வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010

தொழில் வளத்துக்குக் கணினி பயன்பாடு

ஏற்றுமதி வணிகம் செய்யும் எல்லா நிறுவனங்களிலும் குறைந்த அளவு மின்னஞ்சல் மூலம் தகவல் தொடர்பு கொள்வது நடக்கிறது. கடைகளில் விற்பனை மேசை கணினி, சிறு நிறுவனங்களில் கூட வரவு செலவு கணக்கு போட்டு அறிக்கை தயாரிக்க மென்பொருள் என்று நம் ஊர் தொழில்களிலும் கணினி பயன்பாடு ஓரளவு நுழைந்துள்ளது.

இந்த பயன்பாடுகள், ஆழக்கடலில் கரையோரம் நின்று காலை நனைப்பது போலத்தான். உள்ளே குதித்து முத்தெடுப்பது, அதிவேக படகு கட்டி மீன் பிடிப்பது, வலுவான கப்பல் கட்டி வணிகம் செய்வது என்று நடக்க வேண்டிய சாத்தியங்கள் ஏராளம் இருக்கின்றன.

ஒரு சில தகவல்களை மட்டும் சுட்டிக் காட்டுகிறேன்:
  1. இன்போசிஸ் நிறுவனம் போன காலாண்டில் ஆயிரம் கோடி ரூபாய்களுக்கு மேல் லாபம் ஈட்டியதாம். இந்த லாபம் அமெரிக்க, ஐரோப்பிய நிறுவனங்களுக்கு மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் சேவைகள் வழங்குவதன் மூலம் கிடைத்தது.
    அப்படி சேவை வழங்கிய நிறுவனம் இவ்வளவு பணம் ஈட்டுகிறது என்றால், அந்தச் சேவையை வாங்கும் நிறுவனங்களுக்கு எவ்வளவு பலன்கள் கிடைக்கும்!!

  2. இருபது ஆண்டுகளுக்கு முன்பு ரயிலில் முன்பதிவு செய்யப் போனால் குறிப்பிட்ட நிலையத்துக்குப் போய் முன்பதிவு சாளரத்துக்கு முன்பு வரிசையில் நிற்போம். குறித்த ரயில் அந்த நிலையம் வழியாகப் போகும் போது ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் ஒன்றை பதிவு செய்தால், அந்த விபரத்தை ஒரு பேரேட்டில் குறித்துக் கொண்டு சீட்டையும் தந்து விடுவார் அலுவலர்.

    இதை கணினி மூலமாகச் செய்ய ஆரம்பித்தால் பேரேடு தேவைப்படாது என்பது தெளிவு. ஆனால் அதன் கூடுதல் விளைவுகள் எங்கெங்கு போய் விட்டன என்று பாருங்கள். எந்த ஊரிலிருந்தும் இந்தியாவின் வேறு இரு ஊர்களுக்கிடையே முன்பதிவு செய்து கொள்ளலாம். இணையம் மூலமாக முன்பதிவு செய்து கொள்ளலாம். சின்ன சின்ன நிலையங்களிலும் பதிவு செய்யும் வசதி வந்து விட்டது.

    ரயில் போக்குவரத்து, தேவை அதிகரிப்பை ஆராய்ந்து அதற்கேற்ற நடவடிக்கைகள் எடுக்கலாம். இது போல இன்னும் நூற்றுக் கணக்கான சாத்தியங்கள் காத்திருக்கின்றன.

  3. இதே போல வங்கிக் கணக்குகள் கணினி மயமான பிறகு கிடைத்திருக்கும் வசதிகளைப் நாம் எல்லோரும் பார்க்கிறோம்.
இவற்றை எல்லாம் நடைமுறையில் பார்க்கும் நாம், நம்முடைய தொழிலில் தகவல் தொழில் நுட்பத்தை செயல்படுத்தினால் எவ்வளவு பலன் கிடைக்கும்? 10% முன்னேற்றம்? 50% முன்னேற்றம்?

'கணக்கு எழுத 3000 ரூபாய்கள் கொடுத்தா ஒரு ஆள் கிடைக்கும் அதுக்குப் போய் எதுக்கு கணினியும் கத்திரிக்காயும்' என்று ஒதுக்காமல், கணினி என்ற ஊழியனை, கருவியை நமது பணிகளில் ஈடுபடுத்தினால் கிடைக்கும் முன்னேற்றம் உன்னதமாக இருக்கும். எதையுமே அளக்க ஆரம்பித்தாலே முன்னேற்றம் ஆரம்பித்து விடும். அப்படி அளந்ததை பல முறைகளில் ஆராய்ந்து அலசி முடிவுகளை உணர்ந்து கொள்ள தொழிலில் தகவல் தொழில் நுட்பத் துறை உதவும்.

ஒரு நிறுவனத்தில் மாதத்துக்கு நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர் ஆர்டர்களுக்கு பொருள் செய்து விற்கிறார்கள். ஒவ்வொரு நாளும் ஆர்டர் பட்டியலை எடுத்து பயன்படுத்துவார்கள். வாடிக்கையாளர் பெயர், பொருளின் பெயர், அளவு, விலை, மதிப்பு, வாடிக்கையாளருக்கு அனுப்ப வேண்டிய தேதி என்று விபரங்கள்.

பல ஆர்டர்கள் குறித்த தேதியில் போகாமல் ஓரிரு வாரங்கள் தாமதமாகி விடும். அது ஒரு பெரிய தலைவலி. ஒரே வாடிக்கையாளரிடமிருந்து பல ஆர்டர்கள் வரும் போது சில ஆர்டர்கள் அப்படியே புதைந்து போவதும் உண்டு.

கணினியில் ஆர்டர் நிலவரத்தை போட்டு வைக்க ஆரம்பித்த பிறகு, நிறுவன உரிமையாளர் ஒரு நாள், 'ஏம்பா, டெலிவரி தேதியை வார எண்ணாகப் பிரித்து ஒவ்வொரு வாரமும் என்ன போக வேண்டும் என்று ஒரு அறிக்கை கொண்டு வா' என்று கேட்டார். கணினியில் இது சில நிமிட வேலை.

அப்படி ஒரு அறிக்கையை மே மாதத்தில் எடுத்துப் பார்த்தால் முந்தைய ஆண்டு டிசம்பரில் (51வது வாரம்) போக வேண்டிய ஆர்டர் கூட இன்னும் முடிக்காமல் இருப்பது தெரிய வந்தது. அதற்கான பொருளும் உற்பத்திக்கு அனுப்பப்பட்டு விட்டிருக்கிறது. மற்ற அவசர ஆர்டர்களின் பின்னால் ஓடி இந்த ஆர்டரை கண்டு கொள்ளாமலேயே விட்டிருக்கிறார்கள்.

ஒவ்வொரு நாளும் அறிக்கையை பார்த்தாலும் இப்படி மாற்றிப் பார்க்கும் போதுதான் நமது செயல்பாட்டின் குறைபாடு தெள்ளத்தெளிவாகப் புலப்படுகிறது. ஒவ்வொரு தொழிலிலும் இது போல நூற்றுக் கணக்கான வாய்ப்புகள் புதைந்து கிடக்கின்றன.

நீராவி எந்திரம் கண்டு பிடிக்கப்பட்ட பிறகு ஒவ்வொரு துறையிலும் அதைப் பயன்படுத்தி அடுத்த கட்டத்துக்கு போனது போல, தகவல் தொழில் நுட்பப் புரட்சிக்குப் பிறகு நமது தொழில் நிறுவனங்களும் அந்தக் கருவியை செயல்படுத்தி அடுத்த உயர் நிலைக்கு போக வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக