மென்பொருள் துறையில் ஒரு அமெரிக்க நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு நண்பருடன் பேசிக் கொண்டிருந்த போது, 'இந்தியாவுக்கு மென்பொருள் உருவாக்கத்தை இடம் மாற்றும் நிறுவனங்கள் ஊதிய நிலைகளை மட்டும் பார்ப்பதில்லை. குறைந்த செலவில் வேலை நடந்தாலும், அமெரிக்காவில் என்ன தரம் எதிர்பார்க்கிறார்களோ அந்தத் தரத்தை இந்திய மென்பொருள் உருவாக்க மையத்திலும் பெற்று விட வலியுறுத்துகிறார்கள்'
புகழ் பெற்ற பொறியியல் கல்லூரிகளில் மூன்றாம் ஆண்டு படிக்கும் போதே மாணவர்களைக் கவர மென்பொருள் நிறுவனங்கள் திட்டம் தீட்டுகின்றன. சிறு நகரங்களின் கல்லூரிகளிலும் வளாகத்திலேயே வேலைக்கு எடுத்துக் கொள்ளும் முயற்சிகள் வழக்கத்துக்கு வந்து விட்டன.
மென்பொருள் துறையில் நுழையும் மாணவர்களுக்கு இருக்கும் ஒரு குழப்பம், 'கல்லூரியில் என்ன துறை எடுத்துப் படிப்பது?'. பிஈ-கணினிவியல் படிப்பவர்கள் சிறு வயதிலேயே கணினியின் உள் இயங்கல்களில் ஆர்வம், கணினிகளை எப்படி மேம்படுத்துவது என்ற ஆர்வம் உடையவர்களாக இருப்பது நல்லது. நான்கு ஆண்டுகள் கணினிவியல் படித்து விட்டு எஸ்ஏபி செயல்படுத்தும் வல்லுநராக வேலை பார்ப்பது அல்லது மென்பொருள் உருவாக்கத்தில் மேலாண்மை வேலை செய்வது காசுக்கு நல்ல வழி கொடுத்தாலும் சில ஆண்டுகளில் சலித்து விடும்.
கணினிகளைப் பயன்படுத்தி சேவைகளை வழங்கும் துறைகளில் பணி புரிய விரும்புவர்கள், கணினிவியல் தவிர்த்த பிற பிரிவுகளைப் படித்துக் கொண்டே கல்லூரியின் ஓரிரு பாடங்களிலும், வெளியில் கற்றுக் கொள்வதின் மூலமும் கணினி அறிவைப் பெருக்கிக் கொள்ளலாம். கிட்டத்தட்ட எல்லா துறைகளிலுமே துறை அறிவும், கணினி பற்றிய புரிதலும் இருப்பவர்களுக்கான வாய்ப்புகள் பெருகிக் கொண்டே போகும்.
வெறும் நிரல் எழுதும் திறனை மட்டும் கருத்தில் கொள்ளாமல் குறிப்பிட்ட தேவையை அலசி நிறைவேற்றப் பயன்படும் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். நம் ஊரில் ஜாவா, டாட்நெட், சி/சி++ என்ற கருவிகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை, அந்தக் கருவிகளைப் பயன்படுத்தும் முன்னர், எப்படித் தேவையை அலசித் திட்டமிட வேண்டும் என்பதற்குக் கொடுப்பதில்லை.
மென்பொருள் உருவாக்கத்தில் மேற்சொன்ன கருவிகளைப் பயன்படுத்தி நிரல் எழுதுவது என்பது கட்டிடம் கட்டுவதில் செங்கல் வைத்து சுவர் எழுப்புவது போன்றது என்றால், அதற்கு முந்தைய துறை சார்ந்த வேலைகள் கட்டித்துக்கான திட்டப் படம் வரைதல், எவ்வளவு ஆழம் அடித்தளம் அமைக்க வேண்டும் என்று முடிவு செய்தல் முதலான கட்டமைப்பு திறன் தேவைப்படுபவை. நிரல் எழுதுவதை விட இதற்கு மதிப்பு அதிகம் என்பதில் ஐயமே இல்லை.
நம்முடைய முயற்சிகள் யாரோ வரையறுத்த தேவைகளுக்கு நிரல் எழுதிக் கொடுத்து பணம் ஈட்டுவது என்பதிலிருந்து, நாமே தேவைகளை அலசி, திட்டம் தீட்டி அதன் அடிப்படையில் மென்பொருள் உருவாக்குவது என்ற நிலைக்கு மாற வேண்டும். இன்றைக்கு மென்பொருள் உருவாக்கத்தில் அத்தகைய திறமைகளை கல்லூரிப் படிப்புக்குப் பிறகு வேலை செய்ய ஆரம்பித்த பிறகுதான் கற்றுக் கொள்ளும் நிலைமை இருக்கிறது.
தொழில் முனைவோருக்கு 2007ல் மென்பொருள் துறையில் என்ன வாய்ப்புகள் இருக்கின்றன? மென்பொருள் தேவைகளுக்குக் குறைவே இல்லை. சென்னையில் மாநகரப் பேருந்தில் ஏறினால் இன்னும் நடத்துனர் பெரிய அட்டையில் விதவிதமான பயணச் சீட்டுகளை வைத்துக் கொண்டு எச்சில் தடவி, நிலை குறித்துக் கிழித்துக் கொடுத்துக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். கைக்கடக்கமான சீட்டு வழங்கும் கருவியில் தேவையான சீட்டை உடனுக்குடன் அச்சடித்துக் கொடுக்கும் முறை பெங்களூரில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக பேருந்துகளுக்கு அப்படி ஒரு கருவி செய்து வழங்குவது ஒரு தேவை.
இப்படி கண்களைத் திறந்து பார்த்தால் ஒவ்வொரு திருப்பத்திலும் ஒரு வாய்ப்பு தலையைக் காட்டுகிறது. இந்த வாய்ப்பை, தேவையை பூர்த்தி செய்ய பொருள், சேவையை உருவாக்கி, சரியான விலைக்கு விற்று ஆதாயம் காணும் முறை நம் இந்திய சூழலுக்கு பொருத்தமாக ஏற்பட்டு விடவில்லை. வெளிநாட்டிலிருந்து, அனுப்பப்படும் தேவைகளைச் சார்ந்து நிரல் எழுதும் முறையைப் போலவே நம் உள்ளூர் தேவைகளுக்கும் அரசு, அல்லது தனியார் நிறுவனங்கள் கேட்டு அவர்களது தேவைக்கேற்றவாறு மென்பொருள் உருவாக்கிக் கொடுக்கும் தொழில் முனைவுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.
வெயில் காலம் வந்தால் கரும்புச் சாறு விற்கும் கடைகள் பெருகும், தீபாவளிக்கு அதிகமாகப் பட்டாசு விற்கும் என்று உற்பத்தி பெருகுதல், கோயம்பேட்டில் பேருந்து நிலையம் வந்த இரண்டு மூன்று ஆண்டுகளுக்குள் அந்தப் பகுதியில் முளைத்த தங்கும் சாப்பிடும் விடுதிகள், என்று சந்தையின் தேவையறிந்து, தேவைக்கேற்ற சேவையை உருவாக்கி வழங்கும் தொழில் முனைவு மென்பொருள் துறைக்கு வரவில்லை. மிகச் சமீபத்திய துறையாக இருப்பதால் தேவையான உள்ளீடுகளை தயாரித்து சரியான செலவில் பொருள்/சேவையை உருவாக்கி சந்தையில் விற்கும் முறை ஒன்றை உருவாக்கி தொழில் முனைவை ஊக்குவிக்க அரசு அல்லது தனியார் அறக்கட்டளைகள் முன்வரலாம்.
2 கருத்துகள்:
Good. I like it.
yes...good ...
கருத்துரையிடுக