்டியல் உருவாக்கிக் கொள்வோம் என்று தீர்மானிக்கிறோம்.
- நாளை இந்த வடிவத்தில் உள்ளிடச் சொல்வோம்.
- அளவுக்கு என்ன அலகைப் பயன்படுத்த வேண்டும், விலைக்கு எந்த நாட்டுப் பணம் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதும் வாங்க வேண்டும்.
- வாடிக்கையாளர், விற்பனையாளர், வங்கி, என்று யாராக இருந்தாலும் அவற்றுக்கு ஒரு பெயர் இருக்கும், முகவரி இருக்கும், நம்முடன் என்ன உறவு என்று இருக்கும்.
எனவே வாடிக்கையாளர், விற்பனையாளர் என்று தனித்தனி இடத்தில் சேமிக்காமல் ஒரே இடத்தில் எல்லா பெயர்களையும் வைத்துக் கொண்டு அவர்களது முகவரி விபரங்களுக்கு ஒரு பட்டியும் (table), உறவு விபரங்களுக்கு (relationships) இன்னொரு பட்டியும் உருவாக்குவோம் என்று தீர்மானிக்கிறோம்.
- தேவை விபரம் (order details) உள்வாங்கும் போது வாங்குபவர் (Buyer) என்ற உறவு இருக்கும் நிறுவனப் பெயர்களை மட்டும் எடுத்துக் காட்டி அந்தத் தேவை விபரங்கள் பட்டியில் அந்த உறவுக்கான எண்ணை மட்டும் சேமித்து வைப்போம்.
தேவைப்படும் போது இந்த மூன்று பட்டிகளையும் இணைத்து வாடிக்கையாளர் நிறுவனப் பெயரை எடுக்கலாம் என்று தீர்மானிக்கிறோம். - வணிக விபரங்களை (commercial details) ஒரு பட்டியில் போட்டு ஒரு வரிசை எண் (Serial Id) உருவாக்கி, இன்னொரு பட்டியில் பல்வேறு பொருட்களின் விபரங்களையும், அளவு, நாள் விபரங்களையும் சேமிப்போம் என்று முடிவு செய்கிறோம்.
- விலை விபரங்கள் (price details) குறிப்பிட்ட மேலாளர்களுக்கு மட்டும்தான் தெரிய வேண்டும் என்று இருப்பதால் தரவுத் தள அளவிலேயே விலையைத் தனிப் பட்டியில் சேமித்துக் கொள்வோம்.
பயன்பாட்டு நிரலிலோ (application program), தரவுத் தளக் கருவிகள் (database tools) மூலமாகவோ விலை விபரங்களை யார் பார்க்கலாம் என்று கட்டுப்படுத்த முடிந்தாலும் ஒரு கூடுதல் பாதுகாப்புக்காக தனிப் பட்டியில் சேமிப்போம்.
நிரலில் என்னென்ன நிரல்செயலிகள் எழுத வேண்டும், தரவுத் தளத்துடன் இணைய, உள்ளிட, வெளியெடுக்கத் தேவையான செயலிகளை ஒரு தொகுப்பாகவும் (Database Class), பக்கக் கூறுகளை காட்ட ஒரு தொகுப்பு (Page Class), படிவப் பகுதிகளைக் காட்ட ஒரு தொகுப்பு (Form Class) என்று முடிவு செய்கிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக