சனி, 28 ஆகஸ்ட், 2010

தமிழில் தொழில் நிறுவனங்களுக்கான மென்பொருட்கள் செய்வது

செப்டம்பர் 28ம் தேதி மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் நடந்த கட்டற்ற தமிழ்க் கணிமை கருத்தரங்கில் நடந்த கலந்துரையாடலுக்கான குறிப்புகள்.

தொழில் நிறுவனங்களுக்கு தமிழில் மென்பொருள் பயன்பாடுகள் தேவையா? என்ற கேள்வி முதலில் எழும். தொழில் நிறுவனங்களையும், நிறுவனங்களின் செயல்பாடுகளின் பிரிவுகளையும் பார்த்து இதற்கு விடை சொல்ல முயற்சிக்கலாம்.

தமிழில் மென்பொருட்களுக்கான சந்தை - தமிழ்நாடு, சிங்கப்பூர், இலங்கை, மலேசியா போன்ற தமிழ் பேசும், தமிழ் அலுவல் மொழியாக இன்னும் இருந்து வரும் நாடுகளில் இருக்கிறது.

மற்ற இடங்களை விட தமிழ்நாட்டில் இதற்கான தேவை அதிகமாக இருக்கிறது.

நிறுவன வகைப்பாடுகள்

  • பெரிய நிறுவனங்கள், ஏற்கனவே மென்பொருள் பயன்பாடுகளை பெருமளவு பயன்படுத்துபவர்கள். இந்த மென்பொருள் பயன்பாடுகள் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே இருக்கின்றன.
  • நடுத்தர நிறுவனங்கள், நிறுவனத்தில் சில செயல்பாடுகளுக்கு மென்பொருட்களை பயன்படுத்துபவர்கள். இவையும் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே இருக்கின்றன.
  • சிறு நிறுவனங்கள். நிறுவன மேலாண்மைக்கு மென்பொருள் எதையும் பயன்படுத்தாமல் இருப்பவர்கள். 

செயல்பாட்டுப் பிரிவுகள்

  • கணக்கியல் மற்றும் நிதித் திட்டமிடல்
  • பொருள் வரத்து, செலவு, சரக்குக் கையிருப்பு
  • இயந்திரங்கள் பராமரிப்பு, உதிரிப் பாகங்கள்
  • ஊழியர் வருகைப்பதிவு, சம்பளப் பட்டியல், பணி வாழ்க்கை விபரங்கள்
  • உற்பத்தி மேலாண்மை மற்றும் தரக்கட்டுப்பாடு
  • ஏற்றுமதி, உள்ளூர் விற்பனை மேலாண்மை
  • விற்பனையாளர்களுடனும் வாடிக்கையாளருடனும் தகவல் பரிமாற்றம்
இன்றைய நிலைமை என்ன என்று பார்ப்போம். 


  1. கணக்கியல் மற்றும் நிதித் திட்டமிடல் எல்லா நிறுவனங்களுக்குமே மென்பொருள் பயன்பாட்டில் செய்யப்படுவதாக வைத்துக் கொள்ளலாம். நடுத்தர நிறுவனங்களில் சொந்தமாக டேலி வாங்கி நிறுவிக் கொள்கிறார்கள். சின்ன நிறுவனங்களின் கணக்காளர்/தணிக்கையாளர் விபரங்களை வாங்கி அவர்களது அலுவலக டேலி மென்பொருளில் உள்ளிட்டு அறிக்கை எடுத்துக் கொடுக்கிறார்கள்.

    இப்படி எல்லா நிறுவனங்களுமே கணினி வழி பயன்பாட்டில் போனதற்கு முக்கிய காரணம், அரசாங்க விதிமுறைகளும், அதைப் பின்பற்ற வேண்டியதற்கான தேவைகளும் டேலி போன்ற மென்பொருட்களில் பூர்த்தியாவதால்தான்.
  2. வாடிக்கையாளர்களுடன் தகவல் பரிமாற்றம் செய்து கொள்ள மின்னஞ்சல் எல்லோருமே பயன்படுத்துகிறார்கள்
  3. ஏற்றுமதி ஆவணங்கள் தயாரிக்க மிகக் குறைந்த அளவில் மைக்ரோசாப்டு ஆஃபிஸ் பயன்பாட்டில் வார்ப்புருக்கள் ஏற்படுத்தி பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

பெரிய நிறுவனங்களைத் தவிர்த்த பிற நடுத்தர மற்றும் சிறு நிறுவனங்களில் பொதுவாக மென்பொருள் பயன்பாடுகளை ஒரு செலவினமாகத்தான் பார்க்கிறார்கள் - முதலீடாக பார்ப்பதில்லை. அதனால், அரசாங்க சட்டங்கள், வாடிக்கையாளர் தேவை என்று கட்டாயம் வந்தால் தவிர கணினி அல்லது மென்பொருள் பயன்பாட்டில் முதலீடு செய்வதில்லை.

மென்பொருள் பயன்பாடுகளின் பலன்களை நேரடியாக நிறுவன உரிமையாளர்களும் தலைமை மேலாளர்களும் பயன்படுத்தி உணர முடியாததால், தரவு உள்ளிட சில ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வைத்திருக்கும் ஊழியர் மூலமாகவே மென்பொருள் தேவைகளை எடை போடுகிறார்கள்.

நிறுவன உரிமையாளர்களும், தலைமை மேலாளர்களும் நேரடியாக மென்பொருள் பயன்பாடுகளைப் பயன்படுத்தாமல் இருப்பதற்கான பெரிய தடைகள்

  1. பயனர் இடைமுக மொழி தமிழில் இல்லாமல் இருப்பது
  2. பயன்பாட்டின் வடிவமைப்பு அவர்கள் புரிந்து கொள்ள முடியாமல் இருப்பது. 

என்ன தீர்வு?

இந்த இரண்டுக்கும் தீர்வு காண, நம்ம ஊரின் தேவைகளுக்கேற்ப புதிதாக உருவாக்கப்படும் மென்பொருள் பயன்பாடுகள் தேவைப்படுகின்றன.

கூகுள் தேடல் வந்து ஏற்கனவே கல்லா கட்டிக் கொண்டிருந்த யாஹூவையும் அல்டாவிஸ்டாவையும் தூக்கிச் சாப்பிட்டு விட்டது போல, ஜிமெயில் மூலமாக மற்ற இணையப் பக்கவழி மென்பொருள் சேவையில் முந்தி விட்டது போல நம்ம ஊர் சூழலிலும் புதிய ஒரு மென்பொருள், பயனர்களுக்கு ஏற்றபடி செயல்படும் வடிவமைப்புடன் வந்தால் ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் டேலி போன்றவற்றைக் கூடத் தூக்கிச் சாப்பிட்டு விடலாம்.

எந்த மாதிரியான துறைகள் இருக்கின்றன:

  1. முதன்மைத் துறை
    விவசாயம், மீன்பிடித்தல், தோட்டத் துறை, சுரங்கத் துறை
  2. தொழில் துறை
    உற்பத்தி நிறுவனங்கள் - வாகன உற்பத்தி, காலணி உற்பத்தி, விளையாட்டுப் பொருட்கள் செய்வது போன்றவை
  3. processing நிறுவனங்கள் - சாயமூட்டும் தொழிற்சாலை, அச்சுத் தொழில் போன்றவை, தோல் பதனிடுதல்
  4. சேவைத் துறைகள்
    விற்பனைக் கடைகள் - கட்டிடப் பொருட்கள், மளிகைப் பொருட்கள், மருந்துக் கடை, தின்பண்டக் கடை, துணிக்கடை, ஃபேன்ஸி கடைகள், பால்,
  5. சேவை நிலையங்கள்
    உணவகங்கள், தங்கும் விடுதிகள், துரித அஞ்சல் சேவைகள், கல்வி நிறுவனங்கள், பயிற்சி நிறுவனங்கள், மருத்துவர்கள், திரைப்பட அரங்குகள்
  6. திரைப்படத் தயாரிப்பு, பதிப்பகம், தரகு வியாபாரம், கட்டுமானத் துறை, வழக்கறிஞர்கள், மருத்துவர்கள்

இந்தச் சந்தையின் அளவு என்ன?
ஒரு ஒப்பீடு

தமிழ் நாட்டின் மக்கள் தொகை - 70 மில்லியன்
தமிழ் நாட்டின் மென்பொருள் சந்தை மதிப்பு - 5 பில்லியன் டாலர்கள் ஏற்றுமதி, உள்ளூர் நுகர்வு???

அமெரிக்காவின் மக்கள் தொகை - 300 மில்லியன்
அமெரிக்காவின் மென்பொருள் சந்தை மதிப்பு - 130 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (தலைக்கு 450 டாலர்கள் = 20000 ரூபாய்கள்)

இத்தனை கோடி மதிப்பிலான மென்பொருள் பயன்பாடுகள் உருவாக்கப்பட்டு விற்கப்படும் வாய்ப்புகள் இருக்கின்றன.

இது ஏற்கனவே தயாராக இருக்கும் சந்தை இல்லை. இதில் இறங்குபவர் துணிந்து பணத்தையும் நேரத்தையும் செலவழித்து சந்தையை உருவாக்க வேண்டியிருக்கும்.

ஏற வேண்டிய மலைகள்

மென்பொருள் பணிச்சூழல் ஒன்று உருவாக்க வேண்டியிருக்கும்

1. தொழில்/வணிக நிறுவனங்களுக்கான மென்பொருள் பயன்பாட்டுக்கான கணினி வடிவமைப்பு
2. தொழில் வணிக நிறுவனங்களுக்கான  மென்பொருள் பயன்பாடுகளை இயக்கத் தேவையான இயங்குதளம்
3. மென்பொருள் பயன்பாடுகள் பல
பயன்பாடுகளுக்குத்தான் கணினி வாங்குகிறார்கள்

விற்பனை வழிமுறைகள்

  1. பெட்டியில் பயன்பாடு - கணினி பயன்படுத்தாத அல்லது மற்ற கணினிகளை விட்டுப் புதுக்கணினியில் பயன்படுத்த விரும்புபவர்களுக்குப் பெட்டியை வாங்கிப் போய் மின்னிணைப்புக் கொடுத்து இயக்கினால் பயன்பாடு செயல்படும்படியான வசதி
  2. கணினியில் நிறுவிப் பயன்படுத்தும் குறுந்தகடு
  3. கணினியில் மாயச் சூழலில் பயன்பாடு - குறுவட்டு ஒன்றில் பயன்பாடு இயங்கத் தேவையான சூழல் மென்பொருட்கள் எல்லாவற்றையும் உள்ளடக்கி வினியோகித்தால், ஏற்கனவே பயன்படுத்திக் கொண்டிருக்கும் கணினியில் நிறுவப்பட்டுள்ள இயங்குதளத்தை பாதிக்காமல் பயன்பாட்டைப் பயன்படுத்தும் வசதியை அளிக்கலாம்.

2 கருத்துரைகள்:

ந.ர.செ. ராஜ்குமார் சொன்னது…

நிறுவன வள மென்பொருட்களை உருவாக்க முழுக்க முழுக்க அடிப்படையிலிருந்து தொடங்கத் தேவையில்லை. எண்ணற்ற அளவில் இருக்கும் திறமூல மென்பொருட்களில் மாற்றம் செய்யத் தெரிந்திருந்தாலே போதுமானது.
ஒரு விண்ணப்பம்: ஒரு பக்கத்தில் மூன்று பதிவுகளுக்குமேல் காட்ட வேண்டாம். திறப்பதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது என்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.

மா சிவகுமார் சொன்னது…

1. பக்கத்துக்கு 4 பதிவுகள் என்று மாற்றி விட்டேன், நன்றி :-)

2. ஏற்கனவே இருக்கும் திறமூல மென்பொருட்களை மாற்றம் செய்வது எந்த அளவு பொருத்தமாக இருக்கும் என்பது தேவையைப் பொறுத்துத் தீர்மானிக்கப்பட வேண்டும். முன்முடிவுகள் இல்லாமல், சந்தைத் தேவை என்ன என்பதை அலசி ஆராய்ந்து செயல்பட வேண்டும்.

கருத்துரையிடுக