வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010

எதுக்காக எல்லாம்

மென்பொருள் உருவாக்கும் போது சில வழிமுறைகளைக் கடைப்பிடிக்கிறார்கள்.

(இப்படித்தான் என்றில்லாமல் இன்னும் பல வழிமுறைகளும் உள்ளன. ஆனால் நிறுவனம் ஒன்றில் தொழில் முறையாக மென்பொருள் உருவாக்கும் போது இந்த ஒழுக்கங்கள் உதவுகின்றன என்று அனுபவம்.)

முதலில் என்ன செய்யப் போகிறோம் என்பதைத் தெளிவாக வரையறுத்துக் கொள்ள வேண்டும்.

இந்தத் தேவை
  • வாடிக்கையாளர் ஒருவர் கேட்டதாலோ
  • அல்லது விற்பனைப் பிரிவினர் சொல்லும் ஆலோசனையின் அடிப்படையிலோ
  • அல்லது நிறுவனத்தில் துறையின் போக்கு புரிந்த ஒருவரின் பரிந்துரையாலோ
ஆரம்பிக்கப்பட்டிருக்கலாம்.

ஒரே வாடிக்கையாளருக்குச் செய்து மென்பொருளை அவருக்கே கொடுத்து விடுவது project எனப்படும் குத்தகை வேலை முறை.

ஒரு மென்பொருளை உருவாக்கி பல வாடிக்கையாளருக்கு விற்று, அது தொடர்பான சேவைகளையும் வழங்குவது product எனப்படும் மென்பொருள் உருவாக்கி விற்கும் வேலை முறை.

எங்களுடைய நிறுவனத்தின் வாடிக்கையாளர்களில் பெருமளவு சிறு குறு நிறுவனங்கள். லட்சக் கணக்கில் பணமும் நேரமும் செலவழித்து மென்பொருள் தேவையை விளக்குவதில் கூட ஆர்வம் கொண்டிருக்க மாட்டார்கள்.

அதனால், ஆரம்ப காலத்தில், புதிய கூறுகள் எங்கள் திட்டத்தின் பேரில் உருவாக்கப்பட்டன. முதல் வாடிக்கையாளர் கிடைத்த பிறகு அவர்கள் கேட்கும் தேவைகளை உருவாக்கிக் கொடுத்து மேம்படுத்திக் கொண்டோம். நான்கைந்து வாடிக்கையாளர்களுக்கு பணி செய்யும் போது எல்லோருக்கும் பொதுவில் உருவாக்கி பொருளை மேம்படுத்த முயன்றோம்.

தேவையை வரையறுக்க,
  • எப்படிப்பட்ட விபரங்களை உள்வாங்க வேண்டும் என்பதற்கான படிவங்களின் மாதிரிகள் (form templates),
  • எப்படிப்பட்ட அறிக்கைகள் உருவாக வேண்டும் என்று மாதிரிகள் (report templates),
  • என்னென்ன ஆவணங்கள் அச்செடுக்க வேண்டும் என்று மாதிரிகள் (document templates)
உருவாக்கிக் கொள்ளுவது உத்தமம்.

முதலில் யார் அந்தத் தேவையை கிளப்பினார்களோ அவருக்கு இந்த மாதிரிகளைக் காட்டி,
'இதுதானே நீங்கள் கேட்டது' என்று உறுதி செய்து கொண்டால் பின்னர் மறு வேலைகள், நேர விரயங்களைத் குறைத்துக் கொள்ளலாம். .

சின்னச் சின்ன மாறுதல்களில் கூட இப்படி மாதிரிகளில் படமாகக் காட்டும் போது சொன்னவர் சொன்ன நோக்கும் கேட்டவர் புரிந்த நோக்கும் வெவ்வேறாக இருப்பது வெளி வந்து விடுகிறது. அப்போதே புரிதலை சரி செய்து கொண்டு விட்டால், பின்னர் முழுமையாக வடிவமைத்து நிரல் எழுதிய பிறகு மாற்றங்களைச் செய்யும் விரயத்தைத் குறைத்து விடலாம்.

இந்த முதல் அடியை இறுதிவெளிப்பாடு வரையறை ஆவணம் (functional specification) என்று குறிப்பிடுகிறோம் (இவெவ).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக