வியாழன், 12 ஆகஸ்ட், 2010

மாற்று வழி 3 - லினக்ஸ்

எங்களுடைய வாடிக்கையாளரான தொழிற்சாலை ஒன்றின் அலுவலகத்தில் கணினிகளுடன் மாதாந்திர சண்டை நடக்கும். அவர்கள் மின்னஞ்சல் பயன்படுத்துவதற்காக மட்டும் இணையச் சேவைகளைப் பயன்படுத்துகிறார்கள்.

அதற்காக இணைய இணைப்பு வாங்கிக் கொண்டு, மைக்ரோசாப்டு அஞ்சல் கருவியான அவுட் லுக் எட்ஸ்பிரசைப் பயன்படுத்துகிறார்கள். அதே கணினியில் கணக்குப் பார்க்கப் பயன்படும் டேலி மென் பொருளும் மற்றக் கோப்பு வேலைகளையும் பார்த்து வந்தார்கள். மின்னஞ்சல் மூலமாக வரும் நச்சு நிரல்கள் மூலம் கணினியின் கோப்புகள் அழிக்கப் படுவதும், கணினி இயக்கம் தடைப் படுவதும் வாடிக்கையாகி விட்டது.

ஓரிரு முறை கோப்புகளை இழந்த பிறகு இணைய இணைப்பைத் தவிர பிற கோப்புகளையும் நிரல்களையும் ஒரு கணினியில் நீக்கி விட்டார்கள். மின்னஞ்சல்களையும் அச்சடித்து சேமித்துக் கொள்வார்கள். எப்போதெல்லாம் இது மாதிரி வைரசு தாக்குதல் நடக்கிறதோ அப்போது ஒரு கணினி சேவையாளரை அழைத்து எல்லாவற்றையும் அழித்து விட்டு விண்டோசை திரும்ப நிறுவிக் கொள்வார்கள். இந்தக் கணினியை மற்றக் கணினிகளுடன் இணைப்பதும் கிடையாது.

கிட்டத்தட்ட அம்மை கண்டவர்கள் ஒதுங்கி இருப்பது போல இந்தக் கணினி ஒர் ஓரமாக ஒதுக்கப் பட்டு மற்ற கணினிகளிடம் உறவாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலைமை கண்டிப்பாக நிறைவு அளிக்கவில்லை. ஒரு கணினி நிரந்தர நோயாளி என்று தண்ணீர் தெளித்து விட்டு விட்டது, அவ்வப்போது அது பழுது பட்டு விடுவது, அதைச் சரி செய்ய ஆள் வரும் வரை ஓரிரு நாட்களுக்கு வேலை முடக்கம், சரி செய்யும் சேவைக்குப் பணச் செலவு என்று அலுவலகத்தில் பல குழப்பம் இந்தக் கணினியால்.

விண்டோசு, ஒற்றைக் கணினியாக வேலை பார்க்கும் போது சிறந்த இயங்கு தளம். ஆனால் கணினி வலையமைப்பில் நுழைந்து பிற கணினிகளுடன் ஆரோக்கியமாகத் தகவல் பரிமாறிக் கொள்வது, முரட்டு நிரல்களிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வது போன்றவற்றில் யுனிக்சு குடும்ப இயங்கு தளங்களை அடித்துக் கொள்ள முடியாது. இதற்கும் காரணம் இருக்கிறது. விண்டோசின் வடிவமைப்பு தனி நபர் கணினியை அடிப்படையாகக் கொண்டு ஆரம்பித்தது. யூனிக்சு, லினக்சு வடிவமைப்புகள் பலர் பயன்படுத்தும் பிற கணினிகளுடன் பின்னிக் கொள்ளும் நோக்கத்தில் வடிவமைக்கப்பட்டவை.

இணையத் தொழில் நுட்பம் புகழ் பெற்ற பிறகு விண்டோசு இயங்கு தளத்தை அதில் இயங்க வைக்க பல கோடிக் கணக்கான பணம் செலவளித்தாலும், மைக்ரோசாப்டால் அதன் ஆரம்ப கால வடிவமைப்பை முற்றிலும் மாற்றி அமைத்து விட முடியவில்லை. ஏற்கனவே இருக்கும் நிரல்களுடன் சரிவர இயங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆரம்பத்தில் செய்த வடிவமைப்புக் குறைபாடுகளை இன்று வரை ஆதரிக்க வேண்டிய கட்டாயத்தில் இன்று வரை விண்டோசு ஒரு சவலைப் பிள்ளையாக, முரடர்களால் அடித்து நொறுக்கி விடக் கூடிய அளவில்தான் உள்ளது.

தொண்ணூறு சதவீதத்துக்கு அதிகமான மேசைக்கணினிகள் விலைக்கு வாங்கப்பட்ட அல்லது திருடப்பட்ட விண்டோசு பிரதிகளை பயன்படுத்திக் கொண்டிருக்கும் போது, இலவசமாகக் கிடைக்கும் ஒரு தேர்வு லினக்சு சார்ந்த இயங்கு தளங்கள்.

இன்றைக்குக் கிடைக்கும் சூசே சார்ந்த நோவல் லினக்ஸ், டெபியனைச் சார்ந்த உபுண்டு/Kஉபுண்டு இரண்டுமே கணினியை முன்பின் பயன்படுதியிராத யாரும் இயல்பாகப் பயன்படுத்தும் எளிமையுடன் கிடைக்கின்றன. விண்டோசு பயன்படுத்திப் பழகி விட்டவர்கள் புதிய சூழலைப் புரிந்து கொள்ள கொஞ்சம் சிரமப்பட வேண்டியிருக்கும். மற்றபடி பயன்படுத்தும் எளிமையில், பாதுகாப்பில், உறுதியில் எந்த ஒரு போட்டியிடும் இயங்கு தளத்தை விட மிகச் சிறந்த தேர்வு லினக்ஸுதான். வடுவூர் குமாரின் லினக்ஸு வலைப்பதிவும், மயூரனின் வலைப்பதிவும் இதைப் பற்றி பல விபரங்களை அழகு தமிழில் கொடுக்கின்றன.

மாற்று வழி 1 - ஃபயர் ஃபாக்ஸ்

மாற்று வழி 2 - ஓப்பன் ஆபிசு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக