- எல்லா விபரங்களையும் பொருத்தமாக உள்ளிட்டால் சரியாக சேமிக்கப்பட்டு அறிக்கைப் பக்கத்தில் காண்பிக்கிறதா?
- வாடிக்கையாளர் பட்டியலில் விற்பனையாளர் பெயரைக் காண்பிக்கக் கூடாது.
- பொருளின் பெயரைக் குறிப்பிடாமல் உள்ளிட முயன்றால் என்ன நடக்கிறது/
இனிமேல் நிரல் எழுதுவது. (Coding)
ஜாவா குருக்கள், பிஎச்பி பிஸ்துகள், டாட்நெட் தாதாக்கள் இறங்கி விளையாட வேண்டிய கட்டம். ஒரே வரையறையை ஒருவர் 200 வரிகளில் செய்து காட்டலாம், இன்னொருவர் முப்பது வரிகளில் முடித்து விடலாம். கவிதை எழுதுவது போல, ஓவியம் வரைவது போல கணிமொழியின் கூறுகளை எப்படிப் பயன்படுத்தி அழகான நிரல் எழுதுவது என்பது எல்லோருக்கும் வந்து விடும் ஒன்று கிடையாது.
அடுத்ததாக எழுதியதை நிரலாளரே ஒரு தடவை சரிபார்த்து விட்டு சோதனைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இங்கு ஒரு முக்கியத்துவம் வாய்ந்த குழு இருக்க வேண்டும். இவர்கள் அனுமதித்தால்தான் வெளியே எந்த பதிப்பும் போக வேண்டும். மேலே பட்டியலிடப்பட்ட சோதனை வழிகளுடன் கூடவே அவர்களும் தமக்குத் தோன்றிய முறைகளில் சோதிப்பார்கள். (Unit Testing)
ஏற்கனவே இருக்கும் மென்பொருளில் புதிய கூறு சேர்த்தல் அல்லது மாறுதல் செய்தால் இந்தப் பகுதியைச் சோதித்ததோடு இல்லாமல் பிற பகுதிகளையும் ஒரு முறை சரி பார்த்துக் கொள்ள வேண்டும். தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டுவது போல ஒரு மூலையில் ஏதோ மாற்றப் போக இன்னொரு மூலையில் புட்டுக் கொள்ளும் அபாயம் எப்போதுமே இருக்கும். அதை அடையாளம் கண்டு சரி செய்வதும் திட்டமிட்டு செய்யப்பட வேண்டும். (Integration Testing)
இப்படி உருவான நிரலை ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கும் வாடிக்கையாளருக்கு அல்லது புதிதாக நிறுவ வேண்டிய இடத்துக்கு எப்படிக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற பொதி போடுதல் (Packaging) அடுத்தக் கட்டம். என்னென்ன கோப்புகள், என்னென்ன நிரல்கள் என்று ஒரு பொதியாகப் பொதிந்து அதை பிரித்து சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்க்கும் நிரலையும் இணைத்து வாடிக்கையாளர் சேவைப்பிரிவினர் (Service Team) கையில் போகும்.
அவர்கள் முன்னெச்சரிக்கையாக அலுவலகத்திலேயே இருக்கும் அந்த வாடிக்கையாளரின் தற்போதைய நிரல் தொகுப்பின் இந்த மாறுதல்களை ஓட்டிப் பார்த்து சிக்கல் எதுவும் இல்லை என்று உறுதிப் படுத்திக் கொள்வார்கள். வாடிக்கையாளரின் கணினி இணையத்தில் இணைந்திருந்தால் அப்படி இணைந்தோ, அல்லது நேரடியாகப் போயோ இந்த மாறுதல்களை அவர்களது கணினியில் ஏற்றி விடுகிறோம்,.
'என்னென்ன மாற்றியிருக்கிறோம். அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும்' என்று விளக்கி விட்டு அவர்களிடம் ஒரு புரிதல் அத்தாட்சி வாங்கிக் கொண்டு வந்து விடுவோம்.
ஆனால் சில நாட்களுக்குப் பிறகுதான் பயன்படுத்த ஆரம்பித்து சரியான பின்னூட்டம் கொடுப்பார்கள். அந்த நேரத்தில் சின்ன ஐயங்களை தொலைபேசியிலும், இன்னும் சிக்கலானதை மின்னஞ்சல் மூலம் மாற்றம் அனுப்பியோ, நேரிலோ தீர்த்து வைக்கிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக