முதல் பகுதியில் மோசில்லா பயர் பாக்ஸ் வலை உலாவி பற்றிப் பார்த்தோம். அதன் பயன்பாடு இன்று பரவலாகி வருகிறது. வலையில் பதியும் அளவுக்கு விபரம் உள்ளவர்கள் எல்லோரும் பயர்ஃபாக்ஸ் பயன்படுத்துகிறார்கள் என்று நினைக்கலாம். அவ்வப்போது விவாதங்களில் ஃபயர்ஃபாக்சில் தமிழ் தெரிவது பற்றிய குறிப்புகளைப் பார்க்கிறோம்.
இந்த வரிசையில் இரண்டாவது மென்பொருள், ஓப்பன் ஆபிஸ். இன்டர்நெட் எக்ஸ்புளோரருடன் ஒப்பிடும் போது ஃபயர்ஃபாக்ஸ் கட்டாயமாக உயர்ந்த மென்பொருள், அதை ஏற்றுக் கொள்வதில் மாற்ற வலிகள் குறைவு.
ஆனால் மைக்ரோசாப்டின் அலுவலக பயன்பாட்டு மென்பொருள் தொகுப்பு இருப்பதில் பயன்படுத்த எளிதானது. ஆனால் பல காரணங்களுக்காக அதற்கான மாற்றைப் பற்றி சிந்திக்கலாம்.
- இந்தியாவில் காசு கொடுக்காமலேயே மைக்ரோசாப்டு மென்பொருட்களின் போலி பதிப்புகள் எல்லோருக்கும் கிடைத்து விட்டாலும், அந்தத் திருட்டுத்தனத்தை ஏன் செய்ய வேண்டும் என்று நினைக்கலாம்.
- அப்படி நினைக்கும் போது ஆயிரக் கணக்கில் கொட்டிக் கொடுப்பதை விட இலவசமாக ஏதாவது இருக்கிறதா என்று பார்க்கலாம்.
- அப்படிப் பார்க்கும் போது எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ள முடியாது.
மைக்ரோசாப்டுக்கு சொந்தமான வடிவில் ஏற்கனவே குவிந்திருக்கும் கோப்புகளைத் தொடர்ந்து பயன்படுத்த முடிய வேண்டும். பிறருக்கு அனுப்பும் போது வேண்டும் என்றால் மைக்ரோசாப்டின் வடிவமைப்பில் சேமிக்க முடிய வேண்டும். பிறர் அனுப்பும் மைக்ரோசாப்டு வடிவ கோப்புகளைத் திறக்க முடிய வேண்டும்.
ஓப்பன் ஆபிசில் இது எல்லாமே முடியும்.
- பெரும்பான்மையான கடிதங்கள், கட்டுரைகள், கணக்குத் தாள்கள், முன்வைப்புகளை திறப்பதிலும் சேமிப்பதிலும் எந்த விதமான சிக்கலும் இல்லை.
- இன்னும் சொல்லப் போனால் ஓப்பன் ஆபிஸ் ஒரு வெளிப்படையான வடிவமைப்பை) ஏற்றுக் கொண்டுள்ளதால் மைக்ரோசாப்டு மென்பொருளைத் தவிர மற்ற எல்லா மென்பொருட்களும் ஓப்பன் ஆபிஸ் வடிவமைப்பிலான கோப்புகளை திறக்க முடியும். (மைக்ரோசாப்டும் அதே வடிவமைப்பை ஆதரிக்க வேண்டும் என்று எடுக்கப்பட்ட முயற்சிகள் இன்று வரை வெற்றி பெறவில்லை.
- ஓப்பன் ஆபிஸில் அடோபேவின் பிடிஎஃப் வடிவிலும் கோப்புகளை சேமித்துக் கொள்ளலாம்.
ஒரு ஆவண மென்பொருள் (ரைட்டர் - writer), ஒரு கணித விரிதாள் (கால்க் - calc), ஒரு முன்வைப்பான் (இம்ப்ரஸ் - impress), ஒரு வலைப்பக்க உருவாக்கி, ஒரு வாய்ப்பாடு உருவாக்கி (math), தரவு தள மென்பொருள் (Base), படம் வரையும் மென்பொருள் (Draw) இவை அனைத்தும் உள்ளடங்கியதுதான் ஓப்பன் ஆபிஸ் தொகுப்பு.
ஓப்பன் ஆபிஸ் பயன்படுத்துவதில் ஏதாவது சிக்கல்கள் உள்ளனவா?
- இதை ஒவ்வொருமுறையும் கணினியில் ஆரம்பிக்கும் போதும், எழுந்து வருவதற்கு பல விநாடிகள் பிடிக்கிறது. அடுத்தடுத்த பயன்பாடுகளில் வேகம் நன்றாக இருக்கிறது.
- மைக்ரோசாப்டில் கற்று வைத்திருக்கும் பல நுணுக்கங்கள் இங்கு வேறு வகையில் இருக்கும். அவற்றைப் புதிதாகக் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கும். கட்ட விரிவுத் தாளில் நிறைய வாய்ப்பாடுகள் போட்டு, நிரல்கள் எழுதி வைத்திருந்தால் அவை இயங்குவதில் சிக்கல்கள் வரலாம்.
ஆனால் உங்களிடம் இருக்கும் ஒவ்வொரு கணினிக்கும் பத்தாயிரம் ரூபாய் உரிமச் செலவு மிச்சப் படுத்தப் போகிறீர்கள் எனும் போது இந்த வசதிக் குறைவுகளை ஏற்றுக் கொள்ள முடிவு செய்யலாம்.
கடைசியாக, ஆனால் மிக முக்கியமாக, ஓப்பன் ஆபிஸ் மென் பொருளில் தமிழில் எழுதவும் படிக்கவும் உள்ளுறை ஆதரவு உள்ளது. அவ்வளவு ஏன் இடைமுகம் தமிழில் கொண்ட பதிப்பு கூட இலவசமாகக் கிடைக்கிறது.
100 MBக்கு மேலான இந்த மென்பொருளை தகவிறக்கம் செய்து கொள்வது எளிதல்ல. உங்களிடம் அகலப் பட்டை இணைப்பு இருந்து, தகவு போக்கு வரத்து வரம்பு இல்லாமல் இருந்தால் ஒழிய, இதை குறுந்தகட்டில் எழுதி யாரிடமாவது பெற்றுக் கொள்வது நல்லது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக