வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010

தோல் துறை - மென்பொருள் தகவல் மேலாண்மை

தோல் பதனிடும் நிறுவனங்கள், தோல் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், அவற்றை கடைகளுக்குக் கொண்டு சேர்க்கும் பணியைச் செய்யும் நிறுவனங்கள், விற்பனை செய்யும் கடைகள், இவை அனைத்தையும் தாங்கும் வடிவமைப்பு நிறுவனங்கள், வேதிப் பொருள் வழங்கும் நிறுவனங்கள், இயந்திர உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் என்று ஒவ்வொன்றாக தமது செயல்பாடுகள் குறித்த விபரங்களைக் கணினியில் முறைப்படுத்த ஆரம்பிக்க வேண்டும்.

ஒரு வணிக நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்த விபரங்களைக் கணினிகளில் சேமித்து முடிவுகள் எடுக்கப் பயன்படுத்துவதற்கு ERP (Enterprise Resource Planning) எனப்படும் நிறுவன வளங்களைப் பேணும் மென்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இவற்றின் அடிப்படை மிக எளிதானது. நிறுவனத்தின் செயல்பாடுகளான வாங்குதல், பயன்படுத்துதல், விற்றல், ஊழியர்கள் விபரங்கள், கணக்கு வழக்குகள் அனைத்தையும் ஒரே தரவுத் தளத்தில் சேர்க்க வேண்டும். தகவல்களை சரியாக வடிவமைக்கப்பட்ட தரவுத் தளத்தில் சேமித்தால் தேவைப்படும் போது தேவைப்படும் விபரங்களைக் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல்கள் மூலமாக கூடுதல் விபரங்களையும் கணினி மூலமாகப் பெற்றுக் கொள்ளலாம்.

நிறுவனத்தில் மூலப் பொருள் உள்ளே வரும் போது கணினியில் வாசலில் இருக்கும் காவலர் விபரங்களை உள்ளிடுகிறார். அது கிடங்குக்கு வந்ததும், அதனுடன் வந்த ஆவணங்களைச் சரி பார்த்து அளவு, தரம் சரியாக இருக்கிறதா என்று பார்த்த பிறகு கிடங்கு மேலாளர், அந்த விபரத்தை உள்ளிடுகிறார்.

பொருள் வாங்கும் பிரிவினர் இப்படி வந்து சேர்ந்த விபரத்தை தமது கணினியில் பார்த்து, விற்பனையாளரிடமிருந்து வரப் போகும் பில்லை அதனுடன் இணைத்துக் கொள்வார்கள். அதை அடிப்படையாகக் கொண்டு கணக்கியல் பிரிவு விற்பனையாளருக்கு காசோலை அனுப்பி விடும்.

இப்படியே ஒவ்வொரு கட்டத்திலும் பொருட்களும் ஆவணங்களும் பணமும் நகரும் விபரங்களை எல்லாம் சேர்த்து வைத்துக் கொள்ளும் மென்பொருள் பயன்பாடு, தேவைப்பும் விபரங்களைத் தேவைப்படும் நேரத்தில் சரியான அனுமதிகள் இருப்பவர்களுக்கு எடுத்துக் காட்ட முடியும்.

இப்படி ஒரு மென்பொருளை ஒவ்வொரு நிறுவனத்தின் தேவைக்கேற்ப வடிவமைத்து, சின்னச் சின்ன விபரங்களை மாற்றியமைத்து, விபரங்களைக் கணினியில் உள்ளிட்டு, தனக்கு வேண்டிய தகவல்களை கணினியின் மூலம் பெறும்படி நிறுவன ஊழியர்கள் வேலை செய்யும் பழக்கங்களை மாற்றி, தேவையான கணக்கீடுகளைப் போட்டு நிறுவனத்தை நடத்த எடுக்கும் முடிவுகளுக்கு உதவி செய்யும் படி ஆவணங்களை உருவாக்கித் தருவது இன்றைக்கு ஒரு பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான துறை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக