நான் முதல் முதலில் கணினி வாங்கிய போது (1997ல்) விண்டோசு 95 ஏற்றிக் கொடுத்தார்கள், அதனுடன் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் எனப்படும் மைக்ரோசாப்டின் வலை உலாவியும் வந்தது. எப்படியோ தெரிந்து, நெட்ஸ்கேப்பு நேவிகேட்டரை தகவிறக்கி நிறுவிக் கொண்டேன். ஆனால் அடுத்த முறை கிருமித் தொல்லையால் கணினியை சுத்தம் செய்து, புதிய விண்டோசு பதிப்பைப் போட்ட ஆள், இது கூடவே உலாவி வருகிறதே நெட்ஸ்கேப்பும் ஏன் போடுகிறீர்கள் என்று தடுத்து விட ஓரிரு ஆண்டுகள் இன்டெர்நெட் எக்ஸ்புளோரரிலேயே கதை நடந்தது.
அடுத்த இரண்டு மூன்று ஆண்டுகள் மிகச் சோதனையானவை. நெட்ஸ்கேப்பு நேவிகேட்டரின் புதிய பதிப்புகள் வருவது நின்று விட்டது. பதிப்பு 6 என்று ஒரு பரிதாபமான பிராணியை வெளியிட்டார்கள். ஒருவழியாக நெட்ஸ்கேப்பின் புதிய ஆன்மாவாக உருவாகி வந்த மோசில்லா 1.0 பதிப்பை அடைந்தவுடன் இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்கு மாற்று தேடுவோருக்கும் ஒரு பெருமூச்சு வந்தது. அதன் பிறகு ஒரே திருவிழாதான்.
இன்றைக்கு மோசில்லாவும், அதன் செல்லக் குழந்தை ஃபயர்ஃபாக்சு எனப்படும் நெருப்புநரியும் வலையுலகைக் கலக்கிக் கொண்டிருக்கின்றன.
அப்படி என்ன கோளாறு இன்டர்நெட் எக்ஸ்புளோரரில்:
1. பூச்சிகள், புழுக்கள், கிருமிகள் உருவாக்கி உங்கள் கணினியை நோயாளியாக்க முயலும் நிரல்களுக்கு இன்டர்நெட் எக்ஸ்புளோரர் ஒரு வரப்பிரசாதம். தானாகவே இயங்கி விண்டோசு இயங்குதளத்திற்குள் நிறுவிக் கொள்ளும் நிரல்களை அனுமதிக்கும் தொழில்நுட்பம், பெரும்பாலான பயனர்களின் தலைவலிக்கும் கோப்பு இழப்புக்கும் வழி வகுத்தது.
2. 90 விழுக்காடுக்கும் மேல் மேசைக் கணினிகளில் இடம் பிடித்து விட்ட இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் புதிய மாறுதல்கள் கிட்டத்தட்ட நின்றே விட்டன. ஐந்து ஆண்டு பழமையான உலாவியைப் பயன்படுத்துவது, 1930 மாடல் காரை 2000ல் ஓட்டுவது போல ஆகி விட்டது. குறிப்பாக மோசில்லா/ஃபயர்ஃபாக்ஸில் இருக்கும் தத்தல்கள் இல்லாதது, இன்டர்நெட் எக்ஸ்புளோருக்கு ஒரு பெருங்குறைபாடாகிப் போய்விட்டது.
3. வலைப்பக்கங்களை எப்படிக் காண்பிக்க வேண்டும் என்று வரையறுக்கும் பாணித்தாள்களை நடைமுறைப்படுத்துவதிலும் மைக்ரோசாப்டு சுணக்கம் காட்ட, வலைப்பக்கங்களை உருவாக்குபவர்களும் மெதுவாக ஃபயர்ஃபாக்சு பக்கம் தாவ ஆரம்பித்து விட்டார்கள்.
4. கடைசியாக, ஆனால் மிக முக்கியமாக, வலையில் மேயும் போது நமது சாளரத்தின் மீது குதித்துக் கொண்டு வரும் விளம்பரங்களைத் தடுத்து நிறுத்தும் தேர்வு மோசில்லா/ஃபயர்ஃபாக்சில் கிடைக்க இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்படுத்துவது நியாயப்படுத்த முடியாததாகி விட்டது.
கூடவே வலை இடைமுகத்தில் தனது வணிகத்தை உருவாக்கும் கூகுள் நிறுவனம், ஃபயர்ஃபாக்ஸ் பயன்பாட்டை ஊக்குவிக்க ஆரம்பித்துள்ளது.
இதை இன்டர்நெட் எக்ஸ்புளோரரிலா படித்துக் கொண்டிருக்கிறீர்கள்? ஃபயர்ஃபாக்ஸை பயன்படுத்திப் பாருங்களேன். http://www.mozilla.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக